என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பெங்களூருவில் நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி அடுத்த மாதம் (மே) 24 -ந்தேதி நடக்கிறது.
    • இதில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்தார்.

    லாகூர்:

    ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் அடுத்த மாதம் (மே) 24 -ந்தேதி நடக்கிறது.

    2 முறை உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ்ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    இதில் பங்கேற்க 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்தார்.

    இந்த நிலையில் நீரஜ் சோப்ராவின் இந்த அழைப்பை நதீம் நிராகரித்தார். கொரியாவில் மே 22-ந்தேதி நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ப இருப்பதால் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • 28-வது தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நடந்து வருகிறது.
    • பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 56.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தார்.

    கொச்சி:

    28-வது தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 56.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    அத்துடன் அவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி இலக்கையும் (57.80 வினாடி) எட்டினார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு பாட்டியாலாவில் நடந்த போட்டியில் குஜராத்தின் சரிதாபென் கெய்க்வாட் 57.21 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

    கேரளாவின் அனு (58.26 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை அஸ்வினி (1 நிமிடம் 02.41 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். முந்தைய நாளில் நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் வித்யா வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • 3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் காத்திருக்கிறது.
    • சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது ஆட்டமாகும்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியின் 43-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்) , ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்) , பஞ்சாப் ( 18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றது. தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை ( 5 விக்கெட்) வீழ்த்தியது. 8-வது போட்டியில் மும்பையிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

    சி.எஸ்.கே. அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் மற்ற அணிகளின் நிலையை பொறுத்துதான் பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது.

    நாளைய ஆட்டத்தில் ஐதராபாத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. 3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் காத்திருக்கிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது ஆட்டமாகும். இங்கு முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 3 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. சேப்பாக்கத்தில் சி.எஸ். கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போன்று அதே நிலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இருக்கிறது.

    2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. சென்னையை விட ரன் ரேட்டில் முன்னிலையில் காணப்படுகிறது.

    இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள்.

    • பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
    • ரியான் பராக் மீண்டும் அணியை வழிநடத்துகிறார்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி வெளியூரில் நடந்த 5 ஆட்டங்களிலும் (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக) வெற்றியையும், சொந்த மைதானத்தில் நடந்த 3 ஆட்டங்களிலும் (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) தோல்வியையும் சந்தித்துள்ளது. சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆடிய 3 ஆட்டங்களில் முறையே 169, 163, 95 ரன்களே (மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டம்) எடுத்துள்ளது. வெளியூரில் ஒரு ஓவரில் 9-10 ரன் சேர்க்கும் அந்த அணி சொந்த மைதானத்தில் 7-8 ரன்னை தாண்ட முடியாமல் பரிதவிக்கிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (322 ரன்) நல்ல நிலையில் இருக்கிறார். கேப்டன் ரஜத் படிதார் (221), பில் சால்ட் (213), தேவ்தத் படிக்கல் (180) இன்னும் அதிக ரன் எடுக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி இந்த சீசனில் வெகுவாக தடுமாறுகிறது. 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக), 6 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு, டெல்லி, லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது. முதல் இரு ஆட்டங்களிலும், முந்தைய 4 ஆட்டங்களிலும் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது.

    எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பதால் ராஜஸ்தானுக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.

    வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தை தவறவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார். இதனால் ரியான் பராக் மீண்டும் அணியை வழிநடத்துகிறார். ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (307 ரன்), ரியான் பராக் (212), துருவ் ஜூரெல், ஹெட்மயர், நிதிஷ் ராணா நம்பிக்கை அளிக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் அறிமுகமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அதிரடிகாட்டி 34 ரன்கள் எடுத்து கவனத்தை ஈர்த்தார். அந்த அணியின் பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கமில்லை. ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா ஓரளவு நன்றாக பந்து வீசுகிறார்கள்.

    உள்ளூரில் முதல் வெற்றியை பதிவு செய்ய பெங்களூரு அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் பெங்களூருக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ராஜஸ்தான் அதற்கு பதிலடி கொடுக்க தீவிரமாக முயற்சிக்கும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டத்தில் பெங்களூருவும், 14 ஆட்டத்தில் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில் வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா அல்லது ஆகாஷ் மத்வால்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிராவின் புனேயில் நடந்தது.
    • இந்தியாவின் கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    மும்பை:

    பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்து வந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று போட்டி நேற்று நடந்தது.

    வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, 84-வது நகர்த்தலில் நுர்குல் சலிமோவாவை (பல்கேரியா) தோற்கடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர்.

    ஒரு தோல்வியும் சந்திக்காத ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான கோனேரு ஹம்பி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைச் சொந்தமாக்கினார்.

    சீனாவின் ஜூ ஜினெரும் 7 புள்ளிகளுடன் அவருடன் சமநிலையில் இருந்தார். ஆனால் போட்டி விதிப்படி கருப்பு நிற காயுடன் (5 முறை) விளையாடுகையில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஹம்பி மகுடம் சூடினார். ஜினெர் 2-வது இடம் பெற்றார்.

    இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 5½ புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். தமிழகத்தின் வைஷாலி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வென்றது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

    நாங்கள் 5 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்துவிட்டோம். அதன்பிறகு கிளாசனும், அபினவும் அபாரமாக விளையாடி ஒரு கவுரவமான இலக்கை எட்ட உதவினார்கள்.

    இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு அணியை சரிவிலிருந்து மீட்க வழியை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி எங்களுக்கு நடக்கவில்லை. தொடர்ந்து சரிவிலே நாங்கள் சென்று விட்டோம்.

    முதல் போட்டியில் நாங்கள் 280 ரன்களுக்கு மேல் அடித்தோம். ஆனால் அதன்பிறகு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறோம். இது மிகப்பெரிய சரிவு. ஆனால் டி20 போட்டி என்பது இப்படித்தான் இருக்கும்.

    எங்கே தவறு நடக்கிறது என்று உங்களால் சொல்லமுடியாது. இந்த சீசன் எங்களுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. தற்போது எங்களுக்கு சில வெளியூரில் நடைபெறும் போட்டிகள் இருக்கிறது. அங்கு செல்லும்போது ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்து, அதன்பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும்.

    சில நாள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆடும் நிலைக்கு தள்ளப்படலாம். சில நாள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.

    • ரோகித் சர்மா 456 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • இவர் டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களைக் கடந்த 8-வது வீரரானார்.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    இதுவரை 456 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 12,000 ரன்களைக் கடந்த 8-வது வீரராக உள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிஸ் கெயில் 463 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

    இந்திய வீரர்களின் வரிசையில் விராட் கோலி 407 போட்டிகளில் விளையாடி 13,208 ரன்கள் குவித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.

    ஐதராபாத்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் அவுட்டானார்.

    மும்பை அணியின் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விக்கு பிறகு எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி தொடர்ந்து 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    கடந்த வாரம் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் மும்பை அணி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் எம்மா ராடுகானு, நெதர்லாந்தின் சூசன் லாமென்ஸ் உடன் மோதினார்.

    இதில் எம்மா டாடுகானு 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் ஜென்யுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சனரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி டிரண்ட் போல்டின் துல்லிய பந்து வீச்சில் சிக்கியது. இதனால் முன்னணி வீரர்கள்

    விரைவில் அவுட்டாகினர்.

    ஹெட் 0, இஷான் கிஷன் 1, அபிஷேக் சர்மா 8, நிதிஷ் குமார் 2, அன்கிட் வர்மா 12 என அவுட்டாகி 35 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

    6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன்-அபினவ் மனோகர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.

    மும்பை அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரியான் ரிக்கல்டன் 11 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 22 ரன்னில் வெளியேறினார்.

    தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இது மும்பை அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். ஐதராபாத் அணியின் 6வது தோல்வி இதுவாகும்.

    • பஹல்காம் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர்.
    • பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மைதானத்தில் 60 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஐதராபாத்:

    காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சூழலில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடந்து வருகிறது.

    முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மைதானத்தில் மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் 60 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இரு அணி வீரர்களும் தங்கல் இரங்கலை தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

    • 35 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது.
    • கிளாசன் 71 ரன்னிலும் அபினவ் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். அதில் ஹெட் 0, இஷான் கிஷன் 1, அபிஷேக் சர்மா 8, நிதிஷ் குமார் 2, அன்கிட் வர்மா 12 என அடுத்தடுத்து வெளியேறினர்.

    இதனால் 35 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது. இதனையடுத்து கிளாசன் மற்றும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபினவ் மனோகர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடிய கிளாசன் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ×