என் மலர்
விளையாட்டு
- இந்த தொடரின் 12-வது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
- குகேஷின் 7-வது டிராவாக இது அமைந்தது.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்திரில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 12-வது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் உலக சாம்பியன் சென்னை கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்ளளூரை சேர்ந்த ஜோர்டான் வான் பாரஸ்டை எதிர்கொண்டார். நீண்ட நேரம் நீடித்த நிலையில், இந்த ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தது. இந்த தொடரில் குகேஷின் 7-வது டிராவாக இது அமைந்தது.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா செர்பியாவை சேர்ந்த அலெக்சியை 29-வது காய் நகர்தலுக்கு பிறகு தோற்கடித்தார். இது அவரது 5-வது வெற்றியாக அமைந்தது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பிரக்ஞானந்தா முன்னேற்றம் அடைந்துள்ளார்.
12 சுற்றுகளின் முடிவில், பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகிய இருவரும் தலா 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். இன்று நடைபெறும் 13-வது மற்றும் இறுதி சுற்று போட்டி சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த வைஷாலி, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் தோற்றனர். வைஷாலி 5 புள்ளியுடன் 11-வது இடத்திலும், திவ்யா தேஷ்முக் 3 புள்ளியுடன் 13-வது இடத்திலும் உள்ளனர்.
- அதிக ரன்கள் எடுத்ததற்காக மந்தனாவும் விருது பெற்றார்.
- இரு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ.-இன் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஆண்கள் பிரிவில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (ஆண்கள்) பாலி உம்ரிகர் விருதை ஜஸ்பிரித் பும்ராவும், பெண்கள் பிரிவில் ஸ்மிருதி மந்தனாவும் வென்றனர். 2023-24 காலக்கட்டத்தில் பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்ததற்காக மந்தனாவும் விருது பெற்றார்.
இந்தியாவின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே. நாயுடு நினைவாக 1994-இல் நிறுவப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற 31வது வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது 16 வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
இவரது 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகள் விளையாட்டு வரலாற்றில் எந்தவொரு வீரருக்கும் அதிகபட்சமாகும். அதே போல் இருவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவரது ரன்கள்: டெஸ்ட் போட்டிகளில் 15,921 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 18,426 ஆகும்.
இவர் மட்டுமின்றி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஷ்வினக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த சர்வதேச அறிமுகம் (ஆண்கள்) பிரிவில் சர்பராஸ் கானுக்கும் பெண்கள் பிரிவில் ஆஷா ஷோபனாவுக்கும் விருது வழங்கப்பட்டது.
கடந்த 2023-24 ஆண்டு அதிக விக்கெட் எடுத்த தீப்தி சர்மாவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- இந்தியா மீண்டும் பட்டம் வெல்லுமா?
- இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கோலாலம்பூர்:
2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.
இதில் கோலாலம்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை (பகல் 12 மணி) சந்திக்கிறது.
நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ், மலேசியா, இலங்கையையும், சூப்பர் 6 சுற்றில் வங்காளதேசம், ஸ்காட்லாந்தையும் பந்தாடிய இந்திய அணி அரை இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை விரட்டியடித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணியில் பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள கோங்காடி திரிஷா (265 ரன்), கமலினி (135) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் அதிக விக்கெட் வீழ்த்தி முறையே முதல் 2 இடம் வகிக்கும் வைஷ்ணவி ஷர்மா (15 விக்கெட்), ஆயுஷி சுக்லா (12), பருனிகா சிசோடியா, ஜோஷிதா, ஷப்னம் ஷகீல் கலக்குகிறார்கள்.
கைலா ரெனேக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் நியூசிலாந்து, சமோவ், நைஜீரியாவை தொடர்ச்சியாக வீழ்த்தியது. சூப்பர்6 சுற்றில் அயர்லாந்தை வென்றது.
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ஜெம்மா போத்தா, சிமோன் லாரன்ஸ்சும், பந்து வீச்சில் கைலா ரெனேக், மோனலிசா லிகோடி, ஆஷ்லே வான் விக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ள தனது முழு திறனையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணி முதல்முறையாக மகுடம் சூட மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் வலுவான இந்திய அணியே மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
- இந்தியா இங்கிலாந்து அணிகள் டி20 தொடரில் விளையாடுகின்றன.
- இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மேலும், 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டியில் 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறிய இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே அரைசதம் அடித்து அசத்தினர். மேலும், ரிங்கு சிங், அபிஷேக் ஷர்மாவின் கணிசமான பங்களிப்பால் இந்திய அணி சவாலான ஸ்கோரை (181) எட்டியது.
பந்து வீச்சில் சிவம் துபேவுக்கு பதிலாக மாற்று வீரராக வந்த ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் தலா மூன்று விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்று விட்ட நிலையில், கடைசி போட்டியிலும் தனது ஆதிக்கத்தை நீட்டிக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
- ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி பிசிசிஐ கவுரவித்து வருகிறது.
- உள்ளூர் தொடர்கள் மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டருக்கு லாலா அமர்நாத் விருது வழங்கப்படுகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான லாலா அமர்நாத் விருது ஷசாங்க் சிங் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
உள்ளூர் தொடர்கள் மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டருக்கு லாலா அமர்நாத் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி உள்நாட்டு தொடர்களில் விளையாடிய சிறந்த ஆல் ரவுண்டருக்கான 'லாலா அமர்நாத் விருது' ஷசாங்க் சிங்கிற்கும், ரஞ்சி கோப்பையின் சிற்ந்த ஆல் ரவுண்டருக்கான 'லாலா அமர்நாத் விருது' தனுஷ் கோட்டியானுக்கும் வழங்கப்படுகிறது.
- முதல் 4 போட்டிகள் முடிவில் 3-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.
- இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நடக்கிறது.
இங்கிலாந்து அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்றிரவு நடந்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நாளை இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதற்காக இரு அணி வீரர்களும் மும்பை சென்றனர். இதில் இங்கிலாந்து வீரர்கள் ஜேமி ஓவர்டன், ஹாரிப்ரூக், பென்டக்கெட் மற்றும் இன்னும் இருவர் மும்பையின் ஓவல் மைதானம் வழியாக தங்கள் சர்ச்கேட் ஹோட்டலுக்கு நடந்து சென்றனர்.
அப்போது இங்கிலாந்து அணியினரில் ஒருவரான பென் டக்கெட் அங்கு ரசிகருடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடினார். ரசிகர் பந்து இல்லாமலே சைகை மூலம் பந்து வீசினார். அதனை பேட் இல்லாமல் டக்கெட் சைகை மூலம் பேட்டிங் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பெங்கால் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த சஹா பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இன்று ஆடினார்.
- சஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கொல்கத்தா:
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக 40 டெஸ்ட் போட்டிகளில் விருத்திமான் சஹா விளையாடி உள்ளார். அவர் இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். பெங்கால் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த அவர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இன்று ஆடினார்.
இந்த தொடருக்கு முன்னதாகவே அவர் தனது ஓய்வு முடிவை வெளியிட்டு இருந்தார். அதன் படி பெங்கால் அணியில் இடம் பெற்று தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் ஆடிய அவர் 28 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வுக்கு விடை கொடுத்தார்.
விருத்திமான் சஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 56 இன்னிங்ஸ்களில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 3 சதம் மற்றும் 6 அரை சதங்களை அடித்துள்ளார். விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் 92 கேட்சுகளையும், 12 ஸ்டம்பிங்குகளையும் செய்து உள்ளார்.
ஓய்வை பெற்ற நிலையில் இந்திய அணி, பெங்கால் கிரிக்கெட் அணி மற்றும் திரிபுரா கிரிக்கெட் அணி ஆகிய மூன்று அணிகளுக்கும், அதன் கிரிக்கெட் அமைப்புகளுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
மேலும், விருத்திமான் சஹா. ஐபிஎல் தொடரில் ஐந்து அணிகளில் இடம் பெற்று ஆடி இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என தான் இடம் பெற்று இருந்த ஐந்து அணிகளுக்கும் நன்றிகளை கூறி இருக்கிறார்.
தனது பயிற்சியாளர்கள், நண்பர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று இருக்கிறார் விரித்திமான் சாஹா.
- இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் பாண்ட்யா 53 ரன்கள் குவித்தார்.
- டி20 கிரிக்கெட்டின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த தோனி, விராட் கோலியின் சாதனையை பாண்ட்யா முறியடித்துள்ளார்.
புனே:
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிவம் துபே 34 பந்தில் 53 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ரிங்கு சிங் 26 பந்தில் 30 ரன்னும் ( 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சகீப் மக்மூத் 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால்15 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக் கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டியின் டெத் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட்டின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த தோனி, விராட் கோலியின் சாதனையை பாண்ட்யா முறியடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் விவரம்:-
ஹர்திக் பாண்ட்யா 1068 ரன்கள் (64 போட்டிகள்)
விராட் கோலி 1032 ரன்கள் (46 போட்டிகள்)
என் எஸ் தோனி 1014 ரன்கள் (68 போட்டிகள்)
சூர்யகுமார் யாதவ் 556 ரன்கள் (24 போட்டிகள்)
சுரேஷ் ரெய்னா 487 ரன்கள் (30 போட்டிகள்)
- ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் ஆஸ்திரேலியா வென்றது.
- ஒரே ஒரு டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா வென்று அசத்தியது.
மெல்போர்ன்:
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 51 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, அன்னாபெல் சதர்லேண்ட் 163, பெத் மூனி 106 ஆகியோர் உதவியுடன் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 440 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 148 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரை 7-0 என முழுவதுமாக வென்று ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் 3 ஒருநாள், டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட்டில் இரு அணிகளும் விளையாடினர். இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் ஒரே ஒரு டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா வென்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
2013-ம் ஆண்டு இரு மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 வடிவிலான ஆஷஸ் தொடர் அறிமுகமானது. அதில் இருந்து இரு அணியும் அதிக புள்ளிகளில் வெற்றியை பதிவு செய்ததில்லை. அந்த வகையில் ஆஸ்திரேலியா 16-0 என்ற புள்ளிகளுடன் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.
மகளிர் ஆஷஸ் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 இடம்பெறாவிட்டாலும் கூட, ஆஸ்திரேலியாவோ அல்லது இங்கிலாந்தோ மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் க்ளீன் ஸ்வீப் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது.
- இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.
புதுடெல்லி:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் முதல் சுற்றில் 6-2, 6-1 என வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6-0, 6-2 என வென்றார்.
இதன்மூலம் டோகோ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- இலங்கை 2-வது இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன், குனமன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
காலே:
இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கவாஜா 232 ரன்களும், ஸ்டீவ் சுமித் 141 ரன்களும், அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஸ் 102 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், மேத்யூ குனேமேன் மற்றும் லயன் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 42 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வெகு நேரமாகியும் மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சண்டிமால் 63 ரன்களுடனும், குசல் மெண்டிஸ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. சண்டிமால் 72 ரன்களும், குசல் மெண்டிஸ் 21 ரன்களும் எடுத்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 165 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் குனமன் 5, லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த நிலையில், 489 ரன்கள் பின்தங்கியதால் இலங்கை அணிக்கு ஆஸ்திரேலியா பாலோ ஆன் வழங்கியது. இதனால் மீண்டும் 2-வது இன்னிங்சில் இலங்கை அணி களமிறங்கியது.
6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. இதனையடுத்து தினேஷ் சண்டிமால் -மேத்யூஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். சண்டிமால் 31 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 32, மேத்யூஸ் 41, தனஞ்செயா 39, குசல் மெண்டிஸ் 34, பிரதாப் ஜெயசூர்யா 1, நிசான் 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய ஜெஃப்ரி வேண்டர்சே அரை சதம் விளாசி அவுட் ஆனார்.
இறுதியில் இலங்கை அணி 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜெஃப்ரி வேண்டர்சே 51 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன், குனமன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6-ந் தேதி தொடங்குகிறது.
- ஹர்ஷித் ராணா 3-வது வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் வந்து பந்து வீசினார்.
- அவருடைய பந்து வீச்சு நம்பமுடியாத வகையில் பிரமிக்க வைத்தது.
புனே:
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது.
ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிவம் துபே 34 பந்தில் 53 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ரிங்கு சிங் 26 பந்தில் 30 ரன்னும் ( 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சகீப் மக்மூத் 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால்15 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஹாரி புரூக் அதிக பட்சமாக 26 பந்தில் 51 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), பென் டக்கெட் 19 பந்தில் 39 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி மூலம் இந்தியா டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக் கில் கைப்பற்றியது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது மிகவும் மோசமானது. ஆனால் வீரர்கள் நம்பிக்கையுடன் அணியை சரிவில் இருந்து மீட்டார்கள். ஷிவம் துபேவும், ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து தங்களுடைய அனுபவத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் சரியான திசையை நோக்கி செல்கின்றோம். பவர் பிளேவுக்கு பிறகு 7 முதல் 10 ஓவரில் ஆட்டத்தை எங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்று நினைத்தேன்.
எங்கள் அணி வீரர்கள் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதே போன்று ஹர்ஷித் ராணா 3-வது வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் வந்து பந்து வீசினார். அவருடைய பந்து வீச்சு நம்பமுடியாத வகையில் பிரமிக்க வைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மேலும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.






