என் மலர்
உலகம்
- லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.
- விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்தார்.
ஆனாலும் அந்த பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது குழந்தைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.
இதையறிந்த அவரது குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
- தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றிணைந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கார்னி போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளையில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற இங்கிலாந்தை சேர்ந்த எண்ணை கப்பல் மீதும் ஏவுகணைகளை வீசி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இங்கிலாந்தின் மார்லின் லுவாண்டா கப்பல், செங்கடலை கடந்து ஏமன் வளைகுடாவில் சென்றபோது ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலில் தீப்பிடித்தது. அதை கப்பல் ஊழியர்கள் போராடி அணைத்தனர்.
இதுகுறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறும்போது அமெரிக்கா, இங்கிலாந்தின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றனர்.
மத்திய கிழக்கு பகுதி கடலில் தொடர்ந்து வணிக கப்பல்களை தொந்தரவு செய்து வரும் ஹவுதி கிளார்ச்சியாளர்கள் தற்போது அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கடந்த சில தசாப்தங்களில் மிகப்பெரிய மோதலாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்று அதிகாலை செங்கடலை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராக வைத்திருந்த ஹவுதி கப்பல் எதிர்ப்பு ஏவுகணைக்கு எதிராக அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹவுதியின் அல்-மசிராஹ் செயற்கைக்கோள் செய்தி சேனல், துறைமுக நகரான ஹொடெய்டா அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், சேதம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். முதன்முறையாக அமெரிக்காவின் போர்க்கப்பலை குறிவைத்துள்ளது.
- 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
- பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும்.
உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ராயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 தியேட்டர்கள், 40 ஓட்டல்கள், பார்கள் இருக்கின்றன.
இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண்ட கப்பல் தனி உலகமாக கடலில் உலா வரும். இந்த கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.
- கடைகளுக்கு சென்று மக்கள் எளிதாக துப்பாக்கிகளை விலைக்கு வாங்கலாம்
- 14 பேரை கொன்ற அந்த மாணவனிடம் 7 துப்பாக்கிகள் இருந்தது தெரிய வந்தது
மத்திய ஐரோப்பாவில் உள்ள 1.25 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு, செக் குடியரசு (Czech Republic). இதன் தலைநகரம் பிரேக் (Prague).
செக் நாட்டில், பொதுமக்கள் துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று எந்த கட்டுப்பாடும் இன்றி அதனை வாங்குவது மிக எளிது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னை காத்து கொள்ள துப்பாக்கி வைத்திருப்பதை அடிப்படை உரிமையாக அந்நாட்டு அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம், செக் குடியரசின் பிரபலமான சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு 24 வயது பட்டதாரி மாணவன், திடீரென அங்கு இருந்தவர்களை நோக்கி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
மாணவன் சுட்டதில், சக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
பிறகு, அந்த மாணவன் வேறு ஒரு ஏஆர்-10 ரக துப்பாக்கியை எடுத்து பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு வாசலில் அங்கும் இங்கும் நடந்தவாறு பிறரை மிரட்டினான்.
கொலை வெறியுடன் சுற்றிய மாணவனிடமிருந்து தப்பிக்க பல மாணவர்கள் பல்கலைக்கழக் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஜன்னல்களுக்கு கீழே ஒளிந்து கொண்டனர்.

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். அவனை பிடிக்க சிலர் முயலும் முன்பாக வேறு ஒரு சிறு துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

விசாரணையில், மன அழுத்தம் காரணமாக அவன் இவ்வாறு செய்ததாகவும், அவனிடம் 7 துப்பாக்கிகள் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, செக் குடியரசின் 281 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் அவசர அவசரமாக கூடியது.
சம்பவம் நடந்து சுமார் 1 மாதம் கடந்த நிலையில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தத்திற்கு கீழ் சபை முன்மொழிந்துள்ளது. மேல்சபையான "செனட்" ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி கையெழுத்திட்டால் இது சட்டமாகி விடும்.
2026ல் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
"உலகின் அமைதியான நாடுகள்" பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் செக் குடியரசு, 8-வது நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தாமதம் மற்றும் காற்று பற்றாக்குறை ஆகியற்றால் அந்த பயணி இந்த முடிவை எடுக்க காரணம்.
- பெரும்பாலான பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்த நிலையிலும் கைது செய்யப்பட்டார்.
விமானத்தில் பயணம் செய்யும்போது சில பயணிகள் வினோதமாக நடந்த கொள்வது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமான சம்பவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து, விமான இறக்கையில் ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளார் ஒரு பயணி. இறக்கையின் பாதி தூரம் வரை சென்ற அந்த நபர், மீண்டும் விமானத்திற்குள் வந்தார். விமானத்தை சேதப்படுத்தவோ, அசம்பாவிதமான செயல்களிலோ ஈடுபடவில்லை.
ஆனால், விமான போக்குவரத்து பாதுகாப்பு விதிகளின்படி அந்த நபரை விமான ஊழியளர்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.
கவுதமாலாவிற்கு செல்வதற்கான ஏரோமெக்சிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் நான்கு மணி நேரம் காலதாமதம் ஆனதாக தெரிகிறது. இதனால் பயணம் செய்ய இருந்தோர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் காற்று குறைவான இடத்தில் அவர்கள் அமர்த்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை.
இதனால் மற்ற பயணிகளின் ஆதரவோடு எமர்ஜென்சி கதவை திறந்து அவ்வாறு செய்துள்ளார். விமானத்தில் இருந்த 77 பயணிகள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். என்றபோதிலும் விமான ஊழியர்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
அந்த நபருக்கு ஆதரவான இருந்து பயணிகள் "காலதாமதம், காற்று குறைபாடு பயணிகள் ஆரோக்கியதிற்கு கேடுவிளைவிப்பதாக இருந்தது. அவர் எங்கள் உயிரை காப்பாற்றினார் எனத் தெரிவித்தனர்.
- குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார்.
- தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
நியூயார்க்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினார்.
1990-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2019-ம் ஆண்டு ஜீன் கரோல் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு பொய்யர், அவரை தான் சந்தித்ததில்லை என்று டிரம்ப் கூறினார்.
இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அவதூறு வழக்கில் ஜீன் கரோலுக்கு 83.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.690 கோடி) நஷ்டஈட்டை டிரம்ப் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
அதில், 2019-ம் ஆண்டு டிரம்ப் தனது தவறான மற்றும் தீங்கு இழைக்கும் கருத்துக்களால் ஜீன் கரோலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 18.3 மில்லியன் அமெரிக்க டாலரும் தண்டனைக்குரிய சேதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலரும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு முற்றிலும் அபத்தானமானது என்று தெரிவித்த டிரம்ப், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்படும். நமது சட்ட அமைப்பு கட்டுப்பாட்டில் இல்லை. அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அனைத்து உரிமைகளையும் மறித்து விட்டனர். இது அமெரிக்கா அல்ல என்றார்.
ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்க அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இத்தீர்ப்பு வெளியாகி உள்ளது.
- சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
ஜெருசலேம்:
பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் இஸ்ரேல், இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. இதில் விசாரணை நடை பெற்று வரும் நிலையல் நேற்று கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியது.
அதில், காசாவில் இனப்படுகொலை தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கோர்ட்டு தீர்ப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேல் மீது சுமத்தப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறானது மட்டுமல்ல, அது மூர்க்கத்தனமானது, எல்லா இடங்களிலும் உள்ள கண்ணியமான மக்கள் அதை நிராகரிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டையும் போலவே, இஸ்ரேலுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு உள்ளார்ந்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையை இஸ்ரேலுக்கு மறுக்கும் மோசமான முயற்சி. இஸ்ரேல் அரசுக்கு எதிரான அப்பட்டமான பாகுபாடு ஆகும். எங்கள் நாட்டைப் பாதுகாக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் தேவையானதை தொடர்ந்து செய்வோம்.
ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும். இஸ்ரேலின் போர் ஹமாசுக்கு எதிரானது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரானது அல்ல. தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவோம், பொதுமக்களை ஹமாஸ் அமைப்பினர் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே காசாவின் கான்யூனுஸ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் நிலையில் அங்குள்ள நாசர் ஆஸ்பத்திரியில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதே போல் அங்குள்ள மற்ற ஆஸ்பத்திரிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது.
- சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில நிறுவனங்கள் பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன.
அதுபோன்ற விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சில நேரங்களில் எதிர்மறையாகவும் அமைந்து விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் சமூகவலைத்தளங்கள் மற்றும் சுவர் போஸ்டர்கள் மூலம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடு வாங்கினால் மனைவி இலவசமா? என அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதாவது தங்கள் முயற்சியில் வீடு வாங்கி உங்கள் மனைவிக்கு கொடுங்கள் என்ற அர்த்தத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
- கடும் குளிர் காரணமாக நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டது.
- லாகூரில் மட்டும் 47 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மூன்று வார காலத்தில் 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. கடும் குளிர் காரணமாக குழந்தைகள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிம்மோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி அவதியுற்று வந்ததாக பஞ்சாப் அரசு தெரிவித்து இருக்கிறது.
கடும் குளிர் காரணமாக பள்ளிகளில் அதிகாலை இறைவணக்க கூட்டத்தை நடத்த அம்மாகாண அரசு ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இந்த தடை உத்தரவு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜனவரி 1-ம் தேதியில் இருந்து அம்மாகாணத்தில் 10 ஆயிரத்து 520 பேருக்கு நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் உயிரிழந்த 220 குழந்தைகளின் வயது 5-க்கும் குறைவு ஆகும். மேலும் லாகூரை சேர்ந்த 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
- உலகின் பொருளாதார வளர்ச்சியில் மிக உயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- அதற்கு பிரதமர் மோடியின் தலைமையே காரணம் என ரஷிய அதிபர் புதின் கூறினார்.
மாஸ்கோ:
ரஷிய மாணவர் தினத்தை முன்னிட்டு அதிபர் விளாடிமிர் புதின் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா. அதற்கு காரணம் தற்போதைய பிரதமரின் தலைமைப் பண்புகளே ஆகும். அவரது தலைமையில் தான் இந்தியா இத்தகைய வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது.
சர்வதேச அரங்கில் தங்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதால் இந்தியா மற்றும் அதன் தலைமையை ரஷியா நம்பியிருக்க முடியும். இந்தியாவை நம்பகத்தன்மை கூட்டாளியாக ரஷியா கருதுகிறது.
இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. இன்றைய உலகில் இது எளிதான விஷயம் அல்ல. 150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இதனை செய்வதற்கு உரிமை உள்ளது.
பிரதமர் தலைமையில் இந்தியாவின் உரிமை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது வெறும் அறிக்கை மட்டும் அல்ல. கூட்டுப்பணியை ஒழுங்கமைப்பதில் இருந்து முக்கியமானது.
மேற்கு உலக நாடுகளின் அரசியல் விளையாட்டு இந்தியாவிடம் எடுபடாது. ஒரு நாட்டையும், அதன் தலைமையையும் நம்பி ஒத்துழைக்க முடியுமா அல்லது அதன் தேசிய நலனுக்காக அந்த நாடு சில முடிவுகளை எதிராக எடுக்குமா போன்ற அரசியல் விளையாட்டுகள் இந்தியாவிடம் இருக்காது என குறிப்பிட்டார்.
- இந்தியா தனது 75-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது.
- இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
நாட்டின் 75-வது குடியரசு தின விழா நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றிய நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், குடியரசு தினம் கொண்டாடும் இந்தியாவுக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் உலகின் அதிக சவாலான விஷயங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இங்கிலாந்து எதிர்நோக்குகிறது என தெரிவித்தார்.
"காமன்வெல்த்-இன் 75-வது ஆண்டு விழாவில் நமது உறவு மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன். இது நம்மை ஒன்றிணைக்கும் நிலையான மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளின் பொருத்தமான நினைவூட்டல் ஆகும். உலகின் கடினமான சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள நமது நாடுகள் தொடர்ச்சியாக இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்," என்று மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.
- கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் பிப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
- இந்திய, இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அனுமதி அளித்துள்ளது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலய திருவிழா பிப்.23 ஆம் தேதி தொடங்குகிறது. விழாவின் முதல் நாள் கொடியேற்றம் மற்றும் தேர்பவனி நடைபெறும். இரண்டாவது நாளான பிப்.24 அன்று சிறப்பு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும்.
இந்த இரண்டு நாள் திருவிழாவில், இந்திய, இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் கச்சத்தீவு செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் பிப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சத்யதாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்.6க்குள் கொடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த பக்தர்கள் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் படகில் கொண்டு செல்லக்கூடாது" எனத் தெரிவித்தார்






