என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஊக்கத்தொகை தருகிறோம்: சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலாக நடத்த ஐசிசி புதிய வழி- சம்மதிக்குமா பாகிஸ்தான்?
- பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுப்பு.
- பாகிஸ்தானில்தான் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படும் என பாகிஸ்தான் உறுதி.
ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும் மற்றொரு நாட்டிலும் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் (மற்றொரு நாட்டில் நடைபெறும் போட்டிகளில் மட்டும்) என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கூறி வந்தது.
ஆனால் எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது. அத்துடன் தொடருக்கான வரைவு அட்டவணையை வெளியிட்டது. இதனால் பாகிஸதானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என இந்திய அணி, தனது முடிவை ஐ.சி.சி.க்கு கடிதம் மூலம் தெரிவித்தது.
இதனால் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டி அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவேளை போட்டி பாகிஸ்தானிலேயே நடைபெற்று இந்தியா பங்கேற்கவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் ஐசிசி-க்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும். சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்த இழப்பு இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், போட்டியை ஹைபிரிட் மாடலாக நடத்த ஐ.சி.சி. புதிய வழியை கண்டுள்ளது.
அதாவது போட்டியை நடத்தும் பாகிஸ்தானுக்கு ஊக்கத்தொகை வழங்க முன்வந்துள்ளது. தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்துங்கள். நாங்கள் உங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறோம் என ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் இது தொடர்பாக முடிவு எடுத்ததாக எனத் தெரியவில்லை. நாளை மறுதினம் போட்டி அட்டவணையை உறுதி செய்ய ஐசிசி- பிசிபி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறது. அப்போது ஹைபிரிட் மாடல் குறித்து முடிவு எடுக்கப்படும்.