search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு நர்சுகள் இன்று திடீர் போராட்டம்- 1000 பேர் கைது
    X

    டி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு நர்சுகள் இன்று திடீர் போராட்டம்- 1000 பேர் கைது

    • 8 ஆயிரம் செவிலியர்கள் எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வருகிறோம்.
    • பெண் போலீசார் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒப்பந்த அடிப்படையில் 8 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் நர்சுகள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று அதிகாலை சென்னையில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட நர்சுகள் அதிகாலை 5 மணிக்கு டி.எம்.எஸ். அலுவலக வளாகத்திற்குள் புகுந்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் நர்சுகள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனாலும் சங்கத்தின் மாநில தலைவர் சசிகலா தலைமையில் திரண்ட நர்சுகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    பின்னர் பெண் போலீசார் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். தரையில் அமர்ந்து போராட்டம் செய்த நர்சுகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கி பஸ், வேன்களில் ஏற்றி மண்ட பத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து மாநில தலைவி சசிகலா கூறியதாவது:-

    8 வருடமாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகிறோம். முதலில் ரூ.7 ஆயிரத்து 200 சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.18 ஆயிரம் சம்பளம் வாங்குகிறோம்.

    8 ஆயிரம் செவிலியர்கள் எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வருகிறோம். பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×