என் மலர்
இந்தியா

உன்னாவ் பாலியல் வழக்கு: சி.பி.ஐ. மேல் முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
- செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி ஐகோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
- இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டெல்லி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிட்டுள்ளது.
இந்நிலையில், சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கள் கிழமை) விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






