என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
    • தொடக்க நாளில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் ஐபிஎல். இந்த தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

    5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தொடர் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரின் தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த முறையும் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    கலை நிகழ்ச்சிகளில் பிரபல பாலிவுட் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுவும் வெளியாகவில்லை.

    • இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு நபரால் 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    அடுத்த நாளில் ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23-ந் தேதி நடக்கிறது.

    இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 19-ந் தேதி தொடங்க உள்ளது. அதன்படி காலை 10.15 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நபரால் 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.
    • கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்த தொடரில் சென்னை, மும்பை, ஐதராபாத், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் எந்த மாற்றமும் இல்லை. மீதியுள்ள கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், ஷ்ரேயாஸ், டெல்லி ஆகிய 5 அணிகளும் புதிய கேப்டன்களுடன் விளையாட உள்ளனர்.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் மாற்றம் இல்லை.

    மற்ற 5 அணிகளில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், டெல்லி அணிக்கு அக்ஷர் படேலும் புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    9 அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14-ந் தேதி தான் கேப்டனை அறிவித்தது. டெல்லி அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது.

    இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இதனால் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அறிவித்தது. துணை கேப்டன் யார் என்பது குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டு பிளெசிஸ் டெல்லி அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐ.பி.எல். 2025 முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
    • ஐ.பி.எல். கோப்பையை வெல்ல பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் பயிற்சியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணி கேப்டன்கள் பெறும் சம்பளம் எவ்வளவு என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

    ரிஷப் பண்ட் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) ரூ. 27 கோடி

    ஸ்ரேயஸ் அய்யர் (பஞ்சாப் கிங்ஸ்) ரூ. 26.75 கோடி

    பேட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) ரூ. 18 கோடி

    ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரூ. 18 கோடி

    சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ரூ. 18 கோடி

    அக்சர் பட்டேல் (டெல்லி கேபிட்டல்ஸ்) ரூ. 16.5 கோடி

    சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) ரூ. 16.5 கோடி

    ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) ரூ. 16.35 கோடி

    ரஜத் பட்டிதர் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ரூ. 11 கோடி

    அஜிங்கியா ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரூ. 1.5 கோடி

    • அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஆர்சிபி அணி வீரர்களுடன் இணைந்து விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த ஐபிஎல் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ளதால், அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு, ஆர்சிபி அணி வீரர்களுடன் இணைந்து விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பயிற்சியின்போது விராட் கோலி ஜாலியாக நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்க வீரர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
    • மும்பை இந்தியன்ஸ் அணி கார்பின் போஷ்-யை ரூ.75 லட்சத்திற்கு மும்பை ஒப்பந்தம் செய்தது.

    18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் கார்பின் போஷ்-யை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது.

    இந்நிலையில், தனது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, கார்பின் போஷ்க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஐபிஎல் நடைபெறும் அதே நேரத்தில் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளும் நடைபெறுகிறது. ஐபிஎல்லில் விளையாடுவதற்காக கார்பின் போஷ் தனது பிஎஸ்எல் ஒப்பந்தத்தை ரத்து செய்வார் என்று கூறப்படுகிறது. 

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • கொல்கத்தா அணியில் இருந்து இம்ரான் மாலிக் விலகியுள்ளார்.

    18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று இருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் விலகி உள்ளார். காயம் காரணமாக அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பை கொல்கத்தா நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த சக்காரியா கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. தற்போது இவரை கொல்கத்தா அணி ரூ. 75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை சக்காரியா 19 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டி20 தொடரில் ஒட்டுமொத்தமாக இவர் 46 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவரது சராசரி 7.69 ஆகும்.

    • லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
    • இவர் ஏற்கனவே டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரான இவர் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

    இவரது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

    லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நடந்தது.

    இந்நிலையில், சிறந்த கிரிக்கெட் அணி எது இந்தியாவா, பாகிஸ்தானா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி பதில் கூறியதாவது:

    விளையாட்டுக்கு உலகம் முழுவதையும் உற்சாகப்படுத்தும் சக்தி இருப்பதாக நினைக்கிறேன்.

    விளையாட்டு உணர்வு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது. மனித பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என உண்மையிலேயே நம்புகிறேன். அவை வெறும் விளையாட்டுகள் அல்ல, அவை மக்களை ஆழமான மட்டத்தில் இணைக்கின்றன.

    இப்போது யார் சிறந்தவர் அல்லது இல்லாதவர் என்ற கேள்விக்கு வருகிறேன். விளையாட்டின் நுட்பங்களைப் பொறுத்தவரை நான் ஒரு நிபுணர் அல்ல. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே அதை மதிப்பிட முடியும்.

    எந்த அணி சிறந்தது, எந்த வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் சில நேரங்களில், முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன.

    சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் முடிவு எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியது என தெரிவித்தார்.

    • எம்.எஸ்.தோனி தலைமையில் திசாரா பெரேரா விளையாடியுள்ளார்.
    • ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடினார்.

    கொழும்பு:

    ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பையையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளார்.

    எம்.எஸ்.தோனி சி.எஸ்.கே. கேப்டனாக இருந்தபோது பல இளம் வீரர்களின் திறமைகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐ.பி.எல். தொடர்களில் பல வெளிநாட்டு வீரர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா சமீபத்திய அளித்த பேட்டியில் பேசியதாவது:

    சில நேரங்களில் நான் தடுப்பாட்டம் விளையாடும்போது எம்.எஸ். தோனி என்னிடம் வந்து பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் நல்ல பவர் ஹிட்டர். எனவே இப்படி விளையாடாமல் ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொல்வார். அது போன்ற வார்த்தைகள் இளம் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கும். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது மட்டுமே இருந்தது. அப்போது அவருடன் மகிழ்ச்சியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    நான் புனே அணிக்காக விளையாடிய போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 4 - 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம். அந்தச் சமயத்தில் களமிறங்கிய எனக்கு அதிரடியாக விளையாடலாமா அல்லது சிங்கிள் எடுக்கலாமா என்ற குழப்பம் இருந்தது.

    அப்போது என்னிடம் வந்த எம்எஸ், 'பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என கேட்டார். அதற்கு நாம் விக்கெட்டுகளை இழந்துள்ளோம் என்று சொன்னேன். அதைக் கேட்ட தோனி ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொன்னார்.

    அதைப் பின்பற்றி விளையாடியதால் ஒரு கட்டத்தில் 60/5 என்ற நிலையில் இருந்த நாங்கள், கடைசியில் 190/7 என்ற ஸ்கோர் எடுத்தோம். நான் 40 ரன்கள் அடித்தேன். தோனி 80 முதல் 90 ரன்கள் அடித்தார்.

    தனிப்பட்ட முறையில் தோனி எனக்கு இந்த உலகின் மிகச்சிறந்த கேப்டன். அவரது தலைமையில் நான் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியுள்ளேன். என்னை எப்போதும் நம்பிய அவர் பவர் ஹிட்டராக உருவாக நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தார் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ராய்ப்பூர்:

    முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
    • 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக அஷ்வின், ஸ்ரீகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் பேசிய அஷ்வின், "என்னுடைய 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை. ஆனால், மீண்டும் என்னை சிஎஸ்கேவுக்கு அழைத்து மறக்க முடியாத பரிசை தோனி கொடுத்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

    முன்னதாக பேசிய ஸ்ரீகாந்த், "வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக உச்சம் தொட்ட ஸ்பின்னர் அஷ்வின்தான். அஷ்வினை தோனி நன்றாகப் பயன்படுத்தி மெருகேற்றினார். பஞ்சாப், ராஜஸ்தான் என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அஷ்வின் மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.

    • குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
    • குல்தீப்புக்கும் எனக்கும் ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கடைசியாக 2023 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதன்பின்பு அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதனிடையே வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பது குறித்து சாஹல் மனம் திறந்து பேசியுள்ளார்.

    இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த சாஹல், " இந்திய அணி நான் கம்பேக் கொடுப்பது எனது கையில் இல்லை. குல்தீப் தான் தற்போது உலகின் சிறந்த ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பந்துவீச்சைப் பார்த்தால் இது தெளிவாக தெரிகிறது. குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்களுக்கு ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

    சாஹலும் குல்தீப்பும் ஒன்றாக 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஐபிஎல் 2025 சீசனில் குல்தீப் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடுகிறார். சாஹல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×