என் மலர்
விளையாட்டு
- தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடியுள்ளார் இஸ்மாயில்.
- இதற்கு முன்னதாக 129 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
பெண்கள் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2-வது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார்.
இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டியது கிடையாது.
இதற்கு முன்னதாக 2016-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 128 கி.மீட்டர் வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார். மேலும் 2022 உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடிய 34 வயதான இஸ்மாயில் 127 ஒருநாள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 192 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 163 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
- என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இந்நிலையில், ஜானி பேர்ஸ்டோ தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேர்ஸ்டோ,"100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் பெரிய விஷயம். என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான். எனது தந்தை இறக்கும்போது 10 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு 3 இடங்களில் பணிபுரிந்து எங்களை வளர்த்தார். அவர் இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போதும் எனது அம்மா வலிமையாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும் 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 5 டெஸ்ட் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரை இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது
- இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
- இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி சென்னை வந்தடைந்தார்.
இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
ThalaiVanakkam! ??#DenComing pic.twitter.com/YYsyEXPAJY
— Chennai Super Kings (@ChennaiIPL) March 5, 2024
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
#WATCH | Tamil Nadu: Former Indian Cricket Team Captain MS Dhoni arrives at Chennai Airport. pic.twitter.com/ueWLVnNH0f
— ANI (@ANI) March 5, 2024இந்த நிலையில், துவங்க இருக்கும் 2024 ஐ.பி.எல். தொடரில் புதிய ரோலை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
- டெஸ்ட் கிரிக்கெட் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.
- அதிகமாக 5 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சிறப்போடும் இருக்கிறார்.
தரம்சாலா:
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப்பெரிய சாதனைகளை செய்து அசத்தி வருகிறார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், விரைவாக 500 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர், அதிகமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெரிய சிறப்போடு இருக்கிறார்.
இந்நிலையில், தரம்சாலாவில் இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என்னிடம் நிறைய பேர் வந்து உங்களுக்கு ஏன் கேப்டன் பதவி கொடுக்கவில்லை என்பது பற்றி பேசி இருக்கிறார்கள். எனக்கு வந்த ஏற்றத்தாழ்வுகள் எனக்கு நிறைய புரிதலை உருவாக்கி இருக்கிறது. அதிலிருந்து நான் வெளியில் வந்து என்னை சமாதானம் செய்துகொண்டு விட்டேன்.
கிரிக்கெட்டில் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த இடத்தில்தான் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனக்கு முக்கியமான நேரங்களில் வாய்ப்புகள் கிடைக்காத பொழுது, எல்லாமே அணியின் நன்மைக்காகத்தான் என்று என்னை நானே சமாதானம் செய்வேன்.
5 நாட்கள் முடிவில் அணி வென்றால் டிரெஸ்சிங் ரூமில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அணியை விட என்னுடைய சுயநலமான ஆர்வத்தை பெரிதுபடுத்த முடியாது என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய நேபாளம் அணி 184 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நெதர்லாந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
காத்மண்டு:
நெதர்லாந்து, நமீபியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நேபாளத்தில் நடைபெற்றது.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. ஆசிப் ஷேக் 47 ரன்னும், குல்சன் ஜா 34 ரன்னும் எடுத்தனர்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் லெவிட் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார். சைப்ரண்ட் 48 ரன்னில் அவுட்டானார்.
இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. லெவிட் ஆட்டநாயகன் விருது வென்றார்.
- தன்னை அறியாமல் அந்த சிறுவனை கட்டிப்பிடித்து தூக்கி கொலின் மன்ரோ மகிழ்ச்சி அடைந்தார்
- இந்த காட்சி தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது
பாகிஸ்தான் சூப்பர் லீக் 2024 டி20 கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் 29 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் சல்மியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சுவாரசியமான சம்பவம் இடம்பெற்றது.
7-வது ஓவரின் கடைசி பந்தில், இஸ்லாமாபாத் வேகப்பந்து வீச்சாளர் பஹீம் அஷ்ரப் வீசிய பந்தை சல்மியின் அமீர்ஜமால் எதிர் கொண்டார். பந்து சிக்சர் நோக்கி பாய்ந்து சென்றது .அப்போது பீல்டர் கொலின் மன்ரோ பாய்ந்து சென்று பந்தை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் பந்து, எல்லையை தாண்டி சென்றது. அப்போது அந்த பந்தை பால் பாய் ஒருவர் லாவகமாக கேட்ச் செய்தார்.
இந்த காட்சியை பார்த்ததும் தன்னை அறியாமல் அந்த சிறுவனை கட்டிப்பிடித்து தூக்கி கொலின் மன்ரோ மகிழ்ச்சி அடைந்தார்.இந்த காட்சி தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- அரையிறுதியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
- டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தமிழ்நாடு தோல்விக்கு முக்கிய காரணம் என பயிற்சியாளர் கருத்து தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அணி ஏழு வருடத்திற்கு பிறகு ரஞ்சி டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை அணிக்கெதிராக கடந்த 2-ந்தேதி மும்பையில் அரையிறுதி போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 146 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் மும்பை 378 ரன்கள் குவித்துவிட்டது. 106 ரன்னுக்குள் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய ஷர்துல் தாகூர் சதம் (109), 10-வது வீரராக களம் இறங்கிய தனுஷ் கோட்டியான் (89 நாட்அவுட்) சிறப்பாக விளையாட மும்பை அணி 378 ரன்கள் குவித்து விட்டது.
பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 2-வது இன்னிங்சிலும் 162 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
3 நாளில் போட்டி முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு அணியின் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம். நான் எப்போதும் நேரடியாகவே பேசுவேன். முதல் நாள் 9 மணிக்கே (டாஸ் சுண்டப்பட்ட நேரம்) நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என பயிற்சியாளர் குல்கர்னி தெரிவித்திருந்தார்.
அணி தோல்வியடையும்போது கேப்டன் மற்றும் அணி வீரர்களும் பயிற்சியாளர் நிற்க வேண்டும். ஆனால், கேப்டனை குறை கூறுவது சரியல்ல என பயிற்சியாளர் குல்கர்னிக்கு எதிராக விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் குல்கர்னி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "இது மிகவும் தவறானது. பயிற்சியாளரிடம் இருந்து மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஏழு வருடங்களுக்குப் பிறகு அணியை அரையிறுதி வரை கொண்டு சென்ற கேப்டனுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் பயிற்சியாளர் முற்றிலுமாக கேப்டன் மற்றும் அணியை பஸ்க்கு கீழ் தள்ளி விட்டுள்ளார்" என்றார்.
- ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 80 ரன்கள் விளாசினார்.
- அலிசா ஹீல் 38 பந்தில் 55 ரன்கள் விளாசிய போதிலும் உ.பி. வாரியர்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.
5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 80 ரன்கள் (50 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். எலிஸ் பெர்ரியும் அரைசதம் (58 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தார்.
அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் அலிசா ஹீலி களத்தில் நின்றது வரை அவர்களுக்கு நம்பிக்கை காணப்பட்டது. ஹீலி 55 ரன்னில் (38 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறியதும் ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது. எதிர்பார்க்கப்பட்ட சமாரி அட்டப்பட்டு (8 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (5 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

ஸ்மிரிதி மந்தனா
20 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 175 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 5-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 3-வது வெற்றியாகும். உ.பி. வாரியர்ஸ் அணியின் 3-வது தோல்வி இதுவாகும்.
இத்துடன் பெங்களூரு சுற்று நிறைவடைந்தது. அடுத்தகட்ட போட்டிகள் டெல்லியில் நடக்கிறது. டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவே தொடக்க லீக்கில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு டெல்லி பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
- 2024 ஐ.பி.எல். தொடர் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது.
- முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், துவங்க இருக்கும் 2024 ஐ.பி.எல். தொடரில் புதிய ரோலை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்து இருககிறார். டோனி ஏற்கவிருக்கும் புதிய பொறுப்பு என்னவென்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
- சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.
- பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C-ன் ஒரு பகுதியாக இருக்கும் 11 வீரர்களில் சாம்சனும் ஒருவராக உள்ளார்.
சஞ்சு சாம்சன் கேரளாவில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அவருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த டிசம்பரில், சஞ்சு சாம்சன் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 108 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.
பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C-ன் ஒரு பகுதியாக இருக்கும் 11 வீரர்களில் சாம்சனும் ஒருவராக உள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ₹ 1 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இன்னமும் இந்திய அணியில் உரிய இடம் கிடைக்க சஞ்சு சாம்சன் போராடி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடின.
- ரஞ்சி கோப்பை வரலாற்றில் 47வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தியுள்ளது.
ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மும்பை அணி முன்னேறியது.
ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 378 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 232 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் தனது 2-வது இன்னிங்சில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 70 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது தமிழ்நாடு.
இதன் மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் 47வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தியுள்ளது.
- கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார்.
- சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவான் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக டேவன் கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரரான கான்வேவின் கட்டைவிரலின் காயம் ஏற்பட்டது. இதற்காக வரும் வாரம் அவர் அறுவை சிகிக்சை மேற்கொள்ள இருப்பதாகவும், 8 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மே மாதம் வரை அவர் கிரிக்கெட் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் 2024 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.
கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவன் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.






