என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கார்கள் மோதிய விபத்து: மதுரை ஆதீனத்தின் டிரைவரிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை
    X

    கார்கள் மோதிய விபத்து: மதுரை ஆதீனத்தின் டிரைவரிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை

    • விபத்தில் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.
    • மதுரை ஆதீனத்தின் கார் டிரைவரான செல்வக்குமார் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2-ந்தேதி மதுரையில் இருந்து கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜிஸ் நகர் ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவருடைய காரும், கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் காரும் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

    இந்த விபத்து மதுரை ஆதீனம் கார் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனவும், இதில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடக்கவில்லை எனவும் மறுப்பு தெரிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், விபத்து தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

    இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக கள்ளக்குறிச்சி கார் டிரைவரின் சகோதரர் முபாரக் அலி கொடுத்த புகாரின்பேரில் மதுரை ஆதீனத்தின் கார் டிரைவரான மதுரையை சேர்ந்த பாண்டி மகன் செல்வக்குமார் (வயது 30) மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார், நேற்று மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் செல்வக்குமாரை மதுரைக்கு சென்று உளுந்தூர்பேட்டைக்கு அழைத்து வந்தனர். அங்கு விபத்து குறித்து வீடியோ பதிவு மூலம் வாக்குமூலம் பெறப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.

    Next Story
    ×