என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்து எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து கோலி விலகினார்.
    • கோலி விளையாடததற்கு பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போடிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்திருந்தார்.

    முதல் டெஸ்ட் தொடக்குவதற்கு முன்பு அவர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவித்தார். இதனையடுத்து அவரது மனைவி கர்பமாகி உள்ளதால் அவர் விளையாடவில்லை எனவும் ஒருசிலர் அவரது தாயிக்கு உடல் நலம் சரியில்லை எனவும் சமூக வலைதளங்களில் பல்வேறு வந்தந்திகள் பரவி வந்தது.

     

    இந்நிலையில் எங்கள் தாய் உடல் நலத்துடன் உள்ளதாக விராட் கோலியின் சகோதரர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    இது குறித்து விகாஸ் கோலி கூறியதாவது:-

    என்னுடைய தாயின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்தியில் உண்மையில்லை. எனது தாய் நலமாக உள்ளார். மக்கள் மற்றும் ஊடகங்கள் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 97 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது.
    • இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம், ஆகமொத்தம் 91 பதக்கங்களை பெற்று 3-வது இடத்தில் இருந்தது.

    91 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

    புனேயில் 2019-ம் ஆண்டு நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது.

    தற்போது அதைவிட கூடுதலான பதக்கங்களை தமிழக வீரர், வீராங்கனைகள் குவித்து முத்திரை பதித்து உள்ளனர்.

    இன்று காலை நடந்த போட்டிகளில் தமிழகத்துக்கு 2 தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்தது. இன்று மதியம் நிலவரப்படி தமிழ்நாடு 37 தங்கம், 20 வெள்ளி, 37 வெண்கலம் ஆகமொத்தம் 94 பதக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழக அணி பதக்க பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

    இன்று பிற்பகலில் நீச்சல் பந்தயத்தில் 1 தங்கப் பதக்கமும் 2 வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் போட்டி முடிவில் தமிழக அணி 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தக்க வைத்தது.

    மராட்டியம் 55 தங்கம் உள்பட 156 பதக்கங்களை குவித்து முதல் இடத்தில் உள்ளது. அரியானா 35 தங்கம் உள்பட 103 பதக்கத்துடன் 3-வது இடத்தை பிடித்தது.

    • ரஞ்சி கோப்பையில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
    • மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.

    இதற்கு முன்பு யுவராஜ் சிங் 15 வயது 57 நாட்களில் விளையாடி இருந்ததே சாதனையாக இருந்தது. பீகார் சிறுவன் சூர்யவன்ஷி அதை முறியடித்துள்ளார்.

    கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் 15 வயது 230 நாட்களில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
    • இதில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது

    ப்ளூம்போன்டைன்:

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.

    சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய முஷீர் கான் 131 ரன்கள் குவித்தார்.

    நியூசிலாந்து சார்பில் மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், நியூசிலாந்து 28.1 ஓவரில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி சார்பில் சாமி பாண்டே 4 விக்கெட்டுகளும், ராஜ் லிம்பானி, முஷீர் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியின்முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • தனது அணியினருடன் விமானத்தில் ஏறினார் மயான்க் அகர்வால்.
    • மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் வீரர் மயான்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயான்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயான்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயான்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    மேலும், எதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக மயான்க் அகர்வால் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விரைவில் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மயான்க் அகர்வால் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். நேற்று திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் கர்நாடகா அணி வெற்றி பெறவும் மயான்க் அகர்வால் முக்கிய பங்காற்றியுள்ளார். 

    • தமிழ்நாட்டின் ரேவதி, லட்சுமி இணை வென்றுள்ளது.
    • தமிழ்நாடு வீரர்களான பிரனவ், மகாலிங்கம் இணை வென்றுள்ளது.

    கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் 2 தங்கம் வென்று ஆடவர், மகளிர் இரட்டையர்கள் அசத்தியுள்ளனர்.

    தமிழ்நாட்டின் ரேவதி, லட்சுமி இணை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கர்நாடக இணையை வீழ்த்தி தங்கம் வென்று அபாரமாக வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றுள்ளது.

    தமிழ்நாடு வீரர்களான பிரனவ், மகாலிங்கம் இணை 6-3, 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்டில் மகாராஷ்டிரா இணையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

    • விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
    • நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார்.

    பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் விளையாட இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக பணியாற்றுகிறார்.

    இந்த நிலையில் கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    என் வாழ்நாளில் முதல் முறையாக இந்த உலகின் நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். விபத்தின் போது காயங்கள் பற்றி நான் அறிந்தேன். ஆனால் நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. யாரோ என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயம் குணமாக 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டரிடம் கேட்ட போது கூறினர். விரைவில் குணம் அடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

    • இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
    • ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தாகும்.

    இந்நிலையில், ஐதராபாத் டெஸ்டில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற சமன் செய்தபோது இந்திய அணி 54.16 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு புள்ளிகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருந்தது.

    ஐதராபாத் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியால் உலக சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு பின்தங்கியது. 2-வது இடத்தில் இருந்து 3 இடங்கள் பின்தங்கி சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய அணி 54.16 புள்ளியில் இருந்து 43.33 புள்ளிகளாகக் குறைந்து இருக்கிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்றாலும் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 55.00 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், வங்காளதேசம் 4-வது இடத்திலும் உள்ளன. இந்த 3 அணிகளும் தலா 50 சதவீத புள்ளிகளுடன் உள்ளன.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முறையே 6 முதல் 9-வது இடங்களில் உள்ளன.

    • ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.
    • ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.

    கடந்த ஆண்டு இந்தியா அணிக்காக அறிமுகமான ரின்கு சிங், சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.

    இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 11 இன்னிங்ஸ்களில், 356 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 89.00 மற்றும் 176 ஸ்டிரைக் ரேட்டுடன் இரண்டு அரை சதங்களுடன் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அவரது தந்தை கான்சந்த் சிங் எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வீடியோ வைரலானது. கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற போதிலும், தனது தந்தை வேலையை விட்டு விட மறுத்தாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் என் தந்தையிடம் நம்மிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் சிலிண்டர்களை எடுத்துச் செல்லாமல் ஓய்வெடுக்கச் சொன்னேன். ஆனால் அவர் அதைச் ஏற்க மறுத்து விட்டார். மேலும் அவரது வேலையை அவர் விரும்புகிறார்.

    ஒருவர் வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டிருந்தால் அவரிடம் வேலையை விட்டுவிடுங்கள் என்று சொல்வது மிகவும் கடினம். அவரே நினைத்தால் மட்டும்தான் அதை விட முடியும்.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    • தோல்விக்கு 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணம்.
    • 2-வது இன்னிங்சில் கில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்த தோல்விக்கு 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணம். குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 23 ரன்களில் அவுட்டான நிலையில் முக்கியமான 2-வது இன்னிங்சில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் சுப்மன் கில்லின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் இன்னிங்சில் சுப்மன் கில் பேட்டிங் செய்த அணுகுமுறையை நாம் பார்த்தோம். அவர் நல்ல ஷாட்டுகளை அடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்படி நீங்கள் ரன்கள் அடிக்க முயற்சிக்கவில்லை எனில் சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பவுலர்கள் எளிதாக அடிப்பதற்கு தேவையான சுமாரான பந்துகளை உங்களுக்கு வீச மாட்டார்கள்.

    நீங்கள் அங்கே உங்களுடைய திறமையை காண்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். எனவே அதில் எப்படி முன்னேறலாம் என்பதை அவர் பார்க்க வேண்டும்.

    என்று பார்தீவ் பட்டேல் கூறினார்.

    • எனது தந்தைதான் எனக்கு எல்லாவற்றை விட முக்கியம்.
    • எனவே அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்திய அணியில் இருந்து வெளியேறினேன்.

    மும்பை:

    இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 13 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் என அடுத்தடுத்த தொடர்களை தவற விட்டார்.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் இடம் பிடிப்பேன் என்று தீபக் சாஹர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது தந்தைதான் எனக்கு எல்லாவற்றை விட முக்கியம். எனவே அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்திய அணியில் இருந்து வெளியேறினேன். எனது தந்தை மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருக்கும்போது வெளிநாடு சென்று விளையாடினால் நான் ஒரு நல்ல மகனே கிடையாது.

    எனவே இந்திய அணியில் இருந்து வெளியேறி 25 நாட்கள் அவருடனே தங்கி இருந்தேன். தற்போது எனது தந்தை நல்ல உடல் நிலையை எட்டியுள்ளார். நான் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று நல்ல பயிற்சியையும் மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி உள்ளேன்.

    அடுத்து என்னுடைய இலக்கே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான். ஏற்கனவே இரண்டு முறை டி20 உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வாய்ப்பினை பெறாத நான் இம்முறை நிச்சயம் அந்த வாய்ப்பை எட்டி பிடிப்பேன்' என்று கூறினார்.

    • டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

    ×