search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயில் 96 டிகிரி பதிவானது
    X

    தருமபுரி நேதாஜி சாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதை படத்தில் காணலாம்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெயில் 96 டிகிரி பதிவானது

    • தருமபுரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் தொடர்ச்சியாக இன்று காலை வெப்பம் தணிந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீச தொடங்கியதால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 100 டிகிரி வரை வெயில் அடித்து சதம் அடித்தது.

    இதைத்தொடர்ந்து வெப்பசலன காற்று வீசி கடந்த 5 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. இதில் தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை 45 வருடங்களுக்கு பிறகு 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. இதனால் கடுமையான வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிலர் குடைபிடித்தப்படி சாலைகளில் நடமாடினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று வெப்ப சலன காற்று குறைய தொடங்கி வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு திடீரென்று கோடை மழை பெய்தது. இதனால் தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில ஆலங்கட்டியுடன் மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெயிலால் வாட்டி வதைந்து வந்த பொதுமக்களுக்கு இந்த கோடை மழை சற்று ஆறுதலாக குளிர்ச்சியை தந்தது. இதனால் அவர்கள் இரவில் நிம்மதியாக தூங்க சென்றனர்.

    இந்த நிலையில் இன்றும் வடமாவட்டங்களில் உள்பகுதிகளில் சில இடங்களில் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை விடுத்து இருந்தது. ஆனால், மாறாக தருமபுரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் தொடர்ச்சியாக இன்று காலை வெப்பம் தணிந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இன்று 100 டிகிரி கீழ் சென்று 96 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் தலைகாட்ட தொடங்கியது.

    கடந்த ஒரு வாரமாக வெப்பஅலையால் பொது மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில் இன்று காலை குளிர்ந்த சீதோஷ்ண நிலையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சற்று நிம்மதியடைந்தனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை காரணமாக கடுமையான வெயிலால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காவேரிப்பட்டணம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், பாரூர் ஆகிய பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதில் சூளகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், பாரூர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.

    இதனால் கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஓசூர், சூளகிரி பகுதிகளில் வெயில் தாக்கம் இல்லாமல் குளிர்ந்த சீதோஷ்ண சூழ்நிலை நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 96 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.

    இதனால் காலை வேளையில் வேலைக்கு செல்பவர்கள், விவசாயி கூலி தொழிலாளிகள் சற்று நிம்மதியடைந்தனர்.

    Next Story
    ×