என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
- உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கினார்.
சென்னை:
ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.
மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் "தாயுமானவர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார். காணொலி வாயிலாகவும் மாவட்டங்களில் இதை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதில் பங்கேற்றார்.
மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது
- வக்ஃபு வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ் , ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
வக்பு திருத்தச் சட்டம் 2025 இல், ஒருவர் வக்பு வாரியம் அமைக்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய வக்பு சட்டத்தின் ஒரு பிரிவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், வக்பு வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் 4 முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
- துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- பைசன் தபடம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்,பைசன் படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளிட்டு அறிவித்துள்ளது.
- அண்ணாவின் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு.
- அ.தி.மு.க தேர்தலில் வெற்றி பெற மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
கோபி:
அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ந் தேதி அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இன்னும் 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையென்றால் இதே மனநிலையில் இருப்பவர்களை சேர்த்து ஒருங்கிணைக்கும் பணியை நாங்களே மேற்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்து அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் தெரிவித்த கருத்து விவாத பொருளாக மாறியது. இதையடுத்து மறுநாளே செங்கோட்டையன் வசித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன் அவசர அவசரமாக கடந்த 7-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அ.தி.மு.க ஒன்றிணைவது குறித்து பேசினார். இந்த விவரம் அ.தி.மு.க.வில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் செங்கோட்டையன் கலந்து கொண்டு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று அண்ணா பிறந்தநாளில் அவரது தியாகத்தை போற்றி மகிழ்வோம். அண்ணாவின் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம் என்பதை நினைவூட்டுகிறேன். அண்ணாவின் பெயரால் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டி காத்தார்.
என்னை பொருத்தவரை எம்.ஜி.ஆர். கனவு, ஜெயலலிதா கனவை நினைவாக்கும் வகையில் மீண்டும் 100 ஆண்டு காலம் ஆட்சிக்கட்டிலில் அ.தி.மு.க அமர வேண்டும் என்ற நோக்கில் கடந்த 5-ம் தேதி மனம் திறந்து பேசினேன்.
என்னைப் பொருத்தவரை அ.தி.மு.க ஒன்று பட வேண்டும் என்பதை எனது நோக்கம்.
எனது கருத்துக்கு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் இடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள், பொதுமக்கள் கருத்தைதான் பிரதிபலித்தேன். இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க தேர்தலில் வெற்றி பெற மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 2026 -ல் அ.தி.மு.க ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து 10 நாள் கெடு விவகாரம், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த விவகாரம் என பல்வேறு கேள்விகளை நிருபர்கள் செங்கோட்டையனிடம் அடுக்கடுக்காக கேட்டனர். ஆனால் அனைத்து கேள்விக்கும் அவர் பதில் சொல்லாமல் சிரித்தவாறு சென்று விட்டார்.
- இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார்.
- மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள மோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.
வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.
இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், மணிப்பூரில் பிரதமர் மோடியின் கட்அவுட்டை சேதப்படுத்தியதாக 2 இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையுடன் பயங்கர மோதலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்ததால் இரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர். இளைஞர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் நிலைமை சீரானதாக போலீசார் விளக்கம் அளித்தனர்.
- வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, எழிலன், மேயர் பிரியா, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., கவிஞர் தமிழ்தாசன், பகுதி செயலாளர் அகஸ்டின் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
இதே போல் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஈரோட்டை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
- அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்தனர்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக அவர், ஈரோட்டில் கடந்த 5-ந்தேதி அன்று அளித்த பேட்டியில், 10 நாட்களுக்குள் இதை செய்யாவிட்டால் நாங்களே செய்வோம்' என்று எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார். அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.
உள்கட்சி விவகாரத்தில் தனக்கு காலக்கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். மேலும் அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதனால் விரக்தியடைந்த செங்கோட்டையன் கடந்த 7-ந்தேதி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும்' என்று அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் கோபிசெட்டிப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்திய பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார், ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார்.
* அ.தி.மு.க. ஒன்றிணையும் விவகாரத்தில் தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன்.
* அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்தனர்.
* அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.
இப்போட்டியை நடிகர் ரவி மோகன் - கெனீஷா ஆகியோர் நேரில் கண்டு களித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை ரவி மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.
- வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
அந்த வகையில் கடந்த 9-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து 10, 11-ந்தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் 12-ந்தேதி சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கு என்று புதிய உச்சத்தில் விற்பனையானது. வார இறுதிநாளான 13-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனையானது. நேற்றும் இதே விலையில் விற்பனையானது.
இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,210-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 143 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,760
13-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,760
12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920
11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-09-2025- ஒரு கிராம் ரூ.143
13-09-2025- ஒரு கிராம் ரூ.143
12-09-2025- ஒரு கிராம் ரூ.142
11-09-2025- ஒரு கிராம் ரூ.140
10-09-2025- ஒரு கிராம் ரூ.140
- அலெக்சாண்டர் பாபு 'alexperience' என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
- அலெக்சாண்டர் பாபு, பிரதமர் மோடியை போலவே மிமிக்ரி செய்து கிண்டல் செய்துள்ளார்.
பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான அலெக்சாண்டர் பாபு சில வருடங்களுக்கு முன்பு நடத்திய அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது அலெக்சாண்டர் பாபு 'alexperience' என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சி அன்பா டிவி என்ற OTT-இல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அலெக்சாண்டர் பாபு, பிரதமர் மோடியை போலவே மிமிக்ரி செய்து கிண்டல் செய்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
alexperience நிகழ்ச்சியில் பேசிய அலெக்சாண்டர் பாபு, "அரசியலில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக perform செய்வது நம்ம ஜி தான். அவரை அடிச்சிக்கவே முடியாது. அதிலும் இசையில் அவர் ரொம்ப strong. அவர் ஒன்றும் பாடகர் கிடையாது. ஆனால் தற்போதைய தொழில் நுட்பத்தால் அனைவரும் பாட்டு பாடுகிறார்கள். அவர் பாடகர் இல்லை என்றாலும், ஒரு ராகம் வைத்துள்ளார். மித்ரோன்....இப்படி தான் நம்ம கத்துறோம்... அந்த ராகத்தில் எது வேண்டுமானலும் அழகாக உட்கார்ந்து விடுகிறது. மித்ரோன்... இப்படி சொல்லி தான் எல்லாத்தையும் வித்துருவோம்...
நாடகத்திலும் அவர் கைதேர்ந்தவர். அவர் பேசுவதை டிவியில் பார்த்தல் சப்டைட்டில் இல்லாமல் கூட தெளிவாக புரியும். உங்களுக்கு ஒருவார்த்தை இந்தி தெரியவில்லை என்றாலும் கூட, அவரது உடல்மொழியை எல்லாத்தையும் சொல்லிவிடும்.
மித்ரோன்... ஊரெல்லாம் சுத்துறோம்... யாரும் எதுனா சொன்னா என்போர்ஸ்மென்ட் அனுப்பி எல்லார் வாயையும் பொத்துறோம்..." என்று கிண்டலாக தெரிவித்தார்.
மேலும் டெலிபிராம்ப்டர் வைத்து மோடி பேசுவதையும், தமிழ்நாட்டிற்கு வந்தால் அவர் தமிழில் பேசுவதை போலவும் அலெக்சாண்டர் பாபு பேசி அசத்தினார்.
- சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர்.
- ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்.
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர்.
இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர்.
தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்.
சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர்.
சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர்.
குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர்.
கொள்கை வழி நின்றவர்.
கனிவின் திருவுருவம்.
இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.
தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.
'மக்களிடம் செல்' என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- இன்றைய சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...






