என் மலர்
விளையாட்டு
- எனது தந்தைதான் எனக்கு எல்லாவற்றை விட முக்கியம்.
- எனவே அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்திய அணியில் இருந்து வெளியேறினேன்.
மும்பை:
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 13 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் என அடுத்தடுத்த தொடர்களை தவற விட்டார்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் இடம் பிடிப்பேன் என்று தீபக் சாஹர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனது தந்தைதான் எனக்கு எல்லாவற்றை விட முக்கியம். எனவே அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்திய அணியில் இருந்து வெளியேறினேன். எனது தந்தை மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருக்கும்போது வெளிநாடு சென்று விளையாடினால் நான் ஒரு நல்ல மகனே கிடையாது.
எனவே இந்திய அணியில் இருந்து வெளியேறி 25 நாட்கள் அவருடனே தங்கி இருந்தேன். தற்போது எனது தந்தை நல்ல உடல் நிலையை எட்டியுள்ளார். நான் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று நல்ல பயிற்சியையும் மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி உள்ளேன்.
அடுத்து என்னுடைய இலக்கே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான். ஏற்கனவே இரண்டு முறை டி20 உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வாய்ப்பினை பெறாத நான் இம்முறை நிச்சயம் அந்த வாய்ப்பை எட்டி பிடிப்பேன்' என்று கூறினார்.
- டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்து உள்ளது.
- இந்த வெற்றிக்கு இளம் வேகப்புயல் ஷமர் ஜோசப் காரணமாக அமைந்துள்ளார்.
கபா டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்து உள்ளது. இந்த வெற்றிக்கு இளம் வேகப்புயல் ஷமர் ஜோசப் காரணமாக அமைந்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா நாட்டின் கபாவில் நடந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர்ஜோசப் முழு பலத்தையும் பந்து வீச்சில் காண்பித்து 12 ஓவர்களை வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முந்தையநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் வீசிய பந்தில் ஷமர் ஜோசப் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கண்ணீர் சிந்தியபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனாலும், அடுத்த நாளில் அசாத்திய பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளார் ஷமர் ஜோசப். யார் இந்த ஷமர் ஜோசப் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறதல்லவா.
கண்டிப்பாக ஏற்படும், ஷமர் ஜோசப்பின் வாழ்க்கை வரலாறு பெரும் வியப்பை தரும்.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கரீபியனில் உள்ள பராகரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷமர் ஜோசப் (வயது 24). இவரது கிராமத்தில் மொத்தம் 350 பேர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய ஷமர் ஜோசப், தினமும் 12 மணி நேரம் பணிபுரியும் காவலாளியாக வேலை பார்த்தார்.
கிரிக்கெட்டில் தீவிர ஆர்வம் கொண்ட ஷமர் ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் சேர்ந்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்ததன் மூலம், மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர் கபா டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். ஆம், கபா டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வரலாற்று சாதனை புரிய இவரே காரணம். 27 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை டெஸ்டில் வீழ்த்தியதே இல்லை, அதிலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வெல்வது எளிதான காரியம் அன்று.
காரணம், அவர்களது மண்ணில் ஆஸ்திரேலியாவின் பலம் இரட்டிப்பாகும் என்பது தெரிந்த கதைதான். அப்படி இருந்தும், தனது அசாத்திய திறமையால், அறிமுகத் தொடரில் 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றியை பெற ஷமர் ஜோசப் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
- இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியின் போது பும்ரா விதியை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 81-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது 1 ரன் எடுப்பதற்கு ஓடி வந்த ஆலி போப்பை வேண்டுமென்றே பும்ரா தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு ஐசிசி கணடனம் தெரிவித்துள்ளது.
இந்த செயல் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.12ஐ மீறியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால் அவரது நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளி சேர்க்கப்பட்டது. அடுத்த 1 ஆண்டிற்குள் மேலும் 3 புள்ளிகளை பெற்றால் 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, பும்ரா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பும்ராவின் குற்றத்துக்கு முறையான விசாரணை தேவையில்லை, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும், பும்ரா மீது விதிக்கப்பட்ட கண்டனத்தை ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் ஏற்றுக்கொண்டார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஷமார் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன விருதை ஜோசப் தட்டிச் சென்றார்.
பிரிஸ்பேன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 25-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷமார் ஜோசப்-ன் வாழ்க்கையை விக்கிபீடியாவில் படித்து கண் கலங்கியதாக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நீங்கள் ஒரு உதவி செய்யுங்கள். அவருடைய வாழ்க்கையை பற்றி விக்கிபீடியாவில் படியுங்கள். அவரது பயணத்தை பற்றி படிக்கும் போது எனது கண்களில் கண்ணீர் வந்தது. எளிமையா சொல்லனும் என்றால் உங்களுக்கு ஊக்கமளிக்கும்.
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.
- 50 ரன்னை தாண்டுவதற்கு மற்றவர்கள் கஷ்டப்பட்ட போது போப் 196 ரன்கள் குவித்தது சிறப்பானது.
- இங்கிலாந்து வீர் ஹார்ட்லேவுக்கு இந்த டெஸ்ட் மிகவும் அபாரமானது.
ஐதராபாத்:
இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 231 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோற்றது மிகவும் பரிதாபமே.
இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-
இங்கிலாந்தின் வெற்றிக்கு ஆலி போப் காரணமாக திகழ்ந்தார். அவரது ஆட்டம் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. 50 ரன்னை தாண்டுவதற்கு மற்றவர்கள் கஷ்டப்பட்ட போது இவர் 196 ரன்கள் குவித்தது சிறப்பானது. எஸ்.பரத்-அஸ்வின் ஜோடி போராடியது பாராட்டத்தக்கது. நாங்கள் முதல் இன்னிங்சில் இன்னும் கூடுதலாக 70 முதல் 80 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து வீர் ஹார்ட்லேவுக்கு இந்த டெஸ்ட் மிகவும் அபாரமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பிரிஸ்பேன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
2வது போட்டியில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 1997 -ம் ஆண்டில் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா அருகில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.
கண் கலங்கியபடி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு லாரா வாழ்த்துகள் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.
- தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன்.
மகேந்திர சிங் தோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:-
அறுவை சிகிச்சைக்கு பின்னர் தோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வர வேண்டும். இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் தோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள்.
தோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதேசமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதல் வைத்திருப்பார். அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.

தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என்று நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. கொரோனா நேரத்தில் நாங்கள் இருவரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி உள்ளோம்.
களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு விளையாட 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம்.
இவ்வாறு தீபக் சாஹர் கூறினார்.
- கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
- பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.
சென்னை:
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.
நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.
நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.
பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.
- இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.
- இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்து உத்தரவிட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தடை செய்யப்பட்டது.
மேலும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், அதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்த பின் அதன் மீதான தடை நீக்கப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
- 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.
- 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில், இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில், 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பின், வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் பேசியதாவது;-
எங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் கூறினார். அதுவே எங்களுக்கு உத்வேகமாக இருந்தது.
நாங்கள் பரிதாபகரமானவர்கள் அல்ல என்பதை உலகுக்குக் காட்ட விரும்பினோம். அவரிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த பலம் உங்களுக்கு போதுமா ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்தியா 436 ரன்களும் எடுத்தது.
- 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 420 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார்.
தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் மற்றும் அக்சர் பட்டேல் பொறுப்பாக விளையாடினர்.

அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது இங்கிலாந்து. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒல்லி போப் நிதானமாக ஆடி சதமடித்தார். 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது. போப் 148 ரன்களுடனும், ரெஹான் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் அந்த அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் 400 ரன்களை கடந்தது. இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஒல்லி போப் 196 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தற்போது இந்திய அணி தனது ஆட்டத்தை விளையாடியது. இதில், இந்திய அணி 47 ஓவரில் 131 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால், இந்திய அணி வெற்றி பெருமா என்பதில் சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், 2வது இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றியை தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






