என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.
    • இந்தியா முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.

    பெண்களுக்கான 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

    இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. இந்த நிலையில் ஐசிசி உலக கோப்பைக்கான Anthem-ஐ ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பாடலை இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    தொடக்க விழாவிலும் ஷ்ரேயா கோஷலின் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    இந்திய பெண்கள் அணி இதுவரை ஐசிசி கோப்பையை வென்றதில்லை. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ரன்னில் தோல்வியடைந்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உறுதிப் போட்டிகளில் 9 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    • நியோமேக்ஸ் வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நிவாரணம் வழங்குவது எளிமை.
    • நியோமேக்ஸ் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.

    நியோமேக்ஸ் நிறுவன வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது எளிமையாகும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் எனக்கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8ம் தேதி வரை உயர்நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியது.

    அக்டோபர் 8ம் தேதி வரை புகார் அளிப்பவர்களுக்கு மட்டும் இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

    • அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பதற்காக செங்கோட்டையனை சந்தித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • கடந்த 16-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 5-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவையும் விதித்தார்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்ட பிறகு எழுந்த சலசலப்புகள் எல்லாம் அடங்கி எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அந்த கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அணி வகுத்துள்ளனர்.

    இந்த நிலையில் செங்கோட்டையன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு கோஷத்தை எழுப்பியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பி.எஸ். அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த பணிகளை நானே ஒருங்கிணைப்பேன் என்றும் செங்கோட்டையன் கூறி இருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால் கட்சியில் இருந்து அவரை நீக்கவில்லை.

    செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் அவரது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக செங்கோட்டையன், சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பதற்காக செங்கோட்டையனை சந்தித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார். இப்படி சசிகலா, ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகிய 3 பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே கட்சி பதவிகளை பறித்த பிறகு செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியதாகவும், அவர்களுடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாக பரபரப்பு தீயை பற்ற வைத்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். அப்போது அ.தி.மு.க. இணைப்பு பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வற்புறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல்களை எல்லாம் மறுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடவில்லை என்று கூறியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைகள் செங்கோட்டையனின் இணைப்பு முயற்சிக்கு போடப்பட்டுள்ள முட்டுக்கட்டை என்றே அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள். இதையும் தாண்டி செங்கோட்டையன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்று கூறிக் கொண்டு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினால் அடுத்தக்கட்டமாக அவரை அ.தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, செங்கோட்டையன் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் என்பதால் அவரை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

    அதே நேரத்தில் அவர் கட்சி விரோத செயல்களில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினால் நிச்சயம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    • அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.
    • கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 49.75 கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 126 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.

    அணை பூங்காவுக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுத களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சாரிக்கை விடப்படுகிறது. பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்ட ஹள்ளி, தளி ஹள்ளி ஆகிய கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

    தென் பெண்ணை யாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    21-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    22-ந்தேதி மற்றும் 23-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் தாமு, தனுஷ், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ, கவிஞர் சினேகன், நடிகர் ராதாரவி, சிவகார்த்திகேயன், காளி வெங்கட், நடிகை நளினி, சின்னத்திரை நடிகர் தீபக் மற்றும் துணை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரோபோ சங்கர் உடலுக்கு நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கரின் உடலைக்கண்டு கதறி அழும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    மறைந்த ரோபோ சங்கர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை அணி குறைந்தது 3 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • துனித் வெல்லாலகே 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை- ஆப்கானிஸ்தான அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தானை வெளியேற்றி இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி இலங்கை அணி தகுதி பெற்றதை தொடர்ந்து வீரர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர்.

    அந்நேரத்தில், இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லலகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தகவல் அறிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கினர். தந்தை இறந்த துக்கச் செய்தி தெரியவர துனித் கண்கலங்கியபடி Dressing Room-க்கு சென்றார். அவரை சகவீரர்கள் ஆறுதல்படுத்தினர்.

    இதையடுத்து துனித் வெல்லாலகே வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனால் அவர் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் இலங்கை அணி குறைந்தது 3 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    துனித் வெல்லாலகே 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகஸ்ட் 2024 இல் கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த சாதனையாகும். 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.



    • ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.
    • வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார்.

    அவர் இறந்த பின்னர், இந்த தொகையை செலுத்தும்படி அவரது சட்டப்படியான வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதில், ரூ.36 கோடியை செலுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நோட்டீசுக்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இந்தநிலையில், இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை கேட்டு தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    தற்போது, அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டு விட்டது. அந்த தொகையை ரூ.13 கோடியாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீசு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ''ரூ.36 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.13 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கோர உரிமை உள்ளது'' என்று உத்தரவிட்டார்.

    • வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம்.
    • காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது. சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி என்று பல்வேறு உபாதைகளுடன் சிரமப்படுகிறார்கள்.

    அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மருந்து மாத்திரைகள் எடுத்து நான்கைந்து நாட் களில் காய்ச்சல் குணமானாலும் இருமல், உடல் சோர்வு இரண்டு, மூன்று வாரங்களுக்கு நீடிக்கிறது.

    சென்னையில் வைரஸ் காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் இருக்கிறது. வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம். எனவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.

    அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் நாகவள்ளி கூறும்போது, ஒரே பள்ளியில் படிக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்த 13 மாணவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதித்ததில் டெங்கு, மலேரியா அறிகுறிகள் இல்லை என்றார்.

    டாக்டர்கள் கூறும்போது, இன்புளூயன்சா காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்றார்கள்.

    மேலும் அவர்கள் கூறும் போது, முக கவசம் அணிவது, கூட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றார்கள். காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். புரத சத்து உணவுகளையும், கீரை, காய்கறிகள் ஆகியவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்றார்கள்.

    வறட்டு இருமல், தலை வலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பதாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

    அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதன் ப்ரோமோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

    தனுஷின் இட்லி கடை படத்தில் அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
    • மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    சென்னை ஐகோர்ட்டு, சுங்க இலாகா அலுவலகம், மும்பை ஐகோர்ட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை கடற்கரை ரெயில் நிலையம் அருகே செயல்படும் மத்திய சுங்க இலாகா தலைமை அலுவலகம், ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    இதேபோல், மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறையினர் ஐகோர்ட்டு வளாகத்தை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரியதாக எதுவும் கிடைக்கவில்லை.

    மும்பை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறை. சமீபத்தில் இதேபோன்ற மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) அன்று நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 29.9.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண 5-ம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 20.9.2025, 21.9.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 4.10.2025, 5.10.2025 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    வருகிற 4.10.2025 (சனிக்கிழமை) நாமக்கல், பரமத்திவேலூரிலும், 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×