என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • மாணவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு.
    • கழுத்தில் குண்டு பாய்ந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே உயிர் பிரிந்தது.

    அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் போலீசார் சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்துள்ளனர்.

    அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த பழமைவாத தலைவர் சார்லி கிர்க் (வயது 31). ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு டி.பி.யு.எஸ்.ஏ. என்ற மாணவர் அமைப்பை நிறுவினார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.

    இதன்மூலம் தாராளவாத கொள்கை கொண்ட கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளை பரப்பி வந்தார். இதற்காக பல கல்லூரிகளில் அவர் திறந்தவெளி விவாதம் நடத்துவது வழக்கம்.

    அந்தவகையில் உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே கலந்துரையாடிய சார்லி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

    பாதுகாவலர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு மாடியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஆனால் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என தெரிந்த பிறகு விடுவிக்கப்பட்டார். எனவே உண்மையான குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கான உயர்ந்த அளவிலான உறுதிப்பாடு இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். குற்றவாளிக்கு 22 வயது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

    அதேபோல் இங்கிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • சந்திரமௌலியின் மனைவியும் மகனும் விரைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
    • துண்டிக்கப்பட்ட தலையை இரண்டு முறை உதைத்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார்.

    அமெரிக்காவில் மோட்டல் விடுதி ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்தவர் 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா என அடையாளம் காணப்பட்டுள்ளார். டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் கடந்த 10 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

    மோட்டலில் பணியாற்றிய கோபோஸ் மார்டினெஸ் தனது பெண் சக ஊழியருடன் மோட்டலில் ஒரு அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது சந்திரமௌலி அங்கு சென்றார்.

    ஏற்கனவே உடைந்திருந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இருப்பினும், சந்திரமௌலி இதைப் பற்றி கோபோஸிடம் நேரடியாகச் சொல்லாமல், அருகில் இருந்த பெண் ஊழியரிடம் சொன்னபோது, கோபோஸ் மிகவும் கோபமடைந்தார். சந்திரமௌலி தன்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்த கோபோஸ் கத்தி ஒன்றை எடுத்து வந்து சந்திரமௌலியைத் தாக்கினார்.

    உயிருக்கு பயந்து சந்திரமௌலி மோட்டல் பார்க்கிங் இடத்திற்குள் ஓடினார். இருப்பினும் கோபோஸ் அவரைத் துரத்திச் சென்று கொடூரமாகத் தாக்கினார்.

    அலறல் சத்தம் கேட்டு, மோட்டல் முன்னறையில் இருந்த சந்திரமௌலியின் மனைவியும் மகனும் விரைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் கோபோஸ் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சந்திரமௌலியின் தலையை துண்டித்தார். பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை இரண்டு முறை உதைத்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் சந்திரமௌலியை கத்தியால் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  

    • சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
    • இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று கூறினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே துப்பாக்கி வன்முறை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட அவர் மேடையில் சரிந்து விழுந்தார்.

    இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.

    சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

    இந்நிலையில் விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சந்தேக நபரின் இரண்டு படங்களை FBI வெளியிட்டுள்ளது.

    துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவர் கூரையிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து குதித்து தப்பிச் சென்றதாக FBI தெரிவித்துள்ளது.

    குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காடு போன்ற பகுதியில் இருந்து ஒரு உயர் சக்தி கொண்ட துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக FBI சிறப்பு முகவர் ராபர்ட் போல்ஸ் தெரிவித்தார்.

    இது தவிர, அங்கிருந்து ஷூ ரேகைகள் மற்றும் கை ரேகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை விசாரணைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

    சந்தேக நபர் கல்லூரி பயிலும் வயதுடையவராகத் தோன்றியதாகவும், அவரது பல காட்சிகளைப் போலீசார் பெற்றுள்ளதாகவும் உட்டா டிபிஎஸ் ஆணையர் பியூ மேசன் தெரிவித்தார். 

    மேலும் புகைப்படத்தில் இருப்பவரை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 100,000 டாலர் (சுமார் 88 லட்சம் ரூபாய்) சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது

    ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.

    இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.

    வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.  

    இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

    அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.

    இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.

    இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    • அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.

    சார்லி கிர்க் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என காட்டமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயர்ந்த மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    • விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது.
    • நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா பல்வேறு விண்வெளியை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    விண்வெளித் துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

    இந்நிலையில், நிலா மற்றும் சீனாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த விவரங்கள் சீனாவுக்கு தெரிந்துகூட கூடாது என்பதற்காக நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் திட்டங்கள் தொடர்பான தரவுகளை அணுகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    • அவர்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு சைகை காட்டி காட்டினார்.
    • வாஷிங்டன் டி.சி. காவல்துறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டிரம்ப் கொண்டுவந்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தலைநகர் வாஷிங்டன் டி.சியில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பிரபல உணவகத்தில் இரவு உணவு அருந்த சென்றுள்ளார்.

    அப்போது, அங்கு வந்த ஒரு போராட்டக்காரர்கள் குழு, "டி.சி-க்கு விடுதலை", "பாலஸ்தீனத்திற்கு விடுதலை" என கோஷங்களை எழுப்பினர்.

    மேலும், டிரம்பை "நவீன கால ஹிட்லர்" என்றும் குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பினர்.

    அவர்களின் கோஷங்களைக் கேட்ட டிரம்ப், அவர்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு சைகை காட்டி காட்டினார். 

    'கோட் பிங்க்' என்ற பெண்ணிய செயற்பாட்டாளர் குழு இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்றது.

    அண்மையில் வாஷிங்க்டன் பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறி வாஷிங்டன் டி.சி. காவல்துறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டிரம்ப் கொண்டுவந்தற்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த ஆண்டின் கிட் ஆப் த இயர் என்ற பட்டத்தை தேஜஸ்வி மனோஜுக்கு டைம் இதழ் அளித்தது.
    • ஆன்லைன் மோசடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டைம் இதழ் இந்த ஆண்டின் கிட் ஆப் த இயர் என்ற பட்டத்தை 17 வயது அமெரிக்கவாழ் இந்தியப் பெண்ணுக்குத் தந்து கவுரவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது தேஜஸ்வி மனோஜ் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

    வயது மூத்தோரை ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாக்க ஷீல்டு சீனியர்ஸ் (Shield Seniors) எனும் இணையதளத்தை உருவாக்கினார். இதையடுத்து, தேஜஸ்விக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்ற ஆண்டு ஆன்லைன் மூலம் அவரது தாத்தாவிடம் உள்ள பணத்தைத் திருட முயன்றதை அறிந்த தேஜஸ்வி மோசடிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

    ஆன்லைன் மோசடி பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதை உணர்ந்த அவர், இணைய மோசடிகளைப் பற்றிக் கற்பிக்க இந்த இணையதளத்தை உருவாக்கினார். தற்போது முதியோர் இல்லங்கள் சென்று அங்குள்ளோருக்கு இந்த இணைய தளத்தைப் பயன்படுத்த உதவுகிறார்.

    • அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
    • 2001 க்கு பிறகு இந்த எண்ணிக்கையில் இந்த அளவு சரிவு ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    2001 க்கு பிறகு கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எண்ணிக்கையில் இந்த அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக துறையின் தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் (NTTO) தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவுக்கு செல்ல விசா பெறும் முறைக்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விசா பெற பல மாதங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    உதாரணமாக, ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர் ஒருவர் விசா பெற வேண்டும் எனில் தங்களது சொந்த நாடான இந்தியாவில் இருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என அமெரிக்கா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் தங்கியிருக்கும் நாட்டில் இருந்தே விசா பெற்று அமெரிக்கவுக்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
    • அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

    மேலும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க, அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் உள்ள இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    ஐரோப்பிய ஒன்றியம் இதை செயல்படுத்தினால், அதே நடவடிக்கையை அமெரிக்காவும் நடைமுறைப்படுத்தும் என டிரம்ப் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    டிரம்பின் இந்த முடிவால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.

    • பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு ஒன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
    • அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் பிரிக்ஸ் நாடுகள் உயிர்வாழ முடியாது.

    இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாக கூறி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது.

    இவ்விவகாரத்தில் இந்தியாவை டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் பீட்டர் நவரோ மீண்டும் இந்தியா மீது கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா, சீனா, ரஷியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு நாடுகள், அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் உயிர்வாழ முடியாது. இந்த நாடுகள் எதுவும் அமெரிக்காவிற்கு விற்காவிட்டால் உயிர்வாழ முடியாது. அவர்கள் பொருட்களை அமெரிக்காவிற்கு விற்கும்போது தங்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகள் போல் செயல்படுகிறார்கள்.

    பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு ஒன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் வரலாற்று ரீதியாக அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கிறார்கள். வரிகளை விதிப்பதில் இந்தியா மகாராஜாபோல் உள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா மிக உயர்ந்த வரிகளை விதிக்கிறது. உக்ரைனை ரஷியா ஆக்கிரமிப்பதற்கு முன்பு இந்தியா ஒருபோதும் ரஷிய எண்ணெயை வாங்கியதில்லை. போருக்கு பிறகுதான் ரஷிய எண்ணெய் வாங்க தொடங்கியது.

    ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுடன் எங்களுக்கு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுஉள்ளது. எங்கள் சந்தைகள் தேவை என்பதை உணர்ந்து இந்த நாடுகள் எங்களுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. இந்தியா ஒரு கட்டத்தில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா விரைவில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் என்று நம்புகிறேன். ரஷியா, சீனாவுடன் கூட்டணி வைப்பது இந்தியாவுக்கு நல்ல முடிவை தராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இந்தியாவுடனான உறவு சிறப்பாக உள்ளது என்றும் மோடி எப்போதும் எனது நண்பர்தான் என்றும் கூறினார். ஆனால் அவரது ஆலோசகர் தொடர்ந்து இந்தியாவை கடுமை யாக விமர்சித்து வருகிறார்.

    • இத்தனை சிரமங்களை கடந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.
    • துப்பாக்கியுடன் வந்து கபிலை சுட்டுக் கொலை செய்தார்.

    அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் (26). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கபில் பெற்றோர் மற்றும் 2 சகோதரிகளை காப்பாற்ற வேண்டி வேலைக்காக 3 வருடங்களுக்கு முன் அமேரிக்காவுக்கு சென்றார்.

    இதற்காக, அவரது குடும்பம் சுமார் ரூ. 45 லட்சம் செலவிட்டது. ஆபத்தான டாங்கி ரூட் வழியாக மெக்சிகன் எல்லையைக் கடந்து பனாமா காடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்தார்.

    முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தார்.

    இத்தனை சிரமங்களை கடந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த கபில் ஒரு அற்ப விஷயத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அண்மையில் அவர் பணிபுரிந்த கடைக்கு வெளியே பொது வெளியில் சிறுநீர் கழித்த ஒருவரை கபில் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த அந்த நபர் சிறிது நேரம் கழித்து துப்பாக்கியுடன் திரும்பி வந்து கபிலை சுட்டுக் கொலை செய்தார்.

    கபிலின் உடலை அரியானாவில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று குடும்பத்தினரும் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×