என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
    • புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆதலால் புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.

    • விராட் கோலி 9 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ரிஷப் பண்ட் 736 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் தொடர்கிறார்.

    துபாய்:

    ஐசிசி வாரம்தோறும் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள், வீரர்கள், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில், டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-ம் இடம் பிடித்துள்ளார். 825 புள்ளிகள் பெற்ற ஜெய்ஸ்வால் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் (736 புள்ளி) 6-வது இடத்தில் தொடர்கிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி 9 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசிய பும்ரா, 883 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அஸ்வின் (807 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடம் பிடித்துள்ளார்.

    டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா (423 புள்ளி) முதல் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் (290 புள்ளி) 2வது இடத்திலும் தொடர்கின்றனர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • சிஎஸ்கே வீரர்கள் பயணம் செய்ய ஏதுவாக etihad airways நிறுவனம் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெக ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதன்மூலம் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

    தமிழகத்தை மையமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயணம் செய்ய ஏதுவாக etihad airways நிறுவனம் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த விமானத்தில் சிஎஸ்கே லோகோவுடன் மஞ்சள் கலரில் தயார் செய்யப்பட்டுள்ளது. இனி சிஎஸ்கே வீரர்கள் அடுத்த மாநிலத்திற்கு செல்ல இந்த விமானத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிஎஸ்கே அணி வீரர்கள்:-

    1. எம் எஸ் டோனி 2. ருதுராஜ் கெய்க்வாட் 3. பத்திரனா 4. சிவம் துபே 5. ஜடேஜா 6. டெவோன் கான்வே 7. ராகுல் திரிபாதி 8. ரச்சின் ரவீந்திரா 9. ரவிச்சந்திரன் அஸ்வின் 10. கலீல் அகமது 11. நூர் அகமது 12. விஜய் சங்கர் 13. சாம் கர்ரன் 14. ஷேக் ரஷீத் 15. அன்ஷுல் கம்போஜ் 16. முகேஷ் சவுத்ரி 17. தீபக் ஹூடா 18. குர்ஜப்னீத் சிங் 19. நாதன் எல்லிஸ் 20. ஜேமி ஓவர்டன் 21. கமலேஷ் நாகர்கோடி

    22. ராமகிருஷ்ண கோஷ் 23. ஷ்ரேயாஸ் கோபால் 24. வான்ஷ் பேடி 25. ஆண்ட்ரே சித்தார்த்

    • 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று தொடங்கியது.
    • இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று தாய்லாந்தை சந்திக்கிறது.

    மஸ்கட்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று தொடங்கியது. டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், 'பி' பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

    இதில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று தாய்லாந்தை சந்திக்கிறது. போட்டியை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் முதல் ஆட்டத்தில் தென்கொரியாவிடம் வீழ்ந்த தாய்லாந்து அணி வெற்றி கணக்கை தொடங்குவதற்கு கடுமையாக போராடும். எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.

    • காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை.
    • 10 முதல் 14 நாட்கள் வரை சுப்மன்கில் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி பகல்-இரவாக அடிலெய்டுவில் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் லெவலுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 30 மற்றும் 1-ந் தேதிகளில் கான் பெராவில் நடக்கிறது.

    இடது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சுப்மன்கில் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகமே.

    10 முதல் 14 நாட்கள் வரை சுப்மன்கில் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அடிலெய்டு டெஸ்டில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

    அவரது இடமான 3-வது வரிசையில் ஆடிய தேவ்தத் படிக்கல் பெர்த் டெஸ்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதல் இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமலும், 2-வது இன்னிங்சில் 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். இதனால் 2-வது டெஸ்டில் படிக்கல் கழற்றி விடப்படலாம்.

    இதற்கிடையே 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றமில்லை என்று அந்நாட்டு தலைமை பயிற்சியாளர் மெக்டோனால்டு அறிவித்துள்ளார். முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்களே அடிலெய்டு டெஸ்டில் இடம்பெற்று இருப்பார்கள்.

    மிச்சேல் மார்ஷ் உடல் தகுதியை பொறுத்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லபுஷேன் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்றும் மெக்டொனால்டு நம்பிக்கை தெரிவித்தார்.

    • குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ஊர்வில் படேல் படைத்துள்ளார்.
    • 2018-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் 32 பந்தில் சதம் விளாசினார்.

    சையது முஷ்டாக் டிராபி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் நாக்வாஸ்வல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யா தேசாய்- ஊர்வில் படேல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டிய ஊர்வில் படேல் 28 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் குஜராத் அணி 10.2 ஓவரில் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஊர்வில் படேல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 113 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 12 சிக்சர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் 32 பந்தில் சதம் விளாசினார். அதனை தற்போது ஊர்வில் முறியடித்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஊர்வில் படேலை எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உலக வலுதூக்கும் (பவர் லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடைபெற்றது.
    • ஜூனியர் பிரிவில் 48 கிலோ உடல் எடை பிரிவில் கஸ்தூரி பங்கேற்றார்.

    சென்னை:

    உலக வலுதூக்கும் (பவர் லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள நோவோசிர்ஸக் நகரில் கடந்த 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்கின்றனர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். ஜூனியர் பிரிவில் 48 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற அவர் தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் பெஞ்ச் மற்றும் டெட்லிப்ட் முறையில் மொத்தம் 105 கிலோ தூக்கி முதல் இடத்தை பிடித்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த அவர் ரஷியாவில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பினார். தங்கம் வென்ற கஸ்தூரிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை மாவட்ட வலுதூக்கும் சங்க பொதுச்செயலாளர்கள் எஸ்.பகவதி மூத்த துணைத்தலைவர், எஸ்.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறவினர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். சொந்த ஊரில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • 30 வயதான பஜ்ரங் புனியா 2020 -ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்.
    • முன்னதாக அவரை ஏப்ரல் 23-ந்தேதி இடை நீக்கம் செய்து இருந்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. 30 வயதான இவர் 2020 -ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்.

    இந்த நிலையில் தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.

    இதே குற்றத்திற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை முன்னதாக அவரை ஏப்ரல் 23-ந்தேதி இடை நீக்கம் செய்து இருந்தது. இந்த இடைநீக்கத்தால் அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டு பயிற்சிகளைப் பெறவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுப்பு.
    • பாகிஸ்தானில்தான் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படும் என பாகிஸ்தான் உறுதி.

    ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும் மற்றொரு நாட்டிலும் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் (மற்றொரு நாட்டில் நடைபெறும் போட்டிகளில் மட்டும்) என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கூறி வந்தது.

    ஆனால் எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது. அத்துடன் தொடருக்கான வரைவு அட்டவணையை வெளியிட்டது. இதனால் பாகிஸதானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என இந்திய அணி, தனது முடிவை ஐ.சி.சி.க்கு கடிதம் மூலம் தெரிவித்தது.

    இதனால் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டி அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவேளை போட்டி பாகிஸ்தானிலேயே நடைபெற்று இந்தியா பங்கேற்கவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் ஐசிசி-க்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும். சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்த இழப்பு இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் எச்சரித்திருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், போட்டியை ஹைபிரிட் மாடலாக நடத்த ஐ.சி.சி. புதிய வழியை கண்டுள்ளது.

    அதாவது போட்டியை நடத்தும் பாகிஸ்தானுக்கு ஊக்கத்தொகை வழங்க முன்வந்துள்ளது. தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்துங்கள். நாங்கள் உங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறோம் என ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால், பாகிஸ்தான் இது தொடர்பாக முடிவு எடுத்ததாக எனத் தெரியவில்லை. நாளை மறுதினம் போட்டி அட்டவணையை உறுதி செய்ய ஐசிசி- பிசிபி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறது. அப்போது ஹைபிரிட் மாடல் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோதாஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 40-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு டிரா என 33 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

    கடந்த 22-ம் தேதி நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 24-40 என உ.பி.யோதாஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது நினைவிருக்கலாம்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
    • ஐசிசி பும்ராவின் ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது.

    46 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஷ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார்.

    534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கேப்டன் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இதனையடுத்து, பும்ராவின் பவுலிங் ஆக்சன் பந்தை எறிவது போல் இருப்பதாலேயே அவரை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என்றும் ஆனால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் ஐசிசி அவருடைய ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.

    இந்நிலையில், ரசிகர்களின் இத்தகைய விமர்சனத்துக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக தி சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் சேப்பல் எழுதியுள்ள தனது கட்டுரையில், "பும்ரா தலைமையில் இந்தியாவின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். அதனால் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 104க்கு ஆல் அவுட்டானது. சில நேரங்களில் பும்ரா கிட்டத்தட்ட விளையாட முடியாதவராக இருந்தார்.

    பும்ராவின் ஆக்சன் பற்றி கேள்வி எழுப்பும் நான்சென்ஸ் வேலையை தயவு செய்து நிறுத்துங்கள். அவருடைய ஆக்சன் தனித்துவமானது. அதே சமயம் அது சந்தேகத்துக்கு இடமின்றி சரியாக உள்ளது அப்படிப்பட்ட ஒருவரை விமர்சிப்பது ஒரு சாம்பியனையும் நம்முடைய விளையாட்டையும் இழிவு படுத்துகிறது" என்று எழுதியுள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 2வது இன்னிங்சில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 115 ரன்னும், மைக்கேல் லூயிஸ் 97 ரன்னும், அலிக் அதான்ஸ் 90 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜேகர் அலி 53 ரன்னும், மொமினுல் ஹக் 50 ரன்னும் எடுத்தனர். லிட்டன் தாஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    181 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலிக் அதான்ஸ் 42 ரன்கள் எடுத்தார்.

    வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 6 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் துல்லியமாக பந்து வீசியதால் வங்கதேச வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    மெஹிதி ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 45 ரன்கள் எடுத்தார். ஜேகர் அலி 31 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேச அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ் தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×