search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்"

    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • செந்தில் பாலாஜி 6-வது முறையாக ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அ.தி.மு.க. ஆட்சியில் டிரைவர் -கண்டக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வகித்து வந்த போக்குவரத்து துறையில் 81 பேருக்கு வேலை தருவதாக கூறி ரூ.1.62 கோடி பணத்தை பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 2018-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ரூ.1 கோடியே 62 லட்சம் பணம் பெற்ற விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் 2019-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். இதன் பிறகே இந்த வழக்கு வேகம் எடுத்தது.

    இதை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில்பாலாஜி கோர்ட்டை நாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இதைதொடர்ந்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியிரில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஜூன் 21-ந்தேதி இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் பின்னர் அங்கேயே நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி ஜூலை மாதம் 18-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதன் பிறகு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டாக சிறையிலேயே இருந்து வருகிறார்.

    செந்தில் பாலாஜி 6-வது முறையாக ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி ஜாமின் மறு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

    • மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
    • தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    சென்னை:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. இதில் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    இதற்கிடையே நீட் தேர்வில் சுமார் 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வழங்கியது. தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் எதிர்பாராமல் விரயமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதை எதிர்த்து 20 ஆயிரம் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று பிசிக்ஸ் வாலா என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது.

    இந்த விவகாரத்தை தெளிவுப்படுத்தும் வரை இளநிலை மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடந்தது.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறும் போது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவை திரும்ப பெறுகிறோம்.

    அந்த மாணவர்களுக்கு ஜூன் 23-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதன்படி முடிவுகள் ஜூன் 30-ந்தேதி அறிவிக்கப்படும்.

    தேர்வு எழுத விரும்புவோர் எழுதலாம். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும். மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இதர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 6-ந்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    நீட் மறுதேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தனர். தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. மேலும் கலந்தாய்வு பாதிக்கப்படாத வாறு நீட் மறுதேர்வு விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். கருணை மதிப்பெண்களை தவிர்க்க மனுதாரர்கள் எழுப்பியுள்ள பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    நீட் தேர்வு குளறுபடி, வினாத்தாள் கசிவு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மனு உள்பட நீட் தொடர்பாக அனைத்து மனுக்களும் ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டு உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிறகு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

    நீட் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. தேசிய தேர்வு முகமை நம்பகமான அமைப்பாகும். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. அதன் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்தியாவில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
    • பாகிஸ்தானில் அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுகிறது என்றார் இம்ரான் கான்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதம மந்திரியான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று இம்ரான்கான் ஆஜரானார்.

    அப்போது ஒரு நீதிபதி, லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் கட்சித்தலைவராக உள்ள இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்கு உரியது என்றார்.

    இந்நிலையில், நீதிபதிகள் முன் இம்ரான்கான் பேசுகையில், இந்தியாவில் பொதுத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக சிறையில் இருந்த டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு இந்திய சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறேன். தேர்தலில் நான் நிற்பதற்கு தடை விதிக்கும் வகையில் தேர்தல் நடந்த பிப்ரவரி 8-ம் தேதிக்கு 5 நாள் முன்பு எனக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நவாஸ் ஷெரீப் சிறையில் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட வசதிகளுக்கும், தற்போது எனக்கு வழங்கப்படும் வசதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகாத நிலையில் கெஜ்ரிவால் வீட்டுக்கு சோதனை வாரண்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. 31ம் தேதி சிறைக்கு திரும்ப வேண்டும் என கூறியது.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், சுப்ரீம் கோர்ட் எனக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. நாளை 21 நாட்கள் நிறைவடைய உள்ளது. நாளை மறுநாள் சரணடைய வேண்டும். நாளை மறுநாள் மீண்டும் திகார் சிறைக்குச் செல்வேன்.

    இந்த முறை எவ்வளவு காலம் சிறையில் அடைப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் என் உள்ளம் உயர்ந்தது. சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் சிறைக்கு செல்கிறேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நிகழ்வதைத் தடுக்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மிகவும் அரிதாக நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது தொடர்கதையாகி விட்டன. கடந்த மே 14-ந்தேதி முதல் மே 29 வரையிலான 15 நாட்களில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நிகழ்வதைத் தடுக்க முடியாது.

    ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்கவில்லை. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்; அதன் மூலம் தற்கொலைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
    • அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    சென்னை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 131 ஆண்டுகள் பழமையான இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அணை பலவீனமாக உள்ளதாகவும், இயற்கை சீற்றங்களின் போது அணையை சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கேரள அரசின் இந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கேரளா அரசு மீறி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

    தமிழக விவசாயிகளும் கடந்த சில நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக நேற்று முன்தினம் நடக்க இருந்த நிபுணர் குழு கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் முல்லை பெரியாறு அணையை பார்வையிட மத்திய நீர் ஆணைய நிர்வாக என்ஜினீயர் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் அடுத்த மாதம் (ஜூன்) 13 மற்றும் 14-ந்தேதிகளில் முல்லைப்பெரியாறு அணையை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இவர்கள் அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மத்திய துணைகுழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பாக விமர்சனம் எழுந்தது.
    • தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது.

    வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

    வாக்குச்சாவடி வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கையை அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மனு மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்க மறுத்த ஒரு நாளுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், வாக்காளர் விவரங்களை வெளியிடுவதில் எந்த தாமதமும் இல்லை. பதிவான வாக்குகளில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.
    • அவரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி பெறவேண்டும்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமின் மனு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் உஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

    சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.

    குற்றம்சாட்டப்பட்ட நபரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்ய வேண்டும்.

    காவலில் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்து அமலாக்கத்துறை மனு மீது சிறப்பு நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும்.

    நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் கீழ் ஆஜரானவர்கள் ஜாமினுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை அவரது ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் ஜூலை 10-ந்தேதிக்கு ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது.

    • வழக்கை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • செந்தில் பாலாஜி தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வழக்கை ஒத்தி வைக்கக்கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் மே 15-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    செந்தில் பாலாஜி 330 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். வழக்கை காலதாமதப் படுத்துவதற்காகவே அமலாக்கத்துறையினர் தொடர்ந்து கால அவகாசம் கோருகிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கை தள்ளி வைப்பதாக இருந்தால் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

    • வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.
    • ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் கடந்த 1996-ம் ஆண்டு நளினிபாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கி அதை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்.

    கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாக ரூ.3 கோடியே 58 லட்சத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை ரூ.ஒரு கோடியே 4 லட்சம் செலுத்திய நிலையில், 2003-ம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக் கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது, அதன்படி ஆய்வு நடத்திய வழக்கறிஞர் ஆணையர், கவுண்டமணி வழங்கிய நிலத்தில் வெறும் ரூ.46 லட்சத்து 51 ஆயிரத்துக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், நடிகர் கவுண்டமணியிடம் இருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும தீர்ப்பளித்தது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "ஒப்பந்தத்தை போட்டுவிட்டு அதை முடித்து கொடுக்க இருப்பதை எப்படி ஏற்க முடியும்" என்று கூறி மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தனர்.

    • திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல.
    • இந்து திருமண சட்டப்படி, திருமணம் என்பது புனிதமானது. புதிய குடும்பத்துக்கான அடித்தளம்.

    புதுடெல்லி:

    விமானிகளாக பணியாற்றும் ஒரு ஆணும், பெண்ணும் முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அவர்கள் விவாகரத்து கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண பந்தத்தில் நுழைவதற்கு முன்பு, இந்திய சமூகத்தில் திருமணம் எவ்வளவு புனிதமானது என்பதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

    திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல. அழுத்தம் கொடுத்து, வரதட்சணை மற்றும் பரிசுப்பொருள் வாங்குவதற்கான வர்த்தக பரிமாற்ற நிகழ்ச்சி அல்ல.

    ஒரு ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தை பெற்று, எதிர்காலத்தில் குடும்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கான உறவுக்கு அடித்தளமிடும் புனிதமான நிகழ்ச்சி. 2 தனிநபர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணியமான, சமமான, ஆரோக்கியமான உறவில் நுழையும் புனிதமான நிகழ்ச்சி.

    ஆனால், இந்த மனுதாரர்களை போல், இளைய தலைமுறையினர் இந்து திருமண சட்டப்படி எவ்வித முறையான சடங்குகளும் இல்லாமல் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறுவதை நாங்கள் நிராகரிக்கிறோம்.

    இந்து திருமணத்தில், மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வர வேண்டும். ரிக் வேதத்தில் இதை 'சப்தபடி' என்று கூறுவார்கள்.

    ''நாம் நண்பர்களாகி விட்டோம். இந்த நட்பில் இருந்து பிரிய மாட்டேன்'' என்று மணமகளிடம் மணமகன் கூறுவான். இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணத்தை இந்து திருமணமாக கருத முடியாது.

    இந்து திருமண சட்டப்படி, திருமணம் என்பது புனிதமானது. புதிய குடும்பத்துக்கான அடித்தளம்.

    எனவே, இத்தகைய சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் 7-வது பிரிவின்படி, இந்து திருமணமாக கருத முடியாது. திருமண சடங்குகள் இல்லாமல் வெறும் திருமண பதிவு சான்றிதழ் பெற்றாலும், அது திருமண அந்தஸ்தை உறுதி செய்யாது.

    திருமண சர்ச்சைகளின்போது, அச்சான்றிதழ் ஒரு ஆதாரமாக கருதப்படலாம். ஆனால், சடங்கு இல்லாமல் நடத்தப்பட்ட திருமணத்துக்கு அச்சான்றிதழ் சட்ட அந்தஸ்து அளிக்காது. இந்து திருமண சட்டப்படி, அதை திருமணமாக கருத முடியாது.

    1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் செய்திருக்க வேண்டும்.

    ஆனால், மனுதாரர்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யவில்லை. முறையான சடங்குகள் இன்றி அவர்கள் பெற்ற திருமண பதிவு சான்றிதழ் செல்லாது. அவர்களது விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    ×