என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக செங்கோட்டையனை நீக்க ஆலோசனை?- எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை
    X

    அ.தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக செங்கோட்டையனை நீக்க ஆலோசனை?- எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை

    • அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பதற்காக செங்கோட்டையனை சந்தித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • கடந்த 16-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 5-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவையும் விதித்தார்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்ட பிறகு எழுந்த சலசலப்புகள் எல்லாம் அடங்கி எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அந்த கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அணி வகுத்துள்ளனர்.

    இந்த நிலையில் செங்கோட்டையன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு கோஷத்தை எழுப்பியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பி.எஸ். அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த பணிகளை நானே ஒருங்கிணைப்பேன் என்றும் செங்கோட்டையன் கூறி இருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால் கட்சியில் இருந்து அவரை நீக்கவில்லை.

    செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் அவரது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக செங்கோட்டையன், சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பதற்காக செங்கோட்டையனை சந்தித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார். இப்படி சசிகலா, ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகிய 3 பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே கட்சி பதவிகளை பறித்த பிறகு செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியதாகவும், அவர்களுடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாக பரபரப்பு தீயை பற்ற வைத்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். அப்போது அ.தி.மு.க. இணைப்பு பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வற்புறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல்களை எல்லாம் மறுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடவில்லை என்று கூறியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைகள் செங்கோட்டையனின் இணைப்பு முயற்சிக்கு போடப்பட்டுள்ள முட்டுக்கட்டை என்றே அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள். இதையும் தாண்டி செங்கோட்டையன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்று கூறிக் கொண்டு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினால் அடுத்தக்கட்டமாக அவரை அ.தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, செங்கோட்டையன் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் என்பதால் அவரை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

    அதே நேரத்தில் அவர் கட்சி விரோத செயல்களில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினால் நிச்சயம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×