ஆன்மிகம்
கேரள மாநிலம் எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

கேரளா: தூய ஜார்ஜியார் ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2019-04-30 03:28 GMT   |   Update On 2019-04-30 03:28 GMT
கேரள மாநிலம் எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தல தலைமை பணியாளர் அருட்பணியாளர் மாத்யூ சூரவடி கொடியேற்றி வைத்தார்.
தென்னிந்தியாவில் புகழ் பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் மிக முக்கியமானது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலயம். இந்த ஆலயத்துக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். மேலும் இங்கு சிறப்பு நேர்ச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் உள்ள தூய ஜார்ஜியாரின் சொரூபம் மற்ற சொரூபங்களை போல் அல்லாமல் பாரசீக சிற்பக்கலையில் பக்தி பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. பிற சொரூபங்களை போல் இல்லாமல் வேறுபட்டு இருப்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.

இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தல தலைமை பணியாளர் அருட்பணியாளர் மாத்யூ சூரவடி கொடியேற்றி வைத்தார். இதில் அருட்பணியாளர்கள் சின்னப்பன், அம்புரோஸ் ஆகியோர் தமிழில் திருப்பலி நடத்தினார்கள். அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி வரை நடைபெறும் விழாவின் போது தினமும் தமிழில் திருப்பலி நடக்கிறது. சிறப்பு திருப்பலியை அருட்பணியாளர்கள் சின்னப்பன், அம்புரோஸ், சைமன், இளங்கோ, கிளாசின் ஆகியோர் நடத்துகின்றனர்.

6-ந் தேதி நற்செய்தி பெருவிழாவில் அருட்பணியாளர் ஜினு தெக்கே தலக்கல் நற்செய்தி வழங்குகிறார்.

7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அருட்பணியாளர் இளங்கோ திருப்பலி நடத்துகிறார். காலை 6 மணிக்கு சங்கனாச்சேரி மறைமாவட்ட துணை பேராயர் மார் தோஸ்தறயில் திருப்பலியை நிறைவேற்றுகிறார். அதைத்தொடர்ந்து 1½ மணி நேரத்துக்கு ஒரு முறை திருப்பலி நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் ஜீடு பால்ராஜ் திருப்பலியை நடத்தி வைக்கிறார். மாலை 4 மணிக்கு திருப்பவனி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கேரள மாநிலத்தை சேர்ந்த மலையாள மொழி பேசும் மக்களுக்காக 8 நாட்கள் விழா நடக்கிறது,

பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி, சிறப்பு பஸ்கள், ரெயில், படகு வசதிகளை திருத்தலத்தின் தமிழக குழு ஒருங்கிணைப்பாளர்களான அருட்பணியாளர் ஜினு தெக்கே தலக்கல் நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல அதிபர் தோமஸ் பவத்து பரம்பில் ஆகியோர் செய்துள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் தலைமை பணியாளர் அருள்தந்தை மாத்யூ சூரவடி தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பில்பி மாத்யூ, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பினோ மோன் தேவசியா, மீனு சோபி மற்றும் ஜார்ஜ் குட்டி தாமஸ், மத்தாயி ஜோஸப், லோனப்பன் தாமஸ் ஆகியோர் செய்துள்ளனர். 
Tags:    

Similar News