என் மலர்
உலகம்
- ரஷியாவால் பிடிக்கப்பட்ட 65 போர் கைதிகளுடன் பறந்து கொண்டிருந்தது
- இவ்விமானம், ராணுவ சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது
ரஷிய-உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ளது, பெல்கொரோட் (Belgorod) பகுதி.
கடந்த 2022 பிப்ரவரி தொடங்கிய ரஷிய-உக்ரைன் போரில் இந்நகரம் பல முறை தாக்குதலுக்கு உள்ளானது.
ரஷியாவின் இல்யுஷின்-76 ரக போக்குவரத்து விமானம் ஒன்று, உக்ரைனிலிருந்து ரஷியாவால் பிடிக்கப்பட்ட 65 போர் கைதிகளுடன் தென் பெல்கொரோட் பகுதியில் பறந்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 65 உக்ரைன் வீரர்களும் உயிரிழந்தனர்.
இத்தகவலை வெளியிட்ட பெல்கொரோட் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் க்ளாட்கோவ் (Vyacheslav Gladkov), "புலனாய்வு படையும், அவசர கால சேவை பணியாளர் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எனது பயண திட்டங்களை மாற்றி நானும் அங்கு செல்கிறேன்" என தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம், விமான பணியாளர்களின் நிலை உள்ளிட்ட வேறு எந்த விவரங்களும் தற்போது வரை தெரியவில்லை.
அவ்விமானம், பெல்கொரோட் பிராந்தியத்திற்கு தென்கிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் யப்லோனோவோ (Yablonovo) கிராமத்தில் விழுவது குறித்த ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த விமானம், ராணுவ போக்குவரத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. ராணுவ சரக்குகள், தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்ல இது பயன்படுத்தப்படும்.
வழக்கமாக 5 பேர் வரை பயணம் செய்யும் இந்த விமானத்தில் அதிகபட்சமாக 90 பேர் வரை பயணிக்கலாம்.
ரஷிய அரசாங்கம் நிலைமையை ஆராய்வதாக தெரிவித்தது. உக்ரைன் அரசும் தகவல்களை அறிய முயற்சித்து வருவதாக தெரிவித்தது.
- 2011லிருந்து 2017 வரை தென் கரோலினா கவர்னராக இருந்தவர் நிக்கி
- நிக்கி-மைக்கேல் தம்பதிக்கு ரேனா எனும் மகள், நலின் எனும் மகன் உள்ளனர்
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு கட்சி ஜனநாயக முறை பின்பற்றப்படும் அந்நாட்டில் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார்.
2011லிருந்து 2017 வரை தென் கரோலினா முன்னாள் கவர்னராகவும், 2017லிருந்து 2018 வரை ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றிய நிக்கி ஹாலே, குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக உட்கட்சி போட்டியில் இறங்கி உள்ளார்.
ஜனவரி 22 அன்று, 52 வயதான நிக்கி ஹாலே, நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், சலேம் பகுதியில் உள்ள ஆர்டிசன் ஓட்டலில் தனது ஆதரவாளர்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தார்.
எதிர்பாராத விதமாக, அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் நிக்கி ஹாலேவை நோக்கி, "நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?" என கேட்டார்.

உடனே சிரித்து விட்ட ஹாலே, "எனக்கு வாக்களிப்பீர்களா?" என மென்மையாக கேட்டார்.
இதற்கு, "நான் டிரம்பிற்கு வாக்களிக்க உள்ளேன்" என அந்த மனிதர் பதிலளித்தார்.
இதையடுத்து, அவரை அங்கிருந்து வெளியேறுமாறு பொறுமையாக நிக்கி கேட்டு கொண்டார்.
கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட எதிர்பாராத நிலைமையை கண்ணியமாக கையாண்ட நிக்கி ஹாலேவை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, திருமணம் ஆனவர். அவரது கணவர் மேஜர். மைக்கேல் ஹாலே.
இத்தம்பதியினருக்கு ரேனா எனும் மகளும், நலின் எனும் மகனும் உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி குடியரசு கட்சியின் உட்கட்சி போட்டியில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். ஆனாலும், போட்டியில் இருந்து நிக்கி ஹாலே பின்வாங்கவில்லை.
- அமெரிக்க அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது
- ஐரோப்பிய நாடுகளை உக்ரைனுக்கு உதவ கேட்டு கொண்டார் ஆஸ்டின்
2022 பிப்ரவரி மாதம், உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்கிரமித்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.
இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் மற்றும் கட்டிட சேதங்கள் நடந்து, போர் தொடங்கி அடுத்த மாதத்துடன் 2 வருடங்கள் ஆக உள்ள நிலையிலும், போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் 27 அன்று அமெரிக்கா சுமார் $250 மில்லியன் அளவிற்கு நிதியுதவியும், ராணுவ அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் உக்ரைனுக்கு வழங்கி உதவியது.
அமெரிக்க அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிடம் தற்போது ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.
நேற்று ரஷியா, உக்ரைனின் கீவ் மற்றும் கார்கீவ் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்; பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், நேற்று அமெரிக்காவில், உக்ரைனை ஆதரிக்கும் சுமார் 50 நாடுகளின் பிரதிநிதிகளுடனான மாதாந்திர சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
2022ல் இந்த கூட்டமைப்பை அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் (70) உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நலம் தேறி வரும் ஆஸ்டின், தனது வீட்டில் இருந்தபடியே "வீடியோ கான்ஃப்ரன்சிங்" வழியாக இச்சந்திப்பில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம், "போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவால் இனி நிதியுதவி அளிக்க இயலாது. உக்ரைனுக்கு உயிர் காக்கும் ராணுவ வான்வழி தாக்குதலுக்கான உயர் தொழில்நுட்ப உபகரணங்களை தந்து உதவவும், நிதியுதவி வழங்கவும் ஐரோப்பிய நட்பு நாடுகளை கேட்டு கொள்கிறேன்" என தனது உரையின் தொடக்கத்திலேயே தெரிவித்தார்.
அமெரிக்க உதவி கேள்விக்குறி ஆனதால், ஐரோப்பிய நாடுகள் அடுத்து என்ன செய்ய போகின்றன என உக்ரைன் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.
- 2011ல் சுனாமி தாக்குதலால்புகுஷிமா அணு உலை நிலையத்தில் கடல்நீர் புகுந்தது
- ஜப்பானை மையமாக கொண்ட SK-II, சீனாவில் விற்பனை செய்து வருகிறது
2020 கோவிட் பெருந்தொற்று காலத்தில் மந்தமடைய தொடங்கிய உலக பொருளாதாரம், சில வருடங்கள் சீரடைந்து, மீண்டும் நலிவடைய தொடங்கி விட்டது.
உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் சீன பொருளாதாரமும் இதற்கு தப்பவில்லை. விலைவாசி அதிகரிப்பால் அந்நாட்டில் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதையும், தம்பதிகள் குழந்தைகள் பெற்று கொள்வதையும் தள்ளி போடுகினறனர் எனும் தகவல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
2011ல் பெரும் சுனாமி தாக்குதலால் ஜப்பானில் புகுஷிமா அணு உலை நிலையம் பாதிப்புக்குள்ளானது.
இதனையடுத்து அங்கிருந்து கதிரியக்க பாதிப்பிற்கு உள்ளான நீரை, கடலில் வெளியேற்ற ஜப்பான் முடிவு செய்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி நீரை வெளியேற்றுவதாக ஜப்பான் கூறியது.

2023 ஆகஸ்ட் மாதம், சீனாவின் எதிர்ப்பை புறக்கணித்து ஜப்பான் நீரை கடலில் வெளியேற்றியது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சீனா, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவு வகைகளுக்கு தடை விதித்தது.
ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் பல பொருட்களை சீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பயன்படுத்த மறுக்கின்றனர்.
உலகின் முன்னணி பன்னாட்டு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் அமெரிக்காவின் பிராக்டர் அண்ட் கேம்பிள் (Procter & Gamble).
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும், அதன் துணை நிறுவனம், எஸ்கே-II (SK-II).

எஸ்கே-II, சீனா உட்பட பல உலக நாடுகளில், உயர்ரக தோல் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்கிறது.
இந்நிலையில், சீனாவில் இதன் விற்பனை கடுமையாக சரிந்து விட்டது தெரிய வந்துள்ளது.
கடந்த 2023 அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் வரையிலான விற்பனை 34 சதவீதம் சரிந்து விட்டது.
பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் வரும் ஆண்டிற்கான நிகர லாபம் குறைவாகவே இருக்கும் என தெரிகின்றது.
வரும் மாதங்களில் "ஜப்பான் புறக்கணிப்பு" தொடர்ந்தால், உலக பொருளாதாரம் மேலும் மந்தமடையலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- மீட்புக்குழுவினர் பாராசூட் மூலம் சென்று தேடினர்.
- விபத்து குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஒரு குழுவை நியமித்துள்ளது.
ஒட்டலா:
கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு சிறிய பயணிகள் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்துடனான தொடர்பு துண்டானது.
இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் பாராசூட் மூலம் சென்று தேடினர். அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
இந்த விமான விபத்தில் 6 பேர் பலியானார்கள். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஒரு குழுவை நியமித்துள்ளது.
- நான்கு பேர் போட்டியிட முன்வந்த நிலையில் இருவர் பின் வாங்கினர்.
- டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.
குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். அதேவேளையில் விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
இதனால் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது யார்? என்பதற்கான தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நான்கு பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தேர்தலுக்கான நாள் நெருங்கி வந்த நிலையில் டொனால்டு டிரம்புக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என விவேக் ராமசாமி அறிவித்து ஒதுங்கிக் கொண்டார். இதனால் மூன்று பேருக்கு இடையில் போட்டி நிலவியது.
டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாத்தில் ஈடுபட அவருக்கு எதிராக ரான் டி சான்டிஸின் தேர்தல் பிரசாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் சான்டிஸும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இதனால் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் முன்னிலைப் பெற்று வந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.
இது அவருக்கான முதல் வெற்றியாக கருதப்படும் நிலையில், நிக்கி ஹாலேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட இரண்டு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்படும் என கனடா அரசு அறிவிப்பு.
- கனடா அரசின் இந்த முடிவினால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகள் என கனடா அரசு நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், "கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி விசாக்கள் வழங்கப்பட்டன. 2023-ம் ஆண்டு 5.60 லட்சம் மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அளவுக்கு மாணவர் விசாக்களை குறைக்க முடிவெடுத்துள்ளோம். இதனால் இந்த ஆண்டு 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் வரை மட்டும் அந்த விசா செல்லுபடியாகும்" என தெரிவித்தார்.
மேலும், கனடாவில் தங்குவதற்கு வீடுகள் கிடைப்பதில் மாணவர்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதே இந்த பிரச்சினைக்குக் காரணம். இதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது என தெரிவித்த மார்க் மில்லர், சில கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும், நிரந்தர கனடா வாசியாக மாற முடியும் என்றெல்லாம் போலியான விளம்பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கனடா அரசின் இந்த முடிவினால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது.
- ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
லாஸ்ஏஞ்சல்ஸ்:
சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த படமாக ஓப்பன்ஹைமர், பார்பி, கில்லர்ஸ் ஆப்தி ஃபுளோர் மூன், புவர் திங்ஸ், மாஸ்ட்ரோ, பாஸ்ட் லிவ்ஸ், தி சோன் ஆப் இன்ட்ரெஸ்ட் உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வஜேத்.
- இவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ஜெனீவா:
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக சைமா வஜேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அந்தப் பதவி வகிப்பார்.
சைமா வஜேத்தின் பதவிக் காலம் 2024, பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் பதவியை அடைந்த வங்காளதேசத்தின் 2-வது பிரதிநிதி இவர்.
இவர் வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 12,426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சீனா மற்றும் கிர்கிஸ்தான் எல்லை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். நிலநடுக்கம் காரணமாக 12 ஆயிரத்து 426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
முன்னதாக கசகஸ்தான் சுகாதார துறை வெளியிட்ட தகவல்களில் பலத்த காயமுற்ற 44 பேர் உதவி கோரியதாக தெரிவித்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்களில் மக்கள் அச்சத்தில் அலறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நிலநடுக்கம் காரணமாக சீனாவில் 47 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 78 கட்டடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
- சீன உளவு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது.
- அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியானது.
மாலி:
இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி மாலத்தீவுடன் நெருக்கம் காட்டி வருகிறது சீனா.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றிருந்தபோது மாலத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா தற்போது மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. மாலத்தீவுடனான சீனாவின் நெருக்கம் இந்தியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது. அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியானது. இதனால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கள் கடற்கரையில் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய இலங்கை தடை விதித்த நிலையில், அங்கு செல்லவிருந்த சீன உளவு கப்பல் மாலத்தீவை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
- ஃபேசியோ திடீரென தனது தலையில் ஏதோ தாக்கியதை உணர்ந்தார்
- ஃபேசியோவின் வலது கை படிப்படியே செயல் இழக்க தொடங்கியது
தென் அமெரிக்க நாடுகளிலேயே மிகப் பெரிய நாடு, பிரேசில். இதன் தலைநகரம் பிரேசிலியா (Brasilia).
கடந்த 2023 டிசம்பர் இறுதியில், பிரேசிலின் புகழ்பெற்ற கடற்கரை நகரமான ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) பகுதியில், கேபோ ஃப்ரியோ (Cabo Frio) கடற்கரையில் மேடியஸ் ஃபேசியோ (Mateus Facio) எனும் 21 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஃபேசியோவின் தலையில் ஏதோ தாக்கியதை உணர்ந்தார். அவர் தலையிலிருந்து ரத்தம் வழிந்தது.
வலியால் ஒரு சில நிமிடங்கள் தடுமாறியவர், எங்கிருந்தோ வந்த கல்லோ, வேறு ஏதோ பொருளோ தாக்கியிருக்க வேண்டும் என கருதினார்.
ஒரு சில நிமிடங்கள் மண்டைக்குள் ஒரு சிறு குண்டு வெடிப்பை போல் உணர்ந்தாலும், சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நின்றதால், ஃபேசியோ குளித்து விட்டு நண்பர்களுடன் மீண்டும் கொண்டாட்டங்களில் ஈடுபட சென்றார்.
இரவு முழுவதும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அடுத்த நாள் புது வருடத்தை கொண்டாட தனது சொந்த ஊரான மினாஸ் கெராய்ஸ் மாநிலத்திற்கு புறப்பட்டார். சுமார் 320 கிலோமீட்டர் பயணத்தின் போது, அவரது வலது கையில் ஆங்காங்கே பிடிப்பு ஏற்பட்டு வாகனத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டார்.
வீட்டிற்கு சென்ற 2 தினங்களில் அவரது வலது கை செயலிழக்க ஆரம்பித்தது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
அதில், அவரது மூளை பகுதியில் ஒரு துப்பாக்கி குண்டின் சிறு பகுதி நுழைந்து, அங்கேயே தங்கி, அழுத்தம் கொடுத்து வருவதும், அதன் காரணமாக அவர் வலது கை செயலிழக்க தொடங்கியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
குறைந்த அளவே வெற்றி வாய்ப்புள்ள, 2 மணி நேரம் நடைபெற்ற உயிருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சையின் மூலம் அந்த துப்பாக்கி குண்டின் சிறு பகுதியை நரம்பியல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இந்த அறுவை சிகிச்சை குழுவிற்கு ஃப்ளேவியோ ஃபால்கோமிட்டா எனும் அந்நாட்டின் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர் தலைமை வகித்தார்.
தற்போது ஃபேசியோ உடல்நலம் தேறி வருகிறார்.
காவல்துறையினருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.






