என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை வெள்ளி, ஞாயிறு நாட்களில் சிறப்பு ரெயில்கள் .
    • சென்னை செனட்ரல்- கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 13, 20 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள்.

    திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை வெள்ளி, ஞாயிறு நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 26, 28, அக்டோபர் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய நாட்களில் செங்கல்பட்டிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து வாரம் இருமுறை மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

    சென்னை செனட்ரல்- கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 13, 20 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்ட்ரலில் ஞாயிறு இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திங்கள் மதியம் 1.50 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    மறுமார்க்கமாக குமரியில் இருந்து செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21 நாட்களில் மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கேலக்ஸி S24 FE மாடலின் விலை 59,999 ரூபாயில் இருந்து ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது.
    • கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 30,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 17,999 என குறைந்துள்ளது.

    பண்டிகை கால விற்பனையின் அங்கமாக சாம்சங் இந்தியா நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் விலைக் குறைப்பு மற்றும் வங்கி சார்ந்த பலன்கள் வழங்கப்படுகிறது. இவை சாம்சங் நிறுவனத்தின் முதன்மை கேலக்ஸி S24 சீரிஸ் தொடங்கி பட்ஜெட் பிரிவில் கிடைக்கும் கேலக்ஸி F மற்றும் கேலக்ஸி M சீரிஸ் மாடல்கள் என பல்வேறு மாடல்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

    சலுகை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ்

    கேலக்ஸி S24 சீரிசில் கேலக்ஸி S24 அல்ட்ரா, கேலக்ஸி S24 மற்றும் புதிதாக கிடைக்கும் கேலக்ஸி S24 FE ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கின்றன.

    கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் விலை 1,34,999 ரூபாயில் இருந்து தற்போது 97,999 ரூபாய்க்கு கிடைக்கிறது

    கேலக்ஸி S24 மாடலின் விலை 74,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 39,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி S24 FE மாடலின் விலை 59,999 ரூபாயில் இருந்து ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது.

    பட்ஜெட் பிரிவு ஆப்ஷன்கள்:

    சாம்சங் அதன் மிட்-ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் பிரிவுக்கு ஏற்ற கேலக்ஸி A, கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது.

    கேலக்ஸி A சீரிஸ்

    கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் படி, 2024 ஆம் ஆண்டில் தங்கள் பிரிவுகளில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருந்த கேலக்ஸி A55 5ஜி மற்றும் கேலக்ஸி A35 5ஜி ஆகியவை தற்போது 42% வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.

    கேலக்ஸி A55 5ஜி மாடலின் விலை ரூ. 39,999-இல் இருந்து தற்போது ரூ. 23,999 என குறைக்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 30,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 17,999 என குறைந்துள்ளது.

    கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ்

    இளம் பயனர்களை இலக்காகக் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 30% வரை விலைக் குறைப்பு பெற்றுள்ளன.

    கேலக்ஸி M36 5ஜி மாடலின் விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைந்துள்ளது.

    கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,499-இல் இருந்து தற்போது ரூ. 10,499ஆகக் குறைந்துள்ளது.

    கேலக்ஸி M06 5ஜி மாடல் ரூ. 9,999-இல் இருந்து தற்போது ரூ. 7,499 என குறைக்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி F36 5ஜி விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி F06 5ஜி மாடலின் விலை ரூ. 9,999-இல் இருந்து ரூ. 7,499 என குறைந்துள்ளது.

    புதிய விலை மற்றும் சலுகைகள் சாம்சங் நிறுவனத்தின் AI-சார்ந்த அம்சங்கள் மற்றும் மேம்பட்ட வன்பொருளை அதிக வாடிக்கையாளர்கள் அனுபவிக்க வழி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் வருகிற 22ஆம் தேதி முதல் கிடைக்கும்.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி.

    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

    • புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
    • LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.

    கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் மின்சார இருசக்கர வாகன நிறுவனமான ஆம்பியர், இந்தியாவில் மேக்னஸ் கிராண்ட் குடும்ப ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் அசத்தலான ஸ்டைல், சௌகரியம், ஆயுள், பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட LFP பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய தரநிலைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.

    ஆம்பியர் பிரான்டின் புதிய மேக்னஸ் கிராண்ட் ஸ்கூட்டர் விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்பியர் மேக்னஸ் நியோவை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் மேக்னஸ் கிராண்ட், பெரும்பாலான வடிவமைப்பு சிறப்பம்சங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    இந்த நிறுவனம் அதன் புதிய குடும்ப ஸ்கூட்டரை இரண்டு புதிய டூயல் டோன் பிரீமியம் நிறங்கள்- மேட்சா கிரீன் மற்றும் ஓஷன் புளூ ஆகியவற்றுடன், கோல்டு ஃபினிஷ் வழங்கியுள்ளது. மேலும், இது இப்போது வலுப்படுத்தப்பட்ட கிராப் ரெயில், மேம்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம், விசாலமான இருக்கை மற்றும் அதிக சுமை தாங்கும் திறன் ஆகியவற்றுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.



    அம்சங்களைப் பொருத்தவரை, புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80-95 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.

    அறிமுகத்தின் போது, கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குனர் விகாஸ் சிங் கூறுகையில், "புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் ஆம்பியரின் நிஜ உலக செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. குடும்பங்கள் மற்றும் பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், ஸ்டைல், ஆயுள் மற்றும் உறுதித்தன்மையின் இணக்கமான கலவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்றார்.

    • இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும்.
    • புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.

    நாளை (20-ந்தேதி) புரட்டாசி முதல் சனிக்கிழமை. இந்த ஆண்டு வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் சிறப்புமிக்கவை.

    ஜாதக அமைப்பின்படி சனி திசை, புதன் திசை நடப்பவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என சனியின் பிடியில் இருக்கும் ராசியை சேர்ந்தவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட சகல தடைகள், சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுவையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.

    சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8-ல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12-ல், 1-ல், 2-ல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர்.

    இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர்.

    புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து சந்திரனின் காரகமாகிய உணவினை (தளிகை) சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில் இட்டு ஏழுமலையானுக்கு படையலிட தோஷம் நீங்கும்.

    புரட்டாசி சனிக்கிழமையில் சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.



    புரட்டாசி சனிக் கிழமையில், பெருமாளை ஆலயம் சென்று தரிசிக்கும் போது, அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் மும்மடங்குப் பலனை தந்தருளும்.

    புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை ஆலயம் செல்லுங்கள். பெருமாளையும் தாயாரையும் வழிபடுங்கள். கோவிந்தனிடம் குறைகளையெல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை நடத்தி அருளுவார்கள் பெருமாளும் தாயாரும்!

    ஆலயத்துக்கு செல்ல இயலாவிட்டால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு சிறப்பான மகத்துவம் இருக்கிறது.

    • உலக மகளிர் நாள் விழா 2025-ல் நான் கலந்து கொண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கினேன்.
    • 22 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 விழுக்காடாக குறைந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (வெள்ளிக்கிழமை) மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான 5-வது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்தக் கூட்டத்தில், தீன்தயாள் அந்தியோ தயா யோஜனா, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    முத்தமிழறிஞர் கலைஞரால் 1989-ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழு, இயக்கமாகி இன்று இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசின் "தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்" ஒன்றிய மற்றும் மாநில அரசின் 60:40 என்ற நிதிப்பங்களிப்பின் அடிப்படையில் முதல் 37 ஊரக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.41 லட்சம் சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் 55.12 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

    இந்தத் திட்டத்தின் கீழ், 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக 67 கோடியே 97 லட்சம் ரூபாயும், சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுய உதவிக் குழுக்களுக்கு 801 கோடியே 62 லட்சம் ரூபாயும், நலிவு நிலைக்குறைப்பு நிதியாக 13,546 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு 75 கோடியே 73 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது.

    முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,57,316 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    இவற்றில் 17,207 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு 25 கோடியே 81 லட்சம் ரூபாய் சிறப்பு சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

    சுய உதவிக் குழுக்களின் தடையற்ற செயல்பாடுகளுக்காக நமது அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று வரை மகளிர் சுய உதவுக் குழு உறுப்பினர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டு உள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

    2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 3-9-2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு 13 ஆயிரத்து 62 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    உலக மகளிர் நாள் விழா 2025-ல் நான் கலந்து கொண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கினேன். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அடையாள அட்டைகள் விரைவில் அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் முழுவீச்சில் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுய உதவிக் குழு மகளிருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையின் மூலமாக சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான தூரத்திற்கு விலையின்றி கிராம மற்றும் நகர்ப்புற பேருந்துகளில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட எண்ணற்ற சலுகைகளைப் பெறலாம்.

    பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2021-22-ம் ஆண்டு முதல் 2025-26 வரை ரூபாய் 1,274 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்று 12,045 பணிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்பான ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டு 9,755 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருக்கு ஒரு நிதியாண்டிற்கு ரூ.3 கோடி வீதம், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ரூ.702 கோடி ஆண்டொன்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றது.

    மாநில அரசே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 3 கோடி ரூபாய் நிதி வழங்குவதால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை பத்து கோடி ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி வருகிறோம். எனவே, இதனை ஒன்றிய அரசு 10 கோடி ரூபாயாக உயர்த்திட இந்தக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்து அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    "ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே" நமது முக்கிய நோக்கமாகும்.

    * குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டில் செயல்படும் 54 ஆயிரத்து 449 குழந்தைகள் மையங்களில் பயன்பெற்று வரும் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான சுமார் 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. மேலும், சுமார் 5.50 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு தாய்-சேய் ஊட்டச்சத்து நடைமுறை கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் இத்திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    * குழந்தைகள் மையங்களில் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட சுமார் 10 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரம் மூன்று தினங்களுக்கு முட்டைகளும் 1 முதல் 2 வயது வரையிலான 6 லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வீதம் தாய்மார்கள் மூலம் வீட்டிலேயே வழங்கப்படுகிறது.

    * அனைத்து குழந்தைகளுக்கும் 2 செட் வண்ணச்சீருடைகளும் நமது அரசு வழங்குகிறது. அனைத்து மையங்களிலும் 100 சதவீதம் குடிநீர், கழி வறைகள், மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    * இதுவரை 3,397 குழந்தைகள் நேய மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

    * 6,390 குழந்தைகள் மையங்களை திறன்மிகு குழந்தைகள் மையமாக தரம் உயர்த்தி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    * மேலும் 5,582 மையங்கள் தரம் உயர்த்த ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * நமது அரசின் முனைப்பான செயல்பாடுகளின் விளைவாக தமிழ்நாடு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன்படி 25 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் உயரக் குறைபாடு 11.8 விழுக்காடாக குறைந்துள்ளது.

    * 14.6 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் மெலிவுத் தன்மை 3.6 விழுக்காடாக குறைந்து உள்ளது.

    * 22 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 விழுக்காடாக குறைந்துள்ளது.

    * குழந்தைகளின் வளர்ச்சி வீதம் பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது.

    * "ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற மகத்தான திட்டத்தின்படி முதற்கட்டமாக 1,07,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 15-11-2024 அன்று தொடங்கப்பட்டு 76,705 குழந்தைகளுக்குக் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 80.6 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    * நம்முடைய அனைத்து திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத் தொகை எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒன்றிய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் என இக்குழு மூலமாகவே வலியுறுத்தப் படும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர்கள் தங்களது துறைவாரியான திட்டங்கள் தொடர்பான கருத்துகளை விளக்கினர். எம்.பி.க்கள் டி.ஆ. பாலு, தொல். திருமாவளவன், கே. சுப்பராயன், மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், துரை வைகோ, நவாஸ்கனி ஆகியோர் தங்கள் கருத்து களை தெரிவித்தனர்.

    மேலும், எம்.எல்.ஏ.க்கள், தன்னார்வலர்கள், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (திஷா) குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

    • வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.
    • இந்தியா முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.

    பெண்களுக்கான 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

    இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. இந்த நிலையில் ஐசிசி உலக கோப்பைக்கான Anthem-ஐ ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பாடலை இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    தொடக்க விழாவிலும் ஷ்ரேயா கோஷலின் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    இந்திய பெண்கள் அணி இதுவரை ஐசிசி கோப்பையை வென்றதில்லை. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ரன்னில் தோல்வியடைந்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உறுதிப் போட்டிகளில் 9 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    • நியோமேக்ஸ் வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நிவாரணம் வழங்குவது எளிமை.
    • நியோமேக்ஸ் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.

    நியோமேக்ஸ் நிறுவன வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது எளிமையாகும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் எனக்கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8ம் தேதி வரை உயர்நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியது.

    அக்டோபர் 8ம் தேதி வரை புகார் அளிப்பவர்களுக்கு மட்டும் இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

    • அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பதற்காக செங்கோட்டையனை சந்தித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • கடந்த 16-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 5-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவையும் விதித்தார்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்ட பிறகு எழுந்த சலசலப்புகள் எல்லாம் அடங்கி எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அந்த கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அணி வகுத்துள்ளனர்.

    இந்த நிலையில் செங்கோட்டையன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு கோஷத்தை எழுப்பியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பி.எஸ். அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த பணிகளை நானே ஒருங்கிணைப்பேன் என்றும் செங்கோட்டையன் கூறி இருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால் கட்சியில் இருந்து அவரை நீக்கவில்லை.

    செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் அவரது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக செங்கோட்டையன், சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பதற்காக செங்கோட்டையனை சந்தித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார். இப்படி சசிகலா, ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகிய 3 பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே கட்சி பதவிகளை பறித்த பிறகு செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியதாகவும், அவர்களுடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாக பரபரப்பு தீயை பற்ற வைத்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். அப்போது அ.தி.மு.க. இணைப்பு பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வற்புறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல்களை எல்லாம் மறுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடவில்லை என்று கூறியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைகள் செங்கோட்டையனின் இணைப்பு முயற்சிக்கு போடப்பட்டுள்ள முட்டுக்கட்டை என்றே அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள். இதையும் தாண்டி செங்கோட்டையன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்று கூறிக் கொண்டு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினால் அடுத்தக்கட்டமாக அவரை அ.தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, செங்கோட்டையன் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் என்பதால் அவரை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

    அதே நேரத்தில் அவர் கட்சி விரோத செயல்களில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினால் நிச்சயம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    • அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.
    • கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 49.75 கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 126 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.

    அணை பூங்காவுக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுத களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சாரிக்கை விடப்படுகிறது. பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்ட ஹள்ளி, தளி ஹள்ளி ஆகிய கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

    தென் பெண்ணை யாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    21-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    22-ந்தேதி மற்றும் 23-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் தாமு, தனுஷ், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ, கவிஞர் சினேகன், நடிகர் ராதாரவி, சிவகார்த்திகேயன், காளி வெங்கட், நடிகை நளினி, சின்னத்திரை நடிகர் தீபக் மற்றும் துணை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரோபோ சங்கர் உடலுக்கு நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கரின் உடலைக்கண்டு கதறி அழும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    மறைந்த ரோபோ சங்கர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×