என் மலர்
உலகம்

காசாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்: 7 இஸ்ரேல் வீரர்கள் பலி
- இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜெருசலேம்:
காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச்சென்றது.
இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பிணைக்கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. சுமார் 21 மாதமாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.






