என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
    • மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள்.

    மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார்.

    சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.


     இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று,'மொபைல் செயலி' மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள். கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபானம் கடை மூலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை. சவுதிஅரேபியா நாட்டில் முதல் மதுபான கடை திறக்கப்படுவதன் மூலம் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து விலகி செல்கிறாரா இளவரசர் முகமதுபின் சல்மான் என கேள்வி எழுந்து உள்ளது.

    • பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.
    • பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

    துருக்கியை சேர்ந்தவர் பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே. இவர் துபாயில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அங்கு சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வந்த பில் தொகையை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மிகப்பெரிய உணவு பில்லான அதில், மொத்தம் ரூ.90 லட்சம் பில் தொகை இருந்தது. 'பணம் வரும்... போகும்...' என்ற தலைப்புடன் அந்த பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கிய காபி மற்றும் சமையல்காரரின் கையொப்பம் கொண்ட இறைச்சி உணவுகள் உள்ளிட்ட பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    உணவை தவிர பல விலை உயர்ந்த பானங்களையும் அருந்தியதற்கான தொகையும் பில்லில் இருந்தது. அதோடு வாடிக்கையாளர்கள் தாராளமாக சுமார் ரூ.20 லட்சத்தை டிப்ஸ்சாக வழங்கி இருந்ததும் பில்லில் இடம் பெற்றிருந்தது. இந்த பில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பசியால் அவதிப்படும் போது ஒரு நேர உணவுக்காக இவ்வளவு செலவழிப்பது வெட்கக்கேடானது என ஒரு பயனரும், பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது.
    • உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது.

    உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தொடர் காய்ச்சல். ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதனையடுத்து, மக்களை காக்க பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது. இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகம்.
    • வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டுபிடித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பூமியை போன்று வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டு பிடித்துள்ளது.

    நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜிஜே 9827டி என்று பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் இந்த கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஹப்பிள் தொலைநோக்கி தற்போது கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 800 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

    இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • பிரிந்துபோன உறவுகள், நண்பர்களை மீண்டும் சந்திக்க சமூக வலைதளங்கள் உதவுகின்றன.
    • 2002-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி இரட்டையர்களின் தாயாரான ஆஷாசோனி இவர்களை பெற்றெடுத்துள்ளார்.

    சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் பலரும் சிக்கல்களை சந்திப்பதாக பொதுவாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான நன்மைகளும் ஏற்படுகின்றன.

    குறிப்பாக உலகெங்கிலும் உள்ள மக்களை எளிதில் தொடர்பு கொள்ள சமூக வலைதளங்கள் வரமாக அமைந்துள்ளன. தனி நபர்கள் தொழில்முறையாக பல தொடர்புகளையும், நண்பர்களையும் உருவாக்க சமூக வலைதளங்கள் பாலம் அமைத்து தருகின்றன.

    அதேபோல பிரிந்துபோன உறவுகள், நண்பர்களை மீண்டும் சந்திக்க சமூக வலைதளங்கள் உதவுகின்றன. அந்த வகையில் ஜார்ஜியாவை சேர்ந்த ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறக்கும்போதே பிரிந்த நிலையில் 19 வருடங்களுக்கு பிறகு டிக்டாக் மூலம் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஜார்ஜியாவை சேர்ந்தவர் அனோசர்தானியா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் தனது நண்பர் ஒருவரிடம் இருந்து டிக்டாக் வீடியோவை பெற்றார். அந்த வீடியோவில் சர்தானியாவை போன்றே நீல நிற முடியுடன் ஒரு பெண் விளையாடும் காட்சி இருந்தது.


    முதலில் அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை சர்தானியா என்று கருதிய அவரது நண்பர் ஆர்வத்தின் காரணமாக புதிதாக சாயம் பூசப்பட்ட நீல நிற முடியை பற்றி விசாரித்தார். அப்போதுதான் அந்த வீடியோவில் இருக்கும் பெண் சர்தானியா இல்லை என்பது தெரியவந்தது.

    மேலும் அந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து சர்தானியா சமூக வலைதளங்களில் பதிவிட்டு விசாரித்தபோது, அதில் இருக்கும் பெண் எமி க்விட்டியா என்பதும், அனோ சர்தானியாவும், எமியும் இரட்டையர்கள் என்பதும் பிறக்கும்போதே அவர்கள் பிரிந்ததும் தெரியவந்தது. அதாவது, 2002-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி இரட்டையர்களின் தாயாரான ஆஷாசோனி இவர்களை பெற்றெடுத்துள்ளார்.

    அப்போது அவரது உடல்நிலை கோமா நிலைக்கு செல்லவே இரட்டையர்களின் தந்தையான கோச்சா ககாரியா அனோவையும், எமியையும் தனிதனி குடும்பங்களுக்கு விற்றுவிட்டார்.

    இதனால் அனோ ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசி பகுதியிலும், எமி அங்கிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூக்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடமும் தனித்தனியாக வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் டிக்டாக் வீடியோ மூலம் சுமார் 19 ஆண்டுகள் கழித்து இரட்டையர்களான அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

    • பிஷப் லேமர் வைட்ஹெட் என்பவரிடம் ஷமார் $1 மில்லியன் கொள்ளையடித்தவர்
    • மறைந்திருந்த ஷமார் மார்ஷல்ஸை சுட்டு கொண்டே தப்பி ஓட முயன்றார்

    அமெரிக்காவின் நீதி துறைக்கு கீழ் இயங்கும் சட்ட ஒழுங்கு காவல்துறை, "யு. எஸ். மார்ஷல்ஸ்" (US Marshals) படை.

    நியூயார்க் மாநிலத்தின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருந்தவர், 41 வயதான ஷமார் லெக்கெட் (Shamar Leggette).

    வங்கி கொள்ளை உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் ஷமார்.

    2022ல் புரூக்ளின் நகரத்தை சேர்ந்த பிஷப் லேமர் வைட்ஹெட் என்பவரிடமிருந்து $1 மில்லியனுக்கு மேல் மதிப்புடைய நகைகளை திருடியதாக அவர் தேடப்பட்டு வந்தார்.

    இந்த வழக்கு "ப்ளிங்க் பிஷப்" என மிக பிரபலமாக அழைக்கப்பட்டது.

    குயின்ஸ் பகுதியில் கொலை மற்றும் $7000 பணம், ரோட் ஐலேண்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் $50,000 மதிப்புள்ள நகை கொள்ளை ஆகியவை அவர் மீது இருந்த பிற முக்கிய வழக்குகள்.

    இந்நிலையில், நியூ ஜெர்சி மாநில மான்மவுத் ஜங்க்ஷன் பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் இருந்த அவரை யு.எஸ். மார்ஷல்ஸ் கைது செய்ய சென்றனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த ஷமார், மார்ஷல்சை நோக்கி சுட்டு கொண்டே வெளியே ஓடினார்.

    வேறு வழியின்றி தற்காப்புக்காக மார்ஷல்ஸ் அவரை நோக்கி சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார்.

    நியூ ஜெர்சி நீதி துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    • வால்மார்ட் கடைகளில் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்
    • மெண்டோசா சுமார் 7 ஆயிரம் டாலர் மதிப்பிலான பொருட்களை நாசம் செய்தார்

    உலகெங்கும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பல்பொருள் விற்பனை அங்காடி, வால்மார்ட்.

    வால்மார்ட், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம். இங்கு அன்றாட உபயோக பொருட்கள், மளிகை, மருந்து, விளையாட்டு பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.

    டெக்சாஸ் மாநில ரியோ கிராண்டே (Rio Grande) நகரில் வால்மார்ட்டின் கிளை ஒன்று செயல்படுகிறது. இங்கு பல முன்னணி மின்னணு பொருட்கள் விற்கப்படுகின்றன.

    இரு தினங்களுக்கு முன் எசக்கியல் மெண்டோசா (Ezequiel Mendoza) என்பவர் பொருட்கள் வாங்குபவர் போல் கடைக்குள் நுழைந்தார்.

    அக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு பேஸ்பால் பேட்டை கையில் எடுத்த மெண்டோசா, திடீரென அங்கு சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த அகன்ற திரை கொண்ட தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக தாக்க தொடங்கினார்.

    ஊழியர்கள், அவரது இந்த செயலை எதிர்பாராததால், செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    மெண்டோசா, வரிசையாக ஒவ்வொரு தொலைக்காட்சியாக உடைத்து கொண்டே சென்றார்.

    கடை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மடக்கி, கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    அதற்குள் மொத்தம் 19 தொலைக்காட்சிகளை மெண்டோசா அடித்து நொறுக்கி விட்டார்.

    அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் ($7178) ஆகும்.

    தொடர்ந்து மெண்டோசா ஸ்டார் கவுன்டி (Starr County) சிறையில் அடைக்கப்பட்டார்.

    மெண்டோசாவின் செய்கைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

    • பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • தேர்தலில் போட்டியிடும் நவாஸ் ஷெரீப் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். அவரின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமான நடைபெற்று வருகிறது.

    நவாஸ் ஷெரீப் தேசிய தேர்தலுக்கான 130-வது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கட்சியின் சின்னத்தை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் சிங்கம் மற்றும் புலியுடன் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கொண்டு வந்தது  காகித சிங்கம், புலி அல்ல. நிஜ சிங்கம், புலி.

    கூண்டில் அடைத்தவாறு கொண்டு வந்திருந்தனர். இதைப்பார்த்து மற்ற தொண்டர்கள் அதிர்ச்சி  அடைந்த போதிலும், மறுபக்கம் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்ததால் அவற்றுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    நிஜ சிங்கம், புலியுடன் பேரணியில் கலந்து கொண்டது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மரியும் அவுரங்ஜப், நவாஸ் ஷெரீப்பின் வலியுறுத்தலின்படி அந்த சிங்கம், புலி திருப்பி கொண்டு செல்லப்பட்டன.

    பாகிஸ்தானில் உயிருள்ள சிங்கம் மற்றும் மற்ற விலங்கினங்களை பேரணிக்கு கொண்டு வரக்கூடாது என நாவஸ் ஷெரீப் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
    • விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

    பமாகோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த நாட்டில் தென்மேற்கில் கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

    திடீரென தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கி கொண்டனர். உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான கரீம் பெர்தே கூறும்போது, இந்த விபத்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க இந்த கைவினைஞர் சுரங்கத்துறையை அரசு ஒழுங்குப்படுத்தும் என்றார்.

    ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது.

    • 2022ல் விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்காமல் கென்னத் சிறையில் அடைக்கப்பட்டார்
    • "தண்டனைக்கான வழிமுறைக்கு காத்திருப்பது சித்ரவதையாக உள்ளது" என்றார் கென்னத்

    அமெரிக்க தென்கிழக்கு மாநிலம், அலபாமா (Alabama).

    1988 மார்ச் 18ல் இம்மாநில கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett), சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். எலிசபெத்தின் கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

    இக்கொலையை செய்ததாக (தற்போது 58 வயதாகும்) கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில், கடன் சுமையில் இருந்த சார்ல்ஸ், மனைவியின் காப்பீட்டு தொகையை பெற, இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சதி செய்திருந்ததும் தெரிய வந்தது.

    விசாரணையின் போதே சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

    1996ல் இருவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.

    2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆனால், 2022ல் கென்னத்திற்கு தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகள் கிடைக்காமல், முயற்சி கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பல கலந்தாலோசிப்பிற்கு பிறகு, "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் கென்னத்திற்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அது ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.

    இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை சுமார் 15 நிமிடங்களுக்கு உள்ளே செலுத்துவார்கள்.

    ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.

    கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கென்னத்தின் வழக்கறிஞர்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

    ஆனால், இப்புதிய முறை மரண தண்டனைக்கு எந்த தடையும் விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

    இதையடுத்து, கென்னத்திற்கு எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.

    சில தினங்களுக்கு முன், "மரணத்தை விட மரண தண்டனைக்கான வழிமுறை குறித்து தெரிந்த கொள்ள காத்திருப்பது சித்ரவதையாக உள்ளது" என கென்னத் தெரிவித்திருந்தார்.

    அலபாமாவில் மரண தண்டனைக்காக மட்டுமே 165 பேர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
    • சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவின் ஜியாங்சி மாகாணம் யுஷூயி நகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று இந்த வணிக வளாகம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

    தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஏரளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.24 மணிக்கு வணிக வளாகத்தில் திடீரென தீப்பிடித்தது.

    கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வணிக வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வணிக வளாகத்தை விட்டு வெளியே ஓடினர். இருப்பினும் தீப்பற்றிய பகுதிகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.

    இதனிடையே தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முராக ஈடுபட்ட நிலையில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் வணிக வளாகத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

    இருப்பினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 39 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    • முன்னரே போதை பழக்கம் உள்ள பிரின், அன்று மரிஜுவானாவை பயன்படுத்தினார்
    • 2 வருட புரொபேஷன் மற்றும் 100 மணி நேர சமூக சேவைக்கு நீதிபதி உத்தரவிட்டார்

    கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பெண் பிரின் ஸ்பெசர் (Bryn Spejcher).

    பிரின், "அக்கவுன்டன்ட்" பணியில் இருந்த சாட் ஒமேலியா (Chad O'Melia) எனும் 26-வயது ஆண் நண்பரை அடிக்கடி சந்தித்து வந்தார்.

    பிரின் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்.

    2018 மே மாதம், தனது ஆண் நண்பர் ஒமேலியாவை சந்திக்க பிரின் சென்றார். அப்போது பிரின் மரிஜுவானா எனும் போதை பொருளை பயன்படுத்தினார். அதில் அவர் தனது சுயகட்டுப்பாட்டை இழந்தார்.

    அந்நிலையில் அவருக்கும் ஒமேலியாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோபத்திலும், போதை மருந்தின் மயக்கத்திலும், என்ன செய்கிறோம் என்பதை அறியாத பிரின், ஒமேலியாவை ஒரு கத்தியால் 108 முறை கத்தியால் குத்தினார்.


    இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ஒமேலியா.

    தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது உடல் முழுவதும் ரத்தத்துடன், கையில் கத்தியை பிடித்தவாறு, அழுது கொண்டே இருந்தார் பிரின்.

    காவல்துறையினர் அவரை பிடிக்க முற்பட்ட போது தனது கையில் இருந்த கத்தியால் தன் கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக காவல் அதிகாரிகள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    ஒமேலியாவை மட்டுமின்றி தனது நாயையும் குத்தி கொன்றார், பிரின் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

    நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பிரின் தரப்பு வழக்கறிஞர்கள் போதை மருந்தின் தாக்கத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அவர் கொலை செய்து விட்டதாக வாதிட்டனர்.

    இந்நிலையில், வென்சுரா கவுன்டி நீதிமன்ற நீதிபதி டேவிட் வோர்லி, பிரின் தனது செயலிலும் எண்ணத்திலும் கட்டுப்பாடே இல்லாமல் இந்த கொலையை செய்துள்ளதால் அவருக்கு சிறை தண்டனை வழங்காமல், 2 வருட "ப்ரொபேஷன்" (ஒரு நன்னடத்தை கண்காணிப்பு அதிகாரியின் மேற்பார்வையில் வாழுதல்) மற்றும் 100 மணி நேரம் சமூக சேவை புரியவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.


    நீதிமன்றத்தில் சாட் ஒமேலியாவின் தந்தை ஷான் ஒமேலியாவிடம் அழுது கொண்டே மன்னிப்பு கேட்டார், பிரின்.

    ஆனால் இத்தீர்ப்பு குறித்து ஷான், "நீதிபதி தனது தீர்ப்பின் மூலம் மரிஜுவானா புகைப்பதற்கு அனைவருக்கும் உரிமம வழங்கி விட்டார்" என கோபத்துடன் தெரிவித்தார்.

    ×