என் மலர்tooltip icon

    உலகம்

    • தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பான் நாட்டில் குடி புகுந்தார் கரோலினா
    • உண்மையை மறைத்தது தவறு என கரோலினா கூறியதாக "மிஸ் ஜப்பான் சங்கம்" அறிவித்தது

    கடந்த ஜனவரி 22 அன்று ஜப்பானில் நடைபெற்ற "மிஸ் ஜப்பான்" போட்டியில், கரோலினா ஷீனோ (Karolina Shiino) எனும் 26 வயது இளம் பெண் பட்டம் வென்றார்.

    உக்ரைன் நாட்டில் பிறந்த கரோலினா, தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பானில் குடி புகுந்தார். நகோயா பகுதியில் வளர்ந்த கரோலினா, அவரது மாற்றாந்தந்தையின் பெயரை இணைத்து கொண்டுள்ளார்.

    உக்ரைனில் பிறந்திருந்தாலும், கரோலினா ஜப்பானிய மொழியில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதுடன் அவர் ஜப்பானிய பெண்ணை போன்றே இல்லை என்பதால் அழகி போட்டியில் அவருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது தவறு என ஒரு சாராரும், அயல்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் ஜப்பானிய போட்டியில் வென்றது பாராட்டுக்குரியது என வேறொரு தரப்பினரும் இவரது வெற்றியை குறித்து கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஷுகன் பன்ஷுன் (Shukan Bunshun) எனும் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கரோலினாவிற்கு ஒரு திருமணமான ஆணுடன் நட்பை கடந்த உறவு இருந்ததாக செய்தி வெளிவந்தது.

    இதை தொடர்ந்து தற்போது அழகி போட்டியை நடத்திய "மிஸ் ஜப்பான் சங்கம்", பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட அந்த ஆண் திருமணமானவர் என முன்னரே அறிந்திருந்ததாகவும் அதை மறைத்த தவறை ஒப்பு கொண்ட கரோலினா தனது "மிஸ் ஜப்பான்" பட்டத்தை திரும்ப அளித்து விட்டதாகவும் தெரிவித்தது.

    இது குறித்து கரோலினா, "என்னால் விளைந்த சிக்கல்களுக்கும், என்னை நம்பியவர்களை ஏமாற்ற நேர்ந்ததற்கும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" என தெரிவித்தார்.

    • கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து காலரா நோய் வேகமாக பரவி வருகிறது.
    • 9 மாகாணங்களில் 8-ல் காலரா தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.

    காலரா நோய்த்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஜாம்பியாவிற்கு உதவும் வகையில், மருந்துகள் உள்பட சுமார் 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்களை இந்தியா இன்று விமானம் மூலம் அனுப்பியது.

    ஜாம்பியா நாட்டில் தற்போது திடீரென காலரா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்த நாட்டுக்கு உதவ இந்தியா முன் வந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு விமானம் மூலம் மருந்து உதவிப் பொருட்களை இன்று அனுப்பி வைத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காலரா நோயால் பாதிக்கப்பட்ட சாம்பியா நாட்டுக்கு மனிதாபிமான உதவிகள் இந்தியா சார்பில் செய்ய முடிவு செய்யப்பட்டதையொட்டி 3.5 டன் மருந்து உதவி பொருட்கள் இன்று சரக்கு விமானம் மூலம் அனுப்பபட்டு உள்ளது.

    இதில் குடிநீர் சுத்திகரிப்பு பொருட்கள், குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துபொருட்கள் அடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காலரா தொற்று நோயால் ஜாம்பியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 600 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. சாம்பியாவின் 10 மாகாணங்களில் 9-ல் காலரா பாதிப்பு பதிவாகியுள்ளது.

    • கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை.
    • எச்சரிக்கையை மீறி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    தெற்கு செங்கடல் வழியாக இன்று காலையில் சென்ற கப்பல் மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய போரையொட்டி கப்பல்களை குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், ஏமனின் ஹொடைடாவிற்கு மேற்கே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

    இந்த தாக்குதலில் கப்பலின் ஜன்னல்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது என்று இங்கிலாந்து ராணுவ கடல்சார் அமைப்பு தெரிவித்தது

    தாக்குதல் நடந்த கப்பல் இங்கிலாந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஆகும். பார்படோஸ் கொடியுடன் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக கப்பல் அருகே படகு ஒன்று சென்றுள்ளது. இதில் கப்பலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஏமனில் உள்ள ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    • போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கியுள்ளது.

    இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி கடுமையாக சேத மடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லாரி ஒன்று செல்ல காத்திருந்தது.

    அந்த லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.

    சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    • ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த அகமது அவாத் பின் முபாரக் புதிய பிரதமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சவுதி அரேபியாவுடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏமனின் ஆட்சிக்குழு பிரதமரை மாற்றியுள்ளது. ஆனால், நீக்கத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

    ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிரதமர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அகமது அவாத் பின் முபாரக்

    ஏமன் கடந்த 2014-ல் இருந்து உள்நாட்டு சண்டையில் சிக்கி தவித்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் உள்ளிட்ட இடங்களை பிடித்து. பின்னர் 2015-ல் சவுதி அரேபியா தலைமையிலான குழு ஏமன் நாட்டின் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சண்டையில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது.
    • சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுவெளி நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரை.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்படுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த மாதம் மூன்று நாட்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மன்னர் சார்லஸ்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதால், பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார்.

    ஊகங்களைத் தடுக்கவும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அறிவித்துள்ளார்" என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் (கோப்புப்படம்)

    75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக முடிசூடிக் கொண்டார். இரண்டாம் எலிசபெத் ராணி, 2022-ல் உயிரிழந்ததை அடுத்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னர் சார்லஸ்க்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஹாரி குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    • ஸ்பெயின் நாட்டிற்கு முதல்முறை வந்துள்ளேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வு.
    • தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனைத் தொடர்ந்து, 'ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்' எனும் நிகழ்ச்சி நேற்றிரவு அங்கு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்கள் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார். 

    தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

    ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள். செய்யப் போகிறீர்கள். செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    அயல்நாட்டில் இருக்கக் கூடியவர்களுக்காகவே துணை நிற்க வேண்டும்- உதவி புரிய வேண்டும்- அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள்- ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

    ஆனால் சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. அதனால் அது செயல்படாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் தலைவர் கலைஞர் வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது. தலைவர் கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம். தயாராக இருக்கிறோம்.

    அண்மையில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி. இதுவரை அவர்களை இரண்டு மூன்று முறை அழைத்துக் கூட்டம் போட்டு கலந்து பேசி, அவர்களது பிரச்சினை களை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம். 

    உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாகத் தமிழ்நாட் டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம்.

    அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. இந்தியாவிற்கு மட்டுமல்ல. இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டி ருக்கும் உங்க ளுக்கும் அது பெருமைதான்.

    பல்வேறு வெளிநாடு களுக்குச் சென்று இருந்தா லும், இந்த ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ள படியே மகிழ்ச்சி அடைகி றேன். பெருமைப் படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த அந்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்-அமைச்சரின் செயலாளர் டாக்டர் உமாநாத் ஸ்பெ யின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • டிரம்ப், தனது பதவிக்காலத்தில் சீனாவிற்கு 25 சதவீத இறக்குமதி விதித்திருந்தார்
    • என் பதவிக்காலத்தில் அவருடன் இணைந்து செயல்பட முடிந்தது என்றார் டிரம்ப்

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்பொதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

    நாட்டின் முன் நிற்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கு தாங்கள் பரிந்துரைக்கும் தீர்வுகள் குறித்து இருவரும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    2018ல், தனது பதவிக்காலத்தில் டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதியை விதித்தார்.

    இதற்கு பதிலடியாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தார்.

    உலக வர்த்தகத்தில் மிக பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவிய வரிவிதிப்பு போட்டியால் இரு நாட்டு உறவில் சிக்கல் நிலவியது.


    இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தின் போது அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன வர்த்தகம் குறித்து கேட்கப்பட்டது.

    அப்போது டிரம்ப் பதிலளித்ததாவது:

    தேவைப்பட்டால், அமெரிக்காவிற்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எனக்கு பிடிக்கும். எனது பதவிக்காலத்தின் போது அவர் எனக்கு நல்ல நண்பராகத்தான் இருந்தார். அவருடன் என்னால் இணைந்து செயல்பட முடிந்தது.

    ஆனால், சீனாவிற்கு எதிராக நான் எடுத்த சில முடிவுகளை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை.

    3 வருடங்களுக்கு முன்பு வரை, அயல்நாட்டு தலைவர்கள், நம் நாட்டை மிகவும் மதிப்புடன் பார்த்தார்கள். ஆனால், இன்று (பைடன் ஆட்சிக்காலத்தில்) நமது நாட்டை ஒரு கேலிப்பொருளாக எண்ணுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது பிரசாரங்களின் போது, தற்போது சீனாவிற்கு "அதிக முன்னுரிமை தரப்படும் நாடு" (most favored nation) எனும் அந்தஸ்து தரப்படுவதை, திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்வு சீனாவுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வருகிறார்.
    • ராணுவம் தொடர்பான இந்தியா உடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க மாலத்தீவு மறுத்து விட்டது.

    மாலத்தீவில் உள்ள விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்தது. மனிதாபிமான அடிப்படையிலான உதவி, மருத்துவ பொருட்கள் தொடர்பான உதவி ஆகியவற்றிற்காக பயன்படுத்தி வந்தது.

    புதிதாக பதவி ஏற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மார்ச் 10-ந்தேதி மூன்று தளங்களில் ஒன்றில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறும். மே 10-ந்தேதி மேலும் இரண்டு தளங்கள் என முற்றிலுமாக இந்திய ராணுவம் வெளியேறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மாலத்தீவு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்றத்தில் பேசிய மகமது முய்சு "எந்தவொரு நாடும் எங்களது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவது அல்லது குறைந்து மதிப்பிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்திய ராணுவம் வெளியேறும்" என்றார்.

    87 இடங்களை கொண்டிருக்கும் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான எதிர்க்கட்சிகளான எம்.டி.பி. (43), ஜனநாயக கட்சி (13) எம்.பி.க்கள் முகமது முய்சுவின் பேச்சை புறக்கணித்தனர். நிர்வாகப் பதவியை பெறுவதற்கான ஏழு எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 80 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் 24 எம்.பி.க்கள் முன்னிலையில்தான் முகமது முய்சு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு காரணங்களுக்காக எஸ்யூவி ரக கார்களையே மக்கள் விரும்புகின்றனர்
    • நகரிலேயே வசிப்பவர்களுக்கான வாகன நிறுத்த கட்டணத்தில் மாற்றம் இல்லை

    மேற்கத்திய நாடுகளில் பொது போக்குவரத்திற்கான அரசு வாகனங்கள் குறைவு. மக்களில் பெரும்பாலானோர், கார்களையே தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

    சமீப சில வருடங்களாக, உலகளவில் எஸ்யூவி (Sports Utility Vehicles) எனப்படும் கார்களின் உற்பத்தி அதிகமாகி விட்டது.

    அவற்றில் அமரும் இட வசதி, பயணிப்பவர்களுக்கான எண்ணிக்கை, பொருட்களுக்கான இடம் உள்ளிட்டவை சிறிய கார்களை விட அதிகம். மேலும், இவை நீண்ட தூர பயணத்திற்கும், கரடுமுரடான சாலைகளிலும் செலுத்துவதற்கு தகுதி வாய்ந்தவை.

    எனவே, பெரும்பாலான மக்கள் எஸ்யூவி ரக கார்களையே விரும்பி வாங்குகின்றனர்.

    ஆனால், இவற்றை நிறுத்த அதிக இடம் தேவைப்படும்.

    இந்நிலையில், பாரிஸ் நகரில் வாகன நிறுத்துமிடங்களில் இது சிக்கலை தோற்றுவித்ததால், இவற்றிற்கான வாகன நிறுத்த கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்த அரசு, இது குறித்து மக்களின் எண்ணத்தை அறிய பொதுஜன வாக்கெடுப்பு (referendum) நடத்தியது.

    நேற்று நடைபெற்ற இந்த பொதுஜன வாக்கெடுப்பில், சுமார் 54.5 சதவீத மக்கள் கட்டண அதிகரிப்பிற்கு சம்மதித்துள்ளனர்.


    இதன்படி, பாரிஸ் நகரத்திற்கு உள்ளே, 1.6 டன் மற்றும் கூடுதலான எடையுள்ள வாகனங்களுக்கு சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம், சுமார் ரூ.1600 (18 யூரோக்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண விகிதம், முன்பிருந்ததை காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இது, தினந்தோறும் பல வெளியூர்களில் இருந்து பாரிஸ் நகருக்கு பல்வேறு பணிகளுக்காக வருபவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

    பாரிஸ் நகரிலேயே வசிப்பவர்களுக்கான கட்டணம் மாற்றப்படாததால், அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

    பாரிஸ் நகர மேயர், ஆன் ஹிடால்கோ (Anne Hidalgo), இதுவரை தனது 10-வருட பதவிக்காலத்தில், நகரின் பல இடங்களை பாதசாரிகளுக்கு சாதகமாகவும், சைக்கிள் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாற்றி அமைத்து வருகிறார்.

    எஸ்யூவி ரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது உயிரிழப்புகள் அதிகமாவதாகவும், அவற்றின் பயன்பாட்டிற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதாகவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்த கட்டண உயர்வு பலராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது.

    • தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது.
    • காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்கா நாடான சிலியில் உள்ள கடற்கரை நகரமான வினாடெல்மர் மற்றும் வாலடரைகோ மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென வனப்பகுதிக்குள் வேகமாக பரவியது.

    பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்ததால் ஏராளமானோர் சிக்கி தீயில் கருகி இறந்தனர். பலியானவர்கள் உடல்கள் ரோட்டில் கருகிய நிலையில் கிடந்தது. பலர் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

    இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. தெடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    காட்டுத்தீயில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையானது. தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு மிகப்பெரிய சோகத்தை எதிர்கொண்டுள்ளது என சிலி அதிபர் கேப்ரியல் போரிஸ் தெரிவித்துள்ளார்.

    சிலிநாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு கடுமையான பூகம்பம் ஏற்பட்டு 500 பேர் இறந்தனர். அதற்கு பிறகு நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    • அதிகாலை 3 மணிக்கு கையெறி குண்டுகள், துப்பாக்கியால் தாக்குதல்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள உள்ளது டெரா இஸ்மாயில் கான் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இநத் தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.

    போலீஸ் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான அதிகப்படியான வீரர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் மட்டும் 93 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 90 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 135 பேர் காயம் அடைந்ததாகவும் செய்தி நிறுவனம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 15 தனிநபர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

    தேர்தல் அலுவலக கட்டிடம் மீது கையெறி குண்டு வீச்சு: 6 பேர் படுகாயம்

    பாகிஸ்தானில் வருகிற 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சில நாட்களாக அந்த நாட்டில் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும், குண்டு வெடிப்புகளும் நடந்து வருவது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் கராச்சியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக பலுசிஸ்தான் மாகாணம் கலாட் நகர் முசுல் சராட் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலக கட்டிடத்தை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பினார்கள்.

    இந்த குண்டு அலுவலக கட்டிடம் அருகே விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். வெடித்த குண்டு எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை. அதனை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வீசிய மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர்.

    தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ×