என் மலர்
உலகம்
- சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட முதலமைச்சர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
- முதலமைச்சருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
ஸ்பெயின்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட அவர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்று உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் கே.பட்நாயக் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
இதை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
- விலைவாசி உயர்வால் தம்பதியினர் குழந்தைகள் பெற்று கொள்வதை தவிர்க்கின்றனர்
- எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $300 பில்லியன் அளவிற்கு கடன் உள்ளது
சீனாவை சேர்ந்த மிக பெரிய கட்டுமான நிறுவனம், எவர்கிராண்டே (Evergrande).
எவர்கிராண்டே, சீனாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் அபார்ட்மென்ட் மற்றும் வணிக வளாகங்களை பெருமளவில் கட்டி விற்பனை செய்து வந்தது.
கடந்த சில வருடங்களாக சீனாவில் விலைவாசி அதிகரிப்பால் பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கான செலவுக்கு போதிய வருமானம் இல்லாமல் தவிப்பதாகவும், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதை தள்ளி போடுவதுடன், தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்ள தயக்கம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகின.
பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக சீனாவில் வீடுகள் விற்பனை பெருமளவு குறைந்து விட்டது. இதன் தாக்கம் எவர்கிராண்டே நிறுவன வருவாயில் எதிரொலித்தது.
கடந்த 2021ல் எவர்கிராண்டே வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $240 பில்லியன் மதிப்பிற்கு சொத்துக்களும், $300 பில்லியன் மதிப்பிற்கு கடனும் உள்ளது.
இந்நிலையில், 2022ல், அந்நிறுவனத்தில் பெருமளவு பணம் முதலீடு செய்திருந்த டாப் ஷைன் குளோபல் எனும் நிறுவனத்தின் மனுவை விசாரித்த ஹாங்காங் நாட்டின் நீதிமன்றம், எவர்கிராண்டே நிறுவனத்தை மூடப்பட்டதாக அறிவித்து அதன் சொத்துக்களை முடக்கி, கடனை ஈடு கட்ட நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.
இதை தொடர்ந்து ஹாங்காங் பங்கு சந்தையில் எவர்கிராண்டே வர்த்தகம் செய்வது நிறுத்தப்பட்டது.
கடன் வழங்கியவர்களுக்கு நிவாரணத்திற்காக ஹாங்காங் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீன நீதிமன்றங்கள் செயல்படுத்த அனுமதிக்குமா என்பது சந்தேகம் என்றும், இத்தீர்ப்பின் தாக்கம் ஏற்கெனவே நலிவடைந்துள்ள சீன பொருளாதாரத்தில் கடுமையாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
- மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஸா பாலோ:
பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ்ரைசுக்கு அந்த விமானம் வந்து கொண்டிருந்தது.
பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரைவில் விழுந்து நொறுங்கியது. புல் மற்றும் மரங்களால் சூழப்பட்ட பகுதியில் அந்த விமானம் விழுந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகி விட்டனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது வரை இறந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. உடைந்த விமானத்தின் பாகங்களும் சேகரிக்கபட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இஸ்தான்புல் நகர சான்டா மரியா தேவாலயம்
- தேவாலயத்திற்கு உள்ளே நுழைந்தவரை 2 பேர் பின் தொடர்ந்தனர்
மேற்கு ஆசியாவிலும், தென்கிழக்கு ஐரோப்பாவிலும் பரந்து விரிந்திருக்கும் நாடு, துருக்கி. இதன் தலைநகரம் அங்காரா (Ankara).
துருக்கியின் இஸ்தான்புல் (Istanbul) நகரில் உள்ளது 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சான்டா மரியா தேவாலயம்.
நேற்று காலை, வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக அங்கு வந்திருந்தவர்கள், மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமூடி அணிந்த 2 பேர் அந்த தேவாலயத்தின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர்.
அப்போது உள்ளே நுழைந்த ஒருவரை அவர்கள் பின் தொடர்ந்தனர்.
இருவரும், திடீரென அவரை நோக்கி சுட்டனர். இதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்தார். சுட்டவர்கள் உடனே அங்கிருந்து தப்பி விட்டனர். தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
உயிரிழந்தவருக்கு 52 வயது என்றும், ஞானஸ்னானம் பெற இருந்தவர் என்றும் அவரது உறவினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்தான்புல் நகர மேயர், எக்ரெம் இமாமொக்லு, "அமைதியான இப்பகுதியில் இது போன்ற தாக்குதல்கள் மிகவும் அரிதானது. நமது நகரத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் மத வழிபாட்டுத் தலங்களில் இத்தகைய தாக்குதல்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என தெரிவித்தார்.
துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், இத்தாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.
பின்னர், துருக்கியின் உள்துறை மந்திரி, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் பிடிபட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் ரஷியர் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- பில்டிங், ஆன்டெனா, ஸ்பான், எர்த் ஆகியவற்றின் சுருக்கமே பேஸ் எனப்படும்
- அதிக பயனர்கள் ரசிப்பதன் மூலம் ஒரு சிலர் வருவாய் ஈட்டுகின்றனர்
வீரசாகச விளையாட்டுக்களில், நிலையாக நிற்கும் உயரமான பொருட்கள் அல்லது கட்டிடங்களில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதித்து சாதனை செய்வது, "பேஸ் ஜம்பிங்" (BASE jumping) எனப்படும்.
பில்டிங், ஆன்டெனா, ஸ்பான் (பாலங்கள்), எர்த் (மலைகள்) ஆகியவற்றின் சுருக்கமே "பேஸ்" எனப்படும்.
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், பேஸ் ஜம்பிங்க் விளையாட்டில் உயிரை பணயம் வைத்து ஈடுபடுவதும், அந்த வீடியோ காட்சிகளை தங்களின் சமூக வலைதள கணக்கில் வெளியிட்டு பயனர்களின் பாராட்டுகளை அதிக அளவில் பெறுவதும் அதிகரித்து வருகிறது.
இது ஒரு சிலருக்கு வருவாய் ஈட்டும் வழியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், தாய்லாந்தின் பட்டயா (Pattaya) கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் 29 தள அபார்ட்மென்டிலிருந்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 33-வயதான நபர் பேஸ் ஜம்பிங் விளையாட்டில் ஈடுபட்டார்.
அந்த கட்டிடத்தின் மேல் மாடிக்கு தனது நண்பர்களுடனும், பாராசூட் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடனும் சென்றார். அவரது சாகசத்தை நண்பர்கள் படம் பிடிக்க உடன் சென்றனர்.
அவர்கள் வீடியோ எடுக்க தொடங்கிய நிலையில், அந்த நபர் பாராசூட்டுடன் கீழே குதித்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கீழே குதித்து தரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அவரது பாராசூட் செயல்படவில்லை. இதனால், அவர் அங்கிருந்த ஒரு மரத்தில் விழுந்து, பின் அதிலிருந்தும் கீழே தரையில் விழுந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட சிலர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

அங்கு திறக்காத நிலையில் ஒரு நீல நிற பாராசூட்டையும், அந்த நபரின் சடலத்தையும் கண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் நேதி ஓடின்சன் என்பதும், அவரின் சமூக வலைதளங்களை ஆராய்ந்ததில் அவர் இது போன்ற பாராசூட் விளையாட்டுக்களில் அனுபவமிக்க நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.
தாய்லாந்து காவல்துறையினர் மேற்கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டு தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
- கொரிய நாடுகளுக்கு கிழக்கே உள்ள கடற்கரை பகுதியில் வடகொரியா கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் கண்காணிப்பு பணி மேற்கொண்டன.
சியோல்:
கொரிய தீபகற்ப நாடுகளான வடகொரியா, தென்கொரியா இடையே மோதல் வலுத்து வருகிறது. இதனால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ராணுவம் மற்றும் உளவு தகவல்கள் பரிமாற்றத்தில் தென்கொரியா முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டு தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
இந்தநிலையில் கொரிய நாடுகளுக்கு கிழக்கே உள்ள கடற்கரை பகுதியில் வடகொரியா கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் கண்காணிப்பு பணி மேற்கொண்டன. அப்போது அவை நிலத்தில் இருந்து வானத்தை தாக்கும் சக்தி கொண்ட நவீன ரக ஏவுகணைகளை சோதித்து பார்த்துள்ளன. வான்நோக்கி சரமாரியாக ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள் இலக்கை வெற்றிகரமாக தகர்த்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவுடன் இணைந்து விசாரிக்க உள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
- 2022ல் எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கி எக்ஸ் என பெயரை மாற்றினார்
- குழந்தைகள் குறித்த வீடியோக்களை ஆஸ்டின் அலுவலகம் கண்காணிக்கும்
பயனர்களின் உரையாடல்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளம், எக்ஸ் (X).
எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ள பயனர்கள் ஒருவருக்கொருவர் உரை, புகைப்படம், வீடியோ, கோப்பு உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் செய்திகளை பிறருடன் பரிமாறி உரையாட முடியும்.
கடந்த 2022ல், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
சில தினங்களுக்கு முன் உலக புகழ் பெற்ற அமெரிக்க பாடகி டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) தோன்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டீப்ஃபேக் (deepfake) வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகியது. எக்ஸ் நிறுவனத்தில் உடனடியாக புகார்கள் அளிக்கப்பட்டும் அவற்றை நீக்கவே பல மணி நேரங்கள் ஆனது.
இதனையடுத்து, செயற்கை நுண்ணறிவு வீடியோக்களால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக இத்தகைய தளங்களை நடத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்நிலையில், எக்ஸ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில ஆஸ்டின் (Austin) நகரில் தளத்தின் உள்ளடக்கத்தில் இது போன்ற வீடியோக்கள் வெளியாகாமல் தடுக்க ஒரு அலுவலகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது.
100 பணியாளர்களுக்கும் மேல் இந்த அலுவலகத்தில் குழந்தைகள் குறித்து இடம் பெறும் தகாத உள்ளடக்கங்களை கண்டறிந்து உடனுக்குடன் நீக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்கள்.
- நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
- ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர்.
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஹெலன்மேரி ஹார்வத். இவர் 2-ம் உலக போரில் பங்கேற்றவர். தனது 21 வயதில் வெர்ஜினியாவில், உலக போர் நடைபெற்ற கால கட்டத்தில் அங்கு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
இந்நிலையில் அவரது 102-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஹெலனுக்கு எதிர்பாராத பரிசளிக்க அவரது மகன் முடிவு செய்தார். அவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது தாயின் பிறந்தநாள் குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததும் அந்த விமான நிறுவனம் உலக போரில் பங்கேற்ற ஹெலன்மேரி ஹார்வத்தின் 102-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது.
அதன்படி ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர். செயின்ட் லூயிசில் அவர் இறங்கியதும் ஹெலனை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் அமெரிக்க கொடிகளை அசைத்து ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்தனர். மேலும் ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
- ஷார்க் டேங்க் தொட்டியில் நீந்தியவாறே சுறா மீன்களை காணலாம்
- தொட்டி நீர் ரத்தமாக மாறியதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்
அமெரிக்காவின் மேரிலேண்டு மாநிலத்தின் உள்ளது பால்டிமோர் (Baltimore).
பால்டிமோரில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவு (Atlantis Paradise Island) பகுதியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஸ்னார்கெலிங் (snorkeling) எனப்படும் நீர் விளையாட்டு பிரபலமானது.
"ப்ளூ அட்வென்சர்ஸ் பை ஸ்டூவர்ட் கோவ்" எனும் நிறுவனம், இத்தீவில் "ஷார்க் டேங்க்" எனும் சுறா மீன் உள்ள மிக பெரிய தொட்டியில் பார்வையாளர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், ஷார்க் டேங்க் தொட்டியில் "ஸ்னார்கெலிங்" செய்தவாறே சுறா மீன்களை காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த விளையாட்டிற்காக தங்கள் 10 வயது மகனுடன் ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். அவர்களும் அந்த தொட்டியில் நீந்தியவாறே சுறா மீன்களை கண்டுகளித்து வந்தனர்.
அச்சிறுவன் சுறா மீன்களை ஆர்வமாக கண்டவாறு மகிழ்ச்சியில் நீந்தி கொண்டிருந்தான்.
அப்போது இரு சுறாக்கள் அவன் அருகே நீந்தி வந்தன. எதிர்பாராதவிதமாக அதில் ஒரு சுறா திடீரென அவன் மீது பாய்ந்து கடித்தது.
அத்தொட்டி நீர் ரத்த போல் மாறியது. உடன் நீந்திய அவனது பெற்றோர் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அச்சிறுவனின் தந்தை உடனடியாக நீந்தி தனது மகனருகே வந்து அவனை மேலே தூக்கி சென்றார்.
பாதுகாவலர்கள் உதவியுடன் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவன் கால் பலமாக சுறாக்களால் கடிக்கப்பட்டது தெரிய வந்தது.
அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமடைந்து வருகிறான்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் முன்பாக ஆபத்துகளை விளக்கும் சில கோப்புகளில் சிறுவனின் பெற்றோர் கையெழுத்திட்டிருந்தனர். எனவே, அவர்கள் அபாயத்தை உணர்ந்து தாங்களாக முன்வந்து இதில் பங்கேற்றதால், நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் அதன் பொறுப்பை துறந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ராயல் பஹாமாஸ் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட்.
- அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகளாவிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH இன் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட் இப்போது உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். எலான் மஸ்க்-யை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
LVMH இன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட். 74 வயதான இவர், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவி அதனை பிரபலமடையவும் செய்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஆடம்பரமான பிராண்டாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகின் முதல் பணக்காரராக திகழ்ந்த அர்னால்ட், கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது. அதன் பிறகு உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் இருந்து வந்தார்.
இந்நிலையில், அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்து, உலகின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- கூகுள், மெட்டா, அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணிநீக்கம் செய்கின்றன
- ப்ளிசார்டு தலைவர் மற்றும் தலைமை டிசைன் அதிகாரியும் வெளியேறுகின்றனர்
உலக பொருளாதாரம், பல்வேறு காரணங்களுக்காக நலிவடைந்து வருவதாக செய்திகள் வெளிவரும் நிலையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் வருவாய் வீழ்ச்சியை சமாளிக்க ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கூகுள், மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்கின்றன.
இப்பட்டியலில் தற்போது ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் "இயங்குதள முறைமை" தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான அமெரிக்காவின் "மைக்ரோசாஃப்ட்", விளையாட்டு மென்பொருள் துறைகளில் ஊழியர்களை குறைக்கிறது.
மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவில் "ஆக்டிவிஷன் ப்ளிசார்டு" (Activision Blizzard) மற்றும் "எக்ஸ்பாக்ஸ்" (Xbox) ஆகியவற்றில் சுமார் 22,000 பேர் பணியாற்றுகின்றனர்.
இப்பிரிவுகளில் 1900 பேர் பணி இழக்கின்றனர்.
ப்ளிசார்டு தலைவர் மைக் பாரா (Mike Ybarra) மற்றும் முதன்மை டிசைன் அதிகாரி ஆலன் அதாம் (Allen Adham) ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர்.
ஆனால், வேலை இழக்கும் பணியாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய இருப்பதாகவும், விளையாட்டுத் துறையில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதுமைகளை கொண்டு வருவதில் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்தது.
சுமார் 1 வருடம் முன்பு 10 ஆயிரம் பணியாளர்களை மைக்ரோசாப்ட் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- ஐகான் ஆஃப் தி ஸீஸ் கப்பலின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர்கள்
- இதன் 6 எஞ்சின்கள் எல்என்ஜி (LNG) எரிபொருளில் செயல்படுகின்றன
நேற்று, புளோரிடா மாநில மியாமி பகுதியில் உள்ள பிஸ்கேன் பே (Biscayne Bay) கடற்கரை பகுதியிலிருந்து உலகின் மிகப் பெரிய சொகுசு கப்பலான "ஐகான் ஆஃப் தெ ஸீஸ்" (Icon of the seas) தனது முதல் பயணத்தை தொடர்ந்தது.
7 நாள் சுற்றுப்பயணத்திற்காக பயணிகளுடன் புறப்பட்ட ராயல் கரிபியன் (Royal Caribbean) எனும் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த சொகுசு கப்பலின் மொத்த நீளம் 1200 அடி ஆகும்.
"இக்கப்பல், உலகின் தலைசிறந்த விடுமுறை கால அனுபவத்தை மக்களுக்கு வழங்க 50 வருடங்களாக நாங்கள் இத்துறையில் பெற்ற அனுபவத்தின் சங்கமம். பல தலைமுறையினருடன் குடும்பங்கள் தங்களின் சுற்றுலா கனவுகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றி கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என ராயல் கரிபியன் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜேசன் லிபர்டி தெரிவித்தார்.
இக்கப்பலின் மதிப்பு, சுமார் $2 பில்லியன் ஆகும்.
குவான்டம் வகை கப்பல்கள் எனப்படும் இத்தகைய உல்லாச கப்பல்களில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் பொருட்களே இதை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஐகான் ஆஃப் தெ ஸீஸ் கப்பலில் 20 தளங்கள் உள்ளன.
இதில் 6 நீர்சறுக்கு விளையாட்டு அரங்கங்கள், 7 நீச்சல் குளங்கள், பனிச்சறுக்கு விளையாட்டு மைதானம், பெரிய திரையரங்கம், 40 உணவகங்கள், பல மதுபான கூடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள், ஓய்வு அறைகள் என அனைத்து விதமான உல்லாச மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக 7,600 பயணிகள் மற்றும் 2350 பணியாளர்கள் தங்க அனைத்து வசதிகளும் உள்ளன.
எல்என்ஜி (LNG) எரிபொருளில் இதன் 6 எஞ்சின்கள் செயல்படுகின்றன.
50க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் மற்றும் நகைச்சுவை கலைக்குழுவினரும், பெரிய ஆர்கெஸ்ட்ரா குழுவும் பயணிகளை மகிழ்விக்க உள்ளனர்.
பின்லாந்து நாட்டின் டுர்கு (Turku) கப்பல் கட்டுமான தளத்தில் 900 நாட்களில் இக்கப்பல் உருவாக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈஃபில் கோபுரத்தின் உயரத்தை விட ஐகான் ஆஃப் தெ ஸீஸ் கப்பலின் உயரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.






