என் மலர்
உலகம்
- 7-வயது ப்ரைசன் டுவாங், ஆசிய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த சிறுவன்
- காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பித்த போது ப்ராண்டனின் வாகனம் விபத்துக்குள்ளானது
அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியில் உள்ள மாநிலம் அயோவா (Iowa). இதன் தலைநகரம் டெஸ் மாயின்ஸ் (Des Moines).
அயோவாவின் க்ரீன் கவுன்டி பிராந்தியத்தில் உள்ள நகரம் ஜெஃபெர்சன். இங்குள்ள க்ரீன் கவுன்டி ஆரம்ப பள்ளியில் படித்து வந்தவர், ஆசிய வம்சாவளி சிறுவனான, 7 வயது ப்ரைசன் டுவாங் (Bryson Duong).
நேற்று மதியம், ப்ரைசனின் தந்தை ப்ராண்டன் டுவாங் (34), சுமார் 12:40 மணியளவில், பள்ளிக்கு வந்து அங்கு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ப்ரைசன் டுவாங்கை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறினார். அவர்கள் மறுக்கவே, வாக்குவாதம் செய்து ப்ராண்டன் மகனை அழைத்து சென்றார். அவர்கள் இருவரும் டொயோட்டா டகோமா காரில் சென்றனர்.
இதையடுத்து காவல்துறையினருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இருவரும் வீடு திரும்பவில்லை.
இதை தொடர்ந்து "ஆம்பர் அலர்ட்" எனும் எச்சரிக்கை வெளியிட்ட காவல்துறையினர், காணாமல் போன இருவரை குறித்தும் பொதுவெளியில் விவரங்களை வெளியிட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையினருக்கு உடனே தெரிவிக்குமாறு கோரினர்.
நீண்ட தேடுதலுக்கு பிறகு அவர்கள் சென்ற வாகனத்தை கண்ட காவல்துறையினர், அதனை நிறுத்த முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்று வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய ப்ராண்டன், சிறுவனை தூக்கி கொண்டு கையில் ஒரு துப்பாக்கியுடன் ஓடினார்.
ப்ராண்டனுடன் பேச்சுவார்த்த நடத்திய காவல்துறையினர், சிறுவனை மீட்டு, ப்ராண்டனை கைது செய்தனர்.
அவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் துவங்க உகந்த சூழல் நிலவுவதாகவும், தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெய்ன் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன்.
— M.K.Stalin (@mkstalin) January 30, 2024
எனது #UAE, ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய #GIM2024… pic.twitter.com/LgUBqCXwGp
இந்த நிலையில் இன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவருக்கு அதிகாரிகள் தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
- போரில் இதுவரை 26,751 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்தது
- நிரந்தர போர்நிறுத்தத்தை இஸ்ரேல் புறக்கணித்ததாக ஹனியே கூறினார்
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் தொடங்கிய போர் தீவிரமாக 115 நாட்களை கடந்து தொடர்கிறது.
இஸ்ரேல் ராணுவ படையினர் ஹமாஸ் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகின்றனர்.
இன்று வரை 26,751 பேர் உயிரிழந்ததாகவும், 65,636 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது. உயிரிழந்தவர்களில் பலர் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ராணுவம் கூறியது.
போர் இடைநிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் கோரிக்கை வைத்தும் இஸ்ரேல் அவற்றை புறக்கணித்து விட்டது.
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேலி பணய கைதிகளை பாதுகாப்பாக மீட்டு, ஹமாஸ் அமைப்பினரயும் சரணடைய செய்யும் வரை போர் நிறுத்தம் குறித்த பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
ஹமாஸ் அமைப்பினரின் வசம் 136 பணய கைதிகள் இன்னும் உள்ளதாக கூறும் இஸ்ரேல், காசா முழுவதும் அவர்களை தேடி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒர் இடைக்கால போர்நிறுத்த திட்டத்தை முன்வைத்துள்ளது.
இதனை செயல்படுத்த பேச்சு வார்த்தைக்கு வருமாறு அந்நாடுகளின் தலைவர்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு அழைப்பு விடுத்தனர்.
இது குறித்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) தெரிவித்ததாவது:
அமைதிக்காக இஸ்ரேல் முன்மொழிந்துள்ள ஒரு திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். செயல்படுத்த கூடிய எந்த திட்டத்திற்கும் நாங்கள் தயார்.
இஸ்ரேல் வழங்கியுள்ள இத்திட்டத்தின்படி 6-வார போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதிக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினரும், ஹமாஸ் கைதிகளை இஸ்ரேலும், பரஸ்பரம் விடுவிக்க வேண்டும்.
நிரந்தர போர்நிறுத்தத்திற்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம்; ஆனால், அதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.
இவ்வாறு ஹனியே கூறினார்.
கடந்த 2023 நவம்பர் இறுதியில் ஒரு-வார கால போர் நிறுத்தத்தில் சுமார் 105 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்ததும், இஸ்ரேலிய சிறைகளில் இருந்த 240 பயங்கரவாத குற்றவாளிகளை இஸ்ரேல் விடுவித்ததும் குறிப்பிடத்தக்கது.
- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி.
- தேசத்திற்கே பெரிய இழப்பாக மாறிவிடும்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாலத்தீவு நாட்டின் ஜூம்ஹூரீ கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிபர் முகமது முய்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், குவாசிம் இப்ராஹிம் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவொரு நாடாகவும் இருக்கட்டும், குறிப்பாக அண்டை நாடு பற்றியும், உறவில் விரிசல் ஏற்படும் வகையிலும் நாம் பேசக்கூடாது. நம் நாட்டிற்கென கடமை உள்ளது, அதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த கடமையை கருத்தில் கொண்டுதான் ஜனாதிபதி சொலிஹ் இந்தியா அவுட் பிரசாராத்திற்கு தடை விதித்தார்."
"இந்த தடை உத்தரவை அதிபர் முய்சு ஏன் ரத்து செய்யவில்லை என முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கேள்வியெழுப்பியுள்ளார். ஜனாதிபதி உத்தரவை ரத்து செய்யக் கூடாது, இது தேசத்திற்கே பெரிய இழப்பாக மாறிவிடும். இப்படி நடக்கக்கூடாது. இப்படி செய்யாதீர்கள் என முய்சுவிடம் நான் கூறுவேன். மேலும், சீனா பயணத்திற்கு கூறிய கருத்துக்களுக்கு, முகமது முய்சு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- மருததுவ பணியாளர்கள் போல் இஸ்ரேல் ராணுவம் வேடமிட்டு நுழைந்தது
- கொல்லப்பட்ட 3 பேரும் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் தெரிவித்தது
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதியெடுத்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீன காசா பகுதியில் அவர்கள் மறைந்திருக்கும் பகுதிகளை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரத்தில் உள்ளது, இப்ன் சினா (Ibn Sina) மருத்துவமனையில் பொது மக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போல் உடையணிந்த இஸ்ரேலிய ராணுவ படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ படையை சேர்ந்த கமாண்டோ வீரர்கள், நர்சுகள், ஹிஜாப் அணிந்த பெண்கள் மற்றும் நோயாளிகள் போல் வேடமணிந்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் தங்கள் ஆடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்.
மருத்துவமனையின் 3-ஆம் தளத்திற்கு நேரடியாக விரைந்து சென்ற அவர்கள், அங்கு 3 சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீனியர்களை சுட்டு கொன்றனர்.
அந்த 3 பேரும் பாலஸ்தீன ராணுவத்தின் "ஜெனின் ப்ரிகேட்ஸ்" (Jenin Brigades) எனும் பிரிவை சேர்ந்தவர்கள் என ஹமாஸ் கூறியது.
ஆனால், கொல்லப்பட்ட 3 பேரும் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்றும் அவர்களில் மொஹம்மெட் ஜலாம்னெஹ் எனும் முக்கிய பயங்கரவாதிக்கு குறி வைத்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கையை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் பாராட்டினார்.
இந்த அமைப்புடன் தொடர்பில்லாத இரு சகோதரர்களும் இந்த கமாண்டோ நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் ராணுவ படையான அல் கசாம் ப்ரிகேட்ஸ் (Al Qassam Brigades) உயிரிழந்த மூவரும் வீர மரணம் அடைந்துள்ள உறுப்பினர்கள் என தெரிவித்தது.
இச்சம்பவத்தை தொடர்ந்து பாலஸ்தீன சுகாதார துறை ஐ.நா.வின் பொதுச்சபை மற்றும் தன்னார்வல அமைப்பினர் அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
- ஒவ்வொரு ஊழியராலும் நிறுவனம் பெறும் வருவாய் குறைந்து விட்டது
- நிர்வாக ரீதியான தவறான முடிவுகளை லே-ஆஃப் மறைக்கிறது என்றார் பேராசிரியர் ஜெஃப்
2024 வருட ஜனவரியில் அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 25,000 ஊழியர்களை "லே ஆஃப்" எனப்படும் கூட்டு பணிநீக்கம் செய்தன.
புது வருட தொடக்கத்திலேயே இதன் அளவு பரவலாக அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அதிகப்படியான எண்ணிக்கையில் பல நிறுவனங்கள் பணியமர்த்தின. தற்போது உலக பொருளாதாரம் நலிவடைந்து வருவதால் அதிகமாக உள்ள ஊழியர்களை நிறுவனங்கள் வெளியேற்றுகின்றன.
சில வருடங்களாகவே, "ரெவன்யூ பர் எம்ப்ளாயி" (RpE) எனப்படும் ஒவ்வொரு ஊழியராலும் நிறுவனம் பெறும் வருவாய் குறைந்து வருகிறது. அதிக ஊழியர்களால் செலவினங்கள் அதிகரிப்பதை குறைக்க நிறுவனங்கள் பணிநீக்கத்தை ஒரு வழிமுறையாக கடைபிடிக்கின்றன.
இந்நிறுவனங்கள் அனைத்தும் பங்கு சந்தையில் பதிவு பெற்றவை. கடினமான பொருளாதார சூழ்நிலையிலும் வருவாய் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முதலீட்டாளர்களுக்கு காட்ட வேண்டிய கட்டாயம் இந்நிறுவனங்களுக்கு உள்ளது. எனவே ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதன் மூலம் தங்கள் பங்குகள் கணிசமாக ஏற அவை வழிவகுக்கின்றன.
ஒரே துறையில் உள்ள பல நிறுவனங்கள் ஒரே காலகட்டத்தில் லே-ஆஃப் செய்வதால், துறை சார்ந்த சிக்கல் இருப்பதாக கருதி, முதலீட்டாளர்கள், நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை பொருட்படுத்த மாட்டார்கள் என வாஷிங்டன் வணிக மேலாண்மை துறை பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப் ஷுல்மேன் தெரிவித்தார்.
தொழில்நுட்ப துறையில் துவங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி வழங்கி வந்த முதலீட்டாளர்கள் குறைந்து வருகின்றனர். எனவே, அவையும் பணிநீக்கத்தில் ஈடுபடுகின்றன.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை பெரும் வளர்ச்சி பெறும் என நம்பி, 1 வருடத்திற்கும் மேலாக இந்நிறுவனங்கள் பிற துறைகளில் முதலீடுகளை குறைத்து ஏஐ துறையில் முதலீடுகளை அதிகரித்து வருவதும் ஒரு காரணம்.
உலக பொருளாதார மந்தநிலை நீடித்தால், இந்த சிக்கல் மேலும் தீவிரமடையலாம் என பொருளாதார வல்லுனர்களும், மனிதவள நிபுணர்களும் எச்சரிப்பதால் மென்பொருள் துறை ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
- தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக ஒரு பேரணியில் இம்ரான் கூறினார்
- ராவல்பிண்டி நகரில் ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது
2018 ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பிரதமராக பதவி ஏற்றார்.
2022 மார்ச் 27 அன்று ஒரு பேரணியில் தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பியதாகவும், அது வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வந்ததாகவும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து, அந்த சதி தொடர்பான கடிதம் தன்னிடம் உள்ளதாக கூட்டத்தினரை பார்த்து ஒரு கடிதத்தையும் காட்டினார்.
ஆனால், பாகிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்தன.
2022 ஏப்ரல் 10 அன்று கூட்டணி கட்சிகள் இம்ரான் கான் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக அவர் பதவி இழந்தார்.
அந்த ரகசிய செய்தி குறிப்பு "சைஃபர்" என அழைக்கப்படுகிறது.
ஒரு முன்னாள் பிரதமராக இருந்தும் அதனை பொதுவெளியில் அம்பலப்படுத்த முயன்றதால், அரசாங்க ரகசியத்தை காக்க தவறியதாக அவர் மீது புகார் எழுந்தது.
மேலும், அரசாங்க ரகசியத்தை காக்க தவறிய குற்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
"சைபர் வழக்கு" (cipher case) என பெயரிடப்பட்ட இதனை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆனால், தொடர்ந்து ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், அடியாலா சிறைச்சாலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், நீதிபதி அபுல் ஹஸ்னத் ஜுல்கர்னைன், இம்ரான் கானும், அவரது கட்சியின் துணைத்தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி என்பவரும் குற்றவாளிகள்தான் என தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு 10 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.
இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
ஆனாலும், பிப்ரவரி 8 அன்று அந்நாட்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவது சந்தேகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ராணுவ உதவி செய்து வருகிறது
- ஆயுத விற்பனை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சம்
கடந்த 2023ல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள ராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.
2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அளவிற்கு அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையை தவிர, அமெரிக்க அரசே நேரடியாக விற்பனை செய்த $81 பில்லியன் வணிகமும் இதில் அடங்கும்.
இப்பட்டியலில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகியவை அமெரிக்காவிற்கு சாதகமான ஆயுத விற்பனை வர்த்தகத்திற்கு உதவும் நாடுகள் ஆகும்.
இது குறித்து அமெரிக்க அரசு, "பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்" என தெரிவித்தது.
ஆயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷியாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திய பல உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்க தொடங்கி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.
அமெரிக்க அரசிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், அமெரிக்காவின் தனியார் ராணுவ தளவாட விற்பனை நிறுவனங்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி பெற்று கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் வாங்கலாம்.
ஆனால், இரண்டு வழிமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் முன்அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 30 லட்சம் அயல்நாட்டினர் ஜப்பானில் வசிக்கின்றனர்
- எங்களை ஜப்பானியராக பார்க்காமல் குற்றவாளிகளாக நடத்துகின்றனர் என்றார் சையத்
சமீப சில ஆண்டுகளாக அயல்நாடுகளிலிருந்து பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ஜப்பானிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஜப்பானில் வசிக்கும் ஜப்பானியர் அல்லாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சம் எனும் அளவை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் காவல்துறை, அங்கு வாழும் அயல்நாட்டினரை, இனத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டி நடத்துவதாக அந்நாட்டில் வாழும் சிலர், சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அயல்நாட்டினரில் ஒரு சிலரிடம் இனப்பாகுபாடு காட்டுவதாகவும், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி இந்திய வம்சாவளியை சேர்ந்த மேத்யு (Matthew), ஆப்பிரிக்க-அமெரிக்கரான மாரிஸ் (Maurice) மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சையத் ஜைன் (Syed Zain) எனும் 3 பேர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
26 வயதான சையத், "நான் ஒரு ஜப்பானிய குடிமகன். ஆனால், காவல்துறையினர் என்னை பலமுறை தடுத்து நிறுத்தி எனது இன விவரக்குறிப்பை கேட்கின்றனர். எனது வீட்டின் முன் தேவையற்ற முறையில் என்னை சோதனை செய்தனர். எங்களை ஒரு ஜப்பானியராக காவல்துறையினர் அடையாளம் காண்பதில்லை; ஒரு குற்றவாளியை போல் நடத்துகிறார்கள்" என குற்றம் சாட்டினார்.
இரண்டு தசாப்தங்களாக ஜப்பானில் வசித்து வரும் சையத், ஜப்பானிய பள்ளிகளில் பயின்று, அந்த மொழியில் சரளமாக பேசக்கூடியவர்.
வழக்கு தொடர்ந்துள்ள மூவரும் சுமார் ரூ.16.5 லட்சம் ($20,000) நஷ்ட ஈடு கோரியுள்ளனர்.
இது போன்ற வழக்கு ஜப்பானில் தாக்கல் செய்யப்படுவது இப்போதுதான் முதல் முறை என மூவரின் வழக்கறிஞர் மொடோகி டானிகுசி தெரிவித்தார்.
- பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் திடீரென்று மாயமானார். இதுகுறித்து நீல் ஆச்சாரியாவின் தாய் கவுரி ஆச்சார்யா, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, எனது மகன் நீல் ஆச்சார்யா மாயமாகி உள்ளார்.
அவரை கடைசியாக பல்கலைக்கழகத்தில் காரில் இருந்து இறக்கி விட்ட உபெர் டிரைவர் பார்த்துள்ளார். எனது மகனை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து நீல் ஆச்சார்யாவை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.
இந்த நிலையில் மாயமான மாணவர் நீல் ஆச்சார்யா உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனித மூளையிடும் கட்டளைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது நியூராலிங்க்
- மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் தென்படுவதாக நியூராலிங்க் தெரிவித்தது
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீசுவரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவியது, நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனம்.
மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது நியூராலிங்க்.
கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதரின் மூளையில் "சிப் பொருத்துதல்" வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
மேற்கொண்டு எந்த தகவலையும் நியூராலிங்க் வழங்கவில்லை.
நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகள் அசைவற்று போய் விடும். அந்நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் மூளை, உடல் உறுப்புகளுக்கு எண்ணங்கள் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பும் பரிமாற்றமும் நின்று விடும்.
அத்தகைய குறைபாடு உள்ளவர்களின் மூளையில் மின்னணு சிப் பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயல்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- சூடானில் இரு குழுக்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது.
- நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்
ஜுபா:
வட ஆப்பிரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011-ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.
அபேய் உரிமை தொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஆப்பிரிக்க யூனியன் பரிந்துரைத்தது. ஆனால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அபேய் தற்போது தெற்கு சூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெற்கு சூடான் தன் படைகளை அபேய்க்கு அனுப்பியதில் இருந்து இரு நாடுகளின் எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, இங்கு ஐ.நா. பாதுகாப்புப் படை இயங்கி வருகிறது. எனினும், இங்கு இனக்கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் சிலர் கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐ.நா.வின் பாதுகாப்புப் படை வீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 54 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.






