என் மலர்
உலகம்
- கரினா என்ற பெண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பம் அவருக்கு சரியான பொருத்தமாக அடையாளம் காட்டியதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
- சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க சுமார் 1 வருடம் ஆனதாக அவர் கூறினார்.
ரஷியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆன்லைன் டேட்டிங்கிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார்.
ரஷியாவை சேர்ந்த சாப்ட்வர் டெவலப்பரான அலெக்சாண்டர் ஜாதன் என்பவர் டிண்டர் செயலியில் தனக்கு பொருத்தமான பெண்களை கண்டறிய சாட்ஜிபிடி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் இதர பாட்களை பயன்படுத்தி உள்ளார்.
இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பெண்களுடன் சாட் செய்த பிறகு கரினா என்ற பெண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பம் அவருக்கு சரியான பொருத்தமாக அடையாளம் காட்டியதாக அலெக்சாண்டர் கூறியுள்ளார். அவருக்கான சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க சுமார் 1 வருடம் ஆனதாக அவர் கூறினார்.
- 2021லிருந்து தற்போது வரை 6.3 மில்லியன் அகதிகள் நுழைந்துள்ளனர்
- தாக்கிய அகதிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்; ஒருவர் சிறையில் உள்ளார்
தினந்தோறும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளில் இருந்து கடல் மற்றும் தரை வழியாக ஆபத்தான நீண்ட பயணங்களை மேற்கொண்டு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து சில ஆண்டுகள் தங்கியிருந்து, குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது.
2021லிருந்து தற்போது வரை மட்டுமே 6.3 மில்லியன் அகதிகள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வரும் அகதிகளால் அமெரிக்காவில் சமீப சில வருடங்களாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியின் மையத்தில் உள்ள புகழ் பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) பகுதியில் ஒரு சிறிய அகதிகள் குடியிருப்பில், கும்பலாக கூடியிருந்த அகதிகள் சிலரை கலைந்து போகுமாறு சில காவல் அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் அதற்கு மறுத்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்ய காவல் அதிகாரிகள் முயன்றனர்.
அப்பொது அந்த அகதிகளில் சிலர் காவல் அதிகாரிகளை தாக்கினர். இதில் அந்த அதிகாரிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சுமார் 12 பேர் ஈடுபட்டதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக 6 அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் பிணையில் விடப்பட்டனர்; ஒருவர் சிறையில் உள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட பிறரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் ஒரு பேருந்தில் ஏறி தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியதால், இரு கட்சிகளை சேர்ந்த வாக்காளர்களில் பலர், கட்சி பேதம் இன்றி சமூக வலைதளங்களில் இத்தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
காவல் துறையினர் மீதான தாக்குதலுக்கு நியூயார்க் காவல்துறையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தீவிரமாக களம் இறங்கியுள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் "சட்டவிரோத அகதிகள்" பிரச்சனை, வாக்காளர்களை ஈர்க்கும் அம்சமாக மாறி உள்ளது.
- "தி கேப்சர் ஆஃப் செயின்ட் பீட்டர்", ஓவியர் ருடிலியோ மானெட்டி என்பவரால் வரையப்பட்டது
- கண்காட்சியில் இருந்த ஓவியத்தில் இடது மேற்புறத்தில் ஒரு மெழுகுவர்த்தி காணப்பட்டது
ஐரோப்பாவில் உள்ள பண்டைய நாடு, இத்தாலி. ரோமானிய கலாச்சாரத்தை பறைசாற்றும் அந்நாட்டில் பழங்கால ஓவியங்களுக்கும் ஓவியர்களுக்கும் இன்றளவும் ஆர்வலர்கள் அதிகம்.
அந்நாட்டின் 605 இடங்களை கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி (Vittorio Sgarbi) பழமையான கலைப்பொருட்கள் மற்றும் அரிய ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.
2013ல், இத்தாலியின் வடக்கு பீட்மான்ட் பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கோட்டையில் பல ஆண்டுகளாக இருந்த 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ருடிலியோ மானெட்டி (Rutilio Manetti) எனும் ஓவியர் வரைந்த "தி கேப்ச்சர் ஆஃப் செயின்ட் பீட்டர்" (The Capture of Saint Peter) எனும் ஓவியம் திருடு போனது.
2021ல் அமைச்சர் ஸ்கார்பி ஏற்பாடு செய்திருந்த ஒரு கண்காட்சியில் இந்த ஓவியம் மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டது.
2013ல் காணாமல் போன ஓவியம் போலவே இது இருந்தாலும், இந்த ஓவியத்தின் இடது மேற்புறத்தில் ஒரு மெழுகுவர்த்தி தென்பட்டது.

சுமார் 20 வருடங்களுக்கு முன் தனது தாயார் வாங்கிய ஒரு பழமையான வில்லாவில் இதை கண்டெடுத்ததாகவும், இதுதான் ருடிலியோ மானெட்டியின் "அசல்" ஓவியம் என்றும் 2013ல் களவு போனது "நகல்" என்றும் ஸ்கார்பி கூறி வந்தார்.
ஆனால், 2013ல் களவு போன ஓவியத்தில் கைதேர்ந்த ஓவிய நிபுணர்களை கொண்டு ஸ்கார்பி சில மாற்றங்கள் செய்து புதியதாக காட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து காணாமல் போன ஓவியத்தை தேடவும், ஸ்கார்பியின் ஓவியம் உண்மையா அல்லது 2013ல் களவு போன ஓவியமா என கண்டறியவும் விசாரணை முடுக்கி விடப்பட்டது.
இதை தொடர்ந்து எழுந்த விமர்சனங்களின் விளைவாக அமைச்சர் விட்டோரியோ ஸ்கார்பி, தற்போது தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"நான் எந்த குற்றமும் செய்யவில்லை. விசாரணைக்கு எனது பதவி இடையூறாக இருக்க கூடும் என்பதால், நான் பதவி விலகுகிறேன். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலனிக்கு தகவல் தெரிவித்து விட்டேன்" என அமைச்சர் ஸ்கார்பி தெரிவித்தார்.
- ராக்கெட்டை தானம் செய்ய விரும்புவதாக அருங்காட்சியகத்திற்கு அழைப்பு வந்தது
- 1962 காலகட்டத்திலேயே டக்ளஸ் ஏர்-2 ஜீனி ரக ராக்கெட் தயாரிப்பு நிறுத்தப்பட்டது
பல வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில பெல்லவ்யூ (Bellevue) நகரில் ஒருவர் மிக பெரிய எஸ்டேட் ஒன்றை விலைக்கு வாங்கினார். அதை வாங்கிய போது அதில் ஒரு பழமையான பொருளும் கிடைத்தது.
அவர் காலமானதும், அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒஹையோ (Ohio) மாநில டேடன் (Dayton) பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அருங்காட்சியகத்திற்கு அழைப்பு விடுத்து, தனது வீட்டின் வாகன பழுதுபார்க்கும் இடத்தில் உள்ள ஒரு "ராக்கெட்டை" அருங்காட்சியகத்திற்கு தானமாக வழங்க விரும்புவதாகவும், அது வெடிக்க கூடிய ஆபத்தான நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து கூறவும் அருங்காட்சிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து உடனடியாக அந்த அருங்காட்சியக அதிகாரிகள், பெல்லவ்யூ காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர்.

தொடர்ந்து பெல்லவ்யூ காவல் நிலைய அதிகாரிகள், அழைப்பு விடுத்தவரின் இல்லத்திற்கு சென்றனர். தகவல் தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், "டக்ளஸ் ஏர்-2 ஜீனி" (Douglas AIR-2 Genie) ரக வான்வழி ராக்கெட் ஒன்றின் பாகத்தை கண்டனர்.
துருப்பிடித்த நிலையில் இருந்த அந்த பாகம், சுமார் 1.5 கிலோ டன் எடையுள்ள அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் திறன் வாய்ந்த ராக்கெட்டின் பாகமாகும்.
1962ல் இத்தகைய ராக்கெட்டுகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இவை அமெரிக்க ராணுவத்தின் விமானப்படையால் ரஷிய-அமெரிக்க பனிப்போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. அப்போது இருந்த டக்ளஸ் விமான தயாரிப்பு நிறுவனத்தால் இவை தயாரிக்கப்பட்டன.

1997ல் அந்நிறுவனம் பிரபல விமான உற்பத்தி நிலையமான போயிங் (Boeing) நிறுவனத்துடன் இணைந்தது.
மிக பழமையான அப்பொருளை பரிசோதித்த நிபுணர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்ததாவது:
அந்த துருப்பிடித்த பழமையான பாகம், ராக்கெட்டின் எரிபொருளுக்கான "கேஸ் டாங்க்" பகுதி. அதில் எந்த எரிபொருளும் மிச்சம் இல்லை. அதில் ஏவுகணை ஏதும் இணைக்கப்படவும் இல்லை. அது எந்த வகையிலும் ஆபத்தில்லாதது.
இவ்வாறு நிபுணர்கள் உறுதிபட கூறினர்.
தொடர்ந்து அதன் உரிமையாளர், தனக்கு விருப்பமான அருங்காட்சியகத்திற்கு அதை வழங்கிட காவல் மற்றும் வெடிகுண்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
- ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அமெரிக்க வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ளன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஒருமுறை மட்டும் தாக்குதல் நடத்தப்படாது. பதிலடியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இந்த நிலையில ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்டதூரம் சென்று தாக்கும் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் "அமெரிக்க வீரர்களுக்கு தீங்கி விளைவித்தால், அதற்கு சரியான பதில் கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்த தாக்குதல் இறையாண்மை மீறல் என ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது.
- பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்கத்தொடங்கின.
பாரிஸ்:
யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம்.
இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது. பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது. பாரிசில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ-ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்சின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதன்படி, இனி பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும். இனிமேல் பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
இந்தியர்கள் இனி ஈபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன்கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
- தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர்.
- மத்திய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்வார்கள் என தகவல்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொபைல் ஹோம் பார்க்கில் இன்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்தவர்களும், வீட்டில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒற்றை எஞ்சின் கொண்ட பீச்கிராஃப்ட் பொனான்சா வி35 விமானத்தின் பைலட், விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரம் முன்பு எஞ்ஜின் செயலிழந்தது என்று அறிவித்ததாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.
வீட்டின் மீது விமானம் விழுந்ததில் மூன்று வீடுகள் தீக்கு இரையானது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர்.
இதுகுறித்து கிளியர்வாட்டர் தீயணைப்புத் தலைவர் ஸ்காட் எஹ்லர்ஸ்," விபத்துக்குள்ளான விமானம் ஒரே கட்டமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டது," என்றார்.
இந்த விபத்தில், எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற விபரம் வெளிவரவில்லை. என்றாலும் விமானம் விழுந்த வீட்டிலும், விபத்தில் சிக்கிய விமானத்திலும் பலர் இருந்ததாக தெரியவந்துள்ளது.
மத்திய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாரிசு உரிமையின் அடிப்படையில அவருக்கு பாட்டி வழியில் இருந்து ரூ.225 கோடிக்குமேல் சொத்துகள் கிடைத்துள்ளது.
- கொடைவள்ளல்கள் கோடியில் ஒருவராக மிளிர்வர்.
ஜெர்மனியின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று பி.ஏ.எஸ்.எப். சோடா தொழிற்சாலையாக 1865-ல் இதை தொடங்கியவர் பிரெடரிக் ஏங்கல்கார்ன். தற்போது இந்த நிறுவனம் ரசாயன தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கோலோச்சுகிறது.
இந்த நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் இளம் வாரிசுகளில் ஒருவர் பத்திரிகையாளராக இருக்கும் மர்லின் ஏங்கல்கார்ன். இவருக்கு சமூக தொண்டு ஆர்வமும் அதிகம். வாரிசு உரிமையின் அடிப்படையில் அவருக்கு பாட்டி வழியில் இருந்து ரூ.225 கோடிக்குமேல் சொத்துகள் கிடைத்துள்ளது.
31 வயதான அவர், இந்த பணத்தை கொண்டு செல்வச் செழிப்புடன் தனது வாழ்க்கை முழுவதும் வாழலாம். ஆனால் அவர் அதன் மீது கொஞ்சமும் நாட்டமின்றி, பலருக்கும் அதை பகிர்ந்து கொடுக்க தீர்மானித்து உள்ளார். அதற்காக 'மறுபகிர்வு கவுன்சில்' என்ற திட்ட அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆஸ்திரிய குடிமக்கள் 50 பேருக்கு அந்த தொகையை பகிர்ந்து வழங்குகிறார். இதற்காக 5 ஆயிரம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. அவர்களில் 50 பேரை தேர்வு செய்து வாரம் தோறும் குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு சென்று சேரும் வகையில் கொடை வழங்குகிறார்.
கொடைவள்ளல்கள் கோடியில் ஒருவராக மிளிர்வர். அவர்களில் மர்லின் இளம் கொடையாளர் என்றால் ஆச்சரியமில்லை!.
- பரிசோதனை முடிந்ததும் கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார்.
- பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
போலந்து நாட்டில் உலக சாதனைக்காக 'ஐஸ்' கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா மிக தைரியமாக பங்கேற்றார். அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவர் 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார். அவர் மீது 'ஐஸ்' கட்டிகள் கொட்டப்பட்டது. அதை தொடர்ந்து கவுண்ட்டவுன் தொடங்கியது.
அப்போது அவர் 'ஐஸ்' பெட்டிக்குள் 3 மணி நேரம் 6 நிமிடம் 45 செகண்ட் நின்று கின்னஸ் சாதனை படைத்தார். அவரை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர். மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் வெளியே வந்தார். இந்த சாதனை குறித்து கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா கூறியதாவது:-
இதுபோன்ற பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்கு மன வலிமை, உடல் வலிமை அவசியம் தேவை. இதுபோல் மற்ற பெண்களும் தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க முயற்சிக்க வேண்டும் என அவர் கூறினார்.
- அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
- இந்த மாதத்தில் இதுவரை நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒஹியோவில் படித்து வந்த இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார். நேற்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடல் பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிவில்தான் அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவரும்.
இந்த மாதத்தில் இது 4-வது சம்பவம். இதற்கு முன்னதாக மூன்று இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியுட்டுள் செய்தியில் கூறியிருப்பதாவது:-
துரதிருஷ்டவமாக ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகெரி உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வன்முறை போன்ற செயல்களால் கொலை நடந்திருக்குமா? என்று சந்தேகிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினரை தொடர்ந்து தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்ய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் கடந்த திங்கட்கிழமை பர்டூ பல்கலைகலைக்கழத்தில் படித்து வந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர் மரணம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில் திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஜனவரி 16-ந்தேதி ஜார்ஜியாவில் உள்ள லிதோனியாவில் அரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி மரணம் அடைந்தார்.
இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் படித்த வந்த அகுல் தவான் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மரணம் அடைந்தார். 18 வயதான அகுல் கடுங்குளிர் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்கலைக்கழக போலீஸ் துறையின் கவனக்குறைவுதான் அகுல் தவானுக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.
- பாகிஸ்தானில் அடுத்த வாரம் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
- இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான பஜார் பழங்குடியின மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக ரெஹான் ஜெப்கான் போட்டியிடுகிறார். இவருக்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
ரெஹான் ஜெப்கான் சித்திக்காபாத் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ரெஹான் ஜெப்கான் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் உடலில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் வேட்பாளர் ரெஹான் ஜெப்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விமானங்கள் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை ஆகும்.
- விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் உரசி கொண்ட விமானம் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.
ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமான இரு விமானங்கள் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளன. இந்த சம்பவம் காரணமாக இரு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டன. எனினும், இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு துவக்கம் முதலே ஜப்பானில் விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சிறிய ரக விமானம் ஒன்று ஜனவரி 2-ம் தேதி விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது.






