என் மலர்
உலகம்
- வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறினேன். அணுசக்திப் போரைத் தடுத்தேன் என்றார்.
- 18வது முறையாக இவ்வாறு பேசியுள்ளார் என காங்கிரஸ் மத்திய அரசை விமர்சித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.
நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன். இரு நாடுகளும் சண்டையிட்டால், வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறினேன். அணுசக்திப் போரைத் தடுத்தேன்" என்றார்.
கடந்த மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. டிரம்ப் இதனை அறிவித்து, தானே மத்தியஸ்தம் செய்ததாகக் கூறினார்.
ஆனால், இந்தியா இந்த கூற்றை மறுத்தது. இருப்பினும் டிரம்ப் 18வது முறையாக இவ்வாறு பேசியுள்ளார் என காங்கிரஸ் மத்திய அரசை விமர்சித்துள்ளது.
- சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
- தற்போது, ரஷியா , சீனா மற்றும் வட கொரியாவை அமெரிக்கா தனது எதிரி நாடுகளாகக் கருதுகிறது.
பாகிஸ்தான் மிகவும் ரகசியமான முறையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த ஏவுகணைகள் 5,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை அமைப்பு அறிக்கையில், இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்துர்'க்குப் பிறகு, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பல முக்கிய பகுதிகளை குறிவைக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ரகசியமாக உருவாக்கி வருகிறது.

பாகிஸ்தான் இதுபோன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கவோ அல்லது வாங்கவோ முயற்சித்தால், அந்த நாடு எதிரியாக இக்கருதப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்ததாக அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா, தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாட்டையும் அதன் எதிரியாக அறிவிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. தற்போது, ரஷியா , சீனா மற்றும் வட கொரியாவை அமெரிக்கா தனது எதிரி நாடுகளாகக் கருதுகிறது.
சிறிது காலமாக, பாகிஸ்தான் முக்கியமாக குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது அந்நாட்டிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) இல்லை. 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தான், மேற்பரப்பு முதல் மேற்பரப்பு வரையிலான இடைநிலை ஏவுகணையான ஷாஹீன்-III ஐயும், 2023 ஆம் ஆண்டில், இடைநிலை ஏவுகணையான கௌரியையும் வெற்றிகரமாக சோதித்தது.
இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூரின் போது 450 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பு ஏவுகணையை (மேற்பரப்பில் இருந்து மேற்பரப்புக்கு தாக்கும் ஏவுகணை) சோதித்ததாக பாகிஸ்தான் அறிவித்தது.
கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தின் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்தது. ஏவுகணைத் திட்டத்தை மேற்பார்வையிடும் அரசுக்குச் சொந்தமான நிறுவனமான தேசிய மேம்பாட்டு கழகம் மற்றும் மூன்று நிறுவனங்களுடன் வணிகம் செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் தடை செய்தது.
பாகிஸ்தான் இத்தகைய ஏவுகணைகளை உருவாக்குவது அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா பாரபட்சமாக தங்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
- 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று இந்த தாக்குதல் அழைக்கப்பட்டது.
- அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை IAEA உடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்க ஈரானிய பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது.
ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது.
'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது.
இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலும் பங்கேற்றதாக செய்திகள் வந்தன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி,"தொடர்ச்சியான தாக்குதல்களால் எங்கள் அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்பது தெளிவாகிறது" என்று கூறினார். இருப்பினும், சேதத்தின் முழு விவரங்களையும் வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
ஈரானிய அணுசக்தி அமைப்பு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் தற்போது நிலைமை மற்றும் சேதத்தை மதிப்பிடுவதாக அவர் விளக்கினார்.
மறுபுறம், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) ஈராபி அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களைக் கையாண்ட விதம் குறித்து ஈரான் ஆழ்ந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அதன் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வரை IAEA உடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்க ஈரானிய பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்க IAEA மறுத்ததை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் விமர்சித்தார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது.
- இதில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.
பீஜிங்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.
சீனாவின் சாண்டோங் மாகாணம் குயிங்தவோ நகரத்திற்கு விமானத்தில் சென்ற ராஜ்நாத் சிங்கை சீன அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
சீனா சென்றுள்ள ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
- பாகிஸ்தான் ராணுவ மேஜர் அப்பாஸ் ஷா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- இவர் இந்திய ராணுவ வீரர் அபினந்தனை சிறை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் 2019-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது ராணுவ வீரர் அபினந்தன் வர்தமான் சென்ற மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது பாராசூட் மூலம் வெளியே குதித்த அபினந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கினார். இதையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.
மத்திய அரசின் கடும் எச்சரிக்கை மற்றும் அழுத்தத்தினால் சிறைபிடிக்கப்பட்ட 58 மணிநேரத்தில் அபினந்தன் விடுவிக்கப்பட்டார். அவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அடாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினார்.
அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கியபோது அவரை சிறைபிடித்தவர் பாகிஸ்தான் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா என்பவர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடமேற்கு பாகிஸ்தான் பகுதியான கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான்கள் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
- தங்களுடைய நிதியை நிறுத்தி விடுவோம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
- ஒவ்வொரு நாடும் தங்களுடைய ஜிடிபியில் 5 சதவீதம் வழங்க வேண்டும்.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ (NATO) அமைப்பை உருவாக்கியுள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் பணம் ஒதுக்கும் இந்த நிதி ராணுவ செலவினம் என்று அழைக்கப்படுகிறது.
நேட்டோவிற்கு அமெரிக்காதான் அதிக அளவில் பணம் ஒதுக்கி வந்தது. டொனால்டு டிரம்ப், 2ஆவது முறையாக அமெரிக்க அதிபராக பதிவு ஏற்றபின் மற்ற நாடுகளும் அதிக அளவில் நேட்டோவின் ராணுவ செலவினத்திற்கு செலவழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இல்லை என்றால் நேட்டோவில் இருந்து வெளியேறுவதாக மிரட்டல் விடுத்தார்.
2035ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நாடும் அதன் ஜிடிபியில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். தங்களால் அவ்வளவு தொகை செலவழிக்க முடியாது என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 32 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. தனிப்பட்ட மற்றும் கூட்டு கடமைகளை உறுதி செய்ய ஒருங்கிணைத்த பாதுகாப்பு தேவைகளுக்காக ஜிடிபி-யில் 5 சதவீதம் முதலீடு சேய்ய நேட்டோ நாடுகள் ஒப்புக்காண்டுள்ளன என நேட்டோ மாநாட்டில் அறிக்கை வெளியிடப்பட்டது.
- ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டுசெல்ல உதவியதாக குற்றச்சாட்டு.
- இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மூவரை ஈரான் அரசு தூக்கிலிட்டது.
துபாய்:
இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். ஆனாலும் இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.
இதற்கிடையே, இஸ்ரேலுடனான மோதலின் போது கடந்த 10 நாட்களில் உளவு பார்த்ததாக ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியிருந்தது.
இந்நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி, ரசுல் அகமது ரசுல் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மூவரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது என ஈரானிய நீதித்துறை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு உதவியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜெருசலேம்:
காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச்சென்றது.
இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பிணைக்கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. சுமார் 21 மாதமாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்தியா- பாகிஸ்தான் இடையே உள்ளன.
- அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள பேச்சுவாத்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக அர்த்தமுளள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எப்போதும் தயாராக இருக்கிறது என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் ஷெபாஷ் ஷெரீப் டெலிபோனில் பேசியுள்ளார். அப்போது, "ஜம்மு-காஷ்மீர், தண்ணீர் பிரச்சினை, வர்த்தகம் மற்றும் பயங்கரவாதம் உள்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7ஆம் தேதி அதிகாலை ஆபசேரன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மே 10-ஆம் தேதி இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதனால் தாக்குதல் நிறுத்தப்பட்டது.
ஆனால் சிந்து நதி நீர் சஸ்பெண்ட் போன்றவை தொடரும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
- தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
விண்வெளி பயணம் - நாசா அறிவிப்பு
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆக்சியம் 4 திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர். புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்துள்ளனர்.
- ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக ஈரானின் அணு நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி, மாறி தாக்குதல்களை தொடுத்தன. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை போர் விமானங்கள் மூலம் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும் 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே இஸ்ரேல்-ஈரான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் தவறானது. இந்த அறிக்கைகள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை குறைப்பதற்கான ஒரு முயற்சியாகும். ஏனென்றால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்றார்.
மேலும் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்ற அறிக்கைகள் முற்றிலும் தவறானது. இது துணிச் லான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும்" டிரம்பின் தலைமையை குறைத்து மதிப்பிடுவதும் நோக்கமாகக் கொண்டவை.
நீங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை அவர்களின் இலக்குகளில் சரியாகப் போடும்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு முழுமையான அழிவு ஏற்பட்டது என்றார்.
- அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் டிரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த டிரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.






