என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்பு பிரச்சனையால் லிபியாவில் செயல்பட்டு வந்த தூதரகத்தை இந்திய அரசு மூடியது.
    • மூடப்பட்ட இந்திய தூதரகம் 5 ஆண்டுக்குப் பிறகு திரிபோலியில் மீண்டும் திறக்கப்பட்டது.

    திரிபோலி:

    லிபியா நாட்டில் கிளர்ச்சியாளர்களின் போராட்டம், ராணுவத்தின் அடக்குமுறை தாக்குதல் என போர்க்களமாக காட்சி அளித்தது. அங்கு சிக்கித் தவித்த 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    பாதுகாப்பு பிரச்சனை காரணமாக லிபியாவில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை கடந்த 2019-ம் ஆண்டில் இந்திய அரசு மூடியது.

    இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியில் மூடப்பட்ட இந்திய தூதரகம் 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    லிபியா குடிமக்களுக்கு விசா வழங்குதல் மற்றும் இந்திய வெளிநாட்டினருக்கான வேலை நிலைமைகளை சரிபார்த்தல் உள்ளிட்டவை இந்த தூதரகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்கரா புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று (ஜூலை 24) காலை 11 மணி அளவில் புறப்பட்ட சௌரியா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் போக்கராவுக்கு செல்ல டேக் ஆஃப் ஆகும் போது விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் ஊழியர் குழு உள்பட 19 பேர் இருந்தனர்.


    இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தை இயக்கிய விமானி அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்துக் களத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பலூன்கள் தலைநகர் சியோலுக்கு வடக்கே பறந்தன.
    • தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.

    தென் கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

    இதனால் தென் கொரியா-வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே சில நாட்களாக வடகொரியா, ராட்சத பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென் கொரியாவுக்குள் அனுப்பி வருகிறது. இதற்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.


    இந்த நிலையில் குப்பை பலூன்கள் தென் கொரியாவின் அதிபர் அலுவலக வளாகத்தில் விழுந்தன. வட கொரிய பலூன்கள் இன்று காலை எல்லையைத் தாண்டி தலைநகர் சியோலுக்கு வடக்கே பறந்தன.

    அந்த பலூன்கள் தென் கொரியாவின் அதிபர் அலுவலக வளாகத்தில் விழுந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டன.

    இதற்கிடையே தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி மண்ணில் புதைந்தனர். மீட்புக்குழு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பலர் பலியாகி இருப்பது தெரிந்தது. அவர்களது உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

    இதில் 157 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நடந்த மீட்புப்பணியில் மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது. சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருப்பு நிற பார்பி, பார்வை மாற்றுத்திறன் பார்பி அறிமுகம்
    • பார்பி திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்தது.

    1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பார்பி பொம்மைகள் உலக அளவில் இன்றும் மிக பிரபலமாக உள்ளது. பார்பி பொம்மையை மையமாக வைத்து வெளியான பார்பி திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

    உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் பார்பி பொம்மைகளின் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகின்றது. வெள்ளை நிறம், கச்சிதமான உடல் அமைப்பு ஆகியவை தான் அழகானவை என்ற தவறான தோற்றத்தை பார்பி உருவாக்குவதாக பலர் விமர்சித்துள்ளளனர்.

    இந்நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் வகையில் பார்வை மாற்றுத்திறன் கொண்டது போன்ற பார்பி பொம்மையையும் உடல்நல குறைபாடுகள் உடைய கருப்பு நிற பார்பி பொம்மையையும் அமெரிக்காவின் மேட்டல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    பார்வையற்றோருக்கான அமெரிக்க அறக்கட்டளை மற்றும் தேசிய டவுன் சிண்ட்ரோம் சொசைட்டி உடன் இணைந்து இந்த பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

    • ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
    • உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்த 17-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறி தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் டெலாவேரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து ஜோபைடன் குணமடைந்தார். இதுகுறித்து அவரது டாக்டர் கெவின் ஓ கானர் கூறும்போது, அதிபர் ஜோபைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது.

    அவர் தனது நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றார்.

    இதையடுத்து ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்போது அவர் கூறும்போது, நான் நன்றாக உணர்கிறேன் என்று தெரிவித்தார்.

    • கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது.
    • கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக்க தனது ஆதரவை தெரிவித்தார்.

    கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது. அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான பிரதிநிதிகள் ஆதரவு எண்ணிக்கையை பெற்றார்.

    இதன்மூலம் அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக ராய்ட் டர்ஸ்-இப்சோஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவை பெற்று உள்ளார். டிரம்புக்கு 42 சதவீத ஆதரவு உள்ளது.

    சில வாரங்களுக்கு முன்பு அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால் டிரம்புக்கு எதிராக அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கும் என்று கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டதில் இருவரும் சம நிலையுடன் இருந்தனர்.

    தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகி உள்ள நிலையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

    அதேபோல் டிரம்பிற்கு எதிரான போட்டியில் ஜோபைடன் 2 புள்ளி குறைவாக இருந்தார். ஆனால் தற்போது கமலா ஹாரிஸ் உடன் ஒப்பிடும் போது டிரம்ப் 2 புள்ளிகள் குறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டிரம்புக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய போட்டியாளராக கமலா ஹாரிஸ் உள்ளார்.

    • தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
    • துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.

    அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், சமீபத்தில் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தற்போது அதிபராக களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை எளிதில் வீழ்த்திவிட முடியும் என்று எதிர்தரப்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய டிரம்ப், "அவரைவிட கமலா அதிக தீவிரமானவர். இதனால், பைடனை விட கமலா எளிதானவராக இருப்பார் என நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    • செய்தி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
    • 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம், 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    குவைத் நாட்டில் இந்த வினோத சம்பவம் நடந்தது. திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்தும் நடந்து முடிந்தது.

    எல்லா எதிர்பார்ப்புகளுடனும் அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. திருமண நிகழ்ச்சிகள் முடிந்து வீட்டிற்கு புறப்பட தயாரானபோது, மணமகள் கால் இடறி கீழே விழுந்தார். அப்போது மணமகன், 'பார்த்து நடக்கத்தெரியாதா முட்டாள்' என்று திட்டிவிட்டார். இதனால் மணப்பெண் மனம் உடைந்தார். காலமெல்லாம் இவருடன் எப்படி வாழப்போகிறோம் என்று அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே கோர்ட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தங்களை பிரித்துவைத்துவிடும்படி கோரிக்கை விடுத்தார். கோர்ட்டும் அவரது கோரிக்கையை ஏற்று திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து கொடுத்தது. இது அந்த நாட்டில் நடந்து முடிந்த மிக குறுகலான குடும்ப பந்தம் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. "மரியாதையற்ற உறவுகள் ஆரம்பத்திலேயே முடிவடைந்துவிடும்" என்று ஒரு பயனர் எழுதினார்.

    2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம், 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
    • கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் பிரசாரம் செய்தபோது டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    இதில் அவரது வலது காதில் தோட்டா உரசிச் சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே, கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதற்கிடையே, டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் ரகசிய பிரிவின் கவனக்குறைவே காரணம் என புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று கிம்பர்லி சீட்டல் அமெரிக்காவின் ரகசிய பிரிவு தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியானது.

    • எத்தியோப்பியாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அடிஸ் அபாபா:

    தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதுவரை 5க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

    மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

    குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் சரமாரியாக சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உடனே அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.

    துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் அவரது தாய் அந்த முதியோர் இல்லத்தில் 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அந்த நபர் தனது தாயையும் சுட்டு கொன்றுள்ளார். தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

    அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென் கோவிச் கூறும்போது, முதியோர் இல்லத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு கொடூரமான செயல். இந்த குற்றத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.

    ×