என் மலர்
உலகம்
- விமானங்கள் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை ஆகும்.
- விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் உரசி கொண்ட விமானம் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.
ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமான இரு விமானங்கள் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளன. இந்த சம்பவம் காரணமாக இரு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டன. எனினும், இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு துவக்கம் முதலே ஜப்பானில் விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சிறிய ரக விமானம் ஒன்று ஜனவரி 2-ம் தேதி விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது.
- செனட்டர் ஜோஷ் ஹாவ்லி, ஜுக்கர்பெர்கிடம் "மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்
- டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் நிறுவனங்களும் விசாரணை வளையத்தில் உள்ளன
உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க் (39).
நேற்று, சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமான வீடியோக்கள் குறித்து அந்நிறுவனங்களின் மீது பலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் மீது அமெரிக்க செனட் விசாரணை நடத்தியது.
இதில் ஜுக்கர்பெர்க் நேரில் பங்கேற்று தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
விசாரணை தொடங்கியதும் ஊடகங்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்த வீடியோவை விசாரணைக்குழு ஒளிபரப்பியது. இதில் பல உயிரிழப்பு சம்பவங்கள் குறித்தும் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley), ஜுக்கர்பெர்கை நோக்கி, "உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்.
அப்போது, ஜுக்கர்பெர்க் எழுந்து நின்று கொண்டு அக்குடும்பத்தினரை நோக்கி பேசினார்.
அவர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வர கூடாது. என்னை மன்னியுங்கள்.
இவ்வாறு ஜுக்கர்பெர்க் கூறினார்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும் வகையில் ஒரு சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக அமெரிக்க அரசு முயன்று வருகிறது.
இது குறித்து பல வலைதளங்களின் நிறுவனர்கள் செனட் சபைக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விவாதம் நடத்தி கருத்துகள் கேட்கப்படுகின்றன.

மெட்டா அதிபர் மட்டுமின்றி, டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் செனட் சபை விசாரணையில் பங்கேற்றனர்.
அவர்கள் செனட்டின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டனர்.
- மலேசியாவில் 9 அரச குடும்பங்கள் உள்ளன.
- புதிய மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தருக்கு மலேசியாவை தவிர பிற இடங்களிலும் சொத்துக்கள் அதிகமாக உள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, கடந்த 1957-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.ஆனாலும் மலேசியாவில் இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது.
முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார்.
நீதிமன்றங்கள், காவல் துறை, சட்டத்துறை ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது.
மலேசியாவில் 9 அரச குடும்பங்கள் உள்ளன.இவர்களில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்நிலையில் முன்னாள் மன்னரான பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத்ஷாவின் பதவிக்காலம் நேற்று நிறைவு பெற்றதையடுத்து நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரது பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
புதிய மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தருக்கு மலேசியாவை தவிர பிற இடங்களிலும் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. இவரிடம் 300 கார்கள் மற்றும் ஜெட் விமானங்கள் உள்ளன. இதில் ஒரு கார் ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் பரிசளித்தது. தனியாக ராணுவம் வைத்துள்ளார்.இவரது குடும்பமும் சிங்கப்பூரில் நிலம் மற்றும் பாமாயில், ரியல் எஸ்டேட் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.47 ஆயிரம் கோடி ஆகும்.
மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர் கூறும்போது, நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன். ஆனால் அவர்கள் தவறாக ஏதாவது செய்கிறார்கள் என்று நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன் என்றார்.
- இரண்டு ஆண்டுகளை தொட இருக்கும் நிலையிலும் ரஷியா- உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது.
- கடந்த வாரம் போர்க்கைதிகளுடன் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இன்று பரிமாற்றம் நடந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. என்றபோதிலும் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை.
போர் நிறுத்தம் என்பது ரஷியாவுக்கு சாதகமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் ரஷியாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா குற்றம்சாட்டியது. விமானத்தில் 77 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
அதில் ஆறு விமான ஊழியர்கள் மற்றும் மூன்று ரஷிய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் 195 போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றம் நடைபெற இருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
- ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு.
- ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தடுத்து முறியடிக்கப்படும். பதிலடி கொடுக்கப்படாது.
மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள செங்கடல் உலக வணிக பயணத்திற்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. சர்வதேச கடல் போக்குவரத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து செங்கடலில் ரோந்து போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதிலும் கடந்த வாரம் ஏடன் வளைகுடாவில் அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்க முயன்றனர். இங்கிலாந்து கப்பல் மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இணைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக உலகளாவிய அளவில் பொருட்களின் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.
பிப்ரவரி 17-ந்தேதிக்குள் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உளள ஏழு நாடகள் கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்க தயாராக உள்ளன. பெல்ஜியம் ஏற்கனவே போர்க்கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜெர்மனியும் போர்க்கப்பல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
- கலிபோர்னியாவில் 1998ல் தொடங்கப்பட்ட பேபால், பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்தது
- நிறுவனத்தை அதன் சரியான அளவில் நிலைநிறுத்துகிறோம் என்றார் க்ரிஸ்
இணையதள வழியாக பண பரிமாற்றங்களை அனுமதிக்கும் நாடுகளில், பயனர்களுக்கு பண பரிமாற்ற செயலி மூலம் சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனம், பேபால் (PayPal).
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1998ல் தொடங்கப்பட்ட பேபால், ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.
இந்தியாவிலும் பேபால் நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரூ மற்றும் ஐதராபாத் நகரில் கிளைகள் உள்ளன.
பேபாலின் தலைமை செயல் அதிகாரி (CEO) அலெக்ஸ் க்ரிஸ் (Alex Chriss) ஊழியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இன்று மிக சங்கடமான ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.
உலகளாவிய நமது ஊழியர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் குறைக்கப்பட உள்ளது.
சில ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியும், சில காலியிடங்களை நீக்கியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
நமது வர்த்தகத்தை சரியான அளவில் சரியான வேகத்தில் கொண்டு சென்று பயனர்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை அளித்து வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதே நேரத்தில் நமது வணிகத்தில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இடங்களில் முதலீடு செய்வதை தொடர்வோம்.
எந்தெந்த ஊழியர்களின் பெயர் இப்பட்டியலில் உள்ளதோ அவர்களுக்கு இன்றிலிருந்து இவ்வார இறுதிக்குள் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.
வெளியேறும் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம்.
இவ்வாறு அலெக்ஸ் கூறினார்.
பேபாலில் சுமார் 29,900 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, 2500 பணியாளர்கள் பணியிழக்க போவதாக தெரிகிறது.
- ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்ப்பு.
- ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன.
இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும் இணைந்து உள்ளது.
ஜெர்மனி நாட்டில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

நாளை 1ம் தேதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி நாடு எதிர்பார்க்கிறது.
தொழிற்சங்கங்கள் 4 நாள் வேலையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன. இந்தநிலையில் சோதனை நடைமுறையாக நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.
இது நல்ல பலன்களை தரும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வாரத்தில் 4 நாள் வேலை செய்வது ஒருநிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் நடைமுறைபடுத்தப்படுகிறது.

உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெல்ஜியத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் 40 மணி நேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியில் நாளை 1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது.
- 2022 அக்டோபரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானார்
- குடிநீர், தேநீர் மற்றும் கலோரி-இல்லா பானங்களை மட்டும் அருந்துகிறார் சுனக்
உணவில் கவனம் செலுத்தாமல் வாரம் முழுவதும் உழைத்து விட்டு, வார இறுதியில் விருப்பமான உணவு வகைகளை உண்பதும், ஓய்வெடுப்பதும் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் வழக்கம்.
ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இதற்கு விதிவிலக்காக திகழ்கிறார்.
2022 அக்டோபர் 25 அன்று இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் (43), தனது உடலாரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
வாரந்தோறும் 36 மணி நேரம் விரதம் இருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி தொடங்கி செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை. இக்காலகட்டத்தில் நான், குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே அருந்துகிறேன்.
வாரம் ஒரு முறை விரதம் இருப்பது எனக்கு முக்கியமான சுய கட்டுப்பாடு.
எனக்கு இனிப்பு பண்டங்கள் என்றால் அதிக விருப்பம். இதன் மூலம் விரதம் இருந்த நாட்களைத் தவிர பிற நாட்களில் என் விருப்பம் போல் உண்ண முடிகிறது.
இவ்வாறு சுனக் கூறினார்.

மெக்சிகோ நாட்டின் கோக்கோ கோலா பானத்தை மிகவும் விரும்பி அருந்துபவர் சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவிய இந்தியாவின் கோடீசுவரர் என்ஆர் நாராயண மூர்த்தியின் மகள், அக்ஷதாவை சுனக் திருமணம் செய்தார்.
சுனக்-அக்ஷதா தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
உண்ணாவிரதம் இருப்பதால் உடலில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் அதிக கொழுப்பு குறைய சாத்தியக்கூறு உள்ளதை ஒப்பு கொள்ளும் மருத்துவர்கள், இத்தகைய பழக்கங்களை ஏற்படுத்தி கொள்ளும் முன் ஒவ்வொருவரும் தக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என எச்சரிக்கின்றனர்.
- 52 வயதான நிக்கி ஹாலே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
- "அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" என்றார் நிக்கி
வரும் நவம்பர் இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களத்தில் தீவிரமாக போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

குடியரசு கட்சியின் சார்பில், டிரம்பை தவிர, இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் தென் கரோலினா மாநில கவர்னரும், ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்கா தூதருமான 52 வயதான நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 2016 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க வழிவகுத்த "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்றுங்கள்" (Make America Great Again) எனும் முழக்கத்தையே இவ்வருட தேர்தலுக்கும் முழக்கமாக கையில் எடுத்துள்ளார், டிரம்ப்.
தற்போதைய நிலவரப்படி, வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள தலைவராக டிரம்ப் பார்க்கப்படுகிறார்.
ஆனால், டிரம்புடன் போட்டியிட முன்வந்த பிற தலைவர்கள் பின்வாங்கி விட்ட நிலையிலும் நிக்கி ஹாலே தொடர்ந்து ஆதரவு தேடி பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரசாரத்தில் நிக்கி தெரிவித்ததாவது:
"அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" (Make America Normal Again).
80-வயதுடைய இருவர் பணியாற்றியதை விட நாம் சிறப்பாக பணியாற்ற முடியும்.
அவர்கள் இருவரின் பரஸ்பர தாக்குதல் மக்களை களைப்படைய செய்து விட்டது. இதில் குழப்பமும் சச்சரவும் மட்டுமே மிஞ்சுகிறது.
தங்களின் சின்னஞ்சிறு நோக்கங்களுக்காக சண்டையிடும் தலைவர்கள் மக்களுக்கு வேண்டாம். அமெரிக்க மக்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துபவர்களே அவர்களுக்கு அதிபர்களாக வேண்டும்.
நீங்கள் பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் ஒரு அதிபராக நான் நிச்சயம் பணியாற்றுவேன்.
இவ்வாறு நிக்கி கூறினார்.
இதற்கிடையே, "நிக்கி ஹாலே அதிபரானால் அமெரிக்காவை முடிவில்லா போர்களுக்கு தள்ளி விடுவார். ஏனெனில், நிக்கி போர்களையே விரும்புகிறார். தன்னை ஏன் மக்கள் ஏற்க வேண்டும் எனக் கூற அவரிடம் இதுவரை சரியான வாதங்கள் ஏதுமில்லை" என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
77 வயதான டொனால்ட் டிரம்ப் மற்றும் 81 வயதான ஜோ பைடன், இருவருமே முதுமை நிலையை அடைந்து விட்டதால், வேறு ஒரு இளம் தலைவர் அதிபராக வேண்டும் என பல வாக்காளர்கள் கருதுவதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
- அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
- இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நேற்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான்கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து அவருக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத் தண்டனை கோர்ட்டு விதித்துள்ளது. மேலும் இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.
- முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் 29-ந்தேதியன்று தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (30-ந்தேதி) ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.
ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரபேல் மேத்யோ, மேனூல் மன்ஜன் வில்டா (சி.இ.ஓ, வாட்டர் டிவிஷன்) ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

இச்சந்திப்பின்போது, காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
இத்துறையின் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக விளக்கினார். இந்த கலந்தாலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லஸ் விளாகியூஸ், இந்திய இயக்குநர் நிர்மல் குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள்.

இச்சந்திப்பின்போது, ரோக்கா நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் பெருந்துறையிலும், ராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் உயர்த்திடவும், சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக்கத்தையும் புதிய தொழில் அலகுகளையும் தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இத்துறையில் முதலீடு செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதகமான சூழல் பற்றி விளக்கினார்.
இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன் வந்துள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இச்சந்திப்புகளின்போது, கேய்டன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு உடனிருந்தார்.
இதனை அடுத்து, வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டு ஆலோசனைகளை மேற் கொள்ள உள்ளார்.
- பயணிகளை ஏற்றி சென்ற இரட்டை அடுக்கு பேருந்து எலோடாவில் விரைந்து சென்றது
- இந்த விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது
நேற்று, வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாரா (Guadalajara) பகுதியில் இருந்து சினலோவா மாநில லாஸ் மாசிஸ் (Los Mochis) பகுதிக்கு சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு இரட்டை அடுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்பேருந்து வடமேற்கு மெக்சிகோவில் எலோடா முனிசிபாலிட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த ஒரு டிரக்கின் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் அந்த பேருந்து அங்கேயே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர்.
எரிந்த நிலையில் உள்ள சடலங்களை பணியாளர்கள் அப்புறப்படுத்தி அடையாளம் காணும் பணியை செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அதிக வேகம், மோசமான வாகனங்கள், ஓட்டுனரின் அலட்சியம் மற்றும் பயண களைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மெக்சிகோவின் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல சாலைகளில் அடிக்கடி பேருந்து விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.






