என் மலர்tooltip icon

    உலகம்

    • சூடானில் இரு குழுக்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது.
    • நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்

    ஜுபா:

    வட ஆப்பிரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011-ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.

    அபேய் உரிமை தொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஆப்பிரிக்க யூனியன் பரிந்துரைத்தது. ஆனால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அபேய் தற்போது தெற்கு சூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெற்கு சூடான் தன் படைகளை அபேய்க்கு அனுப்பியதில் இருந்து இரு நாடுகளின் எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, இங்கு ஐ.நா. பாதுகாப்புப் படை இயங்கி வருகிறது. எனினும், இங்கு இனக்கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் சிலர் கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐ.நா.வின் பாதுகாப்புப் படை வீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 54 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • கேட் மிடில்டன்னுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • மார்ச் இறுதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    "இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அவர் அடுத்த 10-இல் இருந்து 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பார். தற்போதைய மருத்துவ அறிவுரைகளின் படி அவர் மார்ச் 31-ம் தேதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்," என சமீபத்தில் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    கேட் மிடில்டன்னுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அதிக பிரபலமானவரும், ராயல் குடும்பத்தில் அதிக புகைப்படம் எடுக்கப்பட்டவருமான கேட் மிடில்டன் சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுவந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    • ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு.
    • வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    சீனாவுக்கு அலுவல் பூர்வ பயணம் மேற்கொள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து, அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    "நாங்கள் பயணத்திற்கு ஏற்ற வகையில், சரியான நேரத்தை தேர்வு செய்கிறோம்," என்று வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி ஹசன் மஹ்மூத் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    பிரதமரின் பீஜிங் சுற்றுப் பயணத்திற்கு ஏற்ற நேரம் ஒதுக்கி, பயணத்திற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னதாக 2019-ம் ஆண்டு அலுவல்பூர்வ பயணமாக சீனா சென்றிருந்தார்.

    • 2023 செப்டம்பர் மாதம் மொகமது முய்சு தேர்தலில் வென்று அதிபரானார்
    • கைகலப்பில் தாக்கப்பட்ட ஒரு எம்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

    மேற்காசியாவில், இந்திய கடல் பகுதியில் உள்ளது, பல தீவுகளை உள்ளடக்கிய நாடான, மாலத்தீவு.

    மாலத்தீவிற்கு முக்கிய வருவாய், இயற்கை அழகு நிறைந்த அதன் தீவுகளை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கிடைத்து வந்தது. சினிமா, கிரிக்கெட், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுலாவிற்கு மாலத்தீவிற்கு செல்வது வழக்கம்.

    மாலத்தீவில் 2023 செப்டம்பர் மாதம் 88 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அந்நாட்டின் தலைநகர் மாலே நகர மேயர் மொகமது முய்சு தேர்தலில் வென்று அதிபரானார்.

    அதிபர் முய்சு சீன-ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்த முய்சுவின் சீன ஆதரவு நிலையினால், இந்திய பிரபலங்கள் அங்கு சுற்றுலா செல்வதற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.

    நேற்று, முய்சு அமைச்சரவையில் மேலும் 4 உறுப்பினர்களை சேர்க்க ஒப்புதல் பெற அந்நாட்டின் பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் மோதல்கள் வெடித்து கைகலப்பும் ஏற்பட்டது.

    இந்த மோதலில் ஒரு உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அங்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

    இதை தொடர்ந்து, முய்சுவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்கட்சிகள் "இம்பீச்மென்ட்" கொண்டு வந்து, பதவி நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான கையொப்பங்களை உறுப்பினர்களிடம் பிரதான எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சேகரித்து விட்டது.

    இந்நிலையில் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலைமையை முய்சு சமாளிப்பாரா அல்லது தானாக பதவி விலகுவாரா என்பது வரும் தினங்களில் தெரிந்து விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மோனா லிசாவின் "மர்ம புன்னகை" தினந்தோறும் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது
    • உணவு முக்கியமா அல்லது ஓவியம் முக்கியமா என அந்த அமைப்பினர் கேட்டனர்

    15-வது நூற்றாண்டில், இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபல ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) வரைந்த உலக புகழ் பெற்ற ஓவியம், மோனா லிசா (Mona Lisa).

    மோனா லிசா ஓவியம், தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின், சியன் (Seine) நதிக்கரையில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


    மோனா லிசா ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் "மர்ம புன்னகை" தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

    அந்த ஓவியம் விஷமிகளால் நாசப்படுத்தப்படுவதை தடுக்க, பிரான்ஸ் அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு தடுப்பும், அதை தாண்டி குண்டு துளைக்க முடியாத ஒரு கண்ணாடியும் வைத்து மறைத்துள்ளது.

    நேற்று காலை சுமார் 10:00 மணியளவில் இரு பெண்கள் பார்வையாளர்களுடன் கலந்து அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைந்தனர்.

    திடீரென அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கோப்பையில் இருந்த ஆரஞ்சு நிற சூப்பை மோனா லிசா ஓவியத்தின் மீது வீசினர்.

    தொடர்ந்து ஓவியத்திற்கு முன் இருந்த தடுப்பை தாண்டி சென்று ஓவியத்தை ரசித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி உரையாற்ற தொடங்கினர்.

    ரிபோஸ்டெ அலிமென்டெய்ர் (Riposte Alimentaire) எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அவர்கள், தங்கள் உரையில்,"எது முக்கியம்? ஒரு ஓவியமா? அல்லது ஆரோக்கியமான உணவு மனிதகுலத்திற்கு தொடர்ந்து உணவு கிடைப்பதா? தவறான விவசாய கொள்கைகளால் விவசாயிகள் பரிதாப நிலையில் இழக்கின்றனர்" என கூறினர்.


    எதிர்பாராத இந்த செயலை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு பணியினர் அந்த இருவரையும் தப்ப விடாமல் பிடித்தனர்.

    அங்கிருந்த பிற சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

    இச்சம்பவத்தால் மோனா லிசா ஓவியத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்தது.

    சம்பவம் நடந்த பகுதி உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு பார்வையாளர்கள் மீண்டும் சிறிது நேரத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த இருவரையும் கைது செய்த பிரான்ஸ் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது.

    இது குறித்து பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சர், ரசிடா டாடி தனது எக்ஸ் கணக்கில், "மோனா லிசா நமது பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்று. எக்காரணம் கொண்டும் அதற்கு தீங்கு விளைவிப்பது ஏற்கப்பட கூடியது அல்ல" என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியர்கள் வீடற்றவர்களுக்கு உணவு மற்றும் போர்வை வழங்கி உதவுகின்றனர்
    • காவல்துறையை அழைக்க போவதாக விவேக், ஜூலியனை எச்சரித்தார்

    அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், ஆண்டு வருமானம் $45,000த்திலிருந்து $75,000 வரை மட்டுமே உள்ளவர்கள் அதிகரித்து வரும் வாடகை பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வருமானம் கூட இல்லாத பலர், வசிப்பிடம் இல்லாமல் சாலையோரங்களிலும், சுரங்கப்பாதைகளிலும் வசிக்கின்றனர்.

    கடும் குளிரில், உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய தேவைகளும் இன்றி அவ்வாறு கூட்டம் கூட்டமாக வசித்து வருவது வருடாவருடம் அங்கு கூடி வருகிறது.

    அமெரிக்காவில் சென்று பணியாற்றும் பல இந்தியர்கள் இவர்களுக்கு உணவு மற்றும் போர்வை உள்ளிட்டவைகளை வழங்கி உதவுகின்றனர்.

    அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள ஜியார்ஜியா மாநில டிகால்ப் கவுன்டி பகுதியின் தென்கிழக்கில் உள்ள நகரம் லிதோனியா (Lithonia). அப்பகுதியில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட் எனும் உணவகத்தில் பகுதி-நேர வேலை பார்த்து வந்தவர், இந்தியரான விவேக் சைனி (25).

    அந்த உணவகத்தில் சில தினங்களுக்கு முன் ஜூலியன் ஃபால்க்னர் (Julian Faulkner) எனும் வீடற்ற ஒருவர் உணவும் குடிநீரும் கேட்டு வந்தார். அவர் மேல் இரக்கப்பட்டு விவேக்கும் உணவக பணியாளர்களும் அவருக்கு உணவு, சிப்ஸ், மற்றும் கோக் வழங்கினர். குளிருக்கு போர்வை கேட்ட ஜூலியனுக்கு அவர்கள் தங்களிடம் இருந்த உடைகளை வழங்கினர்.

    அடிக்கடி அங்கு வருவதும் போவதுமாக இருந்த ஜூலியனுக்கு விவேக் தன்னால் இயன்ற உதவிகளை தினமும் செய்து வந்தார்.

    உணவக வாசலை வசிப்பிடம் போல் ஜூலியன் பயன்படுத்தி உறங்க தொடங்கியதும் அவரை விவேக் வேறு எங்காவது சென்று விடுமாறு கூறினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடை வாசலில் இருந்து வெளியேறா விட்டால் காவல்துறையினரை அழைக்க வேண்டி வரும் என விவேக் ஜூலியனிடம் எச்சரித்தார்.

    சிறிது நேரத்தில் விவேக் வீட்டிற்கு புறப்பட தயாராகி வெளியே வந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரை மறித்த ஜூலியன், கையில் மறைத்து வைத்திருந்த ஒரு சுத்தியலால் விவேக்கின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். விவேக் முகத்தில் ஜூலியன் சுமார் 50 முறை சுத்தியலால் தாக்கினார்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த விவேக், சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தார்.

    சம்பவத்தை கண்ட பிற பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு நின்று கொண்டிருந்த ஜூலியனை கைது செய்து அவரிடம் சுத்தியலை தவிர இருந்த மேலும் 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

    ஜூலியனை சிறையில் அடைத்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பி.டெக் பட்டப்படிப்பை முடித்து 2 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபுகுந்த விவேக், சில மாதங்களுக்கு முன் வணிக நிர்வாகத்தில் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.
    • தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.

    இந்த நிலையில் ஜோர்டானில் நடந்த டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிரியா எல்லைக்கு அருகில் வட கிழக்கு ஜோர்டானில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த படைகளை குறி வைத்து அதிரடி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அமெரிக்க படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜோர்டானில் அமெரிக்க தளங்களின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்களை இழந்து இருக்கிறோம். இந்த தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது. இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் தீவிர ஈரான் ஆதரவு போராளி குழுக்களால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இதற்குதக்க பதிலடி கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட முதலமைச்சர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
    • முதலமைச்சருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

    ஸ்பெயின்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட அவர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.

    அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்று உள்ளனர். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் கே.பட்நாயக் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    இதை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.

    • விலைவாசி உயர்வால் தம்பதியினர் குழந்தைகள் பெற்று கொள்வதை தவிர்க்கின்றனர்
    • எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $300 பில்லியன் அளவிற்கு கடன் உள்ளது

    சீனாவை சேர்ந்த மிக பெரிய கட்டுமான நிறுவனம், எவர்கிராண்டே (Evergrande).

    எவர்கிராண்டே, சீனாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் அபார்ட்மென்ட் மற்றும் வணிக வளாகங்களை பெருமளவில் கட்டி விற்பனை செய்து வந்தது.

    கடந்த சில வருடங்களாக சீனாவில் விலைவாசி அதிகரிப்பால் பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கான செலவுக்கு போதிய வருமானம் இல்லாமல் தவிப்பதாகவும், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதை தள்ளி போடுவதுடன், தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்ள தயக்கம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகின.

    பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக சீனாவில் வீடுகள் விற்பனை பெருமளவு குறைந்து விட்டது. இதன் தாக்கம் எவர்கிராண்டே நிறுவன வருவாயில் எதிரொலித்தது.

    கடந்த 2021ல் எவர்கிராண்டே வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    எவர்கிராண்டே நிறுவனத்திற்கு $240 பில்லியன் மதிப்பிற்கு சொத்துக்களும், $300 பில்லியன் மதிப்பிற்கு கடனும் உள்ளது.

    இந்நிலையில், 2022ல், அந்நிறுவனத்தில் பெருமளவு பணம் முதலீடு செய்திருந்த டாப் ஷைன் குளோபல் எனும் நிறுவனத்தின் மனுவை விசாரித்த ஹாங்காங் நாட்டின் நீதிமன்றம், எவர்கிராண்டே நிறுவனத்தை மூடப்பட்டதாக அறிவித்து அதன் சொத்துக்களை முடக்கி, கடனை ஈடு கட்ட நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பளித்துள்ளது.

    இதை தொடர்ந்து ஹாங்காங் பங்கு சந்தையில் எவர்கிராண்டே வர்த்தகம் செய்வது நிறுத்தப்பட்டது.

    கடன் வழங்கியவர்களுக்கு நிவாரணத்திற்காக ஹாங்காங் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீன நீதிமன்றங்கள் செயல்படுத்த அனுமதிக்குமா என்பது சந்தேகம் என்றும், இத்தீர்ப்பின் தாக்கம் ஏற்கெனவே நலிவடைந்துள்ள சீன பொருளாதாரத்தில் கடுமையாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
    • மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    ஸா பாலோ:

    பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ்ரைசுக்கு அந்த விமானம் வந்து கொண்டிருந்தது.

    பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரைவில் விழுந்து நொறுங்கியது. புல் மற்றும் மரங்களால் சூழப்பட்ட பகுதியில் அந்த விமானம் விழுந்தது.

    இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகி விட்டனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது வரை இறந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. உடைந்த விமானத்தின் பாகங்களும் சேகரிக்கபட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இஸ்தான்புல் நகர சான்டா மரியா தேவாலயம்
    • தேவாலயத்திற்கு உள்ளே நுழைந்தவரை 2 பேர் பின் தொடர்ந்தனர்

    மேற்கு ஆசியாவிலும், தென்கிழக்கு ஐரோப்பாவிலும் பரந்து விரிந்திருக்கும் நாடு, துருக்கி. இதன் தலைநகரம் அங்காரா (Ankara).

    துருக்கியின் இஸ்தான்புல் (Istanbul) நகரில் உள்ளது 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சான்டா மரியா தேவாலயம்.

    நேற்று காலை, வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக அங்கு வந்திருந்தவர்கள், மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

    பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமூடி அணிந்த 2 பேர் அந்த தேவாலயத்தின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர்.

    அப்போது உள்ளே நுழைந்த ஒருவரை அவர்கள் பின் தொடர்ந்தனர்.

    இருவரும், திடீரென அவரை நோக்கி சுட்டனர். இதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்தார். சுட்டவர்கள் உடனே அங்கிருந்து தப்பி விட்டனர். தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து விசாரணையை தொடங்கினர்.

    உயிரிழந்தவருக்கு 52 வயது என்றும், ஞானஸ்னானம் பெற இருந்தவர் என்றும் அவரது உறவினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இஸ்தான்புல் நகர மேயர், எக்ரெம் இமாமொக்லு, "அமைதியான இப்பகுதியில் இது போன்ற தாக்குதல்கள் மிகவும் அரிதானது. நமது நகரத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் மத வழிபாட்டுத் தலங்களில் இத்தகைய தாக்குதல்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என தெரிவித்தார்.

    துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், இத்தாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.

    பின்னர், துருக்கியின் உள்துறை மந்திரி, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் பிடிபட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் ரஷியர் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • பில்டிங், ஆன்டெனா, ஸ்பான், எர்த் ஆகியவற்றின் சுருக்கமே பேஸ் எனப்படும்
    • அதிக பயனர்கள் ரசிப்பதன் மூலம் ஒரு சிலர் வருவாய் ஈட்டுகின்றனர்

    வீரசாகச விளையாட்டுக்களில், நிலையாக நிற்கும் உயரமான பொருட்கள் அல்லது கட்டிடங்களில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதித்து சாதனை செய்வது, "பேஸ் ஜம்பிங்" (BASE jumping) எனப்படும்.

    பில்டிங், ஆன்டெனா, ஸ்பான் (பாலங்கள்), எர்த் (மலைகள்) ஆகியவற்றின் சுருக்கமே "பேஸ்" எனப்படும்.

    சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், பேஸ் ஜம்பிங்க் விளையாட்டில் உயிரை பணயம் வைத்து ஈடுபடுவதும், அந்த வீடியோ காட்சிகளை தங்களின் சமூக வலைதள கணக்கில் வெளியிட்டு பயனர்களின் பாராட்டுகளை அதிக அளவில் பெறுவதும் அதிகரித்து வருகிறது.

    இது ஒரு சிலருக்கு வருவாய் ஈட்டும் வழியாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில், தாய்லாந்தின் பட்டயா (Pattaya) கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் 29 தள அபார்ட்மென்டிலிருந்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 33-வயதான நபர் பேஸ் ஜம்பிங் விளையாட்டில் ஈடுபட்டார்.

    அந்த கட்டிடத்தின் மேல் மாடிக்கு தனது நண்பர்களுடனும், பாராசூட் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடனும் சென்றார். அவரது சாகசத்தை நண்பர்கள் படம் பிடிக்க உடன் சென்றனர்.

    அவர்கள் வீடியோ எடுக்க தொடங்கிய நிலையில், அந்த நபர் பாராசூட்டுடன் கீழே குதித்தார்.

    ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கீழே குதித்து தரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அவரது பாராசூட் செயல்படவில்லை. இதனால், அவர் அங்கிருந்த ஒரு மரத்தில் விழுந்து, பின் அதிலிருந்தும் கீழே தரையில் விழுந்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தை நேரில் கண்ட சிலர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.


    அங்கு திறக்காத நிலையில் ஒரு நீல நிற பாராசூட்டையும், அந்த நபரின் சடலத்தையும் கண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் நேதி ஓடின்சன் என்பதும், அவரின் சமூக வலைதளங்களை ஆராய்ந்ததில் அவர் இது போன்ற பாராசூட் விளையாட்டுக்களில் அனுபவமிக்க நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    தாய்லாந்து காவல்துறையினர் மேற்கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×