என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இ.பி.எஸ்.க்கு விதித்த கெடு இன்றுடன் நிறைவு - செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் என்ன கூறினார்?
- ஈரோட்டை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
- அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்தனர்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக அவர், ஈரோட்டில் கடந்த 5-ந்தேதி அன்று அளித்த பேட்டியில், 10 நாட்களுக்குள் இதை செய்யாவிட்டால் நாங்களே செய்வோம்' என்று எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார். அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.
உள்கட்சி விவகாரத்தில் தனக்கு காலக்கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். மேலும் அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதனால் விரக்தியடைந்த செங்கோட்டையன் கடந்த 7-ந்தேதி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும்' என்று அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் கோபிசெட்டிப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்திய பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார், ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார்.
* அ.தி.மு.க. ஒன்றிணையும் விவகாரத்தில் தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன்.
* அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்தனர்.
* அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






