என் மலர்
விளையாட்டு
- டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் களமிறங்க வேண்டாம் என்று அணிக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பைத் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் களமிறங்க வேண்டாம் என்று அணிக்கு உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வங்கதேச அணி, தங்களின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றக் கோரியது. ஆனால், ஐசிசி இந்த கோரிக்கையை நிராகரித்ததால், வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஐசிசியின் இந்த இரட்டை நிலைப்பாட்டைக் கண்டிக்கும் விதமாகவே பாகிஸ்தான் இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவு குறித்துப் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்துள்ளார்.
அவர் தனது பதிவில், இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் சந்திக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அப்படி ஒரு சூழல் அமைந்தால், உலகக்கோப்பை இறுதிப் போட்டியையும் பாகிஸ்தான் புறக்கணிக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பீட்டர்சனின் இந்தக் கேள்வி, பாகிஸ்தானின் முடிவில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டுவதோடு, கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
லாகூர்:
இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.
இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது.
அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த புறக்கணிப்பு முடிவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சல்மான் அலி அகாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆம், நிச்சயமாக நாங்கள் இலங்கைக்கு செல்வோம். ஆனால் இது எங்கள் முடிவு அல்ல. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
அரசு மற்றும் பிசிபி தலைவர் என்ன கட்டளையிடுகிறார்களோ, அதைத்தான் பின்பற்ற வேண்டும். அதன்பிறகே செல்வோம், அதைச் செய்வோம்," என்று தெரிவித்தார்.
- டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
- கம்மின்ஸ் காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இதனிடையே டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த கம்மின்ஸ் காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மேலும், மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகினார். இதனால் மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் டி20 உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.
- இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.
முன்னதாக ஒருநாள் தொடரின் போது நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட இந்திய ஜெர்சியை அவருக்கு வழங்கினார்.
இந்நிலையில் நான் வியந்து பார்க்கும் ஒருவராக விராட் கோலி இருப்பார் என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலியின் கையொப்பமிட்ட ஜெர்சி நிச்சயமாக எனது அலுவலகத்தில் சட்டமிட்டு வைக்கப்படும். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அவர் ஒவ்வொரு நாளும் விளையாடும் விதத்திற்காக விராட் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கடந்த பல ஆண்டுகளாக நான் வியந்து பார்க்கும் ஒருவராக அவர் நிச்சயமாக இருக்கிறார் என அவர் கூறினார்.
- நீங்கள் முன்னதாகவே விலகினால் அது முற்றிலும் வேறுபட்டது.
- இதில் பல்வேறு நாட்டு வாரியங்களும் சம்பந்தப்பட்டுள்ளன, எனவே இது ஒரு தனிநபரின் முடிவாக மட்டும் இருக்காது.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடைசி நேரத்தில் நீங்கள் (பாகிஸ்தான்) விலகினால், அது ஒரு பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் முன்னதாகவே விலகினால் அது முற்றிலும் வேறுபட்டது.
போட்டியின் கடைசி நேரத்தில் விலகினால், நிச்சயமாக ஐ.சி.சி. தலையிட்டு சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இதில் பல்வேறு நாட்டு வாரியங்களும் சம்பந்தப்பட்டுள்ளன, எனவே இது ஒரு தனிநபரின் முடிவாக மட்டும் இருக்காது.
ஐ.சி.சி. எடுக்கும் நடவடிக்கை எதிர்காலத்தில் வேறு எந்த அணியும் இதுபோன்று செய்யத் துணியாத வகையில் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் புறக்கணிப்பது வாடிக்கையாகி விடும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- இந்தியா - –பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி அறிவித்தது.
- பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் எடுத்துள்ளது.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்ததற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் அறிவுறுத்தலின் பேரில், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா - –பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. இருப்பினும், தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த முடிவு உலக கிரிக்கெட்டின் நேர்மை, போட்டித் தன்மையை பாதிக்கும் என்றும், நீண்டகாலத்தில் விளையாட்டிற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும். இந்த முடிவு தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (PCB) இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை," என்று தெரிவித்துள்ளது.

மேலும், "2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவலை ஐசிசி எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால், உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் அனைத்து தகுதி பெற்ற அணிகளும் அட்டவணைப்படி சமமாக போட்டியிட வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன், இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு பொருந்தாததாக உள்ளது."
"ஐசிசி போட்டிகள் நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைந்தவை. தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, இந்த போட்டிகளின் புனிதத்தையும் பாதிக்கிறது. தேசிய கொள்கை விவகாரங்களில் அரசுகளின் பங்கை ஐசிசி மதிக்கிறது. ஆனால், இந்த முடிவு உலக கிரிக்கெட்டுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் நலனுக்கும், பாகிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் சாதகமானதல்ல."

"இந்த முடிவு, பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட் சூழலுக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, PCB இதனை மீண்டும் பரிசீலிக்கும் என ஐசிசி நம்புகிறது. 2026 டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவது ஐசிசியின் முதன்மை இலக்கு. அதற்காக, PCB உட்பட அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து தரப்பினரின் நலனையும் பாதுகாக்கும் வகையில், பரஸ்பர தீர்வை PCB ஆராய வேண்டும்," என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய அணிகளுடன் 'A' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்த தொடரை இணைந்து (co-host) நடத்துகிறது. பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளன.
பாகிஸ்தான், பிப்ரவரி 7ஆம் தேதி தொடரின் முதல் நாளில் நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவையும், பிப்ரவரி 18ஆம் தேதி நமீபியாவையும் எதிர்கொள்கிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், இரண்டு புள்ளிகளை இழக்கும் நிலை உருவாகும். மேலும், ஐசிசி விளையாட்டு விதிகளின்படி, அந்த போட்டி 'forfeit' ஆக அறிவிக்கப்பட்டால், பாகிஸ்தானின் நெட் ரன் ரேட்டும் பாதிக்கப்படும்.
- அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னரை 5 செட்டுகளில் தோற்கடித்தேன்.
- இறுதிச்சுற்றில் கார்லசுடன் 4 செட் வரை நெருக்கமாக வந்தது சிறப்பானது என்றார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.
இதில் அல்காரஸ் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு ஜோகோவிச்சிடம், உங்களால் இன்னும் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல முடியும் என்று நம்புகிறீர்களா: என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஜோகோவிச், என்னால் முடியும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். இல்லாவிட்டால் நான் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். இதை பலமுறை கூறி விட்டேன்.
அரையிறுதியில் ஜானிக் சின்னரை 5 செட்டுகளில் தோற்கடித்ததும், இறுதிச்சுற்றில் கார்லசுடன் 4 செட் வரை நெருக்கமாக வந்ததும் சிறப்பானது. அற்புதமான தொடக்கத்திற்கு பிறகு 2-வது மற்றும் 3-வது செட்டில் விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது என தெரிவித்தார்.
2023-ம் ஆண்டு அமெரிக்க ஓபனுக்கு பிறகு ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
- காலிறுதி போட்டிகள் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளன.
- அரையிறுதி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறுகின்றன.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றுடன் லீக் போட்டிகள் முடிந்தன.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திராவும், பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசமும், சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தராகண்டும், டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர் ஆகிய அணிகள் முன்னேறின.
முதல் காலிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட்டும், 2வது காலிறுதியில் மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்கால், ஆந்திராவும், 4வது காலிறுதியில் மும்பை, கர்நாடகாவும் மோதுகின்றன.
காலிறுதி போட்டிகள் அனைத்தும் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளன. அரையிறுதி பிப்ரவரி 15ம் தேதியும், இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதியும் நடைபெறுகின்றன.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 189 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து டக் வொர்த் லூயிஸ் முறையில் 173 ரன் எடுத்து வென்றது.
பல்லேகலே:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்
தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது.
பவன் ரத்தினநாயகெ 40 ரன்னும், கமில் மிஸ்ரா 36 ரன்னும், பதும் நிசங்கா 34 ரன்னும், குசால் மெண்டிஸ் 32 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
டக்வொர்த் லெவிஸ் முறைப்படி 17 ஓவரில் 168 ரன்கள் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். சிறப்பாக ஆடிய டாம் பெண்டன் அரை சதம் கடந்து 54 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 34 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், இங்கிலாந்து 16.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வென்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 122 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய டெல்லி அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 20-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. தீப்தி ஷர்மா 24 ரன்னும், ஷிகா பாண்டே 23 ரன்னும், சிம்ரன் ஷேக் 22 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.
லாரா வால்வோர்ட் 47 ரன்னில் அவுட்டானார். ஷபாலி வர்மா 29 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்தது.
- இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்தது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், மலேசியாவின் ஜின் வெய் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 21-8 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 6-3 என முன்னிலை பெற்றிருந்தபோது மலேசியா வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் தேவிகா சிஹாத் முதல் முறையாக தாய்லாந்து மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோருக்கு பிறகு சாம்பியன் பட்டம் வெல்லும் 3வது இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
- U19 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.
கடந்த 23-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளியேற்றப்பட்டன.
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றன.
குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பதற்கான ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 68 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது சய்யாம், அப்துல் சுப்ஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது. ஹம்சா ஜஹூர் 42 ரன்னிலும் உஸ்மான் கான் 66 ரன்னிலும் கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 46.2 ஓவர்கள் முடிவில் 194 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டானது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 8 புள்ளிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.






