என் மலர்tooltip icon

    உலகம்

    • 1909-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி லூசியானாவில் எலிசபெத் பிரான்சிஸ் பிறந்தார்.
    • இதுவரை அவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார்.

    அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதான நபரும், உலகின் மூன்றாவது வயதான நபருமான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்துள்ளார். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்சாஸின் ஹூஸ்டனில் கழித்துள்ளார்.

    1909-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி லூசியானாவில் எலிசபெத் பிரான்சிஸ் பிறந்தார். முதலாம் உலகப் போரிலிருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார். ஹூஸ்டனில் ஒரு காபி கடையை நடத்தி வந்தார். இவர் வாகனம் ஓட்டுவதை விட நடைபயிற்சி செய்வதை விரும்பினார். இதுவரை அவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார்.

    இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 115-வது பிறந்தநாளில் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்த குறிப்பை பிரான்சிஸ் வழங்கி உள்ளார்.

    முந்தைய நீண்ட ஆயுட்கால சாதனையாளரான எடி செக்கரெல்லி கலிபோர்னியாவில் தனது 116-வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு இறந்ததை அடுத்து, எலிசபெத் பிரான்சிஸ் இந்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் வயதான நபராக முடிசூட்டப்பட்டார். ஏப்ரல் மாதம், LongeviQuest-ல் இருந்து அமெரிக்காவில் மிகவும் வயதான நபராக அங்கீகரிக்கும் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    இப்போது, அமெரிக்காவின் மிக வயதான நபர் நவோமி வைட்ஹெட் ஆவார். அவர் செப்டம்பர் 26, 1910-ல் பிறந்தார் என்று LongeviQuest தெரிவித்துள்ளது.

    • ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மறைமுகமாக ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது.
    • ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நோக்கி சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஓர் ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதல்களில் 1,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச் செல்லப்பட்டனர். இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மறைமுகமாக ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நோக்கி சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு பதிலடியாக துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளது.

    ஈரானில் உள்ள ராணுவ தளவாடகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறும்வேளையில், தெஹ்ரானுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் கூறியிருப்பதாவது:- இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானில் உள்ள ஆட்சியும், அதன் ஆதரவு பெற்ற அமைப்புகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றன.

    ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உள்ளிட்டவைகளுக்கு உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    இதனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    • இந்திய தயாரிப்பு பானிபூரியை, தங்கள் பாரம்பரியம் கலந்து தயாரித்து புதுமைப்படுத்த விரும்பி உள்ளனர்.
    • பாங்காக்கில் உள்ள பிரபல உணவு விடுதியில் இந்த எறும்பு பானிபூரி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

    பானிபூரியில் சுவையை கூடுதலாக்க வறுத்த எறும்புகளை சேர்த்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. தாய்லாந்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இந்த வினோத முயற்சியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் இந்திய தயாரிப்பு பானிபூரியை, தங்கள் பாரம்பரியம் கலந்து தயாரித்து புதுமைப்படுத்த விரும்பி உள்ளனர். அதற்காக பானிபூரி கலவை தயாரிக்க தக்காளி, புளித்த பீன்ஸ், தேங்காய்ப்பால் மற்றும் மல்லி இலை உள்ளிட்ட நறுமண பொருட்களை சேர்த்தனர். கூடுதலாக கொட்டும் சிவப்பு எறும்புகளை வறுத்து பூரியின் மேலாக அலங்கரித்து சாப்பிட கொடுக்கிறார்கள்.

    பாங்காக்கில் உள்ள பிரபல உணவு விடுதியில் இந்த எறும்பு பானிபூரி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பானிபூரிக்கான சிவப்பு எறும்புகளை அவர்கள், சத்தீஸ்கரில் இருந்து வரவழைப்பதாக கூறி உள்ளனர். இதுகுறித்த வலைத்தள வீடியோவை பார்த்த இந்திய பானிபூரி ரசிகர்கள், அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் தாய்லாந்து உணவுப் பிரியர்களிடம் வரவேற்பு கிடைத்து உள்ளதாம். சத்தீஸ்காரில் பழங்குடியினரின் உணவுப் பழக்கவழக்கத்தில் சிவப்பு எறும்புகளை அதிகமாக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.



    • உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
    • ரஷியாவிற்கு உதவ 12,000 ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவுசெய்துள்ளது.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருகிறது என ரஷியா குற்றம்சாட்டியது.

    இதற்கிடையே, உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரில் ரஷியாவுக்கு ஆதரவு அளித்து அந்நாட்டுக்கு வடகொரியா தங்களின் ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

    உக்ரைனுடன் போரிட்டு ரஷியாவிற்கு உதவ 12,000 ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 3,000 வடகொரிய வீரர்கள் கடந்த சில நாளுக்கு முன் ரஷியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தென்கொரிய எம்.பி. எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், வரும் நாட்களில் வடகொரிய ராணுவமும் ரஷியாவுடன் இணைந்து கொள்ளும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் இடையே போர் மண்டலங்களில் வடகொரிய ராணுவத்தை ரஷியா பயன்படுத்தும் என உக்ரைன் உளவுத்துறை கணித்துள்ளது.

    இந்த வரிசைப்படுத்தல் ரஷியாவின் வெளிப்படையான விரிவாக்க நடவடிக்கை ஆகும். வடகொரிய வீரர்கள் எங்கு அனுப்பப்படலாம் என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் தெரியவில்லை.

    வடகொரியப் பிரிவுகள் சண்டையில் சேருவது கிட்டத்தட்ட 3 ஆண்டு கால போரைத் தூண்டிவிட்டு இந்தோ-பசிபிக் பிராந்தியம் வரை புவிசார் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என மேற்கத்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த மார்ச் மாதம் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
    • 8 மாதத்துக்கு பின்னர் அவர்கள் 4 பேரும் தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த 4 பேரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு கடந்த 2 மாதத்துக்கு முன் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். அங்கு போயிங் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்வெளி வீரர்கள் இன்றி அந்த விண்கலம் கடந்த செப்டம்பரில் பூமி வந்தடைந்தது.

    தொடர்ந்து, மில்டன் புயலால் மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 8 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர். அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்களின் ஆய்வுப் பணி 8 நாட்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. மேலும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் சமீபத்தில் 2 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது.

    இந்நிலையில், மார்ச் மாதம் விண்வெளிக்குச் சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதத்துக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

    மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா கடற்கரை அருகே இன்று அதிகாலை அவர்களது விண்கலம் பாராசூட் உதவியுடன் கடலில் விழுந்தது. அதன்பின், விண்வெளி வீரர்கள் படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    • ஜீன் கரோல் என்ற எழுத்தாளரை வன்புணர்வு செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளவர்
    • சில நாட்கள் கழித்து ட்ரம்ப்பிடம் இருந்து எனக்கு ஒரு போஸ்ட் கார்டு மட்டும் வந்தது

    நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    டிரம்ப் ஏற்கவே ஜீன் கரோல் என்ற  எழுத்தாளரை வன்புணர்வு செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளவர் ஆவார். முன்னதாக டிரம்ப் பெண்களை பற்றி அந்தரங்கமாக பேசும் பதிவு ஒன்று ஆக்சஸ் ஹாலிவுட் டேப்ஸ் என்று பெயரில் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது டிரம்ப் மீது மற்றொரு மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

     

     ஸ்டேஷி வில்லியம்ஸ்

     ஸ்டேஷி வில்லியம்ஸ்

    ஸ்டேஷி வில்லியம்ஸ் என்ற அந்த மாடல் பிரபலம் ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 1993 ஆம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கடந்த 1992 ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் நடந்த விருந்து ஒன்றில் வைத்து ட்ரம்ப்பை முதன்முதலில் சந்தித்தேன்.

     

    அப்போது உடனிருந்த எனது நண்பர் எப்ஸ்டின் உடன் பேசிக் கொண்டே என்னிடம் டிரம்ப் பாலியல் ரீதியாக அத்துமீறினார். எனக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதுவும் பேசமுடியாத நிலைக்கு ஆளானேன். இந்த சம்பவம் பற்றி எனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன்.

    இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ட்ரம்ப்பிடம் இருந்து எனக்கு ஒரு போஸ்ட் கார்டு மட்டும் வந்தது என்று ஸ்டேஷி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இதற்கிடையே இது எதிர் போட்டியாளர் கமலா ஹாரிஸ் தரப்பின் சதிவேலை என்று டிரம்ப் தரப்பு தெரிவிக்கிறது..

     

    • தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும்
    • தேர்தல் சமயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மஸ்க் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

    உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்தார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள மஸ்க் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார்.

     

    துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் மஸ்க் 10 லட்சம் கையொப்பங்களை இலக்காக வைத்துள்ளார்.

    எனவே பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த படிவத்தில் கையொப்பம் இடுபவர்களில் தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். அதன்படி சிலருக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.ஆனால் தேர்தல் சமயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மஸ்க் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

    இந்நிலையில் மஸ்க்கை எச்சரித்து அமெரிக்க நீதிமன்றம்எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மஸ்க் செயல்படுத்தியுள்ள இந்த திட்டம் அமெரிக்க சட்டங்களை மீறுவதாகவும் மக்களின் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் செயலாகவும் உள்ளதால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

    அரசியல் சட்டத்தை மீறும் எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு நீதித்துறையில் சிவில் குற்றவியல் சட்டத்துக்கு உட்பட்டது. எனவே அவருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கவும் கூடும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

    • ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும்.
    • ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ஒட்டாவா:

    வடஅமெரிக்க நாடான கனடா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களை நம்பி தான் இந்நாட்டின் பொருளதார வளர்ச்சி உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் என்ற போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதில் இருந்து இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு எதிராக எம்.பி.க்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என கெடுவும் விதித்துள்ளனர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கனடாவில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க போகிறோம். இது தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ளார்.

    அதன்படி இந்த ஆண்டு 4 லட்சத்து 85 ஆயிரமாக இருக்கும் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டு 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 2026-ம் ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரமாகவும் குறைக்கப்படும். 2027-ம் ஆண்டு இது 3 லட்சத்து 65 ஆயிரமாக குறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

    தொழிலாளர்கள் தேவையை நிவர்த்தி செய்யவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும். இதனை சிலர் விமர்சனம் செய்துள்ளனர். கனடா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாட்டில் உற்பத்தி நிலையானதாக இருக்கிறது. இதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆட்களின் எண்ணிக்கை அவசியம். ஆனால் ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    • தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
    • பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார்.

    துபாய்:

    துபாயில் குடியேறுவதற்காக போலந்து நாட்டைச் சேர்ந்த கஜேதன் ஹப்னர் என்ற வாலிபர், பெண் தோழியுடன் வந்தார். புதிதாக வீடு தேடிக் கொண்டிருப்பதால், தற்காலிகமாக துபாய் மரினா பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கினர். அவர்கள் அப்பகுதியில் உள்ள இடங்களை சுற்றி பார்க்கும் வகையில் இ-ஸ்கூட்டர் ஒன்றை வாங்க அந்த வாலிபர் திட்டமிட்டு, இணையதளத்தில் தேடினார்.

    அப்போது தனியார் நிறுவனம் ஒன்று 1,750 திர்ஹாமில் இ-ஸ்கூட்டரை விற்பனை செய்வதாக அறிவித்து இருந்தது. இதனை கஜேதன் ஹப்னர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். அதில், பொருளை டெலிவரி செய்யும் போது பணத்தை தருவதாக குறிப்பிட்டார்.

    இந்த இ-ஸ்கூட்டரை டெலிவரி செய்வதற்காக அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம்மது மோசின் நசிர் என்ற டெலிவரி ஊழியர் நேரில் சென்றார். அதனை பெற்றுக் கொண்ட கஜேதன் ஹப்னர் பணத்தை நசிரிடம் கொடுத்தார். அப்போது அவர் 1,750 திர்ஹாமுக்கு பதிலாக 17,050 திர்ஹாம் வழங்கினார். இதனை டெலிவரி ஊழியரும் எண்ணி பார்க்காமல் வாங்கி சென்றார். பின்னர் முகம்மது மோசின் நசிர் தினமும் பொருட்களை டெலிவரி செய்த பணத்தை எண்ணி பார்ப்பது வழக்கம். அன்று இரவில் அவர் பணத்தை எண்ணும் போது 15 ஆயிரம் திர்ஹாம் அதிகமாக இருப்பது தெரிந்தது.

    இந்நிலையில் முகம்மது மோசின் நசிரின் தாயார் பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகனிடம் பேசினார். அப்போது இந்த விவரத்தை அவரிடம் தெரிவித்தார். அவரும் பணத்தை உடனடியாக கொடுத்தவரிடம் திருப்பி கொடுத்து விடு என தெரிவித்தார். இதற்கிடையே பொருளை வாங்கிய கஜேதன் ஹப்னர் தன்னிடம் இருந்த பணம் குறைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது தோழியுடன் சேர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.

    அப்போது கஜேதன் ஹப்னர் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், டெலிவரி ஊழியர் முகம்மது மோசின் நசிர் பேசினார். அப்போது, உங்களிடம் ஆன்லைன் பொருளுக்கு கூடுதலாக பணம் பெறப்பட்டது என விவரமாக கூறினார். அந்த பணத்தை திரும்ப கொடுக்க நேரில் வருகிறேன் எனவும் தெரிவித்தார். பின்னர் மறுநாள் 15 ஆயிரம் திர்ஹாம் பணத்தை எடுத்து கொண்டு டெலிவரி ஊழியர், வெளிநாட்டு வாலிபர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்று நேரில் ஒப்படைத்தார்.

    டெலிவரி இளைஞரின் நேர்மையை பாராட்டி அவருக்கு 300 திர்ஹாம் பரிசாக கஜேதன் ஹப்னர் வழங்கினார். டெலிவரி ஊழியர் அனுமதியுடன் போலந்து இளைஞரின் தோழி அவரது நேர்மையை கவுரவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சியை பதிவாக வெளியிட்டார்.

    தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
    • சபிதீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.

    இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே சபிதீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    இந்தநிலையில், இஸ்ரேல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் என்றும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நீண்ட கால முயற்சிகள் வேகமடைவதால் போர் நிறுத்தம் ஏற்பட்டால் சண்டையை நிறுத்துவமாக ஹமாஸ் உறுதியளித்துள்ளது.

    இதனிடையே, நேற்று கெய்ரோவில் எகிப்திய அதிகாரிகளுடன் காசா போர் நிறுத்தம் தொடர்பான "யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை" தோஹாவை தளமாகக் கொண்ட தலைமைத்துவ குழு விவாதித்ததாக ஹமாஸின் மூத்த அதிகாரி கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:- "ஹமாஸ் சண்டையை நிறுத்தத் தயாராக உள்ளது, ஆனால் இஸ்ரேல் ஒரு போர் நிறுத்தத்திற்கு உறுதியளிக்க வேண்டும். காசா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும். இடம் பெயர்ந்த மக்களைத் திரும்ப அனுமதிக்க வேண்டும். தீவிர கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் மற்றும் காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும். கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு எகிப்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி" என்றார்.

    • இந்த இரண்டு அணுகுண்டுத் தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர்.
    • நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் தலைவர் தோஷியுக்கி மிகாமிக்கி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

    இரண்டாம் உலகப் போர் 

    இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் ஜப்பான் நடத்திய தாக்குதலில் 2,390 காப்பாற்றப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கொந்தளித்த அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டை வீசியது. இதில் 1,40,000 மக்கள் உயிரிழந்தனர்.

    இது நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி நகரின் மீது இரண்டாவது அணு குண்டை அமெரிக்கா வீசியது. இந்த இரண்டு தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜப்பான் சரணடைந்ததும் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திய மரபணு பாதிப்புகள் இன்றுவரை அந்நகரின் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    அமைதிக்கான நோபல்  

    இந்த தாக்குதல்களின் உயிர்பிழைத்தவர்களின் சிலர் இணைந்து நிஹான் ஹிடான்கியோ என்ற அமைப்பை சுமார் 10 வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டில் உருவாக்குகின்றனர். உலகம் முழுவதிலும் அணுகுண்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் இந்த அமைப்பு இன்று வரை ஈடுபட்டு வருகிறது.

    அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களை உலகெங்கும் அனுப்பி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான சேதங்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய கதைகளை இந்த அமைப்பு பகிர்ந்து கொள்கிறது. இந்த அமைப்புக்கு தற்போது 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

     80 வருடங்கள் முன்

    நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் தலைவர் தோஷியுக்கி மிகாமிக்கி [Toshiyuki Mimaki] அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வைக்கும் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, பாலஸ்தீனத்தின் காசாவில் தற்போது உள்ள நிலை 80 வருடங்கள் முன்னாள் ஜப்பான் இருந்த நிலையை தனக்கு ஞாபகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

     

    இந்த கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் தோஷியுக்கியின் கருத்தை பலர் ஆமோதித்தனர். இந்த கருத்துக்கு இஸ்ரேலை ஊக்குவிக்கும் மேற்குலகம் செவி சாய்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

    காசா  

    இஸ்ரேல் மீது கடந்த வருடம் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 2400 பேர் வரை உயிரிழந்தனர். இதனால் கொதித்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா உள்ளிட்ட நகரங்களின் கடந்த 1 வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.

     

    மனிதாபிமான உதவிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் உணவும் அத்தியாவசிய பொருட்களும், காயங்களை ஆற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது 80 வருடங்களுக்கு முன்னர் அணுகுண்டு தாக்குதலில் சிதைந்த ஹிரோஷிமா நாகசாகி நகர மக்கள் சந்தித்த பாதிப்புகளுக்குச் சற்றும் குறைந்தது கிடையாது என்பதே அமைதியை வலியுறுத்தும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அணுகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை தங்களின் பெருமையாகப் பறைசாற்றிக்கொள்ளும் அதிகார வர்க்கத்துக்கு இந்த குரல் ஒருபோதும் எட்டப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

    • இன்றைய தினம் நடக்கும் மாநாட்டுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றியுள்ளார்.
    • பிரச்சனைகளை தீர்வதற்கு பதிலாக இன்னும் அதிக சிக்கல் கொண்டவையாக மாறி வருகிறது.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. மேற்கு நாடுகளின் ஜி7 கூட்டமைப்புக்குப் பதிலாக மேற்கூறிய நாடுகளின் பொருளாதார உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே இந்த பிரிக்ஸ் அமைப்பு.

    அதன்படி 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று [அக்டோபர் 24] உடன் முடிவடைகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் பெசஸ்கியான், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி. இந்நிலையில் இன்றைய தினம் நடக்கும் மாநாட்டுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றியுள்ளார்.

     

    அப்போது பேசிய அவர், மாற்றத்திற்கான செயல்பாடுகள் மூலம் நாம் எவ்வளவுதான் முன்னேறி வந்தாலும் சில நெடுங்கால பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாத முரண்பாடான நிலை உள்ளது. அந்த பிரச்சனைகளை தீர்வதற்கு பதிலாக இன்னும் அதிக சிக்கல் கொண்டவையாக மாறி வருகிறது.

    எனவே உலக நலனுக்காக நிறுவப்பட்ட அமைப்புகளிலும் அதன் செயல்பாடுகளிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது. இது குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடுகள் சீரமைக்கப்பட வேண்டும். சர்வதேச பிரச்சனைகளில் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாடுகள் மதிக்கப்பட வேண்டும்.

    பலதர்ப்பு வளர்ச்சிக்காக நிறுவப்பட்ட சர்வதேச வங்கிகளின் செயல்முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். ஐநாவின் காலாவதியான சூழலைப் போல அவையும் பழையதாகிவிட்டன என்று தெரிவித்தார். மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

    உலக வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை இதற்கு ஆதரவு தெரிவித்தன. என்று சுட்டிக்காட்டினார். முன்னதாக ஐநா கிழக்கிந்திய கம்பெனியைப் போல செயல்படாத ஒன்றாக மாறிவிட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

    ×