என் மலர்
உலகம்
- இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.
- 10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வர்த்தக கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏடன் வளைகுடா பகுதியில்இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து இங்கிலாந்து கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். உடனே ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பலில் 22 இந்தியர்கள் உள்ளனர். கப்பலில் எரிந்த தீயை கடுமையாக போராடி இந்திய மீட்புக்குழுவினர் அணைத்தனர்.
10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது. எண்னை கப்பலின் கேப்டன் அபிலாஷ் ராவத் கூறும்போது, இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்த தீயை எதிர்த்து போராடும் நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். தீயை அணைக்க இந்திய கடற்படை எங்களுக்கு உதவ முன்வந்ததற்கு நன்றி என்றார்.
- மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
- சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது.
மாலே:
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சீன பயணத்தில் அந்நாட்டுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் நாடு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார்.அவருக்கு மாலத்தீவின் முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவுடனான மோதல் போக்கு நல்லதல்ல என அறிவுறுத்தின. இந்த நிலையில் இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக முகமது முய்சு பேசி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாலத்தீவின் இறையாண்மையை சீனா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதிக்கின்றன. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் முன்முயற்சியானது. இது இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் தலையிடும் நாடு சீனா அல்ல, இதனால்தான் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது. சீன அதிபர் ஜின்பிங் குடிமக்களின் நலனை முதன்மைப்படுத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் சீனாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மாலத்தீவின் இலக்குகளை அடைய சீன அரசு உதவும் என்று ஜின்பிங் என்னிடம் உறுதியளித்துள்ளார். மாலத்தீவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தை கொண்டு வருவதும் எனது இலக்கு. வளர்ந்த நாடுகளுடன் இணக்கமாக செயல்படும் நாடாக மாலத்தீவை மாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
- 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.
இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.
ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.
- இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்றது.
- ஈரானியர்கள் அல்லாத ஒன்பது பேர் உயிரிழப்பு.
ஈரானின் தென்கிழக்கு பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக இதே பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்ற நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
"இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஈரானியர்கள் அல்லாத ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சரவன் நகரை அடுத்த சிர்கான் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து நடைபெற்றது," என ஈரானை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இதுவரை பயங்கரவாத அமைப்புகள் எதுவும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே பயங்கர மோதல் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எம்எல்டி (MLD) நோய் நரம்பு செல்களை தாக்கி முடக்குகிறது
- இம்மருந்தின் விலை 2.5 மில்லியன் யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
வட அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர்களில் ஒருவரையும், ஐரோப்பாவில் 1 லட்சம் பேரில் ஒருவரையும் தாக்கும் அரிய மரபுவழி நோய், எம்எல்டி (MLD) எனபப்டும் மெடாக்ரொமாடிக் லூகோ டிஸ்ட்ரஃபி (metachromatic leukodystrophy).
குழந்தைகளை இந்நோய் தாக்கினால் 5-6 வருடங்களுக்குள் உயிரிழப்பு நேரிடும்; பதின் வயதில் உள்ளவர்களுக்கு 20 வருடங்களில் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.
இந்நோயினால் நரம்பு செல்கள் சிறிது சிறிதாக செயல் இழக்கிறது.
இந்நோய்க்கு மருந்தில்லாமல் உயிரிழப்பு நிச்சயம் என்றிருந்த நிலையில், மரபணு நோய் சிகிச்சை முறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆர்கர்ட் தெராப்யுடிக்ஸ் (Orchard Therapeutics) நிறுவனம் லிப்மெல்டி (Libmeldy) எனும் மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இங்கிலாந்தின் லண்டன் நகரையும், அமெரிக்காவின் பாஸ்டன் நகரையும் தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம், ஆர்கர்ட் தெராப்யுடிக்ஸ்.
லிப்மெல்டி மருந்தின் விலை சுமார் ரூ.22 கோடி (யூரோ 2.5 மில்லியன்) ஆகும்.
லிப்மெல்டி, தற்போது அயர்லாந்து, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
எம்எல்டி நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வை தரும் இந்த மருந்து ஒரே ஒரு முறை மட்டுமே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏஐ மூலம் மிகவும் எளிதாக இத்தகைய வீடியோக்களை தயாரிக்க முடிகிறது
- முறையான சட்டங்கள் இல்லாததால் பாதிப்படைந்தவர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்
பிரபலங்களை மையமாக வைத்து பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோக்களின் மூலம் தவறான செய்திகளை பரப்புவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.
டீப் ஃபேக் (deep fake) எனப்படும் இத்தகைய வீடியோக்கள் டிஜிட்டல் முறையில் ஃபேஸ் ஸ்வேப்பிங் (face swapping) எனப்படும் முகமாற்று முறையில் தயாரிக்கப்படுபவை.
ஆனால், சமீப சில மாதங்களாக ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் அத்தகைய வீடியோக்களை உருவாக்குதல் மிக எளிதாகி வருகிறது. இணையத்தில் பல வலைதளங்கள் இத்தகைய வீடியோக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் தந்து உதவுகின்றன.
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால், இணையத்திலோ பொதுவெளியிலோ உள்ள எவரது முகத்தையும் வேறு ஒருவரது முகத்தில் பொருத்தி தத்ரூபமாக ஒரு பொய்யான வீடியோவை தயாரிக்க முடியும். இவற்றை பொய்யானவை என கண்டறிவது சுலபமும் அல்ல. மேலும், இவற்றை நீக்கும் முயற்சியும் நீண்ட நேரம் ஆவதால், இவற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
பெண்களை, அதிலும் குறிப்பாக பிரபலமான பெண்களை குறி வைத்து இவை உருவாக்கப்படுவது அரசாங்கங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் முன்னணி பாடகியான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) குறித்த அத்தகைய வீடியோ வைரலானது.
இந்த பொய் வீடியோ, எக்ஸ் சமூக வலைதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர், "பொய்யான வீடியோக்கள் மிகவும் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சிக்கலை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை அரசு உடனடியாக செய்யும். பயனர்கள் இத்தகைய வீடியோக்களை பொய்யானவை என எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அவற்றில் குறியீடுகளை செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த ஏஐ நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம்" என தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் பெருகி வரும் இத்தகைய உள்ளடக்கங்களை கையாள்வது சமூக வலைதளங்களுக்கும் சிக்கலாக இருக்கிறது. இவற்றை உடனடியாக நீக்குவது இந்நிறுவனங்களின் கட்டமைப்புக்கும் பெரும் சவாலாக உள்ளது.
- முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர், இரண்டிலும் சுவீடன் பங்கேற்கவில்லை
- சில தினங்களுக்கு முன் சுவீடன் நேட்டோவில் அங்கத்தினராவதை துருக்கி ஆதரித்தது
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா தலைமையில் 31 உலக நாடுகள் ஒருமித்து உருவாக்கிய அமைப்பு நேட்டோ (NATO) எனும் வட அட்லான்டிக் கூட்டமைப்பு.
இக்கூட்டணியில் உள்ள ஒரு நாட்டின் மீது வேறொரு நாடு தாக்குதல் நடத்தினால், அது 31 நாடுகளையும் தாக்குவதற்கு சமமாக கருதப்பட்டு பதிலடி கொடுக்கப்படும்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர், இரண்டிலும் சுவீடன் பங்கேற்கவில்லை.
பெரும்பாலான உலக நாடுகளின் போர்களிலும் சுவீடன் பங்கேற்காமல் நடுநிலை வகித்து வந்தது.
இந்நிலையில், 2022ல் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராக சேர சுவீடன் முடிவெடுத்தது.
2022ல், பின்லாந்து (Finland) மற்றும் சுவீடன் ஆகியவை நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்தன.
பின்லாந்தின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது.
ஆனால், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான் (Viktor Orban) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடனின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.
சில தினங்களுக்கு முன் சுவீடன் நேட்டோவில் அங்கத்தினராவதை துருக்கியும் ஆதரித்தது.

இதைத் தொடர்ந்து துருக்கிக்கு $23 பில்லியன் மதிப்பிற்கு எஃப்-16 ரக ராணுவ போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக அமெரிக்க பாராளுமன்றத்திடம் அமெரிக்க அரசு தெரிவித்தது.
இதில் 40 புதிய எஃப்-16 ரக போர் விமானங்களும், தற்போது துருக்கியிடம் உள்ள 79 எஃப்-16 விமானங்களை மேம்படுத்துவதற்கான அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் அடங்கும்.
விமானங்களை வழங்குவதை விரைவாக செய்து முடிக்கும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
- லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.
- விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்தார்.
ஆனாலும் அந்த பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது குழந்தைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.
இதையறிந்த அவரது குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
- தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றிணைந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கார்னி போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளையில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற இங்கிலாந்தை சேர்ந்த எண்ணை கப்பல் மீதும் ஏவுகணைகளை வீசி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இங்கிலாந்தின் மார்லின் லுவாண்டா கப்பல், செங்கடலை கடந்து ஏமன் வளைகுடாவில் சென்றபோது ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலில் தீப்பிடித்தது. அதை கப்பல் ஊழியர்கள் போராடி அணைத்தனர்.
இதுகுறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறும்போது அமெரிக்கா, இங்கிலாந்தின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றனர்.
மத்திய கிழக்கு பகுதி கடலில் தொடர்ந்து வணிக கப்பல்களை தொந்தரவு செய்து வரும் ஹவுதி கிளார்ச்சியாளர்கள் தற்போது அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கடந்த சில தசாப்தங்களில் மிகப்பெரிய மோதலாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்று அதிகாலை செங்கடலை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராக வைத்திருந்த ஹவுதி கப்பல் எதிர்ப்பு ஏவுகணைக்கு எதிராக அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹவுதியின் அல்-மசிராஹ் செயற்கைக்கோள் செய்தி சேனல், துறைமுக நகரான ஹொடெய்டா அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், சேதம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். முதன்முறையாக அமெரிக்காவின் போர்க்கப்பலை குறிவைத்துள்ளது.
- 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
- பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும்.
உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ராயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 தியேட்டர்கள், 40 ஓட்டல்கள், பார்கள் இருக்கின்றன.
இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண்ட கப்பல் தனி உலகமாக கடலில் உலா வரும். இந்த கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.
- கடைகளுக்கு சென்று மக்கள் எளிதாக துப்பாக்கிகளை விலைக்கு வாங்கலாம்
- 14 பேரை கொன்ற அந்த மாணவனிடம் 7 துப்பாக்கிகள் இருந்தது தெரிய வந்தது
மத்திய ஐரோப்பாவில் உள்ள 1.25 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு, செக் குடியரசு (Czech Republic). இதன் தலைநகரம் பிரேக் (Prague).
செக் நாட்டில், பொதுமக்கள் துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று எந்த கட்டுப்பாடும் இன்றி அதனை வாங்குவது மிக எளிது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னை காத்து கொள்ள துப்பாக்கி வைத்திருப்பதை அடிப்படை உரிமையாக அந்நாட்டு அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம், செக் குடியரசின் பிரபலமான சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு 24 வயது பட்டதாரி மாணவன், திடீரென அங்கு இருந்தவர்களை நோக்கி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
மாணவன் சுட்டதில், சக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
பிறகு, அந்த மாணவன் வேறு ஒரு ஏஆர்-10 ரக துப்பாக்கியை எடுத்து பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு வாசலில் அங்கும் இங்கும் நடந்தவாறு பிறரை மிரட்டினான்.
கொலை வெறியுடன் சுற்றிய மாணவனிடமிருந்து தப்பிக்க பல மாணவர்கள் பல்கலைக்கழக் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஜன்னல்களுக்கு கீழே ஒளிந்து கொண்டனர்.

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். அவனை பிடிக்க சிலர் முயலும் முன்பாக வேறு ஒரு சிறு துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

விசாரணையில், மன அழுத்தம் காரணமாக அவன் இவ்வாறு செய்ததாகவும், அவனிடம் 7 துப்பாக்கிகள் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, செக் குடியரசின் 281 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் அவசர அவசரமாக கூடியது.
சம்பவம் நடந்து சுமார் 1 மாதம் கடந்த நிலையில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தத்திற்கு கீழ் சபை முன்மொழிந்துள்ளது. மேல்சபையான "செனட்" ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி கையெழுத்திட்டால் இது சட்டமாகி விடும்.
2026ல் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
"உலகின் அமைதியான நாடுகள்" பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் செக் குடியரசு, 8-வது நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தாமதம் மற்றும் காற்று பற்றாக்குறை ஆகியற்றால் அந்த பயணி இந்த முடிவை எடுக்க காரணம்.
- பெரும்பாலான பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்த நிலையிலும் கைது செய்யப்பட்டார்.
விமானத்தில் பயணம் செய்யும்போது சில பயணிகள் வினோதமாக நடந்த கொள்வது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமான சம்பவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து, விமான இறக்கையில் ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளார் ஒரு பயணி. இறக்கையின் பாதி தூரம் வரை சென்ற அந்த நபர், மீண்டும் விமானத்திற்குள் வந்தார். விமானத்தை சேதப்படுத்தவோ, அசம்பாவிதமான செயல்களிலோ ஈடுபடவில்லை.
ஆனால், விமான போக்குவரத்து பாதுகாப்பு விதிகளின்படி அந்த நபரை விமான ஊழியளர்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.
கவுதமாலாவிற்கு செல்வதற்கான ஏரோமெக்சிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் நான்கு மணி நேரம் காலதாமதம் ஆனதாக தெரிகிறது. இதனால் பயணம் செய்ய இருந்தோர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் காற்று குறைவான இடத்தில் அவர்கள் அமர்த்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை.
இதனால் மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து அவ்வாறு செய்துள்ளார். விமானத்தில் இருந்த 77 பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். என்றபோதிலும் விமான ஊழியர்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
அந்த நபருக்கு ஆதரவான இருந்து பயணிகள் "காலதாமதம், காற்று குறைபாடு பயணிகள் ஆரோக்கியதிற்கு கேடுவிளைவிப்பதாக இருந்தது. அவர் எங்கள் உயிரை காப்பாற்றினார் எனத் தெரிவித்தனர்.






