என் மலர்
உலகம்
- இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முறையான சந்திப்பை நடத்துகிறோம்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக இரு நாட்டு எல்லை பிரச்சினையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சீன அதிபரை சந்தித்த போது, இருநாடுகளின் எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதும், இருதரப்பு நம்பிக்கை தொடர்வதும் மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முறையான சந்திப்பை நடத்துகிறோம். இந்தியா-சீனா உறவு நமது மக்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்."
"எல்லையில் கடந்த நான்கு ஆண்டுகளில் எழுந்துள்ள பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதை வரவேற்கிறோம். எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர புரிதல் நம் உறவுகளின் அடிப்படையாக இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- வால்மார்ட் ஸ்டோரில் 19 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை இரவு முதல் கடை மூடப்பட்டுள்ளது.
கனடாவில் வால்மார்ட்டில் வாக்-இன் ஓவனுக்குள் 19 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள வால்மார்ட் ஸ்டோரில் 19 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பெண் கடந்த சனிக்கிழமை அன்று வால்மார்ட் ஸ்டோரின் பேக்கரி டிபார்ட்மெண்டில் உள்ள வாக்-இன் ஓவனில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்களை தெரிவிக்கவில்லை.
போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை இரவு முதல் கடை மூடப்பட்டுள்ளது.
- உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் 10k என்றும் 1 லட்சம் ரூபாய் 100 k என்றும் குறிக்கப்படுகிறது.
- பணம் மட்டுமல்லாது பொதுவாகவே 1000 என்பதற்கு k என்ற எழுத்து பயன்பாட்டில் உள்ளது.
ஆயிரங்களில் பணத்தைக் குறிப்பிடும்போது k என்ற எழுத்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் 10k என்றும் 1 லட்சம் ரூபாய் 100k என்றும் குறிக்கப்படுகிறது.
பணம் மட்டுமல்லாது பொதுவாகவே 1000 என்பதற்கு k என்ற எழுத்து பயன்பாட்டில் உள்ளது. சுருக்கமாக இருப்பதால் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தாண்டி இதற்குப் பின்னால் காரணமும் இல்லாமலில்லை.
k என்பது கிலோய் [chilioi] எனப்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது. இதன் உச்சரிப்பு khil-ee-oy என்பதாக இருப்பதால் k என்ற வார்த்தை அதன்மூலம் பொதுப்பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த கிலோய் வார்த்தைக்கு 'ஆயிரம்' என்று அர்த்தம். கிலோய் என்ற வார்த்தையை பிரஞ்சுகாரர்கள் கிலோ என மாற்றி பயன்படுத்தினர். அதன்படி ஆயிரம் என்று பொருள் வருமாறு மெட்ரிக் முறையில் கிலோ என்று கூறப்படுகிறது. கிலோகிராம் [1000 கிராம்], கிலோமீட்டர் [1000 மீட்டர்] என்பவை இதற்கு உதாரணமாகும்.
- கடையின் மேலாளரை அவரது வீட்டிற்கு சென்று போலீசார் கைது செய்துள்ளனர்.
- தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் போதைப்பொருளை விநியோகிக்கும் கும்பலை கைது செய்துள்ளது.
மேற்கு ஜெர்மனியில் உள்ள பீட்சா கடையில் ஒரு குறிப்பிட்ட பீட்சாவை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டிய சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
"நம்பர் 40" என்று குறிப்பிட்ட பீட்சாவை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதாக வெளியான தகவலை தொடர்ந்து போலீசார் ரகசியமாக அந்த கடையை கண்காணித்தனர். அப்போது பீட்சாவுடன் சைட் டிஷ்ஷாக கொக்கைன் என்னும் போதைப்பொருளும் வழங்கப்பட்டதே மக்கள் அதன் மீது ஆர்வம் காட்டியதற்கு காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து கடையின் மேலாளரை அவரது வீட்டிற்கு சென்று போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் வீட்டில் இருந்து 268,000 யூரோ ரொக்கம், 1.6 கிலோ கொக்கெய்ன் மற்றும் 400 கிராம் கஞ்சா உட்பட பெருமளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து விசாரணைக்குப் பின் கடை மேலாளாரை போலீசார் விடுத்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையை செய்து வந்துள்ளார். அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் போதைப்பொருளை விநியோகிக்கும் கும்பலை கைது செய்துள்ளது.
- பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- 5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மாஸ்கோ:
இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசானில் நேற்று தொடங்கியது.
இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதினிடம், உக்ரைன்-ரஷியா போருக்கு தீர்வுகாண உதவுவதற்கு தயாராக இருப்பதாக மோடி தெரிவித்தார்.
பின்னர் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானை சந்தித்து பேசினார். மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலமும் தூதரக ரீதியிலும் அணுக மோடி அழைப்பு விடுத்தார்.
அப்போது மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்தார்.
பின்னர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார். இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது.
இரு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் எல்லை விவகாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தார். அப்போது சென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்தது.
2022-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.
ஆனால் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். அப்போதும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதற்கிடையே எல்லையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் தனது ரோந்து பணிகளை மீண்டும் தொடங்க உள்ள நிலையில். மோடி-ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள்.
- நான் செய்த மிகச் சிறந்த காரியம் என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தனது நண்பர் ஜேசன் அலெக்சாண்டரை திருமணம் செய்தார். ஆனால் 2 நாட்களில் அந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை திருமணம் செய்தார். அவர்கள் 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். அதன்பின் பிரிட்னி ஸ்பியர்ஸ் 2022-ம் ஆண்டு நடிகர் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில், இது என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள். என் வாழ்வில் நான் செய்த மிகச் சிறந்த காரியம் இது. அதை மீண்டும் கொண்டு வருவது சங்கடமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றலாம். ஆனால் இது நான் செய்த மிகச் சிறந்த காரியம் என்று பதிவிட்டுள்ளார்.
- ஹஷேம் சபிதீன் கொல்லப்பட்டதை ராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
- பலியானவர்களின் எண்ணிக்கை 1550-ஆக அதிகரித்துள்ளது.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.
இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
நஸ்ரல்லா கொல்லப் பட்டதையடுத்து ஹிஸ் புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சபிதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, 3 வாரங்க ளுக்கு முன்பு நடந்த தாக்குதலில், ஹிஸ்புல்லா வின் நிர்வாகக் குழு தலைவர் ஹஷேம் சபிதீன், ஹிஸ்புல்லா புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் அலி ஹுசைன் ஹசிமா ஆகியோர் ஹிஸ்புல்லா தளபதிகளுடன் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
கடந்த 8-ந்தேதி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, ஹிஸ்புல்லாவின் அடுத்த கட்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் ஹஷேம் சபிதீன் பெயரை குறிப்பிடவில்லை. தற்போது ஹஷேம் சபிதீன் கொல்லப்பட்டதை ராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால் இதை ஹிஸ்புல்லா இயக்கம் இன்னும் உறுதி செய்ய வில்லை.
இதற்கிடையே லெபனானில் கடந்த செப்டம்பர் 23-ந்தேதி இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1550-ஆக அதிகரித்துள்ளது.
- நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
- 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் Future Forward என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.420 கோடி) நன்கொடையாக கொடுத்துள்ளார் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.
சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அர்ப்பணிப்போடு இருக்கும் அதிபர் வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
போர்ப்ஸ் அறிக்கையின்படி, 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு அளித்து வருகிறார்.
- ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
- ராஜினாமா செய்ததற்கான எந்த ஆவணங்களும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்ததால் ஆத்திரம்.
வங்கதேசத்தின் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்திய மாணவர்கள், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நாடு தழுவிய வகையில் தீவிரம் அடைந்ததால், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், டி.வி. சேனலுக்கு பேட்டியளித்த வங்கதேச அதிபர் முகமது ஷகாபுதீன், கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்தாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான எந்த ஆவணங்களும் தன்னிடம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதிபரின் இந்த பேச்சு ஷேக் ஹசீனாவுக்கு எதிரானவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கானவர்கள் அதிபர் மாளிகை முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனால் அதிபர் மாளிகையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ராணுவ வீரர்களும் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. ராணுவ வீரர் போராட்டக்காரர்களை பார்த்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அதன்பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பியோடியதை தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அமெரிக்காவில் கடந்த மே மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் கடந்த மே மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன் சுமார் ரூ.3 ஆயிரம் லட்சம் கோடியை தாண்டியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உலக பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும். இல்லையெனில் நாடு விரைவில் திவாலாகும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் ஏற்கனவே டிரம்புக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் டிரம்பின் பிரசார குழுவினருக்கு நிதி உதவியையும் வாரி வழங்குகிறார். இந்தநிலையில் ஜோ பைடன் அரசாங்கம் குறித்து அவர் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார்.
- அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் நேற்று தொடங்கியது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் புதினிடம் பேசிய மோடி, "ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையில் நாங்கள் இரு தரப்பினருடனும் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.
- இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜெருசலேம்:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில், லெபனானில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்திருந்தது.
கடந்த 19-ந்தேதி இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் டிரோன் தாக்குதல் நடத்தனர். அந்த 2 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.
இந்த நிலையில், இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய இஸ்ரேல் மீது வீசப்பட்ட 5 ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், ஒரு ராக்கெட் திறந்தவெளி பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதே போல், டெல் அவிவ் நகரத்தின் மீதும், வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளின் மீதும் சுமார் 20 ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான ராக்கெட்டுகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதே சமயம், ஒரு குடியிருப்பு கட்டிடம் மற்றும் சில வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலில் உள்ள ஹைபா, கிலிலாட் பகுதிகளில் செயல்பட்டு வரும் மொசாட் தலைமையகம் மற்றும் சைபர் உளவுத்துறை பிரிவு ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






