என் மலர்
உலகம்
- ஒலிம்பிக்கில் 2 முறை அமெரிக்கா தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர் ஜோர்டன்
- ஜோர்டனின் 6 ஜோடி ஷூக்கள் சோத்பி'ஸ் ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வந்தது
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டு, "பாஸ்கெட் பால்" (basketball) எனும் கூடைப்பந்து. கூடைப்பந்து விளையாட்டில் மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க சாதனையாளர், மைக்கேல் ஜோர்டன்.
1980களிலும், 90களிலும் கூடைப்பந்து விளையாட்டு பிரபலம் அடைய மைக்கேல் ஜோர்டன் ஒரு முக்கிய காரணம்.
1984 தொடங்கி 2003 வரை ஆண்டுதோறும் நடைபெறும் என்பிஏ ஃபைனல்ஸ் (NBA Finals) எனப்படும் அந்நாட்டின்"தேசிய கூடைப்பந்து சங்கம்" (National Basketball Association) நடத்தும் போட்டித் தொடரில் 6 முறை "சிகாகோ புல்ஸ்" அணிக்காக சாம்பியன்ஷிப் வென்றார் ஜோர்டன்.
மேலும், ஒலிம்பிக் பந்தயங்களிலும் 2 முறை ஜோர்டன் தங்க பதக்கம் வென்றார்.
2003ல் கூடைப்பந்து விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜோர்டனுக்கு தற்போது 60 வயது ஆகிறது.

இந்நிலையில், மைக்கேல் ஜோர்டன் பயன்படுத்திய "ஸ்னீக்கர்ஸ்" (sneakers) எனப்படும் விளையாட்டுக்கான காலணிகள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன. பருமனான கேன்வாஸ் துணியால் தயாரிக்கப்பட்டு ரப்பரில் செய்யப்பட்ட ஸோல்கள் அமைந்த ஜோர்டன் அணிந்த ஸ்னீக்கர்களின் ஏலம் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
பிரபல சோத்பி'ஸ் (Sotheby's) ஏல நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில் ஜோர்டன் பயன்படுத்திய 6 ஜோடி ஸ்னீக்கர்கள், ரூ.66,39,96,400.00 ($8 மில்லியன்) தொகைக்கு ஏலம் போனது.
இந்த ஷூக்களை, ஜோர்டன், 1991, 1992, 1993, 1996, 1997 மற்றும் 1998 ஆண்டுகளில் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவற்றை ஏலத்தில் வாங்கியவரின் விவரங்களை ஏல நிறுவனம் தற்போது வரை வழங்கவில்லை.
ஜோர்டன் அணிந்திருந்த ஜெர்ஸி, 2022ல், சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.
- போகியா நகரின் கார்கனோ மாபியா குழுவின் தலைவன் மார்கோ ராடுவோனோ
- பல போர்வைகளை ஒன்றாக இணைத்து மதில் சுவரை தாண்டி தப்பினார் மார்கோ
இத்தாலியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் பல "மாபியா" கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.
இத்தாலியின் போகியா (Foggia) எனும் நகரில் செயல்பட்டு வந்த "கார்கனோ குழு" (Gargano clan) எனப்படும் இத்தகைய ஒரு கும்பலின் தலைவன், மார்கோ ராடுவோனோ (40).
30 வருட நீண்டகால தேடலுக்கு பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்ட மார்கோவிற்கு, நீதிமன்றத்தால் 24-வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. மார்கோ மீது போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து இத்தாலியின் தீவு பிரதேசமான சார்டினியாவின் நுவோரோ பகுதியில் உள்ள கடுமையான காவல் கட்டுப்பாடுகள் நிறைந்த சிறையில் மார்கோ அடைக்கப்பட்டான்.
கடந்த 2023 பிப்ரவரி மாதம், மார்கோ, சார்டினியாவின் சிறை அறையில் இருந்து வெளியே வந்து, பல போர்வைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, சிறைச்சாலையின் மதில் சுவரையும் தாண்டி, கீழே குதித்து தப்பிச் சென்றான்.
ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகளின் தேடல் பட்டியலில் உள்ள முக்கிய குற்றவாளியான மார்கோ தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை மார்கோவை தேடி வந்தது.
ஐரோப்பிய நாடுகளில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில், மார்கோ, பிரான்ஸ் நாட்டின் அலெரியா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு பெண்ணுடன் உணவருந்தி கொண்டிருந்த போது பிரான்ஸ் காவல்துறையினர் அவனை கைது செய்தனர்.
போலியான பெயர் மற்றும் போலி பதிவு எண் கொண்ட வாகனத்துடன் அப்பகுதியிலேயே அவன் வசித்து வந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.
மார்கோ சிறையிலிருந்து தப்பி சென்றது இத்தாலி அரசுக்கு பெரும் அவமானமாக கருதப்பட்டது.
இந்நிலையில், அவன் மீண்டும் பிடிபட்டதால், தங்கள் நாட்டிற்கு அவனை அழைத்து செல்லும் முயற்சியில் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.
- உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்
- பாதிரியார் டுப்மேனுக்கு பல ஊர்களில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது
கடந்த 2022 பிப்ரவரி மாதம், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் போரிட்டு வருகிறது.
இரு தரப்பிலும் உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் பலமாக ஏற்பட்டிருந்தும், போர் தீவிரமாக 710 நாட்களை கடந்து தொடர்கிறது.
ரஷியாவின் வான்வழி தாக்குதலால் உக்ரைன் நாட்டில் சுமார் 40 சதவீத மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்தன. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்
உதவிகள் கேட்டு அமெரிக்க அதிபரை சந்தித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மின்சார உற்பத்தி நிலையங்களை இயங்க செய்யவும் அமெரிக்க உதவியை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சாஸ்டன் (Sawston) கிராமம்.
சாஸ்டன் பகுதியில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர், 29 வயதான வில் லயான் டுப்மேன் (Will Lyon Tupman).
உக்ரைன் மக்கள் இருளில் அவதிப்படுவதை கேள்விப்பட்டு 2022லிருந்தே பாதிரியார் டுப்மேன், பாதி உபயோகப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மெழுகுவர்த்திகளை சேகரிக்க தொடங்கினார்.
தங்கள் தேவாலயத்திலும் இருந்த பயன்படுத்தப்படாத மெழுகுவர்த்திகளையும் தனது சேகரிப்பில் இணைத்தார். மேலும், இவரது கோரிக்கைக்கு உதவ பலர் முன் வந்ததால், தங்கள் வீட்டில் இருந்த பாதி எரிந்த நிலையில் உள்ள மற்றும் உபயோகப்படுத்தாத மெழுகுவர்த்திகளையும் அவரிடம் வழங்கினர்.

இவையனைத்தையும் பாதிரியார் டுப்மேன், அங்குள்ள ஒரு மெழுகுவர்த்தி உற்பத்தி நிலையத்தில் கொடுத்து, உருக்கி, புது மெழுகுவர்த்திகளாக மாற்றினார். அந்த புது மெழுகுவர்த்திகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இந்த அரிய பணியை, பாதிரியார் டுப்மேன் தற்போது வரை தொடர்கிறார். இவரது முயற்சிக்கு அப்பகுதி மக்களிடம் இருந்தும், சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சர்ச்களிலில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
உக்ரைன் மக்கள் டுப்மேனின் இந்த பெரும் உதவியினால் பயனடைந்துள்ளதால், அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
- நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு என ஐஸ்லாந்து அழைக்கப்படுகிறது
- தொலைக்காட்சியில், 3 வீடுகளை லாவா மூழ்கடித்த காட்சிகளை கண்டு மக்கள் அதிர்ந்தனர்
வட ஐரோப்பாவில் உள்ள தீவு நாடு, ஐஸ்லாந்து. இதன் தலைநகரம் ரெக்ஜெவிக் (Reykjavik).
பனிப்பாறைகளாலும், எரிமலைகளாலும் சூழப்பட்டுள்ளதால், நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு (Land of fire and ice) எனவும் ஐஸ்லாந்து அழைக்கப்படுவதுண்டு.
ஐஸ்லாந்து நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையில், எரிமலைகளிலிருந்து "லாவா" (lava) எனப்படும் எரிமலை குழம்புகள் வெளிக்கிளம்புவதும், அவற்றின் சீற்றம் குறைந்த பிறகு ஊரை சுத்தப்படுத்தி மீண்டும் குடியேறுவதும் வழக்கமான ஒன்று.
சில தினங்களுக்கு முன், இந்நாட்டின் க்ரிண்டாவிக் (Grindavik) பகுதியில் எரிமலைக்குழம்பு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

இதையடுத்து, அப்பகுதியில் வாழ்ந்த சுமார் 3800 பேர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.
இம்முறை க்ரிண்டாவிக் பகுதியில் எரிமலை குழம்பு மொத்த ஊரையும் நாசம் செய்து விட்டதால், மீண்டும் அங்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நகரின் பல இடங்களில் நீண்ட தூரத்திற்கு பூமியில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்தும் லாவா வெளியேறியது.
க்ரிண்டாவிக் பகுதிக்கு அருகே உள்ள ஸ்வார்ட்ஸெங்கி புவிவெப்ப மின் நிலையத்திற்கு (geothermal power plant) உள்ளே லாவா செல்வதை தடுக்கும் வகையில், அதற்கு வெளியே அரசு, தடுப்புகள் அமைத்துள்ளது.
இந்நகரின் 3 வீடுகளை லாவா மூழ்கடித்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இயற்கையின் சீற்றத்தால் வீடுகளை விட்டு வெளியேறி மீண்டும் குடிபுக முடியாத நிலையில் உள்ள மக்களில் பலருக்கு வீடுகளின் பேரில் வங்கி கடன் உள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் என்ன ஆகுமோ எனும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- அதே போல் நாட்டின் தெற்கு பகுதியிலும் காட்டுத் தீ பரவியுள்ளது.
- வெப்பநிலை 104 டிகிரி வரை உள்ளதால் வரும் நாட்களில் காட்டுத்தீ இன்னும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சாண்டியாகோ:
தென் அமெரிக்கா நாடான சிலியில் மத்திய பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது.
கடலோர நகரமான வினாடெல்மாரை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. தீ வேகமாக மற்ற இடங்களிலும் பரவியது.
எஸ்ட்ரெல்லா, நவிடாப் உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீயால் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமானது. அதே போல் நாட்டின் தெற்கு பகுதியிலும் காட்டுத் தீ பரவியுள்ளது.
கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் அங்கு கரும் புகை மண்டலம் ஏற்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் இருளில் சூழ்ந்தது போல் புகை மண்டலம் பரவி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் காட்டுத் தீயில் சிக்கியும், புகை மூட்டத்தால் மூச்சு திணறியும் 46 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பலரது உடல்கள் சாலைகளில் சிதறி கிடந்தன.
தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வெப்பநிலை 104 டிகிரி வரை உள்ளதால் வரும் நாட்களில் காட்டுத்தீ இன்னும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிலியில் அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத் தீ பேரழிவு காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
லால்பரைசோ பிராந்தியத்தில் நான்கு இடங்களில் காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து வருகிறது. தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். மீட்புப் பணியாளர்களுக்கு ஒத்துழைக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன். தீ வேகமாக முன்னேறி வருகிறது. கால நிலை, காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது என்றார்.
இந்த காட்டுத்தீயில் 19 ஆயிரத்து 770 ஏககர் வனப்பகுதி எரிந்து நாசமாகிஉள்ளது. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் முற்றிலும் எரிந்தன.
- ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்தது.
- குரேஷி, அவரது மகன் ஜெய்ன் குரேஷியின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தவர் ஷா மஹ்மூத் குரேஷி. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி துணைத் தலைவராக உள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் 2018 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை மந்திரி உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட மஹ்மூத் குரேஷி, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்துள்ளது.
பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முடியாதபடி 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் குரேஷியின் தண்டனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குரேஷி மற்றும் அவரது மகன் ஜெய்ன் குரேஷி ஆகியோரின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.
முல்தான் உள்ளிட்ட 2 சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்தஇடத்தில் மாற்று வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
- ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க தற்போதைய அதிபர் ஜோபைடன் திட்டமிட்டுள்ளார்.
- அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன்-டிரம்ப் மோத உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க தற்போதைய அதிபர் ஜோபைடன் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.
அவர் டீன் பிலிப்ஸ், மரியன்னே வில்லியம்சன் உள்ளிட்டோரை தோற்கடித்தனர். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன்-டிரம்ப் மோத உள்ளனர்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- தற்போது 2-வது முறையாக அப்பதவியை வகித்து வந்தார்.
தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் அதிபர் ஹேஜ் கீங்கோப் இன்று அதிகாலை மரணம் அடைந் தார். அவருக்கு வயது 82. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைநகர் வின்ட்ஹோக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அதிபர் ஹேஜ் கீங்கோப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக துணை அதிபர் நங்கோலோ தெரிவித்தார். ஹேஜ் கீங்கோப் 2015-ம் ஆண்டு முதல் முறையாக அதிபர் ஆனார். தற்போது 2-வது முறையாக அப்பதவியை வகித்து வந்தார்.
- விழிப்புணர்வுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.
- குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
உலகம்முழுவதும் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் பலியாகி வருகின்றனர். ஆறு மரணங்களில் ஒரு மரணம் புற்றுநோயால் ஏற்படுகிறது. பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை பரப்புவதும் இதில் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், விழிப்புணர்வுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.

ஆரம்பநிலையில் இந்த நோயை கண்டறிதலையும் சிகிச்சைகள்மூலம் புற்றுநோயை குணப்படுத்துதலை அதிகரிக்கவும் 2008-ம் ஆண்டு முதல் பிப்- 4 ந்தேதி 'உலக புற்றுநோய் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
புற்றுநோய் இறப்பு விகிதத்தை, புற்றுநோய்த் தாக்கத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், பூங்காக்கள், சமூகக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், தெருக்களிலும் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல முயற்சிகள் உலக புற்றுநோய் நாளில் நடத்தப்படுகின்றன. புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு தைரியத்தை ஊட்டுவதற்காக சிகையலங்காரம் செய்பவர்கள் பலர் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்கின்றனர்.
உடலின் செல்கள், ஜீன்களில் ஏற்படும் மரபுவழி கோளாறு மற்றும் உடலில் ஏற்படும் பல விளைவுகளால் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.

போதை பாக்குகள், புகையிலை, சிகரெட், மதுப்பழக்கத்தை கைவிட்டு புற்றுநோய் வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும். இதனால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். புற்றுநோய் வராமல் காப்பது நம் அனைவரது கடமை ஆகும்.
புற்றுநோயைத் தடுப்பது மற்றும் கண்டறிதல், சிகிச்சையில் பிரமிக்க தக்க வகையிலான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக புற்றுநோய் தினத்தின் 'கருப்பொருள்' புற்றுநோய்க்கு முன்னுரிமை அளிப்பதாகும். புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
- சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அங்கிருந்த 1,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
- இந்த தீவிபத்தில் சிக்கி 46 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனல்:
அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழ்ந்துள்ளது.
திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அங்கிருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்தன. இந்த தீவிபத்தில் சிக்கி 46 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.
தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறனர்.
- இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கை புஷ்ரா பீவியின் முதல் கணவர் கவார் மனேகா தொடர்ந்திருந்தார். இந்த மனுவில், மறுமணத்திற்கான கட்டாய காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறையை (இத்தாத்) மீறியதாக கூறியிருந்தார். திருமணத்திற்கு முன் சட்டவிரோதமான உறவில் இருப்பது, கல்லால் அடித்துக் கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
அடியாலா சிறையில் நேற்று நடந்த இறுதிக்கட்ட விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிவில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி இருவரும் இஸ்லாமிய நடைமுறையை மீறி திருமணம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
- உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
- இந்தப் பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது.
ஆம்ஸ்டர்டாம்:
உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நெதர்லாந்தைச் சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஆய்வு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், உலகளவில் அதிக நெரிசல் மிகுந்த நகரமாக 6வது இடத்தை இந்தியாவின் பெங்களூரு பிடித்துள்ளது. பெங்களூருவில் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஒரு நிமிடம் குறைவாகும். அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூருவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
கடந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்த பெங்களூரு இந்த ஆண்டு 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு 14 கிலோமீட்டர் மட்டுமே நெரிசல் மிகுந்த நேரத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் டப்ளின் 2-வது இடத்திலும், கனடாவின் டொரண்டோ 3-வது இடத்திலும், இத்தாலியின் மிலன் 4-வது இடத்திலும், பெரு தலைநகர் லிமா 5-வது இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிராவின் புனே 7வது இடத்தில் உள்ளது.
முறையான சாலை இணைப்பு இல்லாத காரணத்தாலே இந்த நகரங்களில் மிகப்பெரிய அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.






