என் மலர்
விளையாட்டு
- பாகிஸ்தானில் அரசியல் கலவரம் காரணமாக இந்த தொடர் மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளன.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேம், நியூசிலாந்து (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.
பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்ட வட்டமாக தெரிவித்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமும் (ஐ.சி.சி.) இதை கூறிவிட்டது.
இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் இந்தப் போட்டி குறித்து எந்த முடிவும் தெரியாத நிலையில் இருந்தது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் இருந்து மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஏற்பட்ட அரசியல் கலவரம் காரணமாக இந்த தொடர் அங்கிருந்து மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை 'ஏ' அணி பாகிஸ்தான் 'ஏ' அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக அங்கு சென்றது. முதல் போட்டி முடிந்த பிறகு வன்முறை காரணமாக பாகிஸ்தானில் இருந்து இலங்கை அணி பாதியில் திரும்பி விட்டது.
பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளன. இதனால் சாம்பியன்ஸ் டிராபி அங்கு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐ.சி.சி. கூட்டம் நாளை (29-ந் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி குறித்து முடிவு செய்யப்படும்.
- பாகிஸ்தான் சென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா மறுப்பு.
- நாளை நடைபெறும் ஐசிசி- பிசிபி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. அதேவேளையில் தொடரை ஹைபிரிட்டாக நடத்த பாகிஸ்தானும் மறுப்பு தெரிவித்து வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் ஐசிசி-க்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
இதனால் தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்துங்கள் ஊக்கத்தொகை தருகிறோம் என ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக நாளை ஐசிசி- பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுக்க இருக்கிறது. அதன்பிறகு போட்டிக்கான அட்டவணை இறுதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இனிமேல் பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாட வாய்ப்பில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி கூறுகையில் "இந்திய அதிகாரிகள் அவர்களுடைய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு வந்து விளையாட அனுப்ப தயாராக இல்லாதபோது, இந்தியாவில் நடைபெறும் அனைத்து தொடர்களிலும் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பில்லை.
இந்திய அணி பாகிஸ்தான் வர மறுப்பு தெரிவிக்கும்போது, பாகிஸ்தான் அணி மட்டும் இந்தியா செல்லும் சமநிலையற்ற சூழ்நிலையை நாங்கள் கொண்டிருக்க முடியாது. ஐசிசி உடனான கூட்டத்தில் என்ன நடந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்திகள் மற்றும் முடிவுகளுடன் நாங்கள் வெளிவருவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.
- ஒரு வேளை நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தால், எல்லாவிதமான தடையும் நீக்கப்படும் என்று நினைக்கிறேன்.
- அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மூலம் பழிவாங்க முயற்சிப்பதாக கருதுகிறேன்.
ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த தடையால் நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனெனில் கடந்த ஓராண்டாகவே இதற்கான முயற்சி நடந்தது. ஏற்கனவே சொன்னது மாதிரி, ஊக்கமருந்து தடுப்பு முகமை ஊழியர்கள் எனது வீட்டிற்கு வந்து மாதிரியை கேட்ட போது அவர்கள் கொண்டு வந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாம் பழையது. காலாவதியானது என்பதை கண்டறிந்து தான் சிறுநீர் மாதிரியை கொடுக்கவில்லை.
இந்த விவரங்களை அப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தங்களின் தவறை ஏற்கவில்லை. கடந்த 10-12 ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். எல்லா விளையாட்டு தொடர், பயிற்சி முகாம்களின் போது ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரியை வழங்கி இருக்கிறேன்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மூலம் பழிவாங்க முயற்சிப்பதாக கருதுகிறேன். இந்த அரசாங்கத்தின் நோக்கம் எனது உத்வேகத்தை சீர்குலைத்து, என்னை தலைவணங்க வைக்க வேண்டும் என்பது தான். ஒரு வேளை நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தால், எல்லாவிதமான தடையும் நீக்கப்படும் என்று நினைக்கிறேன்' என்றார்.
- முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- பின்னர் 52 மற்றும் 76-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிக் கோல் அடித்தது.
UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டம் லிவர்பூல் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் லிவர்பூல்- ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பலம் வாய்ந்த ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட்டால் சொந்த மைதானத்தில் விளையாடிய லிவர்பூல் அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை என்றாலும், 2-வது பாதி நேரத்தில் லிவர்பூல் அணி ஆதிக்கம் செலுத்தியது.
அந்த அணியின் அலேக்சிஸ் மெக் அலிஸ்டர் 52-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். பின்னர் 76-வது நிமிடத்தில் கோடி கக்போ கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என முன்னிலை பெற்றது.
ரியல் மாட்ரிட் பதில் கோல் அடிக்க எவ்வளவு போராடியும் பலன் அளிக்கவில்லை. இறுதியாக லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது.
லிவர்பூல் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 24-வது இடத்தை பிடித்துள்ளது.
36 அணிகளை கொண்ட இந்த தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 9 முதல் 24 இடங்களை பிடித்த அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் விளையாடும்.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, சக நாட்டு வீராங்கனை அன்மோல் கார்பை 21-17, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் அரியானா அணி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய அரியானா அணி 38-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள அரியானா 11 வெற்றி, 3 தோல்வி என 56 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் 39-37 என பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
- இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்தது.
- இதில் சிறப்பாக ஆடிய இந்தியா 11-0 என அபார வெற்றி பெற்றது.
மஸ்கட்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், பி பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அத்துடன், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.
இந்நிலையில், இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்தது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர்.
இறுதியில் இந்தியா 11-0 என அபார வெற்றி பெற்றது. தாய்லாந்து தான் ஆடிய இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.
- டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
- டர்பன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
டர்பன்:
இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 9 ரன்னும், டோனி டி ஜோர்ஜி 4 ரன்னும் எடுத்தனர். ஸ்டப்ஸ் 16 ரன்னும், டேவிட் பெடிங்காம் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கேப்டன் பவுமா (28), கைல் வெர்ரின்னே (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
கனமழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமாரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார் குகேஷ்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார். நேற்று நடந்த 2வது சுற்று டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். இதில் டிங் லிரெனை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தார் குகேஷ்.
இதுவரை முடிந்துள்ள 3 போட்டிகளில் இருவரும் தலா 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
- சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
- கே.எல்.ராகுலுக்கு தகுதியான மரியாதையை கொடுப்போம் என்று டெல்லி உரிமையாளர் தெரிவித்தார்.
2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கே.எல். ராகுலை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை 14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.
இதனையடுத்து கே.எல்.ராகுல் குறித்து பேசிய டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால், "கே.எல். ராகுல் ஒரு தரமான வீரர் என்று நான் நம்புகிறேன். அவரை குறிப்பிட்ட தொகைக்கு (ரூ.14 கோடி) ஏலத்தில் எடுத்தது மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க எங்களுக்கு உதவியது. கே.எல். ராகுலை எனக்கு நீண்ட காலமாக தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர்.
அவர் அன்புடனும் மரியாதையுடனும் வளர்ந்துள்ளார். அவருக்குத் தகுதியான அன்பையும் மரியாதையையும் நான் கொடுக்கப் போகிறேன். அவர் டெல்லி அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தருவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டதை விமர்சிக்கும் தொனியில் டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பலவீனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
- ஷார்ட் பால், டிரைவ் சிறப்பாக விளையாடுகிறார்.
இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் பலவீனங்கள் இருப்பதாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பலவீனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஷார்ட் பால், டிரைவ் சிறப்பாக விளையாடுகிறார். சுழற்பந்து வீச்சையும் சாதாரணமாக எதிர் கொள்கிறார். அழுத்தமான சூழ்நிலையிலும் எளிதாக விளையாடுகிறார். அவர் டெஸ்ட்டில் 40-க்கும் மேற்பட்ட சதங்களை விளாச போகிறார். மேலும் பல சாதனைகளை படைக்க உள்ளார்.
இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.
- ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
- அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்.
பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய லலித் மோடி, ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லலித் மோடி, ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டார் என்பதால் ஆன்ட்ரூ ப்ளின்டாஃப்-ஐ மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறின. அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அதை செய்தோம். அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். ஸ்ரீனிவாசனுக்கு பிளின்டாஃப் வேண்டும் என்பதால், நாங்கள் மற்றவர்களிடம் அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அவருக்கு ஐபிஎல் பிடிக்காது அவர் இது தோல்வியை தழுவும் என்று நினைத்தார்."
"அவர் அம்பயர்களை மாற்றத் தொடங்கினார். சிஎஸ்கே போட்டிகளின் போது அவர் சிஎஸ்கே அம்பயர்களை நியமித்தார். அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. அது நேரடியாக பிக்சிங் செய்வதை போன்றதாகும். அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார்," என்று தெரிவித்தார்.






