என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது.
    • தொழில்முறை ஸ்குவாஷ் சங்க வெண்கல நிலை போட்டி தொடரில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 31-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 12-10, 11-5, 11-7 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ஜார்ஜினா கென்னடிக்கு (இங்கிலாந்து) அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    டெல்லியை சேர்ந்த 17 வயதான அனாஹத் சிங் தொழில்முறை ஸ்குவாஷ் சங்க வெண்கல நிலை போட்டி தொடரில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் 15-வது பட்டமாகும்.

    • உள்ளரங்க குண்டு எறிதலில் 16 மீட்டர் தூரத்துக்கு மேல் எறிந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர்.
    • தமிழக வீராங்கனை கிருஷ்ணா குண்டு எறிதலில் 16.63 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

    சென்னை:

    அமெரிக்காவின் அல்புகெர்க்கி நகரில், நியூ மெக்சிகோ அணி ஓபன் உள்ளரங்க தடகள போட்டி 2 நாட்கள் நடந்தது. இதில் யு.என்.எல்.வி. அணிக்காக பங்கேற்ற தமிழக வீராங்கனை கிருஷ்ணா குண்டு எறிதலில் 16.63 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

    அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். 23 வயதான கிருஷ்ணா உள்ளரங்க குண்டு எறிதலில் 16 மீட்டர் தூரத்துக்கு மேல் எறிந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர்.

    இவர், இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் ஜெயசங்கர் மேனன்- பிரசன்னா தம்பதியின் மகள் ஆவார்.

    • ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போராடி தோற்றார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு ஆட்டங்களில் அரினா சபலென்கா, இகா ஸ்வியாடெக் நீடிக்கிறார்கள்.

    நியூயார்க்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபனை வென்று வரலாறு படைத்த கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதலிடத்திலும், ஜானிக் சினெர் (இத்தாலி) 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

    ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்து போராடி தோற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் டாப்-3 இடத்திற்குள் வருவது 2024-ம் ஆண்டு ஆகஸ்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதனால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் குறைந்து 4-வது இடத்துக்கு இறங்கினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு ஆட்டங்களில் அரினா சபலென்கா (பெலாரஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து) நீடிக்கிறார்கள். ஆஸ்திரேலிய ஓபனில் மகுடம் சூடிய எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 2 இடங்கள் முன்னேறி தனது சிறந்த நிலையாக 3-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் கோகோ காப் 3-ல் இருந்து 5-வது இடத்துக்கு சரிந்தார். ஆஸ்திரேலிய ஓபன் மூலம் கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதியை எட்டிய அமெரிக்க 'இளம் புயல்' இவா ஜோவிச் 7 இடங்கள் உயர்ந்து 20-வது இடத்தை பெற்றுள்ளார்.

    • இந்திய வீரர்கள் குகேஷ் 9-வது இடமும், பிரக்ஞானந்தா 11-வது இடமும் பிடித்தனர்.
    • அரவிந்த் சிதம்பரம் 12-வது இடமும், அர்ஜூன் எரிகைசி 13-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

    விஜ்ன் ஆன் ஜீ:

    டாட்டா ஸ்டீல் 88-வது சர்வதேச செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 13-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தோரோவ், இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசியை எதிர்கொண்டார்.

    கருப்பு நிற காய்களுடன் ஆடிய நோடிர்பெக் 55-வது நகர்த்தலில் அர்ஜூன் எரிகைசியை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தாராவ் 82-வது நகர்த்தலில் செக்குடியரசின் தாய் டாய் வான் நுயெனை சாய்த்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 65-வது நகர்த்தலில் சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசோவ்விடம் வீழ்ந்தார்.

    பிரக்ஞானந்தா (இந்தியா)- ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து), உலகக் சாம்பியன் குகேஷ் (இந்தியா)- வின்சென்ட் கீமர் (ஜெர்மனி) ஆகியோர் இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

    கடைசி சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜவோகிர் சிந்தாராவ் 8½ புள்ளிகளுடன் 2-வது இடமும், ஜோர்டான் வான் பாரஸ்ட் 7½ புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்திய வீரர்கள் குகேஷ் (6½ புள்ளி) 9-வது இடமும், பிரக்ஞானந்தா (5½) 11-வது இடமும், அரவிந்த் சிதம்பரம் (4½) 12-வது இடமும், அர்ஜூன் எரிகைசி (4½) 13-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். தாய் டான் வான் நுயென் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிசுற்றை எட்ட முனைப்பு காட்டும்.
    • அதேநேரத்தில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க குஜராத் தீவிர முனைப்புடன் உள்ளது.

    வதோதரா:

    5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    2-வது இடம் பிடித்த குஜராத் ஜெயன்ட்சும் (5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி), 3-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்சும் (4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளி) இன்று வெளியேற்றுதல் சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    லீக்கில் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்ட குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஆஷ்லி கார்ட்னெர் (244 ரன்), பெத் மூனியும் (196), பந்து வீச்சில் ராஜேஸ்வரி கெய்க்வாட், காஷ்வீ கவுதமும் நல்ல நிலையில் உள்ளனர். சோபி டிவைன் (237 ரன், 17 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார். டெல்லிக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லாரா வோல்வார்ட் (241 ரன்), லிசெல் லீ (240), ஷபாலி வர்மாவும் (208), பந்து வீச்சில் நந்தினி ஷர்மா, ஸ்ரீசரனி (தலா 14 விக்கெட்), மரிஜானே காப்பும் வலுசேர்க்கின்றனர். 8 ஆட்டத்தில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

    மொத்தத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிசுற்றை எட்ட வரிந்து கட்டுகிறது. அதேநேரத்தில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க குஜராத் தீவிர முனைப்புடன் உள்ளது. எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சமீப காலங்களில் ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னால் பணிந்து போன விதத்தை பார்க்கும் போது, யாராவது ஒருத்தர் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
    • உலக கிரிக்கெட்டின் பரந்த நலன்களுக்காக எந்தப் பாதையை எடுக்க விரும்புகிறது என்பதை ஐ.சி.சி இப்போது முடிவு செய்ய வேண்டும்

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அரசு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுக்கிறதோ அதை வீரர்கள் பின்பற்றுவார்கள் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி முடிந்த உடனேயே அணி மேலாளரால் வீரர்களுக்கு இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதாக சல்மான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், "நாங்கள் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள், எங்கள் அரசாங்கமும் வாரியமும் எந்த முடிவை எடுத்தாலும், அனைத்து வீரர்களும் அதற்கு உடன்படுவோம்" என தெரிவித்தார். "எங்களுக்கு இன்னும் மூன்று குழு போட்டிகள் உள்ளன, எனவே அவை அனைத்தையும் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முயற்சிப்போம்," என்றும் தெரிவித்தார்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிக்கும் முடிவுக்கு ஷாஹித் அப்ரிடி, முகமது யூசுப் மற்றும் ரஷீத் லத்தீப் போன்ற முன்னாள் கேப்டன்களும், மொயின் கான், சர்பராஸ் அகமது மற்றும் மொஹ்சின் கான் போன்ற முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    'சமீப காலங்களில் ஐசிசி வங்கதேசத்திற்கு செய்த காரியங்கள் அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னால் அவர்கள் பணிந்து போன விதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, யாராவது ஒருத்தர் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று லத்தீப் கூறியுள்ளார்.

    அரசியலை விளையாட்டோடு கலப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லாததால், பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாடாதது ஏமாற்றமளித்ததாகவும், ஆனால் அந்த முடிவுக்கான காரணங்களை தான் புரிந்துகொண்டதாகவும் அஃப்ரிடி கூறியுள்ளார்.  உலக கிரிக்கெட்டின் பரந்த நலன்களுக்காக எந்தப் பாதையை எடுக்க விரும்புகிறது என்பதை ஐ.சி.சி இப்போது முடிவு செய்ய வேண்டும் என்று மொயின் கூறினார்.

    முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்துள்ளது பாகிஸ்தான்.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி கடும் அபராதம் விதிக்கும் என எதிர்பார்ப்பு.

    இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. போட்டியை புறக்கணிப்போம் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முடிவு குறித்து ஷாஹித் அப்ரிடி கூறியதாவது:-

    அரசியல் அதன் கதவை மூடும்போது, கிரிக்கெட் கதவு திறக்கப்படும் என்று நான் எப்போதுமே நம்புவேன். இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடாது என்பது வருந்ததக்கது. ஆனால், என்னுடைய அரசின் முடிவின் பின்னால் நான் நிற்கிறேன்.

    இது ஐசிசி-க்கு அறிக்கை மூலம் அல்லாமல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாரபட்சம் இல்லாமல், சுதந்திரமான நியாயமான முடிவுகள் எடுப்பதை நிரூபனம் செய்யக்கூடிய நிலை.

    இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    • KKR அணியில் இருந்து முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார்.
    • இதனால் வங்கதேச அணி இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்தது.

    வங்கதேசத்தில இந்து நபர்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழும்பியது. மேலும், வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படும்போது, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் விளையாடுவதா? எனவும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா அணி அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், கொல்கத்தா அணியிடம் முஸ்தாபிஜுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

    அதனடிப்படையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் அதிருப்தியடைந்தது. வருகிற 7-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் எனவும், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

    வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்தது. அதனடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக லீக் தொடர் போட்டியை புறக்கணிக்கிறோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுத்துள்ளது.

    இந்த நிலையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விவகாரத்தை பிசிசிஐ இன்னும் தந்திரமாக கையாண்டிருந்தால் டி20 உலகக் கோப்பையில் புறக்கணிப்பு குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என ஐசிசி முன்னாள் தகவல் தொடர்பு தலைவர் சமி-அல்-ஹசன் பர்னி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பர்னி கூறியதாவது:-

    நான் சொல்ல வருவது என்னவென்றால், கிரிக்கெட் நிர்வாகிகள் அல்லது போட்டிக்கான பொறுப்பாளர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, முஸ்தாபிஜுர் ரகுமானை கே.கே.ஆர். அணியில் இருந்து வெளியிடுவது போன்ற பொதுவெளி அறிக்கையை தவிர்த்திருந்தால், இதுபோன்ற குழப்பமான விசயங்களை தவிர்த்திருக்கலாம்.

    அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிடத் தேவையில்லை. அவர்கள் தனிப்பட்ட முறையில் கே.கே.ஆர் அணியிடம் வீரரை ரிலீஸ் செய்ய சொல்லியிருக்கலாம். அப்படி இருந்திருந்தால் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்காது. சுமூகமாக சென்றிருக்கும்.

    சில சமயங்களில் நீங்கள் தீர்ப்பில் தவறு செய்து, சில விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அறிக்கையை வெளியிட்டுவிடுகிறீர்கள். எனவே, ஜனவரி 3 ஆம் தேதி அறிவிப்பு ஒரு தூண்டுதலாக அமைந்தது.

    இவ்வாறு பர்னி தெரிவித்துள்ளார்.

    ஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட போர்டின் மீடியா டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார்.

    • 18-வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
    • அந்த அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் முதல் அணியாக ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து 2-வது இடத்தில் குஜராத் அணியும் 3-வது இடத்தில் டெல்லியும் அணியும் இடம் பிடித்தது.

    இதனையடுத்து இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதும் அணி யார் என்பது நாளை தெரியும். எலிமினேட்டர் சுற்றில் குஜராத்- டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 5-ந் தேதி ஆர்சிபி அணியுடன் மோதும்.

    முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி அணி 2-வது முறையாக பட்டம் வெல்ல ஆவலுடன் உள்ளது. 3 சீசன்களில் ஆர்சிபி அணி ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

    ஆனால் ஆடவர் ஆர்சிபி அணி 18 சீசனில் தனது முதல் பட்டத்தை வென்றது அற்புதமான உணர்வு என மகளிர் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    18-வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன். நான் இறுதிப் போட்டியில் அங்கிருந்தேன். அனைவரும் கொண்டாடியதைப் பார்ப்பது அற்புதமாக இருந்தது.

    எனக்கு ஆர்சிபி நிர்வாகத்தினரை நன்றாகத் தெரியும். அவர்களின் கண்களில் கண்ணீரைக் கண்டேன். பதினெட்டு ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காத்திருப்பு. ஆனால் அது என் கண் முன்னே நடந்ததைப் பார்ப்பது ஒரு அற்புதமான உணர்வு. அந்த அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என மந்தனா கூறினார்.

    • டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்.
    • ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.

    வங்கதேசத்திற்கு ஆதரவாக டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எச்சரித்துள்ளது.

    அவ்வாறு செய்யாவிட்டால் பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மொத்தமாக தடை விதிக்கவும் பாகிஸ்தானின் அணியின் நிதி ஆதாரங்களை முடக்கவும் ஐ.சி.சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.

    இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

    இலங்கையில் வரும் 15-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டியில் விளையாடப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி விதிக்கும் தண்டனைகள் குறித்தோ, ஏற்படும் நஷ்டம் குறித்தோ கவலைப்படவில்லை.

    2026 டி20 உலகக்கோப்பை தொடரில் வரும் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியில் விளையாடப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த முடிவு ஒரு போட்டியோடு நின்றுவிடாது என்றும், எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளைப் பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது அதிர்ச்சியான முடிவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இது புதிதல்ல. கடந்த காலத்திலேயே நாங்கள் இதைச் செய்திருக்க முடியும். ஆனால் அப்போது செய்யவில்லை. இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி விதிக்கும் தண்டனைகள் குறித்தோ, ஏற்படும் நஷ்டம் குறித்தோ கவலைப்படவில்லை. இந்த விவகாரம் பிப்ரவரி 15 போட்டியோடு நிற்கும் என்று நான் கருதவில்லை. எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளைப் பாகிஸ்தான் புறக்கணிக்கவே செய்யும்.

    இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதற்காக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் ஐசிசி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மிகப்பெரிய ஒப்பந்தம் செய்துள்ளது. போட்டிகள் நடக்காவிட்டால் ஒளிபரப்பு நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

    உண்மையான முதலீட்டாளர்கள் இதற்கான தீர்வைக் காண்பார்கள். அது நடக்கவில்லை என்றால் உலக கிரிக்கெட்டிற்கு அது பேரழிவாக அமையும். எங்கள் நாட்டில் இது போன்ற முடிவுகளைத் திரும்பப் பெறுவது சகஜம் தான். அரசுகளால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். 24 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்.

    என்று ரஷித் லத்தீப் கூறினார்.

    • முதல் ஆட்டத்தில் கணேஷ் NT, மகிபால் சிங்கை (182–143) 39 பின்கள் வித்தியாசத்தில் முந்தினார்.
    • இரண்டாவது ஆட்டத்தில் மகிபால் சிங் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி (164–170) தோல்வியடைந்தார்.

    சென்னையின் துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பௌல் (LetsBowl) அரங்கில் நேற்று, 31 ஜனவரி 2026 அன்று நிறைவடைந்த 10வது தமிழ்நாடு மாநில டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கணேஷ் NT, மகிபால் சிங் அவர்களை (352–307) என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    இரண்டு ஆட்டங்களின் மொத்த பின்ஃபால் அடிப்படையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், முதல் ஆட்டத்தில் கணேஷ் NT, மகிபால் சிங்கை (182–143) 39 பின்கள் வித்தியாசத்தில் முந்தினார்.

    இரண்டாவது ஆட்டத்தில் மகிபால் சிங் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி (164–170) தோல்வியடைந்தார். இதன் மூலம் கணேஷ் NT இறுதியாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    முன்னதாக, முதல் ஸ்டெப்-லாடர் போட்டியில் தரவரிசை 3-ல் இருந்த யூசுப் ஷப்பீர், ஆனந்த் பாபு அவர்களை (328–317) தோற்கடித்து இரண்டாவது ஸ்டெப்-லாடர் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

    இரண்டாவது ஸ்டெப்-லாடர் போட்டியில் தரவரிசை 2-ல் இருந்த கணேஷ் NT, யூசுப் ஷப்பீர் அவர்களை (414–370) என்ற கணக்கில் தோற்கடித்தார்.

    ரௌண்டு 3 முடிவில், மகிபால் சிங் மொத்த பின்ஃபால் 6163 மற்றும் சராசரி 192.59 உடன் அட்டவணையின் முதலிடத்தில் முடித்தார். அவரைத் தொடர்ந்து கணேஷ் NT (பின்ஃபால் – 6064, சராசரி – 189.50) இடம் பெற்றார்.

    தகுதிச்சுற்றுகள் 28 பவுலர்கள் பங்கேற்புடன், இரட்டை ஆயில் பேட்டர்ன் சூழ்நிலையில் 3 நாட்கள் நடைபெற்றன.

    இந்த நிகழ்ச்சியில் Renaissance Events and Experiences Pvt Ltd நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (MD) திரு உமேஷ் ஜே. குமார் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    சிறப்பு பரிசுகள்:

    * 32 ஆட்டங்களில் அதிகபட்ச சராசரி:

    மகிபால் சிங் (பின்ஃபால் – 6163, சராசரி – 192.59)

    * 225க்கும் மேற்பட்ட ஸ்கோர்களின் அதிகபட்ச எண்ணிக்கை:

    மகிபால் சிங் (5)

    ×