search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    செனட் விசாரணையில் மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனர்
    X

    செனட் விசாரணையில் மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனர்

    • செனட்டர் ஜோஷ் ஹாவ்லி, ஜுக்கர்பெர்கிடம் "மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்
    • டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் நிறுவனங்களும் விசாரணை வளையத்தில் உள்ளன

    உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க் (39).

    நேற்று, சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமான வீடியோக்கள் குறித்து அந்நிறுவனங்களின் மீது பலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் மீது அமெரிக்க செனட் விசாரணை நடத்தியது.

    இதில் ஜுக்கர்பெர்க் நேரில் பங்கேற்று தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

    விசாரணை தொடங்கியதும் ஊடகங்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்த வீடியோவை விசாரணைக்குழு ஒளிபரப்பியது. இதில் பல உயிரிழப்பு சம்பவங்கள் குறித்தும் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.


    குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley), ஜுக்கர்பெர்கை நோக்கி, "உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்.

    அப்போது, ஜுக்கர்பெர்க் எழுந்து நின்று கொண்டு அக்குடும்பத்தினரை நோக்கி பேசினார்.

    அவர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

    நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வர கூடாது. என்னை மன்னியுங்கள்.

    இவ்வாறு ஜுக்கர்பெர்க் கூறினார்.

    சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும் வகையில் ஒரு சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக அமெரிக்க அரசு முயன்று வருகிறது.

    இது குறித்து பல வலைதளங்களின் நிறுவனர்கள் செனட் சபைக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விவாதம் நடத்தி கருத்துகள் கேட்கப்படுகின்றன.


    மெட்டா அதிபர் மட்டுமின்றி, டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் செனட் சபை விசாரணையில் பங்கேற்றனர்.

    அவர்கள் செனட்டின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டனர்.

    Next Story
    ×