என் மலர்
அமெரிக்கா
- சூரிய புயல் தாக்கியதை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அரிய துருவ ஒளிநிகழ்வை பார்க்க முடிந்தது.
- சூரிய புயலால் உருவான ஒளிவெள்ளம் இந்தியாவின் லடாக் பகுதியில் வானில் வர்ணஜாலத்தை நிகழ்த்தியது.
வாஷிங்டன்:
சூரியனின் மேற்பரப்பில் இருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் சூரிய புயல் என்று அழைக்கப்படுகிறது.
சூரிய புயல், புவி மற்றும் அதன் காந்த மண்டலம் உள்ளடக்கிய முழு சூரிய மண்டலத்தையும் தாக்கும்.
இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரிய புயல் நேற்று முன்தினம் பூமியை தாக்கியது.
இதன் எதிரொலியாக பூமியின் வட துருவத்தில் வானில் பல வண்ணங்களில் துருவ ஒளி ('அரோரா பொரியாலிஸ்') தோன்றியது. இந்த ஒளி வெள்ளம் பார்த்தவர்களை பரவசம் அடைய செய்தது.
சூரிய புயல் தாக்கியதை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அரிய துருவ ஒளிநிகழ்வை பார்க்க முடிந்தது.
இந்த ஒளி வெள்ளத்தில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது. அதோடு, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இந்த முறை இளஞ்சிவப்பு நிறமும் காணப்பட்டது.
பூமியை சூரிய பூயல் தாக்கும்போது மின்கட்டமைப்புகள், தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.
அந்த வகையில் ஏற்கனவே இது தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் (என்ஓஏஏ) தெரிவித்து இருந்தது. அரிதான மற்றும் கடுமையான சூரிய புயலின் விளைவுகள் வார இறுதி வரை மற்றும் அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்றும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை இயக்குபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் என்ஓஏஏ எச்சரித்தது.
இதனிடையே சூரிய புயலால் வானில் உருவான ஒளிவெள்ளத்தை கண்டு ரசித்த மக்கள் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். துருவ ஒளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இதற்கு முன்னர் கடந்த 2003-ம் ஆண்டு சூரிய புயல் தாக்கியதும், அப்போது சுவீடன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மின் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூரிய புயலால் உருவான ஒளிவெள்ளம் இந்தியாவின் லடாக் பகுதியிலும் வானில் வர்ணஜாலத்தை நிகழ்த்தியது. லடாக்கின் ஹான்லே நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் வானில் சிவப்பு ஒளி தோன்றியது. இது நேற்று அதிகாலை வரை தொடர்ந்தது.
இது குறித்து ஹான்லே டார்க் ஸ்கை ரிசர்வ் அமைப்பின் என்ஜினீயர் ஸ்டான்சின் நோர்லா கூறுகையில், "வழக்கமான தொலைநோக்கி கண்காணிப்பின்போது எங்கள் ஆல்-ஸ்கை கேமராவில் 'துருவ ஒளி' செயல்பாடுகளைக் காணும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. அடிவானத்தில் உருவான சிவப்பு ஒளி வெள்ளத்தை வெறும் கண்களால் காண முடிந்தது. இந்த அரிய நிகழ்வு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை தொடர்ந்தது" என்றார்.
- பாலஸ்தீனத்தை ஐ.நா. பொதுச்சபையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.
- 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
நியுயார்க்:
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
இப்போரை நிறுத்த கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையின் அவசர கூட்டம் நடந்தது. இதில் பாலஸ்தீனத்தை ஐ.நா. பொதுச்சபையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.
தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் பேசும்போது, இந்த தீர்மானம் ஐ.நா சாசனத்தின் தெளிவான மீறல் என்றார்.மேலும் தீர்மான நகலை கிழித்தார். காகிதங்களை கிழிக்கும் கருவியில் தீர்மான நகலை போட்டார்.
பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக்க ஐ.நா. பொதுச்சபையில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் பாதுகாப்பு கவுன்சில் முடிவு எடுக்க உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக மட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது.
- துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும்
கலிபோர்னியா:
சூரியனின் மேற்பரப்பில் இருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் சூரியப்புயல் என்று அழைக்கப்படுகிறது. சூரியப் புயல், புவி மற்றும் அதன் காந்த மண்டலம் உள்ளடக்கிய முழு சூரிய மண்டலத்தையும் தாக்கும்.
இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியை தாக்கியது.
ஏற்கனவே இது தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்து இருந்தது. பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் தெரிவித்தது.
துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும். பச்சை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
அதன்படி வானத்தில் கண்கவர் வான ஒளிக் காட்சிகள் ஏற்பட்டன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா முதல் இங்கிலாந்து வரை வான ஒளிக் காட்சிகளை பார்க்க முடிந்தது.
லிவர்பூல், கென்ட், நார்போக் உள்பட இங்கிலாந்து முழுவதும் துருவ ஒளி தெரிந்தது. சூரியப்புயல் தாக்கிய பிறகு அமெரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் துருவ ஒளி வானில் தோன்றியது. இதை பார்த்து மக்கள் பரவசமடைந்தனர். சூரியப்புயலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் செயற்கைக்கோள்கள், மின்கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் அங்கு டாங்கிகளை குவித்துள்ளது.
- இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
வாஷிங்டன்:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் வடக்கு மற்றும் மத்திய காசா பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் அங்கு டாங்கிகளை குவித்துள்ளது.
இதற்கிடையே ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அகதிகளால் மக்கள் தொகை பெருகியிருக்கும் ரபா நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், பொது மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்தது.
மேலும் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்த நிலையில் ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுத உதவிகளை நிறுத்துவோம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தெற்கு காசா நகரமான ரபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுத உதவிகளை நிறுத்துவோம். நாங்கள் ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கப் போவதில்லை.
ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் பயன்படுத்த ஆயுதங்களை வழங்கமாட்டோம். ரபாவின் தற்போதைய நிலைமையை தரைப்படை நடவடிக்கையாக அமெரிக்கா வரையறுக்கவில்லை. அவர்கள் (இஸ்ரேல்) மக்கள்தொகை மையங்களுக்குள் செல்லவில்லை.
ஆனால் நான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும், போர் அமைச்சர வைக்கும் ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளேன். அவர்கள் மக்கள்தொகை மையங்களுக்குச் சென்றால் எங்களின் ஆதரவைப் பெறப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காசாவில் பொது மக்களை கொல்ல அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதை ஜோபைடன் ஒப்புக் கொண்டார்.
- சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
- அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டினர்.
உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை கட்டிப்பிடித்து ஒரு வாலிபர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான வீடியோவை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. அதன்படி சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார்.
இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலானது. அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டினர்.
சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.
- இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
- ஏற்றுமதியை தொடரலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.
காசா:
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே லட்சக்க ணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. ரபா நகருக்குள் இஸ்ரேல் டாங்கிகள் நுழைந்துள்ளன. எகிப்து உடனான ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்கவில்லை. ரபா நகரம் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக தெற்கு காசா நகரமான ரபா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளதால் குண்டுகள் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கான முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டது. ஏற்றுமதியைத் தொடரலாமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.
- சுதா ரெட்டியின் ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
- சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் மெட்காலா எனும் பேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்- நடிகைகள், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்ற நிலையில், அவர்கள் அணிந்து வந்த ஆடைகள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நிகழ்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வரும் ஐதராபாத்தை சேர்ந்த கோடீஸ்வரரான மேகா கிருஷ்ணாரெட்டியின் மனைவியான சுதா ரெட்டி, ஐவெரி பட்டு கவுன் அணிந்து பங்கேற்றார். அவரது ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சுதா ரெட்டி 180 காரட் வைர நெக்லசை அணிந்திருந்தார். அதில் 25 காரட் இதய வடிவ வைரமும், மேலும் மூன்று 20 காரட் இதய வடிவிலான வைரங்களும் அணிந்திருந்தார். இதுதவிர 23 காரட் வைர சாலிடர் மோதிரத்தையும், 20 காரட் வைர சொலிடர் மோதிரத்தையும் அணிந்திருந்தார். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.165 கோடி என கூறப்படுகிறது.
சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.
- சிறுவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார்.
- சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார்.
சிறுவன் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு தன்னிடம் இருந்துள்ள ஒரு டாலரை கொடுத்த அவனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேட் புஸ்பைஸ். கோடீஸ்வரரான இவர் தன்னுடைய வீட்டில் திடீரென தீப்பிடித்தற்கான அலாரம் ஒலிக்கப்பட்டதால் சாதாரண உடையுடன் வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 9 வயது சிறுவன் ஒருவர் மேட் புஸ்பைசை பிச்சைக்காரன் என தவறாக எண்ணியது மட்டுமின்றி தன்னிடம் இருந்த ஒரு டாலர் பணத்தை மேட்டிடம் கொடுத்துள்ளார்.
ஆனந்தம் கலந்த அதிர்ச்சியுடன் அந்த பணத்தை பெற்று கொண்ட மேட், தான் யார் என அந்த சிறுவனுக்கு விளக்கி உள்ளார். பின்னர் அவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார். சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட அமெரிக்க மீடியாக்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளவாசிகள் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து வைரலாகி வருகின்றனர்.
- கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார்.
- வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் மெட் காலா நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தது. இந்த நிகழ்வில் சர்வதேச சினிமா பிரபலங்கள், பாப் மற்றும் ராப் இசை கலைஞர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், கோடீஸ்வர பணக்காரர்கள் ஆகியோர் கண்ணை கவரும் வகையில் விதவிதமான ஆடைகளை அணிந்தவாறு போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பர். இந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப் பாடகி ஒருவரை பாதுகாவலர்கள் ஒன்று சேர்ந்து அலேக்காக தூக்கிய சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி டைலா. பல்வேறு வெற்றி பாடல்களை பாடியுள்ள இவர் முதன்முறையாக மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினரின் ஆடையை அவர் அணிந்திருந்தார். கடற்கரை மணலை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்தவாறு அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
அப்போது கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அலேக்காக தூக்கினர். பின்னர் படிக்கட்டுகளில் டைலாவை ஏந்தி சென்று மேடையில் விட்டனர். அப்போதும் அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தவாறே இருந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
- தற்போது 3-வது முறையாக மீண்டும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார்.
- விண்வெளி ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பப்பட இருந்தது.
வாஷிங்டன்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.
இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது.
இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.
இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார். இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ் (58), புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர்.
இதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கனாவெரலில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பப்பட இருந்தது.
இந்த நிலையில், இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புல்ச் வில்மோர் ஆகியோர் பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் திடிடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
- கலிபோர்னியா மாவட்ட கல்வி கண்காணிப்பாளராக இருந்து வருபவர் மரியன் கிம் பெல்ப்ஸ்.
- மரியன் கிம் பெல்ப்ஸ் விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாவட்ட கல்வி கண்காணிப்பாளராக இருந்து வருபவர் மரியன் கிம் பெல்ப்ஸ். இவரது மகள் விளையாட்டில் சிறந்து விளங்கினார்.
இதை பாராட்டி அவருக்கு அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மரியன் கிம் பெல்ப்சும் கலந்து கொண்டார்.
மகள் விழா மேடையில் கவுரப்படுத்தும்போது அங்கு திரண்டு இருந்த மாணவ-மாணவிகள் பெரிய அளவில் கைத்தட்டி உற்சாகப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் மரியன் கிம் பெல்ஸ் கடும் ஆத்திரம் அடைந்தார். உடனே அவர் விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.
- சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர்.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் வெளிப்புற வாயில் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஓட்டுனர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "நேற்று இரவு 10:30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுவற்றில் மோதியது. இதனால், வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
ரகசிய சேவை, கொலம்பியா மாவட்டத்தின் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து, இந்த அபாயகரமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயிலில் வாகனம் மோதிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.






