என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சர்வதேச கிரிக்கெட்டில் 637 கிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
    • 2ஆவதாக கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் ரோகித் சர்மா. பந்துகளை அடிக்கடி சிக்சருக்கு பறக்க விடுவதால், இவரை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என அழைக்கிறார்கள்.

    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய பேட்டர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். தற்போது வரை 637 சிக்சர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக உள்ள கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள்தான் அடித்துள்ளார்.

    இந்த நிலையில், நீங்கள் சிக்சர் அடிக்க விரும்பும் பந்து வீச்சாளர் யார்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அனைவரது பந்திலும் சிக்ஸ் அடிக்க விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை தேர்வு செய்து அடிக்க வேண்டும் என்பது கிடையாது.

    என்னுடைய மனநிலை எப்போதும் ஒரே மாதிரியான நிலையில்தான் இருக்கும். வரனும் சிக்ஸ் அடிக்கனும். இதுதான் என்னுடைய மனநிலை. யார் எனக்கு பந்து வீசுகிறார்கள் என்பது பெரிய விசயம் அல்ல" எனத் தெரிவித்து்ளளார்.

    அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாட இருக்கிறது.

    • லோதா கமிட்டி பரிந்துரையின்படி கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
    • தொடர்ந்து 6 ஆண்டுகள் அல்லது இடைவெளி விட்டு 9 ஆண்டுகள் வரை பதவி வகிக்கலாம்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை ராஜீவ் சுக்லா துணைத் தலைவராக நீடிப்பார் எனத் தெரிகிறது.

    லோதா கமிட்டி பரிந்துரையின்படி உச்சநீதிமன்றம் பிசிசிஐ உறுப்பினர்கள் தேர்வுக்கான விதிமுறைகளை வகித்துள்ளது. அதன்படிதான் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. லோதா கமிட்டி பரிந்துரையின்படி 70 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு செய்யப்பட்டால், பதவிக்கான தகுதி காலம் முழுவதும் பதவியில் நீடிக்கலாம்.

    மேலும், தொடர்ந்து 6 வருடங்கள் பதவியில் நீடிக்கலாம் அல்லது 9 ஆண்டுகள் இடைவெளி விட்டு பதவி வகிக்கலாம். 9 ஆண்டுகள் நிறைவடைந்தால் அவர்கள் பதவியை கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு ரோஜன் பின்னி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக Dream11 இருந்து வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் Dream11 அதன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. இதனால் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாடும் எனத் தெரிகிறது.

    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது.
    • வீரர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற வருகிற செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இத்தொடர் 20 ஓவர் போட்டி முறையில் நடக்கிறது.

    இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய அணிகள் உள்ளன.

    இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் 10-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதுகிது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி 4-ந்தேதி துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது. இதற்கு முன்பு வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி புறப்பட்டு செல்வார்கள்.

    ஆனால் இந்த முறை சில வீரர்கள் மட்டும் துபாய்க்கு புறப்படுவார்கள். மற்ற வீரர்கள் அவர்கள் இடங்களில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு வருவார்கள். வீரர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "அனைத்து வீரர்களும் 4-ந்தேதி மாலைக்குள் துபாய்க்கு வருவார்கள். முதல் வலைப்பயிற்சி 5-ந் தேதி ஐ.சி.சி அகாடமியில் நடைபெறும். பயண வசதியைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் அந்தந்த நகரங்களில் இருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிலர் மும்பையில் இருந்து பயணம் செய்வார்கள்.

    மற்றவர்களை மும்பைக்கு அழைத்து வந்து பின்னர் துபாய்க்கு செல்ல சொல்வது அர்த்தமற்றது. துபாய் என்பது மற்ற சர்வதேச விமானங்களுடன் ஒப்பிடும்போது ஒரு குறுகிய கால பயணமாகும். எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது.
    • முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடக்கிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் "ஏ" பிரிவில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. 8 அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன.

    இந்த போட்டிக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றன.

    இத்தொடர் நாளை தொடங்கி 7ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். போட்டிகள் அனைத்தும் சார்ஜாவில் நடத்தப்பட இருக்கின்றன.

    முத்தரப்பு தொடர் நாளை தொடங்கும் நிலையில், மூன்று அணிகளின் கேப்டன்களான முகமது வாசீம், சல்மான் ஆகா, ரஷித் கான் ஆகியோர் கோப்பையுடன் போஸ் கொடுத்துள்ளனர்.

    • மத்திய மண்டலம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் குவித்துள்ளது.
    • வடக்கு மண்டலம் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் அடித்துள்ளது.

    துலீப் டிராபி காலிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. பெங்களூருவில் நடைபெற்று வரும் ஒரு காலிறுதி போட்டியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற வடகிழக்கு மண்டலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மத்திய மண்டல அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் பாண்டே 3 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஆர்யன் ஜுயல் 60 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து டேனிஷ் மாலேவார் உடன் கேப்டன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரஜத் படிதார் 96 பந்தில் 21 பவுண்டரி, 3 சிக்சருடன் 125 ரன்கள் விளாசினார். மறுமுனையில் விளையாடிய டேனிஸ் வாலேவார் சதம் அடித்ததுடன், இரட்டை சதம் நோக்கி முன்னேறினார். அவர் 219 பந்தில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அவருடைய ஸ்கோரில் 35 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். முதல்நாள் ஆட்ட முடிவில் மத்திய மண்டலம் 2 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் குவித்துள்ளது.

    பெங்களூருவில் நடைபெற்று வரும் மற்றொரு காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்க மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    வடக்கு மண்டல அணி வீரர்கள் அதிக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் ரன்கள் சேர்த்தனர். அதேவேளையில் விக்கெட்டுகளையும் இழந்தனர்.

    ஷுபம் கஜூரியா 26 ரன்களும், அன்கித் குமார் 30 ரன்களும், யாஷ் துல் 39 ரன்களும், ஆயுஷ் படோனி 68 ரன்களும், நிஷாந்த் சிந்து 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வடக்கு மண்டலம் 75.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறை இத்துடன் முதல்நாள் ஆட்ட நிறைவடைய வாய்ப்புள்ளது. கணையா வதாவன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிழக்கு மண்டலம் அணி சார்பில் மணிஷி 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • துலீப் டிராபி காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின.
    • பிசிசிஐ இப்போட்டிகளை டெலிகாஸ்ட் செய்யாததால் ரசிகர்கள் ஆதங்கம்.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபிக்குப் பிறகு மிகப்பெரிய போட்டியாக தூலீப் டிராபி பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

    வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 6 அணிகளாக இதில் பங்கேற்றுள்ளன.

    வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் இடையிலான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது.

    4 நாட்கள் கொண்ட இந்த போட்டிகளை ரசிகர்கள் பார்க்க விரும்பின. ஆனால் பிசிசிஐ போட்டிகளை லைவ்-ஸ்ட்ரீம் செய்யவில்லை. மேலும் ஒளிப்பரப்பும் செய்யவில்லை.

    பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ-யால், உள்நாட்டின் முக்கிய போட்டிகளை ஒளிபரப்ப முடியவில்லையா? என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    ஒரு ரசிகர், துலீப் டிராபி காலிறுதி போடடிகள் டெலிகாஸ்ட் செய்யப்படவில்லை. பிசிசிஐ-யிடம் இருந்து மீண்டும் ஒருமுறை அவமானகரமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு ரசிகர், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் பிசிசிஐ-யால் முக்கியமான உள்ளூர் தொடர்களை டெலிகாஸ்ட் கூட செய்ய முடியவில்லை என கடிந்துள்ளார்.

    தற்போதைய காலக்கட்டத்தில் சிறிய வகையிலான டென்னிஸ் பால் தொடர் கூட லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு முதன்மையான முதல் தரப் போட்டியான துலீப் டிராபியை பிசிசிஐ ஒளிபரப்பாதது மூர்க்கத்தனமானது. உண்மையிலேயே மோசமானது என இன்னொரு ரசிகர் விமர்சித்துள்ளார்.

    • ரம்ஜான் மாதத்தின்போது நடைபெற்ற போட்டியின்போது, எனர்ஜிக்காக பானம் அருந்தியதை ரசிகர்கள் விமர்சித்தினர்.
    • சமூக வலைத்தளங்களில் வெறுப்பு கருத்துகளை பதிவிட்டதுடன், ட்ரோல் செய்து வந்தனர்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின், சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது. அப்போது ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

    ஆனால், முகமது ஷமி போட்டியின்போது எனர்ஜிக் பானம் அருந்தினார். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முகமது ஷமி, நோன்பு நேரத்தின்போது எப்படி பானம் அருந்தலாம் என இணைய தளத்தில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தினர். அவருக்கு எதிராக வெறுப்பு கருத்து பதிவிட்டு, ட்ரோல் செய்தனர்.

    இதை தான் எப்படி எதிர்கொண்டேன் என்பது முகமது ஷமி விவரித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-

    நாங்கள் 42 அல்லது 45 டிகிரி வெயில் வெப்பத்தில் விளையாடி கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களை தியாகம் செய்கிறோம். நாட்டிற்காக ஏதாவது செய்தல் அல்லது பயணம் போன்றவைகளுக்கு, எங்களுடைய சட்டத்தில் (இஸ்லாம்) விதிவிலக்கு உள்ளது. இந்த விசயங்களை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் மற்றும் மக்கள் மற்றவர்களை முன்மாதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அந்த நபர் என்ன செய்கிறார், யாருக்காக செய்கிறார் என்பதையும் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    நமது சட்டம் கூட சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறது. அதற்காக நாம் அபராதம் செலுத்தலாம் அல்லது பின்னர் அதற்கு ஈடுசெய்யலாம். அதை நான் செய்தேன்.

    சிலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள, இதுபோன்ற விசயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள். நான் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் படிப்பதில்லை. என்னுடைய குழு எனது கணக்குகளை நிர்வகிக்கிறது.

    இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    • சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதால் பிசிசிஐ கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
    • சஞ்சு சாம்சன் இடம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது விமர்சகர்கள் கருத்து.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை செப்டம்பர் 10ஆம் தேதி எதிர்கொள்கிறது.

    இந்திய அணி கடந்த 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதற்கு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக், மூன்று வீரர்கள் இந்திய அணிக்கு கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். அதில் சுப்மன் கில் பெயர் இடம் பெறவில்லை.

    இது தொடர்பாக சேவாக் கூறியதாவது:-

    அபிஷேக் சர்மா கேம் கேஞ்சராக இருக்க முடியும் என நினைக்கிறேன். பும்ரா எப்போதும் கேம் சேஞ்சர்தான். பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, அவருடைய மந்திர (mystery) பந்து வீச்சால் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 வடிவில் மிகவும் பயனுள்ளவராக இருந்தார். ஆகவே, இவர்கள் தொடரை வெல்ல முக்கிய கேம் சேஞ்சர்களாக இருப்பார்.

    பந்து வீச்சாளர்கள் என வரும்போது பணிச்சுமை என்பது முக்கியமானது என நினைக்கிறேன். பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில் பணிச்சுமை (Workload) என்பது பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவர்களால் விளையாட முடியும், அதிகப்படியான போட்டிகளில் விளையாட வேண்டியதில்லை. எனவே, இது முக்கியமாக பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. சுப்மன் கில் துணைக் கேப்டனாக இடம் பிடித்துள்ளதால், சஞ்சு சாம்சனின் தொடக்க வீரர் இடம் பறிபோக வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம்.
    • ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது.

    அண்மையில் நடந்து முடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை இத்தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணியின் நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த சோக சம்பவத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவித பதிவும் போடாமல் இருந்தது.

    இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இன்று ஒரு அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் கடைசியாக இங்கு பதிவிட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம். இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிரம்பியிருந்தது.

    ஆனால் ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது. அன்றிலிருந்து மௌனம் எங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் வழியாக இருந்து வருகிறது. அந்த மௌனத்தில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்டல், கற்றல், மெதுவாக, வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்று.

    அப்படித்தான் RCB CARES உருவானது. இது எங்கள் ரசிகர்களுடன் இருக்கவும், கவுரவிக்கவும், குணப்படுத்தவும், அர்த்தமுள்ள செயலுக்காக எங்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேடை. நாங்கள் இன்று இந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை. ஆனால் அக்கறையுடன் திரும்புகிறோம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஒன்றாக நிற்க... ஒன்றாக முன்னேற... கர்நாடகாவின் பெருமையாக தொடர ஆர்.சி.பி கேர்ஸ். எப்போதும் அப்படியே இருக்கும். விரைவில் மேலும் விவரங்கள்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ரோகித் சர்மா, விராட் கோலி 2 மற்றும் 4-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

    சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (669 புள்ளி 11வது இடத்திலும், மிட்சல் மார்ஷ் 44வது இடத்திலும் உள்ளார்.

    அதிரடியாக சதமடித்த கேமரூன் கிரீன் கிடுகிடுவென 40 இடங்கள் முன்னேறி 78வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 650 புள்ளியுடன் 3வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 616 புள்ளியுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் நீடிக்கிறார். இலங்கையின் மகேஷ் தீக்ஷனாவும் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    • வாழ்க்கை ஒரு முழுமையான வட்டமாக அமைந்துவிட்டது.
    • சென்னை சூப்பர் கிங்சில் தொடங்கி அங்கேயே முடிகிறது.

    தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இவரது ஓய்வுக்கு சிஎஸ்கே அணி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    சேப்பாக்கின் சொந்த சிங்கம். கேரம்-பந்தை திருப்புகிற சுந்தரன்! முதல்முறையாக மஞ்சள் நிற ஜெர்ஸியில் தூசி படிந்த சிஎஸ்கேவின் களத்தில் அறிமுகமாகி உலக அரங்கில் சுழல் பந்தில் ஆதிக்கம் செலுத்தினாய். எல்லாவற்றையும் கொடுத்தீர்கள்.

    நமது பாரம்பரியத்தின் தூணாக இருந்து, சேப்பாக் கோட்டையில் கர்ஜித்தீர்கள். தெருவில் உள்ளவர்களிடமும் மரியாதையைப் பெற்றீர்கள் அஸ்வின்.

    வாழ்க்கை ஒரு முழுமையான வட்டமாக அமைந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்சில் தொடங்கி அங்கேயே முடிகிறது. எப்போதும் சிங்கம். எப்போதும் எங்களில் ஒருவர்! நினைவுகளுக்கு நன்றி அஸ்வின்! எனப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் நடந்து வரும் புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார்.
    • இதனால் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேற விஜய் சங்கர் முடிவு எடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் நடந்து வரும் புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார்.

    இதனால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேற விஜய் சங்கர் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை டிஎன்சிஏவும் உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு அணியுடனான அவரது 13 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது.

    கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியின் தொடக்க பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இது புச்சிபாபு தொடரிலும் பின்பற்றப்பட்ட நிலையில், 34 வயதாகும் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேறி திரிபுரா அணிக்காக விளையாட முடிவு எடுத்துள்ளார். ஆந்திர பிரதேச அணிக்காக ஆடி வந்த ஹனுமா விஹாரி, தற்போது திரிபுரா அணிக்காக விளையாட உள்ளார்.

    தமிழ்நாடு அணிக்காக 70 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள விஜய் சங்கர் 3,702 ரன்களையும், 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் கேப்டனாக விஜய் ஹசாரே, தியோதர் டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களையும் தமிழ்நாடு அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.

    கடந்த ஆண்டு பாபா அபரஜித்தும் தமிழ்நாடு அணியில் இருந்து விலகி, கேரளா அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×