என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • விரதம் இருப்பதால் முட்டைக் குழம்பு சமைக்க மனைவி மறுப்பு.
    • விரக்தியில் கணவன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.

    சத்தீஸ்கர் மாநிலத்தில், கணவன் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக விரதம் இருக்க, கணவன் வாங்கி வந்த முட்டையை சமைக்க மறுப்பு தெரிவித்ததால், அந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டம் சங்கரா கிராமத்தில் திகுரான் என்பவர் விசித்து வந்தார். இவர் நேற்று மாலை முட்டைகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அவற்றை மனைவிடம் கொடுத்து, முட்டைக் குழம்பு தயார் செய்ய கூறியுள்ளார். ஆனால், அன்றைய தினம் (திங்கட்கிழமை) கரு பாத் (Karu Bhaat) விழா. அடுத்த நாள் விரதம் கடைபிடிக்க இருக்கிறேன். இதனால் முட்டைக் குழம்பு சமைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதனால் கணவன் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் உடலை பரிசோதனைக்கு அனுப்பி தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகற்காய் சேர்த்து கசப்பாக சமைக்கப்படும் சாப்பாடு கரு பாத் என அழைக்கப்படும். தீஜ் விழாவுக்கு முந்தைய தினம் இதை சாப்பிடுவார்கள். அதற்கு ஆடத்த நாள் நர்ஜாலா விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் விரதம் கடைபிடிப்பதற்கு முந்தைய நாள் கடைசியாக கரு பாத் சாப்பிடுவார்கள். கணவன் நீண்ட ஆயுளுடன் செழிப்புடன் வாழ்வதற்காக சத்தீஸ்கர் மாநில பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

    தன்னுடைய கணவன் நீண்ட ஆயுளுடன் விரதம் இருப்பதற்காக, மனைவி முட்டைக் குழம்பு சமைக்க மறுப்பு தெரிவித்ததால், அந்த கணவனே உயிரை மாய்த்துக் கொண்டார்.

    • ஐஎன்​எஸ் உதயகிரி, ஐஎன்​எஸ் ஹிம​கிரி என்ற இரு போர்க்​கப்​பல்​கள் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
    • பிரம்​மோஸ் ஏவு​கணை​கள், பரக் ஏவு​கணை​கள், 76 எம்​எம் துப்​பாக்​கி​கள் பொருத்த போர்க்கப்பல் ஆகும்.

    ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிமகிரி ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதற்கான விழா விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

    விழாவில் பேசிய அவர், அமெரிக்கா வைத்திருக்கும் F-35 என அதிநவீன போர் விமானத்தை குறிப்பிட்டார். அமெரிக்கா வானத்தில் பறக்கும் F-35 போர் விமானத்தை கொண்டுள்ளது. இந்தியா தண்ணீரில் மிதக்கும் F-35-ஐ தற்போது பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார்.

    F-35 போர் விமானம் அதிவேகமாகவும், எதிரிகளின் ரேடாரில் தென்படாமலும் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி வல்லமை கொண்டவையாகும்.

    ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிமகிரி என்ற இரு போர்க்கப்பல்கள் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. இந்திய கடற்படையில் 135-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆகவும், 2035-ம்ஆண்டில் 200 ஆகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 'புராஜக்ட் 17ஏ' என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறிய ரகத்தை சேர்ந்த 7 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த போர்க்கப்பல்களுக்கு நீலகிரி, ஹிமகிரி, தாராகிரி, உதயகிரி, துனாகிரி, விருதகிரி, மகேந்திரகிரி என்று இந்திய மலைகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

    'புராஜக்ட் 17ஏ' திட்டத்தின்படி ஐஎன்எஸ் நீலகிரி போர்க்கப்பல் கடந்த ஜனவரியில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய போர்க்கப்பல்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

    இரு போர்க்கப்பல்களும் தலா 488 அடி நீளம், 58 அடி அகலம் கொண்டதாகும். இவற்றின் எடை 6,670 டன் ஆகும். இந்த போர்க்கப்பல்களில் பிரம்மோஸ் ஏவுகணைகள், பரக் ஏவுகணைகள், 76 எம்எம் துப்பாக்கிகள், நீர்மூழ்கிகளை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த ஆயுதங்கள் மூலம் எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், எதிரிகளின் கடற்படைத் தளங்களை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

    • பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் தூதர்கள்.
    • இந்த வழக்கு இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானின் பாரத்பூரில் உள்ள கோர்ட்டில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிராண்ட் தூதர்கள் தவறான அல்லது குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களும் இதில் பொறுப்பேற்க வேண்டும்.

    அந்த வகையில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள, கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    நகர ஊரமைப்பு மற்றும் உள்ளூர் திட்டக் குழுமம் தயாரித்துள்ள, கோவை மாவட்ட மாஸ்டர் பிளான் 2041-ல் பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் கோவை மாநகராட்சியுடன் 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய சுமார் 1531 சதுர கிலோ மீட்டருக்கு புதிய கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த மாஸ்டர் பிளான் தயாரிப்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் முழுமையாக நடத்தப்படாமல், கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளும், சலசலப்புமும் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இச்சூழ்நிலையில் பல்வேறு குளறுபடிகளைக் கொண்ட மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, குடியிருப்பு நில வகைப்பாட்டில் உள்ள நிலத்தினை விவசாயம் மற்றும் தொழில் பிரிவுக்கு மாற்றியுள்ளனர். ஏற்கனவே வளர்ந்த தொழில் நகரமான கோவையின் நகரப் பகுதியில் நில மதிப்பீட்டுத் தொகை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், நில மாற்றம் செய்ய அனுமதி வழங்குவதன் மூலம் ஊழலுக்கு வழிவகை செய்வதுடன், பல்வேறு மோசடிகள் நடைபெறவும் வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    நில வகைப்பாடு மாற்றத்தில் ஆளும் திமுக குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் ஜி.ஸ்கொயர் நிறுவனம் மற்றும் திமுக குடும்ப உறவுகளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிலங்கள் என சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், குடியிருப்பு மனை நில வகைப்பாட்டிலேயே இருக்கும் வகையில், கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ, விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    கடந்த 4 ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்திடாத இந்த விடியா திமுக அரசு, பொதுமக்கள் கருத்துக்கேட்பு இன்றி, திட்டமிடப்படாத கிராமப் பகுதிகளையும் இணைத்து கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041 தயாரித்து குறிப்பிட்ட தரப்பினர் லாபம் ஈட்டும் வகையில் ஊழலுக்கு வழி ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அரசு ஏதோ சிறப்பாக செயல்படுவதுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்த, இந்த மாஸ்டர் பிளான் மூலம் விடியா திமுக அரசு முனைகிறது என கோவை மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இத்தகைய சூழ்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ன்படி, நில வகைப்பாடு மாற்றங்களால் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    எனவே, தற்போது வெளியிட்டுள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ன்படி, நகர ஊரமைப்புத் திட்டத்தில் இணைத்துள்ள பகுதிகளில் நிலவகைப்பாடு மாற்றங்களை மறு ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டங்களை முறையாக நடத்தி, அதன்படி திருத்தங்கள் செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் அடுத்த பாடலான என்சாமி தந்தானே பாடலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

    • ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்.
    • இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

    எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    • தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர்.
    • வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான் இந்து.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடு வகையில் 3 நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் "இந்து என்பவர் யார்? தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர். வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான்" என்றார்.

    • கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் 3பிஎச்கே படத்தை பார்த்ததாகவும் அதை ரசித்ததாகவும் கூறினார்.
    • அன்புள்ள சச்சின் ஜி, எங்கள் தமிழ் திரைப்படமான 3பிஎச்கே படத்தை பாராட்டியதற்கு நன்றி.

    சென்னை:

    நடுத்தர குடும்பத்தை மையமாக கொண்ட சித்தார்த்தின் சமீபத்திய படமான ''3பிஎச்கே'', பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது. சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

    இந்நிலையில், ஒரு நிகழ்வில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் 3பிஎச்கே படத்தை பார்த்ததாகவும் அதை ரசித்ததாகவும் கூறினார்.

    அதற்கு சச்சின் , "எனக்கு நேரம் கிடைக்கும்போது படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் 3பிஎச்கே மற்றும் அட்டா தம்பாய்ச்சா நாய் ஆகிய படங்களை பார்த்து ரசித்தேன்'' என்றார்.

    இந்த நிலையில், சச்சினுக்கு சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அன்புள்ள சச்சின் ஜி, எங்கள் தமிழ் திரைப்படமான 3பிஎச்கே படத்தை பாராட்டியதற்கு நன்றி . 3பிஎச்கேவின் ஒட்டுமொத்த குழுவும் இந்த அங்கீகாரத்திற்காக மகிழ்ச்சியடைகிறது. என தெரிவித்துள்ளார் .

    • அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையில் இடம் வழங்க மறுப்பு தெரிவித்ததால் அமெரிக்கா வரி விதிப்பு மிரட்டல்.
    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் மிரட்டல் விடுத்திருந்திரார் டிரம்ப்.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வரி விதிப்பு ஒப்பந்தம் ஏற்படவில்லை. ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

    மேலும், உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர புதின் சம்மதம் தெரிவிக்காததால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது. அவர்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், அவர்களுக்கு கிடைக்கும் பணம் உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இருக்கிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

    மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியவில்லை. இதனால் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தது.

    ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிப்பு, நாளை முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா மொத்தமாக கூடுதலாக 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

    வரி விதிப்பு தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரங்களில் நான்குமுறை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெலிபோன் மூலம் இந்திய பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், பிரதமர் மோடி டெலிபோனை எடுக்கவில்லை என ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த நாளில், எப்போது டெலிபோன் செய்தார் என்ற தகவலை வெளியிடவில்லை.

    இந்திய சந்தையில் அமெரிக்க விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு இந்தியா வழி விட வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இந்த அழுத்தத்திற்கு அடிபணியாமல் அமெரிக்காவின் நெருக்கடியை சமாளித்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

    • லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் "பென்ஸ்" திரைப்படம் உருவாகி வருகிறது.
    • பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

    பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் "பென்ஸ்" திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

    இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.

    இந்நிலையில் பென்ஸ் திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார். இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் இணையாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர் கைதி 2 மற்றும் விக்ரம் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது.

    • சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ள ஹிருதயப்பூர்வம் படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
    • சங்கீதா, சித்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ள ஹிருதயப்பூர்வம் படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

    மேலும், சங்கீதா, சித்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    அகில் சத்யன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகளில் மோகன்லால் மிகவும் அழகாகவும் மிடுக்குடன் இருக்கிறார். மோகன்லாலை இப்படி ஒரு தோற்றத்தில் பார்க்காததால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் படத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் 1987 இல் மோகன்லால் நடிப்பில் வெளியான 'நாடோடிக்கட்டு' மலையாள சினிமாவில் இன்று வரை ஒரு கிளாசிக் படமாக உள்ள நிலையில் அவர்களின் கூட்டணி மீண்டும் இணைத்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 'ஹிருதயப்பூர்வம்' திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகிறது.

    • ஜம்முவில் உள்ள தோடா மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
    • வைஷ்ணோ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் காயம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன, நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையாக பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இன்று தோடா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த கனமழைக் காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தில் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் தோடா- கிஷ்த்வாரை இணைக்கும் NH-244 சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்வதற்கான வழியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் காயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

    ஜம்மு-வின் பல்வேறு பகுதியில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆராய ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவிற்கு செல்ல இருக்கிறேன். மீட்புப்பணியை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள முக்கியமான அறுகளான ராவி மற்றும் தாவியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

    கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×