search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை ஆதீனம்"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது.
    • மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை ஆதீனம் சார்பாக அதன் மேலாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. அதில் ஆதீனத்தின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது.

    மேலும் ஆனி மாத உற்சவத்தின் 6 ஆம் நாள் மண்டகப்படியில் இந்த மண்டபத்தில் இருந்துதான் சுவாமி, அம்மன் புறப்பட்டு திருவீதி உலா நடைபெறும். அப்போது திருஞான சம்பந்தர் மதுரையில் நடத்திய அதிசயம் குறித்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் வரலாறு கூறப்படும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    291-வது ஆதீனம் இருக்கும் வரை இவை அனைத்தும் தொடர்ந்து நடைபெற்றன. ஆனால், 292-வது அருணகிரி நாதர் ஆதீனம் சன்னிதானமாக இருந்த காலத்தில் இவை நிறுத்தப்பட்டன. இந்த கால கட்டத்தில் இந்த இடம் எந்த நிகழ்வு நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு தயார் செய்யும் இடமாக இந்த மண்டபம் மாற்றபட்டுள்ளது.

    தற்போது 293-வது மதுரை ஆதீனம் பொறுப்பேற்று இருக்கும் ஞானசம்பந்த தேசிகர் மேற்படி தேவார பாடசாலை, 6-ம் மண்டகப்படியை மேற்படி மண்டபத்தில் மீண்டும் நடத்த ஏதுவாக தற்போது லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் சார்பாக ஆஜரான வக்கீல், இந்த மண்டபத்தில் மனுதாரர் கூறுவது போல எவ்வித தேவார வகுப்பும் நடைபெறவில்லை. எனவே தற்போது பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதம் செய்து வருவதாக தெரிவித்தார்.

    மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், இந்த மண்டபத்தில் 1939, 1963, 1985 ஆம் ஆண்டின் கோவில் வரலாறு, மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் திருஞான சம்பந்த மண்டபம் இருந்ததற்கான சான்றுகள், குறிப்புகள் இருந்தது என்பதற்கான அனைத்தும் ஆவணங்கள் அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, சைவ சமயத்தை பரப்பிய நால்வர்களில் திருஞானசம்பந்தர் முக்கியமானவர் என்றும், இக்கால கட்டத்தில் அனைவரும் தேவாரம், திருவாசகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கோவில் நிர்வாகம் லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு 4 மாதத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த இடத்தை மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும். வழக்கம் போல மாசி திருவிழாவின் 6-ம் நாள் மண்டகப்படியை அதே மண்டபத்தில் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • பாராளுமன்றத்துக்கு ஆன்மீகவாதியை கூப்பிட்ட ஒரே பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும்.
    • ஓதுவார் மூர்த்திகளை தேவாரம் பாட வைத்து செங்கோலை நிறுவி இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இதுவரை இருந்த பிரதமர்கள் ஒருவர் கூட எங்களை பாராளுமன்றத்துக்கு அழைக்கவில்லை. நாங்களும் வந்ததில்லை. நாங்கள் எம்.பி.யும், ஆகாமல் எந்த கட்சியிலும் சேராமல் இங்கு வந்து இருக்கிறோம்.

    பாராளுமன்றத்துக்கு ஆன்மீகவாதியை கூப்பிட்ட ஒரே பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். ஆதீனங்களை பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

    எங்களை வரவழைத்து பெருமைப்படுத்தினார்கள். ஓதுவார் மூர்த்திகளை தேவாரம் பாட வைத்து செங்கோலை நிறுவி இருக்கிறார்கள்.

    தமிழர்களை பாதுகாத்ததற்காக நானும் ஒரு செங்கோலை கொடுத்துள்ளேன்.

    பிரதமர் மோடி பல்லாண்டு காலம் வாழ வேண்டும். 2024 பாராளுமன்றத் தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகி இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருக்கு வாழ்த்துகளையும் ஆசியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமர் மோடி அனைத்து ஆதினங்களிடமும் அன்பாக நடந்து கொண்டார். மரியாதை கொடுத்தார். எல்லோரிடமும் பேச அவருக்கு நேரம் இல்லை.

    செங்கோல் கொடுப்பது தவறு அல்ல. அந்த காலத்தில் ராஜராஜ சோழன் செங்கோல் வைத்து இருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செங்கோல் ஆதீனமே உள்ளது.

    அரசர்கள் வரும் போது செங்கோல் கொடுப்பது வழக்கம்தான்.

    இதில் மன்னராட்சி, மக்களாட்சி என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 99 வருட ஒப்பந்தத்தை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
    • சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுப்பதாக அறிக்கை தாக்கல்

    மதுரை:

    சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், 'மதுரை ஆதினம் மடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மடத்திற்கு சொந்தமான தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு பல 100 கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இருந்த மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தரப்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மற்றும் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை புதுச்சேரியை சார்ந்த தனியார் நிறுவனத்திற்கு 99 வருட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

    கோயில் நிலங்களை எல்லாம் 99 வருட ஒப்பந்தம் தான் செய்யமுடியும். இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது அந்த ஒப்பந்ததை காண்பித்து போலியாக பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது. ஆதின மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என்ற சட்டம் இருக்கிறது. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் இருக்கிறது. ஆகவே உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஒப்பந்தங்களை எல்லாம் ரத்து செய்து ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் மீட்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293வது ஆதினமான ஞானசம்பந்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சாமிநாதன், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 'மறைந்த 292வது ஆதினம் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். அவர்கள் பணபலம் மிக்கவர்கள். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கேட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிலத்தை மீட்பதற்கு காவல் துறையினர் போதிய பாதுகாப்பை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • திருவெண்ணைநல்லூரில் உள்ள சிவன் கோவிலுக்கு மதுரை ஆதீனம் இன்று காலை வந்தார்.
    • தொடர்ந்து நிருபர்கள் மதுரை ஆதீனத்திடம் ஆ.ராசா பற்றியே கேள்வி எழுப்பினர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் உள்ள சிவன் கோவிலுக்கு மதுரை ஆதீனம் இன்று காலை வந்தார். அப்போது கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை ஆதீனம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது நிருபர்கள் இந்துக்கள் பற்றி ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறாரே. உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு மதுரை ஆதீனம் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.

    தொடர்ந்து நிருபர்கள் மதுரை ஆதீனத்திடம் ஆ.ராசா பற்றியே கேள்வி எழுப்பினர். ஆனால் மதுரை ஆதீனம் இதற்கு பதில் அளிக்காமல் எழுந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நடிகர் விஜய் பற்றிய மதுரை ஆதீனம் பேச்சுக்கு மதுரை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது.
    • மதுரை ஆதீனம் அரசியல் ரீதியாக பேசி வரும் சில கருத்துகள், ஏற்கனவே பேசும்பொருளாகி வருகின்றன.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடந்தது. இதில் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மதுரை ஆதீனம், "கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என்று சொல்கிறார்கள். அது பற்றி எனக்கு கவலை இல்லை.

    இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ளார். எனவே அவர் நடித்த படத்தை யாரும் பார்க்கக்கூடாது. சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும்போது, தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக்கூடாது?" என்று பேசினார்.

    நடிகர் விஜய் பற்றிய மதுரை ஆதீனம் பேச்சுக்கு மதுரை மாவட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மதுரை முழுவதும் மதுரை ஆதீனத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

    மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், "மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடும் நீங்கள், தளபதி விஜயை பத்தி தப்பா பேசலாமா? இது தப்பு இல்லையா? வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்துங்கள். எங்களுக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்ற வாசகங்கள் இடம்பெற்று உள்ளது.

    மதுரை ஆதீனம் அரசியல் ரீதியாக பேசி வரும் சில கருத்துகள், ஏற்கனவே பேசும்பொருளாகி வருகின்றன. இந்த நிலையில் மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள கண்டன சுவரொட்டிகள் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×