search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதத்தில் மாற்ற வேண்டும்- மதுரை ஐகோர்ட் உத்தரவு
    X

    மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதத்தில் மாற்ற வேண்டும்- மதுரை ஐகோர்ட் உத்தரவு

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது.
    • மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை ஆதீனம் சார்பாக அதன் மேலாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. அதில் ஆதீனத்தின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது.

    மேலும் ஆனி மாத உற்சவத்தின் 6 ஆம் நாள் மண்டகப்படியில் இந்த மண்டபத்தில் இருந்துதான் சுவாமி, அம்மன் புறப்பட்டு திருவீதி உலா நடைபெறும். அப்போது திருஞான சம்பந்தர் மதுரையில் நடத்திய அதிசயம் குறித்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் வரலாறு கூறப்படும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    291-வது ஆதீனம் இருக்கும் வரை இவை அனைத்தும் தொடர்ந்து நடைபெற்றன. ஆனால், 292-வது அருணகிரி நாதர் ஆதீனம் சன்னிதானமாக இருந்த காலத்தில் இவை நிறுத்தப்பட்டன. இந்த கால கட்டத்தில் இந்த இடம் எந்த நிகழ்வு நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு தயார் செய்யும் இடமாக இந்த மண்டபம் மாற்றபட்டுள்ளது.

    தற்போது 293-வது மதுரை ஆதீனம் பொறுப்பேற்று இருக்கும் ஞானசம்பந்த தேசிகர் மேற்படி தேவார பாடசாலை, 6-ம் மண்டகப்படியை மேற்படி மண்டபத்தில் மீண்டும் நடத்த ஏதுவாக தற்போது லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் சார்பாக ஆஜரான வக்கீல், இந்த மண்டபத்தில் மனுதாரர் கூறுவது போல எவ்வித தேவார வகுப்பும் நடைபெறவில்லை. எனவே தற்போது பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதம் செய்து வருவதாக தெரிவித்தார்.

    மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், இந்த மண்டபத்தில் 1939, 1963, 1985 ஆம் ஆண்டின் கோவில் வரலாறு, மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் திருஞான சம்பந்த மண்டபம் இருந்ததற்கான சான்றுகள், குறிப்புகள் இருந்தது என்பதற்கான அனைத்தும் ஆவணங்கள் அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, சைவ சமயத்தை பரப்பிய நால்வர்களில் திருஞானசம்பந்தர் முக்கியமானவர் என்றும், இக்கால கட்டத்தில் அனைவரும் தேவாரம், திருவாசகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கோவில் நிர்வாகம் லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு 4 மாதத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த இடத்தை மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும். வழக்கம் போல மாசி திருவிழாவின் 6-ம் நாள் மண்டகப்படியை அதே மண்டபத்தில் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Next Story
    ×