என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்கும்- முன்னாள் பாகிஸ்தான் வீரர்
- 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டியில் விளையாடப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி விதிக்கும் தண்டனைகள் குறித்தோ, ஏற்படும் நஷ்டம் குறித்தோ கவலைப்படவில்லை.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் வரும் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியில் விளையாடப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த முடிவு ஒரு போட்டியோடு நின்றுவிடாது என்றும், எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளைப் பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது அதிர்ச்சியான முடிவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இது புதிதல்ல. கடந்த காலத்திலேயே நாங்கள் இதைச் செய்திருக்க முடியும். ஆனால் அப்போது செய்யவில்லை. இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி விதிக்கும் தண்டனைகள் குறித்தோ, ஏற்படும் நஷ்டம் குறித்தோ கவலைப்படவில்லை. இந்த விவகாரம் பிப்ரவரி 15 போட்டியோடு நிற்கும் என்று நான் கருதவில்லை. எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளைப் பாகிஸ்தான் புறக்கணிக்கவே செய்யும்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதற்காக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் ஐசிசி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மிகப்பெரிய ஒப்பந்தம் செய்துள்ளது. போட்டிகள் நடக்காவிட்டால் ஒளிபரப்பு நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.
உண்மையான முதலீட்டாளர்கள் இதற்கான தீர்வைக் காண்பார்கள். அது நடக்கவில்லை என்றால் உலக கிரிக்கெட்டிற்கு அது பேரழிவாக அமையும். எங்கள் நாட்டில் இது போன்ற முடிவுகளைத் திரும்பப் பெறுவது சகஜம் தான். அரசுகளால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். 24 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்.
என்று ரஷித் லத்தீப் கூறினார்.






