search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    3 மடங்கு கட்டண உயர்வுக்கு சம்மதித்த பாரிஸ் நகர மக்கள்
    X

    3 மடங்கு கட்டண உயர்வுக்கு சம்மதித்த பாரிஸ் நகர மக்கள்

    • பல்வேறு காரணங்களுக்காக எஸ்யூவி ரக கார்களையே மக்கள் விரும்புகின்றனர்
    • நகரிலேயே வசிப்பவர்களுக்கான வாகன நிறுத்த கட்டணத்தில் மாற்றம் இல்லை

    மேற்கத்திய நாடுகளில் பொது போக்குவரத்திற்கான அரசு வாகனங்கள் குறைவு. மக்களில் பெரும்பாலானோர், கார்களையே தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

    சமீப சில வருடங்களாக, உலகளவில் எஸ்யூவி (Sports Utility Vehicles) எனப்படும் கார்களின் உற்பத்தி அதிகமாகி விட்டது.

    அவற்றில் அமரும் இட வசதி, பயணிப்பவர்களுக்கான எண்ணிக்கை, பொருட்களுக்கான இடம் உள்ளிட்டவை சிறிய கார்களை விட அதிகம். மேலும், இவை நீண்ட தூர பயணத்திற்கும், கரடுமுரடான சாலைகளிலும் செலுத்துவதற்கு தகுதி வாய்ந்தவை.

    எனவே, பெரும்பாலான மக்கள் எஸ்யூவி ரக கார்களையே விரும்பி வாங்குகின்றனர்.

    ஆனால், இவற்றை நிறுத்த அதிக இடம் தேவைப்படும்.

    இந்நிலையில், பாரிஸ் நகரில் வாகன நிறுத்துமிடங்களில் இது சிக்கலை தோற்றுவித்ததால், இவற்றிற்கான வாகன நிறுத்த கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்த அரசு, இது குறித்து மக்களின் எண்ணத்தை அறிய பொதுஜன வாக்கெடுப்பு (referendum) நடத்தியது.

    நேற்று நடைபெற்ற இந்த பொதுஜன வாக்கெடுப்பில், சுமார் 54.5 சதவீத மக்கள் கட்டண அதிகரிப்பிற்கு சம்மதித்துள்ளனர்.


    இதன்படி, பாரிஸ் நகரத்திற்கு உள்ளே, 1.6 டன் மற்றும் கூடுதலான எடையுள்ள வாகனங்களுக்கு சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம், சுமார் ரூ.1600 (18 யூரோக்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண விகிதம், முன்பிருந்ததை காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இது, தினந்தோறும் பல வெளியூர்களில் இருந்து பாரிஸ் நகருக்கு பல்வேறு பணிகளுக்காக வருபவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

    பாரிஸ் நகரிலேயே வசிப்பவர்களுக்கான கட்டணம் மாற்றப்படாததால், அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

    பாரிஸ் நகர மேயர், ஆன் ஹிடால்கோ (Anne Hidalgo), இதுவரை தனது 10-வருட பதவிக்காலத்தில், நகரின் பல இடங்களை பாதசாரிகளுக்கு சாதகமாகவும், சைக்கிள் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாற்றி அமைத்து வருகிறார்.

    எஸ்யூவி ரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது உயிரிழப்புகள் அதிகமாவதாகவும், அவற்றின் பயன்பாட்டிற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதாகவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்த கட்டண உயர்வு பலராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது.

    Next Story
    ×