என் மலர்tooltip icon

    உலகம்

    • முதல் குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 30 பேர் காயமடைந்தனர்
    • இரண்டாவது குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்

    பாகிஸ்தானில் நாளை அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த 1.5 வருட காலமாக அங்கு பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான் (Balochistan) பிராந்தியத்தில், பிஷின் (Pishin) மாவட்டத்தில், சுயேட்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் கான் ககர் என்பவரின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 30 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    "பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க செல்வதை தடுக்கும் வகையில்தான் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு, அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டு ஒரு "ரிமோட்" கருவியினால் இயக்கப்பட்டுள்ளது" என பலூசிஸ்தான் காவல் அதிகாரி அப்துல்லா ஜெஹ்ரி தெரிவித்தார்.

    இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக, அங்கிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கில்லா சாயிஃப் உல்லா பகுதியில் மற்றொரு குண்டு வெடித்தது.

    இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.

    "தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படும்" என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) தெரிவித்துள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள், பல காவல் அலுவலகங்கள், தேர்தல் பிரச்சார அலுவலகங்கள், பேரணிகள் என பலூசிஸ்தானின் பல பகுதிகளில் நிகழ்ந்தன.

    குண்டு வெடிப்புகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தூக்கியெறியப்பட்டதாக சம்பவத்தை நேரில்  கண்டவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்களுக்கு பின்னணியில் பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் உள்ளதாக உள்துறை தெரிவித்தது.

    • 2022 அக்டோபர் மாதம், ஈதன் தனது குற்றத்தை ஒப்பு கொண்டான்
    • ஜெனிஃபருக்கு 15 வருட சிறைக்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்

    அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தின் ஆக்ஸ்போர்டு டவுன்ஷிப் (Oxford Township) பகுதியில் உள்ளது ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளி.

    2021 நவம்பர் மாதம், இப்பள்ளியில் 15-வயது ஈதன் ராபர்ட் க்ரம்ப்லி (Ethan Robert Crumbley) எனும் மாணவன், 9 மில்லிமீட்டர் செமி-ஆட்டோமேடிக் கைத்துப்பாக்கியால் தாறுமாறாக பலரை சுட்டான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

    காவல்துறையினரால் ஈதன் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    2022 அக்டோபர் மாதம், நீதிமன்றத்தில் ஈதன் தனது குற்றத்தை ஒப்பு கொண்டான்.

    2023 டிசம்பர் மாதம், பரோலில் வெளியே வரமுடியாதபடி ஈதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    மேலும், ஈதனின் தாய் மற்றும் தந்தை ஆகியோரும் இக்குற்றத்திற்கு மறைமுகமாக உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    விசாரணைக்கு அவர்கள் வராமல் தப்பியதால், நீண்ட தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை நிறைவுற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    12 உறுப்பினர்களை கொண்ட ஜூரி 10 மணி நேரத்திற்கும் மேல் விவாதித்து முடிவு எட்டப்பட்ட இந்த தீர்ப்பில், ஈதனின் தாயார் ஜெனிஃபர் க்ரம்ப்லி (45), ஈதன் கைக்கு கிடைக்காதவாறு துப்பாக்கியை பாதுகாப்பாக வைத்து கொள்ள தவறியதே உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதால் அவர் குற்றவாளிதான் என தீர்ப்பானது.

    இதையடுத்து, ஏப்ரல் 9 அன்று அவரது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்.

    குறைந்தது 15 வருட தண்டனையாவது ஜெனிஃபருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    அமெரிக்க பள்ளிகளில் மாணவர்கள் நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரை பெற்றோருக்கு பொறுப்பு உள்ளதாக நீதிமன்றங்கள் கூறி வந்த நிலையில் முதல்முறையாக மாணவனின் தாய்க்கும் தண்டனை வழங்கப்பட்டது விவாத பொருளாக மாறியுள்ளது.

    விசாரணையின் போது, "தங்கள் குழந்தைகள் ஈடுபடும் அனைத்து செயல்களுக்கும் பெற்றோர் எவ்வாறு பொறுப்பாக முடியும்" என ஜெனிஃபர் தரப்பு வழக்கறிஞர் ஷெனன் ஸ்மித் கேள்வி எழுப்பினார். ஆனால், அவரது கேள்வி புறக்கணிக்கப்பட்டது.

    வரும் மார்ச் மாதம், ஈதனின் தந்தை ஜேம்ஸ் க்ரம்ப்லி மீது வழக்கு விசாரணை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்துக்களின் புனித "ஸ்ரீபகவத் கீதை" நூலின் மீது பிரமாணம் செய்து கொண்டார்
    • வருண் கோஷின் பெற்றோர், நரம்பியல் துறையில் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    ஆஸ்திரேலிய பாராளுமன்றம், செனட், பிரதிநிதிகள் சபை என இரு சபைகளும், "அரசர்" எனும் அந்தஸ்தில் கவர்னர்-ஜெனரல் ஒருவரையும் கொண்டது.

    செனட் பதவிக்கு, மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாரிஸ்டர் பட்டம் படித்த, இந்திய வம்சாவளியினரான வருண் கோஷ் (Varun Gosh) என்பவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.

    இந்நிலையில், தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்துக்களின் புனித "ஸ்ரீபகவத் கீதை" (Sri Bhagavad Gita) மீது பிரமாணம் செய்து பதவியேற்று கொண்டார்.

    ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இவ்வாறு நடைபெறுவது இதுவே முதல்முறை.

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), வருண் கோஷ் பதவியேற்றது குறித்து எக்ஸ் கணக்கில் மகிழ்ச்சியுடன் தனது பாராட்டுகளை தெரிவித்து அவரை வரவேற்றுள்ளார்.

    1985ல் ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெர்ரா (Canberra) நகரில் பிறந்தவர் வருண் கோஷ்.

    மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர், நரம்பியல் துறை மருத்துவர்கள். வருண், கலை மற்றும் சட்டப்படிப்பில் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அத்துடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றவர்.

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், உலக வங்கியில் (World Bank) ஆலோசகராகவும் பணி புரிந்தார்; நியூயார்க் நகரில் நிதித்துறை சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.

    தனது 17-வது வயதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் லேபர் கட்சியில் சேர்ந்தது முதல் இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

    தனது பதவி குறித்து பேசும் போது, "மிக உயர்ந்த கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உயர்தர கல்வியும், பயிற்சியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என வருண் கோஷ் தெரிவித்தார்.

    • 2023 முதல் ஆயுதமேந்திய பூர்வ குடிமக்களுக்கும் ராணுவத்திற்கும் போர் நடக்கிறது
    • தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது

    இந்தியாவின் அண்டையில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு மியான்மர் (முன்னர் பர்மா). இதன் தலைநகரம் நேபிடா (Naypyidaw).

    2021 பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் உள்நாட்டு புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றியது.

    இதை தொடர்ந்து ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வர கோரும் உள்நாட்டு அமைப்புகளுக்கும் ராணுவத்திற்கும் போர் நடைபெற்று வருகிறது.

    கடந்த 2023 அக்டோபர் முதல் ஆயுதமேந்திய அந்நாட்டு பூர்வ குடிமக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் போரில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

    மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    மியான்மரில் உள்ள ராக்கைன் (Rakhine) மாநிலத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    பல வருடங்களாக மியான்மருக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வது வழக்கம்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை (Ministry of External Affairs), ராக்கைன் மாநிலத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    ராக்கைன் மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் உள்நாட்டு பிரச்சனையால், அங்கு இந்தியர்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு ஏற்படலாம். மேலும் அங்கு தகவல் மற்றும் தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் ராக்கைன் மாநிலத்திற்கு பயணிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த மாநிலத்தில் தற்போது உள்ள இந்தியர்கள் அனைவரையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

    இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வன்முறை அதிகரித்ததால், கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியுறவு துறை இது குறித்து கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    • தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    சிகாகோ:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று தான் வசிக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததால், சையத் மசாஹிர் அலி தனது வீட்டுக்கு வேகமாக ஓடினார்.

    உடனே அவரை அக்கும்பல் விரட்டி சென்று பிடித்தது. பின்னர் இந்திய மாணவரை கொடூரமாக அக்கும்பல் தாக்கி அடித்து உதைத்தது. மாணவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. அவர் ரத்தம் வழிந்தபடியே வீடியோவில் பேசினார். அதில் அவர் கூறும்போது, "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக தாக்கினார்கள். எனக்கு உதவி செய்யுங்கள்" என்றார்.

    இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவில் எனது கணவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது 3 குழந்தைகளுடன் நான் அமெரிக்காவுக்கு சென்று கணவரை பார்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

    தாக்குதலுக்குள்ளான இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    • விரிவான மற்றும் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்கிறது ஹமாஸ்
    • ஹமாஸின் இந்த கோரிக்கையை நிராகித்து வருகிறது இஸ்ரேல்

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் காசாவில் போரினால் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றன.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. கத்தாரின் தீவிர முயற்சி காரணமாக ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர். ஒரு பிணைக்கைதிக்க மூன்று பேர் என்ற அடிப்படையில் இஸ்ரேல், ஜெயிலில் இருந்து பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது.

    அதன்பின் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. கத்தார், அமெரிக்கா போன்ற நாடுகள் முயற்சி மேற்கொண்டும் இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டு வந்தது.

    போர் நிறுத்தம், பிணைக்கைதிகளை விடுவித்தல் ஆகிவற்றில் ஹமாஸ் அமைப்பு சாதகமான பதிலை கொண்டிருப்பதாக கத்தார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    கத்தார் பிரதமர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்தார். அப்போது இந்த கருத்தை அவரிடம் தெரிவித்துள்ளார்.

    கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான், ஹமாஸின் பதில் குறித்து விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    இன்று இஸ்ரேல் செல்ல இருக்கும் நிலையில் ஆண்டனி பிளிங்கன், அதிகாரிகள் ஹமாஸின் பதிலை பெற்றுள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேல் தலைவர்களிடம் விளக்கம் அளிப்பதாக கூறினார்.

    இது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மத்தியஸ்தர்களிடம் இருந்து வரப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் நேர்மறையான உணர்வில் பதில் அளிக்கப்பட்டது" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் எங்களுடைய மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர விரிவான மற்றும் முழுமையான போர் நிறுத்தத்தை நாடுகிறது ஹமாஸ் அமைப்பு. ஆனால் இஸ்ரேல் இந்த கோரிக்கை நிராகரித்து வருகிறது.

    • இங்கிலாந்து 'சர்ரே' நகரில் வசித்து வருபவர் டேவிட் மார்ஜோட்.(வயது95)
    • இவர் ஓய்வுபெற்ற மனநல மருத்துவர் ஆவார்.

    72 ஆண்டுகளுக்குப்பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து 'நவீன ஐரோப்பிய தத்துவத்தில்' எம்.ஏ முதுகலைப்பட்டத்தை தற்போது பெற்று உள்ளார்.

    95 வயதில் மிகப் பழமையான பட்டதாரி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். மேலும் முனைவர் பட்டம் பெற படிக்கவும் பரிசீலனை செய்து வருகிறார்.

    இதுகுறித்து மார்ஜோட் கூறும் போது, "பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் மனநல மருத்துவத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், தத்துவம் மற்றும் நவீன தொழிலில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்வதற்காக மீண்டும் கல்விக்குச் செல்ல முடிவு செய்தேன்."

    "நான் வாழும் காலநேரத்தை சரியாக பயன்படுத்த தெரிந்தவன். உள்ளூர் பேப்பர் ஒன்றில் கிங்ஸ்டன் பல்கலைக்கழக படிப்புக்கான விளம்பரத்தைப் பார்த்தேன். அதை தொடர்ந்து விண்ணப்பம் செய்தேன்."

    "பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் எனக்கு படிக்க மிகவும் உதவியாக இருந்தனர். இது ஒரு அற்புதமான பாடமாக இருந்தது. மற்றும் கற்பித்தல் சிறப்பாக இருந்தது. அதனால் எளிதில் முதுகலைப்பட்டம் பெற முடிந்தது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. மேலும் முனைவர் பட்டம் பெற படிக்கவும் ஆசை இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    டாக்டர் மார்ஜோட் தனது பட்டமளிப்பு நாளில் அவரது மகன் மற்றும் மருமகனுடன் மேடையைக் கடக்கும்போது அவரது நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு, கைத்தட்டலை பெற்றார்.

    • உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இரண்டும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்
    • யோகாவினால் மன அழுத்தம் பெருமளவு குறைகிறது என்றார் அர்னால்ட்

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, நீரிழிவு (Diabetes).

    வழக்கத்தில் "சர்க்கரை நோய்" என அழைக்கப்படும் நீரிழிவு நோயினால் தாக்கப்படுபவர்களுக்கு மருந்து, ஊசி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றுடன் உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஹாலிவுட் ஹீரோவும், உடற்பயிற்சி ஆர்வலருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) நீரிழிவு நோயிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    யோகா, நீரிழிவிலிருந்து தற்காத்து கொள்ள ஒரு நல்ல வழிமுறை.

    நீரிழிவு நோயின் மீது யோகா ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்ள 16 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவற்றில் யோகா சிறப்பான பலனை வெளிப்படுத்தின.

    யோகா பயிற்சியில் தசைகளுக்கும், உடல் இயக்கங்களுக்கும் சவாலோடு கூடிய பயிற்சி கிடைக்கிறது.

    மேலும், யோகா பயில்பவர்களின் மனம் அமைதியடைகிறது. இதன் மூலம் மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.

    யோகா மட்டுமின்றி நடைபயிற்சி கூட பயனுள்ள வழிமுறைதான்.

    இரண்டு வழிமுறைகளையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை ஏற்படுத்தி கொண்டு அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

    இவ்வாறு அர்னால்ட் கூறினார்.


    76-வயதிலும் ஆரோக்கியமாக வாழும் அர்னால்ட் பரிந்துரைத்திருக்கும் வழிமுறைகள் கடைபிடிக்க எளிதானவை என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    2018 ஆகஸ்ட் மாத அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் (National Library of Medicine) பதிவான ஒரு ஆய்வறிக்கையில் தவறாமல் யோகா பயிற்சி செய்து வருபவர்களுக்கு உணவு உண்ணும் முறைகளிலும் ஒரு கட்டுப்பாடு வருவதாகவும், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் பெருமளவு குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    • சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
    • உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார்.

    அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரால் கோமாவில் இருந்து மீள முடியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.

    அவரை கோமாவில் இருந்து குணமாக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வர அவரது தாய் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். எனினும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெனிபரின் தாய் வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார். அதை கேட்ட, ஜெனிபர் சிரித்துள்ளார். இதை கவனித்த அவரது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

    5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகன் தனது காமெடியை கேட்டு கோமாவில் இருந்து சற்று மீண்டதை அவரால் நம்பமுடியவில்லை. உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 1.5 லட்சம் லைக்குகளை குவித்தது. பயனர்கள் பலரும் தாங்கள் அந்த நகைச்சுவையை கேட்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். 

    • ஐரோப்பாவிலேயே லுஃப்தான்ஸா விமான சேவை 2-ஆம் இடம் வகிக்கிறது
    • லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்

    ஜெர்மனியின் புகழ் பெற்ற விமான சேவை நிறுவனம், லுஃப்தான்சா (Lufthansa).

    அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்வதில் ஐரோப்பாவிலேயே லுஃப்தான்சா விமான சேவை இரண்டாம் இடம் வகிக்கிறது.

    லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்த விமான நிறுவனத்தின் பல்வேறு நிலையங்களில் தரை கட்டுப்பாட்டில் பணி புரியும் 25,000 ஊழியர்களுக்காக அவர்கள் இணைந்துள்ள வெர்டி (Verdi) தொழிற்சங்கம், நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    ஜெர்மனியின் பல துறைகளை சேர்ந்த ஊழியர்களை கொண்ட மிக பெரிய தொழிலாளர் நலச்சங்கம் வெர்டி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால், லுஃப்தான்சா விமான தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், ஃப்ராங்க்ஃபர்ட், மியூனிச், ஹாம்பர்க், பெர்லின் மற்றும் டஸ்ஸல்டார்ஃப் ஆகிய இடங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட உள்ளது.

    இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வெர்டி தொழிற்சங்கம், பிப்ரவரி 7, புதன்கிழமை காலை 04:00 மணிக்கு தொடங்கி மாலை 07:10 மணி வரை பணி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.


    இதனால் சுமார் 90 சதவீத விமான சேவைகள் பாதிக்கப்படுவதுடன் 1 லட்சம் பயணிகளுக்கும் பயண தடை ஏற்படும்.

    வெர்டி தொழிற்சங்கம், ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 12.5 சதவீத உயர்வை கோரி போராடி வருகிறது. ஒரு-நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பயன் இல்லையென்றால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வெர்டி அறிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே ஜெர்மனியில் விமானம், பேருந்து, ட்ராம் (tram), ரெயில், டிரக் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளிலும், விவசாய துறையிலும் பல வேலைநிறுத்த போராட்ட அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஓய்வுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவார்கள்
    • உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா பயணிகளை நம்பித்தான் உள்ளது

    கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா (Tanzania) நாட்டுடன் இணைந்துள்ள முக்கிய சுற்றுலா பிரதேசம், ஜான்ஜிபார் (Zanzibar).

    இப்பகுதியின் வருவாயில் 90 சதவீதம், இந்திய கடல் பகுதியில் அழகான கடற்கரைகளும் பாரம்பரியமும் உள்ள இதன் தீவுகளில் ஓய்வு எடுக்க வரும் சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    கோடை காலம் நெருங்கும் நிலையில், உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் ஜான்ஜிபாருக்கு வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவது அங்கு வழக்கமான ஒன்று.

    சமீப சில மாதங்களாக இப்பகுதியில் மதுபானங்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.


    பீரின் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மதுபான தட்டுப்பாட்டால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிர்பானங்களை வழங்கும் நிலையில் தங்கும் விடுதி மற்றும் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மதுபானம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தால் வரும் மாதங்களில் பயணிகள் வருகை குறைந்து விடும் என விடுதி உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர்.

    ஜான்ஜிபார் தீவுகளின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அங்கு மதுபான உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேவைகளுக்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து மதுபானங்களை இறக்குமதி செய்கின்றனர்.

    இறக்குமதியாளர்கள் ஜான்ஜிபாரிலேயே பிறந்திருக்க வேண்டும் என்பதும் $12000 ஆண்டு கட்டணம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதும் விதிமுறை.

    புதிதாக 3 இறக்குமதியாளர்களுக்கு உரிமம் வழங்கியதிலிருந்து பல்வேறு காரணங்களால் தொடரும் சிக்கலில் இறக்குமதியாக வேண்டிய மதுபானங்கள் வருவதில்லை.

    உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் சுற்றுலாவையே நம்பி உள்ளதால் இந்த நிலைமை அவர்களை அச்சுறுத்துவதாகவும், அரசு விரைந்து நிலைமையை சீர் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    கடந்த 2023ல், அதற்கு முந்தைய வருடங்களை விட ஜான்ஜிபாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை 16 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பான் நாட்டில் குடி புகுந்தார் கரோலினா
    • உண்மையை மறைத்தது தவறு என கரோலினா கூறியதாக "மிஸ் ஜப்பான் சங்கம்" அறிவித்தது

    கடந்த ஜனவரி 22 அன்று ஜப்பானில் நடைபெற்ற "மிஸ் ஜப்பான்" போட்டியில், கரோலினா ஷீனோ (Karolina Shiino) எனும் 26 வயது இளம் பெண் பட்டம் வென்றார்.

    உக்ரைன் நாட்டில் பிறந்த கரோலினா, தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பானில் குடி புகுந்தார். நகோயா பகுதியில் வளர்ந்த கரோலினா, அவரது மாற்றாந்தந்தையின் பெயரை இணைத்து கொண்டுள்ளார்.

    உக்ரைனில் பிறந்திருந்தாலும், கரோலினா ஜப்பானிய மொழியில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதுடன் அவர் ஜப்பானிய பெண்ணை போன்றே இல்லை என்பதால் அழகி போட்டியில் அவருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது தவறு என ஒரு சாராரும், அயல்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் ஜப்பானிய போட்டியில் வென்றது பாராட்டுக்குரியது என வேறொரு தரப்பினரும் இவரது வெற்றியை குறித்து கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஷுகன் பன்ஷுன் (Shukan Bunshun) எனும் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கரோலினாவிற்கு ஒரு திருமணமான ஆணுடன் நட்பை கடந்த உறவு இருந்ததாக செய்தி வெளிவந்தது.

    இதை தொடர்ந்து தற்போது அழகி போட்டியை நடத்திய "மிஸ் ஜப்பான் சங்கம்", பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட அந்த ஆண் திருமணமானவர் என முன்னரே அறிந்திருந்ததாகவும் அதை மறைத்த தவறை ஒப்பு கொண்ட கரோலினா தனது "மிஸ் ஜப்பான்" பட்டத்தை திரும்ப அளித்து விட்டதாகவும் தெரிவித்தது.

    இது குறித்து கரோலினா, "என்னால் விளைந்த சிக்கல்களுக்கும், என்னை நம்பியவர்களை ஏமாற்ற நேர்ந்ததற்கும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" என தெரிவித்தார்.

    ×