என் மலர்
உலகம்
- உகாண்டாவில் 26 வயதான மகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
- சுமார் ஒரு மாதம் ஆகியும் மகளை வெளியில் கொண்டு வர முடியவில்லை என தொழில் அதிபர் கவலை.
இந்திய வம்சாவளி தொழில் அதிபரான பங்கஜ் ஓஸ்வால் பல்வேறு நாடுகளில் முதலீடு செய்து தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். ஆப்பிரிக்கா நாடானா உகாண்டாவிலும் தொழில் நடத்தி வருகிறார். அங்குள்ள தொழிற்சாலை நிர்வாகத்தை பார்வையிட தனது மகள் வசுந்தாரா ஓஸ்வாலை அனுப்பி வைத்துள்ளார்.
உகாண்டா போலீஸ் அதிகாரம் மிக்க நாடாக விளங்கி வருகிறது. அவர்கள் எந்தவித நீதிமன்ற ஆணை இல்லாமல் யாரை வேண்டுமென்றாலும் பிடித்து சிறையில் அடைக்கும் அதிகாரம் பெற்றவர்களாக விளங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் நபர் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டு எனக் கூறி வசுந்தாரா ஓஸ்வாலை போலீஸ் அதிகாரிகள் கடந்த 1-ந்தேதி கைது செய்துள்ளனர்.
வசுந்தாரா கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர் தான்சானியாவில் உயிருடன் இருக்கிறார். வசுந்தாரா மீது பொய் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இப்படி கடுமையான ஒரு நாட்டிற்கு தனது மகளை அனுப்பி வைத்ததற்காக, பங்கஜ் ஓஸ்வால் மிகவும் வருந்துவதாகவும், மிகவும் குற்ற உணர்ச்சியாக உணர்ந்து தன்னைத்தானே ஒரு ரகசிய இடத்தில் சிறை வைத்துள்ளதாகவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு வசுந்தராவின் இளைய சகோதரி ரித்தி ஓஸ்வால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரித்தி ஓஸ்வால் கூறியதாவது:-
வசுந்தாரா ஓஸ்வால் குடும்ப தொழிற்சாலை வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உகாண்டா சென்றார். கடந்த 1-ந்தேதி தொழிற்சாலைக்கு சென்றபோது, கேள்வி கேட்க வேண்டும் என சாக்குப்போக்கு சொல்லி ஆயுதம் ஏந்தியவர்கள் அவரை அழைத்து சென்றுள்ளனர்.
அதில் இருந்து மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மனிதாபிமானமற்ற நிலையில் உள்ளார். அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். 26 வயதான வசுந்தாரா ஓஸ்வால் வாரன்ட் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.
வசுந்தாராவை உகாண்டாவிற்கு அனுப்பியது பற்றி பெற்றோர்கள் குற்றமாக உணர்கிறார்கள். அவர்கள் உகண்டாவிற்கு செல்ல முடியாத உதவியற்ற நிலை குற்ற உணர்வை மேலும் அதிகரித்துள்ளது.
அங்குள்ள அதிகாரிகளால் என்னுடைய பெற்றோர்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதால் அவர்கள் உகாண்டா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டால் என்னுடைய சகோதரிக்காக அவர்கள் போராட முடியாத நிலை ஏற்படும்.
இதனால் எனது பெற்றோர் வெளி உலக தொடர்பை துண்டித்துவிட்டு, சகோதரிக்கு உதவ முடியும் என்ற நபர்களிடம் மட்டுமே பேசி வருகிறார்கள். உகாண்டாவில் எனது சகோதரி கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை கேட்கும்போது பெற்றோர் லண்டனில் இருந்தனர். அப்போது இருந்து ரகசிய இடத்தில் தங்களை தாங்களாகவே சிறைப்பிடித்துள்ளனர். வசுந்தராவின் வழக்குக்காக தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழித்து வருகின்றனர்.
அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவிற்கு மேல் சாப்பிடுவதில்லை, மேலும் தங்கள் மகளை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
தொழிற்சாலையை நிர்வகிப்பதற்காக உகாண்டா செல்ல அவரை வற்புறுத்தியதற்காக தங்களை மிகவும் குற்றம் செய்தவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் ஆண் பெண் சமம் என எங்களுக்கு கற்பித்து க்ரீன் பீல்டு திட்டங்களில் பணிபுரிய என்னுடைய சகோதரியை ஊக்குவித்தார்கள்.
அவள் ஒரு பெண் என்பதாலேயே எளிதான ஒன்றைக் கொடுப்பதற்குப் பதிலாக, மிகவும் சவாலான பணிகள் ஒதுக்கினார்கள். அவளுடைய தற்போதைய சூழ்நிலைக்கு தாங்கள்தான் பொறுப்பு என உணர்கிறார்கள்.
இவ்வாறு ரித்தி ஓஸ்வால் தெரிவித்துள்ளார்.
- தென் கொரியா, வடகொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
- குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.
தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு குப்பைகள் நிரப்பப்பட்ட ராட்சத பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.

இந்த நிலையில் தென் கொரியாவுக்குள் மீண்டும் குப்பை பலூன் ஏவப்பட்டது. இந்த பலூன் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் விழுந்தது. அந்த குப்பையில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்று தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகொரிய பலூன் தரையிறங்கும் போது அதிபர் யூன் சுக் இயோல் அந்த வளாகத்தில் இருந்தாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.
வட கொரியா ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலூன்களை மிகவும் துல்லியமாக உத்தேசித்துள்ள இடங்களில் தரையிறக்க தொடங்கியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
- ஊபரில் ஒட்டக சவாரிக்கு முன்பதிவு செய்த பயணி.
- சில நிமிடங்களில் ஒரு வாலிபர் ஒட்டகத்துடன் அங்கு வருகிறார்.
போக்குவரத்து சேவைக்கு கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாடகைக்கு முன்பதிவு செய்து பயன்படுத்தும் போக்கு நகர பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில் துபாயில் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணை காட்டுகிறது.
அதில், அந்த பெண் வாகனம் பழுதடைந்த பிறகு வறண்ட பாலாவன பகுதியின் நடுவில் சிக்கி தவிக்கிறார். அப்போது தனது செல்போனில் உள்ள ஊபர் செயலியில் முன்பதிவு செய்ய முயற்சி செய்கிறார்.

அந்த செயலியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இடையே ஒட்டக சவாரிக்கும் ஆர்டர் செய்யும் வசதி இருப்பதை பார்த்து வியக்கிறார். பின்னர் அவர் ஒட்டக சவாரிக்கு முன்பதிவு செய்த நிலையில் சில நிமிடங்களில் ஒரு வாலிபர் ஒட்டகத்துடன் அங்கு வருகிறார்.
இந்த வீடியோ துபாய்-கட்டா சாலையில் உள்ள அல்-படேயர் பகுயில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1 லட்சம் லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஒரு பயனர் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.
- இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று ஜஸ்டின் சமீபத்தில் தெரிவித்தார்.
- லிபரல் கட்சி எம்.பிக்களை ஜஸ்டின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஒட்டாவா:
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இதற்கிடையே இக்கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது. இதற்கிடையே நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று ஜஸ்டின் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக சொந்த கட்சி எம்.பிக்கள் 24 பேர் போர்க் கொடி தூக்கினர். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தது. மேலும் கருத்துக் கணிப்புகளில் ஆளும் கட்சியின் செல்வாக்கு சரிந்து இருப்பது தெரியவந்தது. அடுத்த தேர்தலில் ஜஸ்டின் தலைமையிலான லிபரல் கட்சி மோசமாக தோற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜஸ்டின் மீது எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி அடைந்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். அந்த கடிதத்தில் பிரதமர் பதவியை ஜஸ்டின் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் 4-வது முறையாக தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் விலக வருகிற 28-ந்தேதி வரை காலக்கெடுவை அதிருப்தி எம்.பி.க்கள் நிர்ணயித்துள்ளனர். சில லிபரல் எம்.பி.க்கள் கூறும் போது, அடுத்த தேர்தலுக்கு முன் ட்ரூடோவை பதவி விலகக் கோரிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளோம். அவர் வருகிற 28-ந்தேதிக்குள் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது குறிப்பிடப்படாத விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே லிபரல் கட்சி எம்.பிக்களை ஜஸ்டின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம் 3 மணி நேரம் நடந்தது. அப்போது ஜஸ்டின் பதவி விலக வலியுறுத்தும் கடிதம் வாசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த பிறகு ஜஸ்டின் கூறும்போது, லிபரல் கட்சி வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
- துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
- 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர்.
அங்காரா:
துருக்கி தலைநகர் அங்காராவில் அரசுக்கு சொந்தமான ராணுவ மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த ஒரு ஆண், ஒரு பெண் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் குர்திஷ் படைகள் நடத்தியதாக துருக்கி தெரிவித்தது.
இந்த நிலையில் ஈராக், சிரியாவில் குர்திஷ் போராளிகள் படைகள் மீது துருக்கி பதிலடி தாக்குதலை நடத்தியது. வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் படைகள் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இதில் குர்திஷ் படையினரின் 32 முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், குர்திஷ் படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதல் குறித்த விவரங்களை துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் குர்திஷ் இலக்குகள் எதிர் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
- அமீரகத்தின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்பட்டது.
- வாகன ஓட்டிகள் சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகளை பார்த்து அதன்படி செயல்பட வேண்டும்.
துபாய்:
அமீரக தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த வெப்பநிலை வரும் வாரத்தில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இதனால் காலநிலை இதமாக இருக்கும். அமீரகத்தின் வடமேற்கு பகுதியில் வருகிற சனிக்கிழமை முதல் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும். இதுவும் வெப்பநிலை குறைவதற்கு காரணமாக இருக்கும்.
மேலும் அமீரகத்தின் சில இடங்களில் வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக துபாய் மற்றும் அல் அய்ன் இடையிலான பகுதிகளிலும், புஜேரா, ராசல் கைமா, கல்பா உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து கடல் மற்றும் மலைப்பகுதிகளில் ஏற்படும் மேகங்கள் காரணமாக இந்த மழை சற்று அதிகரிக்கும். குறிப்பாக அபுதாபியின் அல் தப்ரா பகுதியில் அதிக மழை பெய்யக்கூடும். ஓமன் கடல் பகுதிகளில் ஏற்படும் காற்று உள்ளிட்ட காலநிலை மாற்றம் காரணமாக மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அமீரகத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். எனவே வெளியிடங்களுக்கு செல்பவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கடலில் அலையின் வேகம் வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அமீரகத்தின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களில் காலை காலங்களிலும் பனிமூட்டம் நிலவ கூடும். எனவே வாகன ஓட்டிகள் சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகளை பார்த்து அதன்படி செயல்பட வேண்டும்.
காற்றின் காரணமாக ஏற்படும் புழுதியால் சாலைகளில் பார்வைத்திறன் குறைந்து இருக்கும். அமீரகத்தின் மேற்கு பகுதிகளில் இந்த காற்றின் வேகம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் அதிகமாக இருக்கும். அமீரகத்தில் குளிர்காலம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
- வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
- தற்போதைய தாக்குதல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்.
இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசானில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ஒட்டி, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான சைபர் தாக்கதலுக்கு ஆளாகி உள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் போர்ட்டலான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் உள்கட்டமைப்பு மீது வெளிநாட்டில் இருந்து ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், தற்போதைய தாக்குதல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல் என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா சகரோவா தெரிவித்துள்ளார்.
- சுமார் 2 ஆயிரம் வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
- 12 சதவீதம் வாக்காளர்கள் இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் இருவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் எஸ்.எஸ்.ஆர்.எஸ். என்ற ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த முடிவுகள் கமலா ஹாரிசுக்கும், டிரம்புக்கும் மிக நெருக்கமான போட்டி நிலவுவதையும், அமெரிக்கர்களால் வெற்றியாளரை தெளிவாக தேர்வு செய்ய முடியாத சூழல் நிலவுவதையும் காட்டுகிறது.
இந்த புதிய கருத்து கணிப்பின்படி, அமெரிக்காவில் 48 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே போல் டிரம்புக்கு 47 சதவீதம் பேர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2 கட்சிகளையும் சாராத பொதுவான வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 41 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
30 வயதுக்கு குறைவான இளம் வாக்காளர்களில் 55 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 38 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஆதரவாக உள்ளனர். 12 சதவீதம் வாக்காளர்கள் இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
- அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.
- அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும்.
ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.
வேலை, உடல்நல பிரச்சினைகள் அல்லது பயணம் போன்ற தேர்தல் நாளில் வாக்களிப்பதில் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு இது நடைமுறை தீர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், செயல்முறையை அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் வாக்காளர் பங்கேற்பையும் அதிகரிக்கிறது.
இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். மற்ற மாகாணங்களில் மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர்.
அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
70 லட்சத்து 80 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் பேர் தபால் மூலமும் வாக்களித்துள்ளதாக புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் 7 மாகாணங்களில் ஒன்றான ஜார்ஜியா மாகாணத்தில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் (சுமார் 10 லட்சத்து 84 ஆயிரம் பேர்) ஏற்கனவே வாக்களித்துவிட்டதாக அந்த மாகாணத்தின் தேர்தல் அதிகாரிகள் தெரிவிததனர்.
முன்கூட்டியே வாக்களிப்பதில் குடியரசு கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. நேரடியாக வாக்களித்தவர்களில் 41.3 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர் என்றும், 33.6 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் என்றும் தெரியவந்துள்ளது.
அதே போல் தபால் மூலம் வாக்களித்தவர்களில் 21.2 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர், 20.4 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் ஆவர்.
முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையில் ஆசிய அமெரிக்கர்களில் வெறும் 1.7 சதவீதம் மட்டுமே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல இடங்களில் இந்திய வம்சாவளியினர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மற்றொரு தரப்பு தகவல்கள்கூறுகின்றன.
- மாணவர் பிரிவு கொலை, சித்தரவதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
- மாணவர்கள் போராட்டத்தின்போது பல்கலைக்கழகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதனால் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும், அவரது கட்சிக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்ட்தின்போது வன்முறை தாக்குதலில் மாணவர் பிரிவு ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இடைக்கால அரசு தெரிவித்தள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மாளிகை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், வலுக்கட்டாயமாக வங்கதேசத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. வெளியேறுவதற்கு முன் கடைசியாக ஒருமுறை உரை நிகழ்த்த விரும்பினார். ஆனால், ராணுவம் அவருக்கு 45 நிமிடம் கால அவகாசம் கொடுத்து பாதுகாப்பாக வெளியேற்றியது.
ஷேக் ஹசீனாவின் வங்கதேசம் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு வங்கதேசம் சத்ரா லீக் என்ற பெயரில் இயங்கி வந்தது. போராட்டத்தின்போது கொலைகள், துன்புறுத்தல், சித்திரவதையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம் ஜூலை மாதம் அமைதியாக நடைபெற்றது. சத்ரா லீக் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன்பின் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- மறைந்த இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்துக்கு பிடித்தமான புனைவு பாத்திரமாக ‘பட்டிங்டன்’ கரடி விளங்கியது.
- இங்கிலாந்து அரசு புனைவு கதாபாத்திரம் ஒன்றுக்கு பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
லண்டன்:
இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளரான மைக்கேல் பான்ட், 1958-ம் ஆண்டு 'பட்டிங்டன்' என்ற சிறுகதை புத்தகத்தை எழுதினார். பழுப்பு கரடியை கதாநாயகனாக கொண்டு எழுதப்பட்ட இந்த புனைவு சிறுகதை புத்தகத்தின் பிரதிகள் கோடிக்கணக்கில் விற்று தீர்ந்து பிரபலமானது.
இதனை தொடர்ந்து அந்த பாத்திரத்தை மையமாக கொண்டு தொடர்கதைகள், கார்ட்டூன் தொடர் மட்டுமின்றி சினிமா படங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. மறைந்த இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்துக்கு பிடித்தமான புனைவு பாத்திரமாக 'பட்டிங்டன்' கரடி விளங்கியது.
இந்தநிலையில் 'பட்டிங்டன்' கதாபாத்திரத்தை தழுவி உருவாகும் புதிய சினிமா படத்துக்காக போலியாக பாஸ்போர்ட் ஒன்றை உருவாக்கி தருமாறு குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர்.
இதனைதொடர்ந்து இங்கிலாந்து அரசு 'பட்டிங்டன்' பெயரில் அசல் பாஸ்போர்ட்டை வழங்கி கவுரவித்துள்ளது. இங்கிலாந்து அரசு புனைவு கதாபாத்திரம் ஒன்றுக்கு பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
- இந்த இடம் மிகவும் சிறியது. மிகவும் வேதனையும் துன்பமும் நிறைந்தது.
- வீடியோ சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு உள்ளது.
கொத்தடிமை முறை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மன்னராட்சி காலத்தில், பெரும் பணக்காரர்களும், மன்னர்களும் கருப்பினத்தவர்களை விலைக்கு வாங்கி, தங்கள் வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
அப்படி அடிமைகள் அடைக்கப்பட்ட பாதாள சிறை பற்றிய ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் தள்ளி உள்ளது. கட்டிட கலைஞரான ரஸ்ஸல் என்பவர், பழமையான அந்த கட்டிடத்தின் பாதாள பகுதியை படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அது தான்சானியா நாட்டின், சான்சிபார் நகரில் உள்ளதாம்.
வீடியோவில் பேசும் ரஸ்ஸல், "இந்த இடம் மிகவும் சிறியது. மிகவும் வேதனையும் துன்பமும் நிறைந்தது. இது 1800-களில் சான்சிபாரில் உள்ள ஸ்டோன்டவுனில் ஓமானி அரேபியர்களால் சிறையில் அடைக்கப்பட்ட அடிமைகளின் வாழ்விடம். மலம் கழிக்கவும், தூங்கவும் ஒரே இடம். தண்ணீரும் அசுத்தமாக இருக்கும், வெளிச்சம் வராது, நோய் தொற்றும் அபாயம் அதிகம். சிறிய இடத்தில் 70 பேர் வரை அடைக்கப்பட்டு இருப்பார்கள். அனைத்து கொடுமைகளிலும் உயிர் பிழைத்தவர்கள் மற்றவர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள்" என்று பேசுகிறார்.
வீடியோ சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு உள்ளது.






