என் மலர்
உலகம்
- முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க டொனால்டு டிரம்ப் முடிவு.
- அவசர நிலையை கொண்டுவரவும் தயங்க மாட்டேன்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்ததும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 100 முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி நாடு முழுக்க சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதற்கான கையெழுத்தை டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே போட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் தேவைப்பட்டால் தேசிய அவசர நிலையை கொண்டுவரவும் தயங்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும், எல்லை சுவரை கட்டுவதற்கும் கூடுதல் படைகளை அப்பகுதியில் குவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கும், ஏற்கனவே சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தவும் கடும் நடவடிக்கை எடுப்பதாக கூறியே டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், நாடு கடத்தலை அதிகப்படுத்துவது தொடர்பாக டிரம்ப் பத்து நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்க இருக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டப்பூர்வ குடியிரிமை இல்லாத பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமையை முடிவுக்கு கொண்டுவரும் உத்தரவை பிறப்பித்து சட்டப்பூர்வ குடியேற்றத்தை நிறுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அகதிகள் திட்டத்தை குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தம் செய்யவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- முதுகலை படிப்பதற்காக 2022 இல் அமெரிக்கா சென்ற ரவி தேஜா சமீபத்தில் தனது படிப்பை முடித்து அங்கு வேலை தேடி வந்தார்.
- அவரது தந்தை கொய்யாடா சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்காவில் வேலை தேடி வந்த இந்திய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கனா மாநிலம் ஐதராபாத்தின் சைதன்யபுரி பகுதியில் உள்ள ஆர்.கே.புரம், கிரீன் ஹில்ஸ் காலனியைச் சேர்ந்தவர் கொய்யாடா ரவி தேஜா. முதுகலை படிப்பதற்காக 2022 இல் அமெரிக்கா சென்ற ரவி தேஜா சமீபத்தில் தனது படிப்பை முடித்து அங்கு வேலை தேடி வந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் அவென்யூவில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேஜா வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக இன்று காலை எங்களுக்கு தகவல் கிடைத்தது என்று அவரது தந்தை கொய்யாடா சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறினார்.
குடும்பத்தினருக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, தேஜா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரியவந்துள்ளது.
- ஃபாா்க் அமைப்பைச் சோ்ந்தவா்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இஎல்என் அமைப்பினா் படுகொலை செய்து வருகின்றனர்
- அப்பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் தங்கள் வீடுகளை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி கொரில்லா ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 80 போ் உயிரிழந்தனர்.
வெனிசுலாவை ஒட்டிய கொலம்பிய எல்லைப் பிரதேசத்தில் உள்ள கேட்டடம்போ பகுதியில் தேசிய விடுதலை ராணுவம் (இஎல்என்), கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை (ஃபாா்க்) ஆகிய இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.
ஃபாா்க் அமைப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு நிராயுதபாணியை செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் ஃபாா்க் அமைப்பைச் சோ்ந்தவா்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இஎல்என் அமைப்பினா் படுகொலை செய்து வருகின்றனர்.

இரு குழுக்களின் வன்முறைக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கியுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாளில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழன் முதல் வன்முறை சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் தங்கள் வீடுகளை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்த 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஎல்என்-னுடன் நடத்திவந்த போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை கொலம்பியா அரசு நிறுத்திவைத்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கோகைன் வர்த்தக தலமாக உள்ள இப்பகுதியில் யார் வர்தகத்தை கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக போட்டி குழுக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் சண்டையிட்டு வருகின்றன.
- விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர்.
- இரு தலைப்பட்சி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார். விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.
மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அம்பானி தம்பதியினர் நேற்று அமெரிக்கா சென்றனர்.
பதவியேற்பு விழாவுக்கு முன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர். அப்போது டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
மேலும் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகளிலும் அம்பானி தம்பதி கலந்துகொள்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வந்தது பலரையும் கவர்ந்துள்ளது.
அவர் அணிந்திருந்த காஞ்சிப்பட்டு சேலையில், காஞ்சிபுரத்தின் பழம்பெருமை வாய்ந்த கோவில்களின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில், டிரம்ப் விழாவில் காஞ்சிப் பட்டுச் சேலையில் நீடா அம்பானி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.
ஸ்வதேஷ் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த சேலை, தேசிய விருது பெற்ற கலைஞர் கிருஷ்ணமூர்த்தியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னரும் பல நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலைகளை அணிந்து வளம் வந்தது குறிப்பிடத்தக்கது.
- நான் அதிபராக இருந்திருந்தால் இந்த காசா போரே நடந்திருக்காது.
- அதிகாரத்தில் இல்லாமலேயே கடந்த 3 மாதத்தில் நாங்கள் அதிகமாக சாதித்துள்ளோம்.
இன்று அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக நேற்று கேப்பிடல் ஒன் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அங்கு டிரம்ப் பேசியதாவது,
நமது நாட்டை சரியான பாதையில் கட்டமைக்க வேண்டும். நாளை சூரியன் மறையும் நேரத்தில், நமது எல்லைகள் மீதான படையெடுப்பு நிறுத்தப்படும். நமது எல்லைகளை தொடர்ந்து பாதுகாப்போம். அனைத்து சட்டவிரோத எல்லை அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன்.
அமெரிக்க மண்ணில் செயல்படும் ஒவ்வொரு சட்டவிரோத அன்னிய கும்பல் மற்றும் புலம்பெயர்ந்த குற்றவாளிகளையும் வெளியேற்றுவோம்.
மத்திய கிழக்கில் அமைதிக்கான முதல் படியாக நாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடைந்துள்ளோம். கடந்த நவம்பரில் நாங்கள் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் விளைவாகவே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது 3 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். நான் அதிபராக இருந்திருந்தால் இந்த காசா போரே நடந்திருக்காது.

நமது நிர்வாகம் மத்திய கிழக்கில் மூன்று மாதங்களுக்குள் இவை அனைத்தையும் சாதித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், ஜோ பைடன் அதிபராக இருந்து சாதித்ததை விட, அதிகாரத்தில் இல்லாமலேயே கடந்த 3 மாதத்தில் நாங்கள் அதிகமாக சாதித்துள்ளோம்.
உக்ரைனில் நடைபெற்று வரும் போரையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் நீடிக்கும் குழப்பத்தை தீர்த்து வைப்பேன். 3-ம் உலகப் போர் நிகழாமல் தடுப்பேன் என்று பேசியுள்ளார்.
- காசாவில் இருந்த 23 லட்சம் மக்களில் 19 லட்சம் மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்
- 100க்கும் மேற்பட்ட லாரிகள் முழுநேர வேலை செய்தாலும், இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியதில் இருந்து காசாவில் போர் தொடங்கியது, இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் கடத்தப்பட்டனர். சுமார் 100 பணயக்கைதிகள் இன்னும் காசாவிற்குள் உள்ளனர், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் 46,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தெரிவித்துள்ளது. 110,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். 17,000 க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அதனால் தர முடியவில்லை.
இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் குண்டுவீச்சுகள் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கியுள்ளது. காசாவில் இருந்த 23 லட்சம் மக்களில் 19 லட்சம் மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] முழுமையாக நடைமுறைக்கு வந்தது. முதற்கட்டமாக இஸ்ரேலிய பணய கைதிகள் மூவரை ஹமாஸும், பாலஸ்தீனிய கைதிகள் 90 பேரை இஸ்ரேலும் விடுவித்தது.
போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் காசாவில் தாங்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளை நோக்கி மக்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.
15 மாதங்களாக வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டில் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்த காசா மக்கள் கல்லாகவும் மண்ணாகவும் எஞ்சிய கட்டடங்களை கடந்து சிதிலங்களுக்கு ஊடாக தங்கள் வீடுகளின் எச்சங்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.
தெருக்களை சுத்தம் செய்து தங்கள் வாழ்வை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர். ஆனால் சேதங்கள் சரிசெய்யப்பட்டு காசாவில் மீண்டும் இயல்வு வாழ்க்கை திருப்புவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே துரதிஷ்டவசமாக உண்மை.

காசாவில் புனரமைப்பு பணிகளை நடத்தி முடிக்க 350 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் வெளியிட்ட தரவின்படி, காசாவில் உள்ள 69% கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

சுமார் 245,000 வீடுகள் உட்பட பல கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட லாரிகள் முழுநேர வேலை செய்தாலும், இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.
ஆனால் நம்பிக்கை மிகுந்த ஒரு பால்ஸ்தீனியர் கூறுவதுபோல், "நாங்கள் இனியும் ஒரு கூடாரத்தில் இருக்கலாம், ஆனால் வித்தியாசம் என்னவென்றால், இரத்தக்களரி நின்றுவிடும், பயம் அகன்றுவிடும், நாங்கள் நிம்மதியாக தூங்குவோம்" என்பது ஒன்றே காசா மக்களுக்கு ஆறுதலாக அமைத்துள்ளது.

- டிக் டாக் செயலி தடைபட்டால் அதை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும்.
- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் நேற்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது.
அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அளித்துள்ள உறுதியைத் தொடர்ந்து மிண்டும் சேவையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
- அமலுக்கு வந்துள்ள இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
- விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்றே வெளியிட்டது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும்.
கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றனர். பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர்.
போர் நிறுத்தம் நேற்று மதியம் 12 மணிக்கு அமலுக்கு வரவிருந்தது. ஒப்பந்தப்படி இருதரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்கள் பெயர் விவரங்களை 24 மணி நேரத்திற்கு முன் தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது.
ஆனால் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் விவரங்களை வெளியிடவில்லை. சுமார் 2 மணி நேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது. அதன்படி, ரோமி கொனின் ( 24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்தது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் விடுதலை செய்யப்பட்ட 3 பிணைக்கைதிகளும் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
- அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.
- இதில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி பங்கேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.
இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அம்பானி தம்பதியினர் நேற்று அமெரிக்கா சென்றனர்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவுக்கு முன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர். அப்போது டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது டிரம்புக்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்தியா-அமெரிக்கா உறவு இன்னும் ஆழமாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அம்பானி தெரிவித்தார்.
- வாஷிங்க்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே போராட்டம் நடைபெற்றது.
- டிரம்ப் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போரட்டம் நடத்தினர்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் நாளை [ஜனவரி 20] பதவியேற்கிறார்.
இந்நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து தலைநகர் வாஷிங்க்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். பீப்புள்ஸ் மார்ச் அமைப்புடன் இணைந்து சவுத் ஏஷியன் சர்வைவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றன.
வாஷிங்க்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே மூன்று போராட்டக்குழுவினர் இணைந்து கோஷங்களை எழுப்பினர்.

நாங்கள் முன்கூட்டியே கீழ்ப்படியவில்லை, பாசிசத்திற்கு அடிபணியவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறோம் என்று பீப்புள்ஸ் மார்ச் தெரிவித்துள்ளது. பெண்கள் உரிமை, சமத்துவம், குடியேற்றம் போன்ற அனைத்தையும் ஆதரிக்க நாங்கள் அணி திரண்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரம்ப் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போரட்டம் நடத்தினர். டிரம்புக்கு ஆதரவளிக்கும் டெஸ்லா நிறுனவர் எலோன் மஸ்க் உட்பட அவருக்கு நெருங்கியவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அவர்களில் பலர் "F**k ட்ரம்ப்!", "டிரான்ஸ் லைவ்ஸ் மேட்டர்!", "எழுந்து நில்லுங்கள், போராடுங்கள்!", "கறுப்பினப் பெண்களை நம்புங்கள்!" மற்றும் "நாங்கள் அமைதியாக இருக்க முடியாது." என்ற கோஷங்களை எழுப்பினர்.
நியூயார்க், சியாட்டில் மற்றும் சிகாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டன.
டிரம்ப் முதல்முறையாக பதவியேற்ற 2017 ஜனவரியிலும் இதே அமைப்பினர் இதேபோன்ற போராட்டத்தை நடத்தியது. நாளை டிரம்ப் பதவி ஏற்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
- இதையடுத்து காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 108 பேர் உயிரிழந்தனர்.
- விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்றே வெளியிட்டுவிட்டது.
இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடை யேயான போர் 15 மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வருகிறது. இந்த போர் ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு அமலாகிறது. போர் நிறுத்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும்.
கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம் இன்று மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணிக்கு) அமலுக்கு வரவிருந்தது. ஒப்பந்தப்படி இரு தரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்களின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் இன்று விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்றே வெளியிட்டுவிட்டது.
ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பணய கைதிகளின் விவரங்கள் இன்று மதியம் 2 மணிவரை (இஸ்ரேல் நேரப்படி 10.30 மணி) வெளியாகவில்லை. இதனால், போர் நிறுத்தம் அமலுக்கு வராமல் இருந்தது. எனவே இதையடுத்து காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 108 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பணய கைதிகளான ரோமி கொனின் (வயது 24), ஏமி டமாரி (வயது 28), டோரன் ஸ்டான்பிரிசர் (வயது 31) ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட உள்ள பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் மதியம் 2.45 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி காலை 11.15 மணி) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- 56 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர்
- ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றபோது வெடி விபத்து ஏற்பட்டது.
ஆப்பிரிக்காவின் வடக்கு நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து எரிபொருளைக் கொட்டி வெடித்துச் சிதறியதில் 70 பேர் உயிரிழந்தனர். 56 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர்
நைஜர் மாநிலத்தின் சுலேஜா பகுதிக்கு அருகே நேற்று [சனிக்கிழமை] அதிகாலையில் டேங்கரில் இருந்து மற்றொரு டிரக்கிற்கு ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றபோது வெடி விபத்து ஏற்பட்டது.
இது பெட்ரோலைக் கையாளுபவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மரணத்திற்கும் வழிவகுத்தது என தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனத்தின் (NEMA) பிரதிநிதி ஹுசைனி இசா தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று NEMA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






